மகா பெரியவா போன்ற மகான்களை தரிசிக்கச் செல்லும்போது அவர்களை உளபூர்வமாக வணங்கி, ஆசிகளைப் பெற வேண்டும். குறிப்பாக – மகா பெரியவாளது திருவடிகளைக் கண்டு பணிந்து நமஸ்கரிக்க வேண்டும்.
மகான்களிடம் இருந்து பெறுகிற திருவடி தரிசனம்தான், நமது பாவங்களையும் கர்ம வினைகளையும் கரைக்க வல்லது.
எனவே, மகான்கள் அமர்ந்திருக்கக் கூடிய இடத்தின் அருகே அவர்களின் பாதங்களுக்கு எதிரே தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறோம்.
‘என்றேனும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாகப் போகிற இந்த உடல், தான் வாழுகின்ற காலம் வரை தங்களது திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டு சரணாகதி அடையத் துடிக்கிறது‘ என்பதை உணர்த்துவதே திருவடிகளை வணங்குவதன் அடையாளம்.
தான் வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற யாத்திரைகளை மேற்கொண்டவர் மகா பெரியவா. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு வசிக்கின்ற பக்தர்களின் குடும்பங்கள் மகா பெரியவாளுக்கு ‘பாத பூஜை‘ செய்வார்கள்.
இந்த மகானது திருவடி தங்களது இல்லத்தில் படாதா என்று விழிகளில் ஏக்கத்தையும் பக்தியையும் வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள் அந்த நாளைய பக்தகோடிகள்.
பிஞ்சு போன்ற மகா பெரியவாளின் பொற்திருப்பாதங்கள் எத்தனையோ சாலைகளையும், மலைகளையும், காடுகளையும், மேடுகளையும் பார்த்துள்ளது.
யாத்திரையின் சவுகரியம் கருதி சில நேரங்களில் பாதுகைகளைத் துறந்து வெற்றுக் கால்களுடன் நடப்பார் மகா பெரியவா. அத்தகைய தருணங்களில் பூமாதேவி நெகிழ்ந்து போவாளாம். காரணம் – சர்வேஸ்வர சொரூபத்தின் பிஞ்சுப் பாதங்களைத் தன் மடியில் சுமக்கின்ற பாக்கியம் சிறிது நேரத்துக்குக் கிடைத்திருக்கிறதே என்பதுதான்!
மகான்கள் அணிகிற பாதுகைகளை ‘பாதரட்சை‘ என்றும் அழைப்பர்.
மகா பெரியவாளுக்கு எண்ணற்ற பக்தர்கள் பாதுகைகளைத் தயாரித்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள். புதுப் புதுப் பாதுகைகள் தன்னை வந்து அடைகிற சூழ்நிலையில் ஏற்கெனவே தான் அணிந்திருக்கிற பாதுகைகளை தகுதியுள்ள பக்தர்களுக்கு வழங்கி விடுவார் பெரியவா. அப்படி மகான் வழங்கிய பாதுகைகளைப் பெற்ற பக்தர் அடைகிற ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. தனது இந்த ஜன்மமே இதோடு பூர்த்தி ஆனதாகக் கூத்தாடி மகிழ்வார்.
மகா பெரியவா அணிந்த பழைய பாதுகைகளைப் பணம் கொடுத்துப் பெற முடியாது. அந்த மகானின் அருள் நமக்கு இருந்தால் – அவர் அணிந்த பாதுகைகள் கிடைக்க வேண்டும் என்கிற பிராப்தம் இருந்தால் எப்படியும் கிடைத்து விடும்.
இவ்வாறு பெற்ற பாதுகைகளுக்கு – வசதி உள்ள பக்தர்கள் அதன் மேல் வெள்ளித் தகடு பொருத்தி பூஜையறையில் வைத்து விடுவார்கள். நித்தமும் அவற்றுக்கு வழிபாடு நடக்கும். இந்தப் பாதுகைகள் நம் இல்லத்தில் இருந்தால், மகானே எழுந்தருளி நம்மை வழிநடத்துகிறார் என்பது ஐதீகம்.
இந்தப் பாதுகைகள் கிடைக்கப் பெறுகிறவர்கள் பெரும் பாக்கியசாலிகளாகத்தான் இருக்க முடியும். இந்த பாக்கியசாலி பக்தர்கள் பரம ஏழைகளாகவும் இருக்கலாம்.
காஞ்சிபுரத்தில் இருக்கிற காமாட்சி என்கிற பூக்காரிக்கும் மகா பெரியவா தன் திருப்பாதுகைகளை ஒரு முறை வழங்கி இருக்கிறார்.
மகா பெரியவா பாதுகைகளைத் தங்கள் இல்லத்தில் வைத்து பூஜிக்கின்ற குடும்பங்கள் ஒருபுறம். இன்னொருபுறம், மகா பெரியவா பாதுகைகள் இன்றைக்கு நம்மிடம் வந்து சேர வேண்டும் என்ற யோகம் இருந்தால், அதுவும் அவரது அருளே!
மகா பெரியவா ஸித்தி (மறைவு) ஆகி, இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவரது திருப்பாதுகைகள் எப்படி அவரது பக்தர்களுக்குக் கிடைக்கும் என்கிற சந்தேகம் வருகிறது அல்லவா?
மகானின் திருப்பாதுகைகளை வைத்து வணங்கி வருகிற சில குடும்பத்தினர், சில பல காரணங்களால் அவற்றைத் தொடர்ந்து பூஜிக்க இயலாது என்கிற நிலையில் தங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான பக்தர்களுக்கு வழங்கி விடுகிறார்கள். அந்த வகையில் மகா பெரியவாளின் திருப்பாதுகைகள் கிடைக்காதா என்கிற ஏக்கத்தோடு இருந்து வருகின்ற பக்தர்களுக்கு அந்த நடமாடும் தெய்வத்தின் அருளால் இன்றைக்கும் அந்த யோகம் கிடைத்து வருகிறது.
அவரது பாதுகைகள் கிடைக்க வேண்டுமானால், அந்த மகானது நினைவும் தவமும் இருக்க வேண்டும்.
சுமார் 50 வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவா சென்னையில் முகாம் இருந்தார்.
மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கெல்லாம் அப்போது விஜயம் செய்து, அங்கெல்லாம் ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் பூஜை நடத்தினார். திரளான பக்தர்கள் நித்தமும் வந்து மகா பெரியவாளைத் தரிசித்து, அவரது பரிபூரண அருளைப் பெற்றனர்.
அன்றைய தினம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு வந்திருந்தார் மகா பெரியவா. திரளான பக்தர்கள் கூட்டம் ‘ஜய ஜய சங்கர‘ கோஷத்தோடு ஆலயத்துள் நுழைந்தது.
ஆலய தரிசனத்தை முடித்து விட்டு மகா பெரியவா மாட வீதியில் நடக்கலானார். அங்கே அவர் தங்குவதற்கென்று பிரமாண்ட வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகா பெரியவாளுடன் யாத்திரையில் வந்த யானை, குதிரை, ஒட்டகம் போன்றவை தங்குவதற்கும், மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் சிப்பந்திகள் தங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரமாண்டமான இந்த வீட்டில் அப்போது வசித்தவர் வெங்கட்ராமன் என்கிற மகா பெரியவா பக்தர். மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார்.
திருவான்மியூர் பகுதிக்கு மகா பெரியவா எப்போது வந்தாலும், பிரமாண்டமான இந்த வீட்டில்தான் தங்குவார்.
பூஜைகள், புனஸ்காரம் என்று திருவான்மியூர் மாட வீதிகள் ‘ஜே ஜே‘வென்று காணப்பட்டது.
வெங்கட்ராமன் குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சர்வேஸ்வர சொரூபமாக விளங்கக் கூடிய மகா பெரியவா தான் வசிக்கும் இல்லத்தில் தங்கி இருந்து பூஜை செய்தது, குடும்பத்தினரை ஆசிர்வதித்தது – இவை எல்லாம் எந்த ஜன்மத்தில் செய்த புண்ணியமோ என்று உருகிப் போனார் வெங்கட்ராமன்.
அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், பிறகு சந்திரமௌளீஸ்வரர் பூஜை, தீர்த்த பிரசாதம், மகா பெரியவா வழங்கும் அனுக்ரஹ உரை – இவற்றை தினமும் அனுபவித்தார் வெங்கட்ராமன்.
ஒரு சில நாட்கள் இங்கே இருந்து, அதன் பின் காஞ்சிக்குப் புறப்பட்டார் மகான்.
மிகப் பெரிய திருவிழா நடந்து முடிந்தது போல் இருந்தது வெங்கட்ராமனின் வீடு.
பிரமாண்டமான அந்த வீட்டில் அடுத்தடுத்த நாட்களுக்கு இங்குமங்கும் நடந்து செல்லும்போது மகா பெரியவாதான் நினைவுக்கு வந்தார். ‘இங்கேதானே அமர்ந்திருந்தார்… இங்கே உட்கார்ந்து கொண்டுதானே பிட்சை (உணவு) எடுத்துக் கொண்டார்… இங்கேதானே இரவில் சயனம் கொண்டிருந்தார்…‘ என்றெல்லாம் வெங்கட்ராமனின் குடும்பத்தினர் ஆனந்தத்துடன் மலரும் நினைவுகளை அசை போட்டனர்.
மகா பெரியவா காஞ்சிக்குச் சென்று சில வாரங்கள் கழித்து, அவர் பூஜை செய்த இடத்தின் வழியே தற்செயலாக நடந்து சென்ற வெங்கட்ராமனுக்குத் திடீரென்று ‘அது‘ கண்களில் பட்டது.
பார்த்தவர் பிரமித்துப் போனார்.
பயபக்தியுடன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அதன் அருகே நெருங்கினார் – ‘இதெப்படி இங்கே?‘
என்ன ‘அது?‘
– மகா பெரியவாளின் திருப்பாதுகைகள்!
வியப்பும் ஆச்சரியமும் மேலோங்க, அதைத் தொட்டு வணங்கினார். நமஸ்காரம் செய்தார்.
‘இத்தனை நாட்களாக இந்த இடத்தின் வழியே எத்தனை தடவை நடந்திருப்போம்… ஏன் இது கண்களில் படவில்லை?‘ என்று யோசித்தவர், தன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து, திருப்பாதுகைகளைக் காட்டினார்.
மகா பெரியவாளே தங்கள் இல்லத்துக்கு மீண்டும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து அவர்கள் அனைவரும் பாதுகைகளுக்கு நமஸ்கரித்தனர்.
ஒரு பெரிய பித்தளைத் தாம்பாளம் கொண்டு வந்து அதில் பாதுகைகளை எடுத்து வைத்தனர். அதற்கு அபிஷேகமும், பூஜையும் உடனடியாக நடந்தது. சந்தனமும், குங்குமமும் வைத்து புஷ்ப மாலையை அணிவித்தார் வெங்கட்ராமன்.
இது எப்படிடா வெங்கட்ராமா இங்கே?“ என்று குடும்பத்தில் பெரியவர்கள் கேட்டபோது, “எனக்கே தெரியலை… இன்னிக்குத்தான் பார்த்தேன். அனுக்ரஹம் இன்னிக்குத்தான் கிடைக்கணும்னு இருக்கு போலிருக்கு“ என்றார்.
“மகா பெரியவா இங்கேர்ந்து கௌம்பும்போது மறந்துட்டுப் போயிட்டார் போலிருக்குடா வெங்கட்ராமா…“
“நானும் அதைத்தான் நினைச்சேன். காஞ்சிக்குக் கௌம்பறப்ப பெரியவா மறந்துட்டுப் போயிட்டா போலிருக்கு“ என்ற வெங்கட்ராமன், இதைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு காஞ்சியில் மகா பெரியவாளிடம் சேர்க்க வேண்டும் என்று அப்போதே தீர்மானித்து விட்டார்.
ஆனால், அடுத்தடுத்து வந்த நாட்களில் அவரது அலுவல் பணி காரணமாக காஞ்சிக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், அதுவரை பாதுகைகளுக்குச் செய்ய வேண்டிய வழிபாடு விடாமல் தொடர்ந்தது.
ஒரு சில வாரங்கள் கடந்த பின் ஓய்வாகக் கிடைத்த ஒரு நாளில் காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளிடம் இதைச் சேர்ப்பிக்கப் புறப்பட்டார் வெங்கட்ராமன்.
பாதுகைகளைத் தன் தலையில் சுமந்து கொண்டு திருவான்மியூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்தே சென்றார்.
‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷத்தை முழங்கியபடி எங்கும் நிற்காமல் முழுக்க முழுக்க மகா பெரியவா சிந்தனையுடன் காஞ்சியில் மகா பெரியவா சந்நிதானத்தை அடைந்தார் வெங்கட்ராமன்.
பெரியவா சந்நிதியில் பாதுகைகளை சமர்ப்பித்து விட்டு, கலியுக தெய்வத்தை தரிசித்த சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடிய நின்றார் வெங்கட்ராமன்.
பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா அண்ணாந்து வெங்கட்ராமனைப் பார்த்தார். பாதுகைகளை வலது ஆட்காட்டி விரலால் அடையாளம் காண்பித்து ‘என்ன?‘ என்று சைகையில் கேட்டார்.
“பெரியவா… திருவான்மியூர்ல எங்காத்துக்கு வந்தப்ப, இந்தப் பாதுகைகளை விட்டுட்டு வந்துட்டேள்… அதான் உங்ககிட்ட சேர்த்துடலாம்னு பெரும் பாக்கியத்தோட இன்னிக்கு சுமந்துண்டு வந்தேன்“ என்றார் வெங்கட்ராமன்.
“அட அசத்து… அது ஒனக்கு இருக்கட்டும்னுதான் உங்காத்துல விட்டுட்டு வந்தேன். எப்படி எடுத்துண்டு வந்தியோ அதே போல எடுத்துண்டு போ. இன்னொரு தடவை ஆசிர்வாதம் பண்ணித் தர்றேன்“ என்று அதில் கைப்பிடி குங்குமத்தை அள்ளிப் போட்டாரே பார்க்கணும், மகா பெரியவா!
ஆனந்தமும் பரவசமும் தாங்காமல் அந்தத் திருச்சந்நிதியிலேயே அழ ஆரம்பித்து விட்டார்.
அருகில் இருக்கக் கூடிய ஒரு சிப்பந்தியை அழைத்த மகா பெரியவா, “மெட்ராஸ்லேர்ந்து நடந்தே வந்திருக்கான். இவனை உள்ளே கூட்டிண்டு போய் சாப்பிட வெச்சு, பத்திரமா ஊருக்கு அனுப்பு“ என்று சொல்லி விட்டு, அங்கிருந்து எழுந்து நடந்தார் பெரியவா.
கைகளைக் கூப்பிக் கொண்டு கலங்குகிற விழிகளுடன் மகா பெரியவா செல்கிற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.
இன்றைக்கு அந்தப் பாதுகைகள் அவரது குடும்பத்தாரிடம் இருந்து வருகிறது.