இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
நாகராஜன் என்பவர் காரைக்குடியில் தனது சித்தி (அம்மாவின் தங்கை) வீட்டில் தங்கியபடி பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
இவருடைய சித்தப்பா காரைக்குடியில் பெரிய ஆடிட்டர். பெயர் குப்புசாமி ஐயர். காஞ்சி மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் இவர்.
அடிக்கடி ஸ்ரீமடம் சென்றோ, அல்லது மகா பெரியவா தங்கி இருக்கின்ற வெளியூருக்குச் சென்றோ அவரைத் தரிசிப்பார். பிட்சாவந்தனம் செய்வார் (ஸ்ரீமடத்துக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் சமையல் பொருட்களை வாங்கித் தருவது பிட்சாவந்தனம்).
மகா பெரியவாளை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டாலே போதும்… என்ன வேலை இருந்தாலும், எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு விட்டுத் தரிசிக்க ஓடி விடுவார் குப்புசாமி ஐயர். அந்த நேரத்தில் மகா பெரியவா தேசத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பறந்து விடுவார்.
‘தரிசிக்க வேண்டும்‘ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றியதும், அந்த மனம் மாறுவதற்குள் உடனே செயலாக்கிவிட வேண்டும். மகானின் திருச்சந்நிதிக்குப் போய் அவரது திருவடி பணிய வேண்டும். இதுதான் குப்புசாமி ஐயரின் விருப்பம்.
ஒரு முறை காசி யாத்திரை சென்றிருந்தார் குப்புசாமி ஐயர். காசி விஸ்வநாதர் தரிசனம், கங்கை புனித நீராடல் என்று எல்லாமே அற்புதமாகப் போனது அவருக்கு.
யாத்திரை முடிந்து காரைக்குடி திரும்பும்போது இரண்டு பெரிய குடங்களில் கங்கை நீரை எடுத்துப் பத்திரப்படுத்தினார். அதை அங்கேயே மேலே ஒரு பித்தளைத் தகட்டால் மூடி ‘ஸீல்‘ செய்தார். பத்திரமாகக் குடங்களைத் தன் இல்லத்துக்கு எடுத்து வந்தார்.
எதற்கு இந்தக் குடங்களில் கங்கை நீரை சுமந்து வந்திருக்கிறார் என்றால், நடமாடும் தெய்வமாக விளங்கி வரும் காஞ்சி மகா பெரியவாளுக்குப் புனிதமான இந்த நீர் அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது குப்புசாமி ஐயரின் ஆசை.
நாகராஜன் இரண்டாமாண்டு பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்தபோது மதுரை அருகே சோழவந்தானில் மகா பெரியவா முகாம் இருந்தார். காசியில் இருந்து தான் எடுத்து வந்த புனிதமான கங்கை நீர் அடங்கிய குடங்களை மகா பெரியவாளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று அவற்றை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் சோழவந்தான் முகாமுக்குப் புறப்பட்டார் குப்புசாமி ஐயர்.
பகல் பொழுதில் முகாமை அடைந்தாகி விட்டது. மகா பெரியவா தரிசனத்துக்குத் திரளான கூட்டம் அங்கே கூடி இருந்தது.
மடத்து முகாமில் இருக்கும் ஒரு முக்கியஸ்தர் மூலம் ‘காரைக்குடியில் இருந்து குப்புசாமி ஐயர் கங்கை நீர்க் குடங்களை பெரியவா அபிஷேகத்துக்காக எடுத்து வந்திருக்கிறார்‘ என்ற தகவல் காஞ்சி மகானுக்குத் தெரிவிக்கப்பட்டது.
‘குடங்களில் கங்கை நீர் வந்திருக்கிறது‘ என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், மகா பெரியவாளின் முகம் பிரகாசமாகியது. முகாமுக்கு எதிரில் இருக்கிற குளத்துக்கு கங்கை நீருடன் வருமாறும், அந்தக் குளத்தில் வைத்தே தனக்கு அபிஷேகம் செய்யுமாறும் வேத பண்டிதர்களுக்கு மகா பெரியவா உத்தரவிட்டார்.
சோழவந்தான் முகாமுக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்த பக்தகோடிகள் அனைவரும் உடனே குளத்துக்கு விரைந்தனர். மகா பெரியவாளுக்கு கங்கை நீரால் அபிஷேகம் நடக்கக் கூடிய நேரத்தில் புனிதமான அந்த நீர்த் துளிகளைத் தாங்கள் தெளித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டும், மகான் குளத்தில் மூழ்கி நீராடுகிற வேளையில் தாங்களும் நீராட வேண்டும் என்று விருப்பப்பட்டும் எண்ணற்றோர் கூடி விட்டனர்.
மகா பெரியவா திருக்குளத்தை அடைவதற்கு முன்னால், ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் அடித்துப் பிடித்து ஓடி குளக்கரையில் ஆங்காங்கு இடம் பிடித்துக் கொண்டு நின்றனர்.
மகா பெரியவா குளக்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து குப்புசாமி ஐயர் குடும்பமும் குளக்கரைக்குச் சென்றது.
மகா பெரியவா என்கிற கலியுக தெய்வத்தை இத்தனை அருகில் இருந்து பார்த்தவுடன், இந்த அற்புத தரிசனம் நாகராஜனை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது.
குளத்தில் மகா பெரியவாளுக்குக் கங்கை நீர்க் குடங்கள் அபிஷேகம் செய்யப்படும் வேளையில் அங்கே கூடி இருக்கின்ற பக்தர்கள் அனைவரும் இந்தத் திருக்காட்சிகளைத் தரிசித்து, கைகளால் கன்னத்தில் அறைந்து கொண்டு வணங்கினார்கள். குளக்கரை எங்கும் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் எழுந்தது. அனைவரும் திருக்குளத்தில் மூழ்கி எழுந்தனர். நாகராஜன் உட்பட குப்புசாமி ஐயர் குடும்பமும் குளத்தில் நீராடியது.
அப்படி நீராடும்போது மகா பெரியவாளுக்கு வெகு அருகில் நாகராஜன் இருந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு நித்தமும் அருளி வரும் அந்த மகானின் திருமுகத்தை இவ்வளவு கிட்டத்தில் இருந்து தரிசிக்க முடியும் என்று நாகராஜன் நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை.
இதை அடுத்து சந்திரமௌளீஸ்வர பூஜைக்காக மகா பெரியவா திருக்குளத்தில் இருந்து புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து பக்தகோடிகளும் விரைந்தனர்.
அன்றைய தினம் குப்புசாமி ஐயரின் பிட்சாவந்தனம் நடந்தது.
சந்திரமௌளீஸ்வர பூஜை பூர்த்தியாகி, பெரியவா பிட்சை (உணவு எடுத்துக் கொள்வது) எடுத்துக் கொண்டு, வந்திருந்த பக்தகோடிகள் அனைவரும் மதியச் சாப்பாடு சாப்பிட்டு முடிக்கும்போது மணி மதியம் மூன்று ஆகி விட்டது.
சாப்பிட்டு முடித்ததும், எல்லோருக்கும் ஓய்வு எடுக்க வேண்டும் என்றுதானே தோன்றும்… காலையில் இருந்து இந்த மகானுடன் இருந்து வருகிறோம்… திருக்குளத்தில் நீராடினோம், பூஜையைப் பார்த்து தரிசித்தோம்… தீர்த்தப் பிரசாதம் வாங்கினோம்… மதிய உணவையும் முடித்து விட்டோம் என்றால், அடுத்து ஓய்வுதானே?!
மகா பெரியவா பக்தர்களிடம் இது கிடையாது. கிடைத்த வரைக்கும் இந்த மகானின் தரிசனத்தை அனுபவிக்க வேண்டும்… பரவசப்பட வேண்டும் என்று அவரை ஓய்வுக்குக்கூடச் செல்ல விடாமல் துரத்தித் துரத்தி தரிசிக்கின்ற ஆத்மார்த்த பக்தர்களும் உண்டு.
இந்த வேளையில் மகா பெரியவாளை வெகு அருகில் தனியே தான் மட்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது நாகராஜனிடம்!
சோழவந்தான் அருகே ஒரு கிராமத்தில் முகாம் இருக்கும் மகா பெரியவாளை ஏன் தனியே தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் தனக்குள் எழுந்தது என்கிற கேள்விக்கு நாகராஜனுக்கே பதில் தெரியவில்லை. ஆனாலும், அந்த எண்ணம் எழுந்ததும், எப்படியேனும் மகா பெரியவாளைத் தரிசித்து விட வேண்டும் என்ற உறுதி வலுப்பட்டது.
காரைக்குடியில் இருந்து வந்த உறவினர்கள் அனைவரும் அயர்ச்சியின் காரணமாக அந்தப் பிற்பகல் வேளையில் ஸ்ரீமடத்தின் முகாமிலேயே ஆங்காங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
கால்கள் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் நாகராஜன். எந்த விதமான உணர்வும் இல்லாமல் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் நடந்து கொண்டிருந்த நாகராஜனைத் திடீரென்று யாரோ ஒருவர் அழைப்பது போல் பட்டது. நின்று நிதானித்துப் பார்த்தார். மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்கிற ஊழியர்.
அந்த ஊழியர், “மகா பெரியவா ஒங்களைக் கூட்டிண்டு வரச் சொன்னார்“ என்றார் உத்தரவாக.
அங்கிருந்து எட்டிப் பார்க்கிற தூரத்தில் மகா பெரியவா தங்கி இருக்கிற கொட்டகை.
நாகராஜனுக்கு நம்ப முடியவில்லை. அந்த மகானைத் தனியே தரிசிக்க வேண்டும் என்று இப்போதுதான் மனசுக்குள் நினைத்தேன்… அதற்குள் என் எண்ணம் பெரியவாளுக்குச் சென்று அழைப்பும் வந்து விட்டதே என்று நெகிழ்ந்தார். ஊழியர் முன்னால் நடக்க… அவரைப் பின்தொடர்ந்தார்.
கொட்டகைக்குள் மகா பெரியவா மட்டும் – பிட்சைக்குப் பின் ஓரிரு திராட்சைகளை வாயில் போட்டு மென்று கொண்டு நாகராஜனை வரவேற்கும் விதமாக அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அழைத்து வந்த ஊழியர், நாகராஜனை அமர வைத்து விட்டு வெளியே போய் விட்டார்.
அந்த இடம் முழுக்கப் பக்தி மணம் கமழ்ந்தது.
பரவசமான பக்தியின் பாய்ச்சல் ஒரு பக்கம்.
பதுங்கிக் கொள்ளச் சொல்லும் பயம் மறுபக்கம்.
‘மகா பெரியவாளிடம் என்ன பேசுவது? அவரை தனியே தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனே? அவரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? ஒருவேளை அவரே பேச்சை ஆரம்பித்து விடுவாரோ? இத்தனை அருகில் இந்த மகானைப் பார்த்தவுடன் எனக்குக் கை–கால் ஓடவில்லையே? பிரபோ, நான் என்ன செய்ய வேண்டும் இப்போது?‘ என்றெல்லாம் தவித்துப் போனார் நாகராஜன். ஏதோ ஒரு லோகத்தில் இருப்பது போல் பட்டது அவருக்கு.
கை விரல்களால் சொடக்குப் போடும் ஒலி பலமாகக் கேட்க, சுய நினைவுக்கு வந்தார் நாகராஜன்.
சத்தம் வந்த திசையைப் பார்த்தார் – மகா பெரியவா.
சொடக்கு ஒலி எழுப்பியதும் இவரே!
“ஒம் பேர் என்ன?“ – மகா பெரியவா.
“நாகராஜன்…“ – தடுமாற்றம் இல்லாமல் – பிசிறு தட்டாமல் குரல் வந்தது.
“உங்கப்பாம்மாவோட வந்திருக்கியா?“
“இல்லே… அப்பாம்மா மெட்ராஸ்ல இருக்கா. என் சித்தப்பா, சித்தி குடும்பத்தோட வந்திருக்கேன் பெரியவா.“
“யார் ஒன் சித்தப்பா?“
“காரைக்குடி ஆடிட்டர் குப்புசாமி ஐயர்.“
“அப்படின்னா அங்க தங்கி இருந்து படிச்சிண்டிருக்கியா?“
“ஆமா பெரியவா.“
“என்ன படிக்கிறே?“
“பாலிடெக்னிக்.“
“அப்படீன்னா… அதென்ன படிப்பு?“ – ஏதோ, இவருக்கு உலகமே தெரியாதது மாதிரி ஒரு கேள்வி.
“இது தொழிற்கல்விக்கான படிப்பு.“
“எத்தனை வருஷம் படிக்கணும்?“
“மூணு வருஷம். நான் இப்ப ரெண்டாம் வருஷம்.“
“என்ன தொழில் பண்றதுக்காக நீ இதைப் படிக்கறே?“
“கட்டடப் பொறியாளருக்கான படிப்பு.“
இந்த பதிலை நாகராஜன் சொன்னதும், அடுத்தடுத்த கேள்விகள் படிப்பை விட்டு விட்டுச் சாப்பாட்டுக்குத் தாவின.
“சாப்டுட்டியா?“ – மகா பெரியவா கேட்டார்.
“சாப்ட்டுட்டேன்.“
“என்ன சாப்ட்டே?“
“குழம்பு, ரசம், மோர் சாதம்.“
“இன்னிக்கு என்ன குழம்பு? என்ன ரசம்? தொட்டுக்க என்ன காய்?“
நாகராஜனுக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஒரு சில விநாடிகள் யோசிக்க ஆரம்பித்ததும், “நீ சாப்பாட்டுப் பிரியன் இல்லை போலிருக்கு“ என்ற மகா பெரியவா கலகலவெனச் சிரித்தார்.
“சரி, பரவாயில்லை. இந்த அயிட்டத்தை எல்லாம் எதைக் கொண்டு பரிமாறினா?“
“தேங்காய் மூடியால் செய்த ஒரு மரக் கரண்டியை வெச்சுண்டு பரிமாறினா பெரியவா.“
ஒரு சில விநாடிகள் அமைதி.
இந்த சம்பாஷணை நடக்கும்போது மடத்துச் சிப்பந்திகளோ, பிரமுகர்களோ எவரும் குறுக்கே வராதது பெரிய ஆச்சரியம்.
அடுத்து நாகராஜனைப் பார்த்து மகா பெரியவா கேட்டார்: “எனக்கு ஒரு மூட்டை அரிசி தருவியா?“
தூக்கி வாரிப் போட்டது நாகராஜனுக்கு. இருந்தாலும், மெள்ள சுதாரித்துக் கொண்டு, “நான் எங்கே போவேன் அரிசி மூட்டைக்கு? எனக்கு நிலபுலமெல்லாம் இல்லையே பெரியவா. தவிர, நானே என் சித்தியாத்தில் தங்கி படிச்சிண்டு இருக்கேன். எல்லாமே அவா தயவுல ஓடிண்டு இருக்கு“ என்றார் நாகராஜன் இயல்பாக.
மகா பெரியவா என்கிற அந்தப் பரப்பிரம்மம், நாகராஜனைப் பார்த்துப் புன்னகைத்தது. பிறகு, “கண்டிப்பா மாசா மாசம் ஒரு மூட்டை அரிசியைக் கூடிய சீக்கிரம் மடத்துக்கு நீ கொடுப்பே“ என்று உறுதியாகச் சொல்லி, வலக் கையை உயர்த்தி வாழ்த்தியது.
நாகராஜன் ஒன்றும் புரியாமல் மகா பெரியவாளையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அடுத்த ஆசிர்வாதம் கிடைத்தது நாகராஜனுக்கு. “நீ நன்னா இருப்பே. ஸ்ரீமடத்துலயே சேவை பண்ணுவே.“
எத்தனை பெரிய ஆசிர்வாதம்.
இந்த மகானைத் தனியே தரிசிக்க வேண்டும் என்று ஆசை தோன்றியது. தரிசனமும் கனவு போல் நடந்து விட்டது. ‘நீ நன்னா இருப்பே…‘ என்கிற ஆசிர்வாதமும் கிடைத்து விட்டது.
சோழவந்தானில் இருந்து ஆடிட்டர் குப்புசாமி ஐயர் குடும்பம் காரைக்குடி சென்றாகி விட்டது.
வருடங்கள் ஓடின.
காரைக்குடியில் பாலிடெக்னிக் படிப்பு முடிந்து, அடுத்து நல்ல உத்தியோகம் வேண்டி சென்னைக்கு வந்தார் நாகராஜன். 1966-ல் சிவில் காண்ட்ராக்டர் ஒருவரிடம் சூபர்வைஸராகப் பணியாற்றினார்.
அப்போது அடுத்த ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சென்னையில் இந்த சிவில் காண்ட்ராக்டரிடம் பணி புரிந்து கொண்டிருக்கும்போது உடன் இருக்கின்ற இன்ஜினீயர் ஒருவரின் நட்பு ஏற்பட்டது.
ஒரு நாள் நாகராஜனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த இன்ஜினீயர், “நாகராஜன்… தனியா ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். காஞ்சிபுரத்தில் புதுசா ஒரு ஒர்க்கை காண்ட்ராக்ட் எடுத்திருக்கேன். என்னுடன் வந்து பணி புரிகிறாயா?“ என்று அழைப்பு விடுத்தார்.
புதிய வேலை என்பதை விட காஞ்சிபுரத்தில் வேலை என்பது நாகராஜனுக்குள் சந்தோஷ அலைகளை மெள்ள ஏற்படுத்தின. காஞ்சிக்குச் சென்று பணி புரிந்தால் மகா பெரியவாளை அடிக்கடி தரிசிக்கிற வாய்ப்பு கிடைக்குமே என்பது அவரது எண்ணம்.
இருந்தாலும், அப்போது தன்னுடன் சென்னையில் இருக்கும் பெற்றோரை விட்டு வருவது சிரமம் என்று சொல்லி இருக்கிறார் நாகராஜன்.
அதற்கு இன்ஜினீயர், “ஒண்ணும் பிரச்னை இல்லை. தாராளமா உன் பெற்றோருடன் காஞ்சிக்கு வந்து விடு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்“ என்று உத்தரவாதம் கொடுக்க… நாகராஜனின் குடும்பம் சென்னையில் இருந்து காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது.
ஒகாஞ்சி மாநகரில் ஆலய தரிசனங்களும், ஸ்ரீமடத்தில் மகா பெரியவா தரிசனமும் அடிக்கடி கிடைத்தது நாகராஜனுக்கு. அலுவல் நேரம் போக எஞ்சிய நேரங்களில், மகா பெரியவா காஞ்சிபுரத்தில் எந்த இடத்தில் இருக்கிறார் என்று விசாரித்துத் தேடித் தேடிச் சென்று தரிசித்தார்.
ஸ்ரீமடத்தில் மகா பெரியவா இருக்கிறார் என்றால், தரிசனம் ஆகி, மகானின் உத்தரவு பெற்ற பின்தான் வீடு திரும்புவார் நாகராஜன்.
நாட்கள் ஓடின.
என்னதான் காஞ்சிபுரத்தில் வசித்தாலும், மகா பெரியவா தரிசனம் அடிக்கடி கிடைத்தாலும் தான் ஏற்றுக் கொண்டிருக்கிற உத்தியோகத்தில் போதுமான சம்பளம் வரவில்லையே என்ற உறுத்தல் இருந்து வந்தது நாகராஜனிடம்.
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு ஏன் அலைவானேன் என்று தோன்றியது நாகராஜனிடம்.
நேராக மகா பெரியவாளிடம் போனார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். “பெரியவா… இப்ப நான் இருக்கிறது சொற்ப சம்பளத்துல ஒரு வேலை. நல்ல சம்பளத்துல அரசாங்க வேலை கிடைக்கறதுக்குப் பெரியவா எனக்கு அனுக்ரஹம் பண்ணணும்“ என்று பிரார்த்தித்தார்.
எல்லாவற்றும் ஒரு வேளை வர வேண்டாமா? அந்த வேளையும் வந்தது.
மகா பெரியவாளிடம் நியாயமான ஒரு பிரார்த்தனையை வைத்த பிறகும், அவர் அதை நிறைவேற்றாமல் இருப்பாரா? பக்தர்களின் மனக் குறையைத் தீர்த்து அருள்வதுதானே மகான்களின் இயல்பு!
மனதுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய அந்த நிகழ்வும் கூடிய சீக்கிரமே நடந்தது.
ஆம்! மகா பெரியவா ஆசிர்வாதம் கிடைத்த அடுத்த ஓரிரு நாட்களில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து நாகராஜனுக்கு ஒரு இன்டர்வியூ லெட்டர் வந்தது.
இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அகமும் முகமும் மலர… மகா பெரியவாளிடம் ஓடினார்.
தனக்கு வந்த இந்த இன்டர்வியூ கடிதத்தை அவரது திருச்சந்நிதியில் சமர்ப்பித்தார். கண்கள் பனிக்க வணங்கினார்.
தன் வழக்கமான ஒரு புன்னகையுடன் இரு கரங்களையும் உயர்த்தி ஆசிர்வதித்தார் பெரியவா.
‘அரசாங்க வேலை கிடைக்குமா? நிரந்தர சம்பளம் கிடைக்குமா?‘ என்றெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த நாகராஜனுக்கு மகா பெரியவாளின் பரிபூரண ஆசிர்வாதத்தால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உத்தியோகமும் கிடைத்து விட்டது.
இதை அடுத்து அவரது குடும்பம், காஞ்சியில் இருந்து கல்பாக்கத்துக்கு இடம் பெயர்ந்தது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரிந்து வந்தாலும், மகா பெரியவா மேல் தான் கொண்டிருந்த பக்தியாலும், தனக்கு இந்த உத்தியோகம் கிடைத்ததே அவரது ஆசியால்தான் என்கிற நன்றி உணர்வாலும் மாதம் ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்கு வருவார் நாகராஜன்.
எத்தனை கூட்டம் இருந்தாலும், காத்திருந்து மகா பெரியவாளைத் தரிசிப்பார். நிறைவான அவரின் தரிசனம் பெற்று, பிரசாதம் வாங்கிக் கொண்டு கல்பாக்கம் திரும்புவது வழக்கம்.
இந்தக் காலகட்டத்தில்தான் ‘பிடி அரிசி‘ கைங்கர்யம் என்கிற பிரமிக்க வைக்கும் திட்டத்தை மகா பெரியவா துவங்கினார்.
‘மாதா மாதம் எனக்கு ஒரு அரிசி மூட்டையை நீ குடுப்பே…‘ என்று நாகராஜனுக்கு சோழவந்தானுக்கு அருகே ஒரு கிராமத்தில் எந்த வேளையில் மகா பெரியவா அருளினாரோ… அது அப்படியே பலித்தே விட்டது.
தன் ஆத்மார்த்த பக்தர்களுக்கு வாஞ்சையுடன் மகா பெரியவா அருள்கிற திருவாக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் பொய்யாகி விடாது. மகா பெரியவா என்கிற கலியுக தெய்வத்தின் மீது நமக்கும் ஆத்மார்த்த பக்தி இருந்தால், கேட்பது கிடைக்கும். ஆசைப்பட்டது பலிக்கும்.
மகா பெரியவா கேட்டுக் கொண்ட வண்ணம், மாதம் ஒரு அரிசி மூட்டையை காஞ்சியில் மகானுக்கு எப்படிக் காணிக்கை ஆக்கினார் நாகராஜன் என்பதைப் பார்ப்பதற்கு முன் ‘பிடி அரிசி‘ திட்டம் என்றால் என்ன… இது மகா பெரியவா மனதில் எப்படி உதித்தது என்பதைப் பற்றிப் பார்த்து விடுவோம்.
மகா பெரியவா காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்த காலத்திலும் சரி… பிற இடங்களில் முகாமிட்டிருந்தாலும் சரி… வருகின்ற அன்பர்களுக்கும், ஆங்காங்கு வசிக்கிற ஏழைகளுக்கும் வேளாவேளைக்கு உணவிட வேண்டும் என்பது மகா பெரியவாளின் விருப்பம்.
சாப்பிடுவதற்குப் பொருள் வசதி இல்லாத ஏழைகளை மனதில் கொண்டுதான் ‘பிடி அரிசி‘ திட்டம் துவங்கியது. தவிர, வேத பாடசாலைகளில் படித்து வருகிற சிறுவர்களுக்கும், அங்கே பணி புரிகிற அன்பர்களுக்கும் நிரந்தரமான சாப்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் மகா பெரியவாளுக்கு உண்டு.
இன்றைக்குச் செயல்பட்டு வருகின்ற வேத பாடசாலைகள் அனைத்தும் வளமான நிலையில் செயல்பட்டு வருகின்றன என்று சொல்லி விட முடியாது. சில வேத பாடசாலைகள் செழிப்பாக இருக்கும். இன்னும் சில வேத பாடசாலைகளுக்குச் சென்றால், அடுத்த மாதத்துக்கு ஒன்றுமே இருக்காது.
‘எல்லோருக்கும் உணவு‘ என்கிற எண்ணத்தை பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை நடைமுறைப்படுத்த மகா பெரியவா ஆரம்பித்த திட்டம்தான் ‘பிடி அரிசி‘.
பிறரை சந்தோஷப்படுத்துவதற்கு கோதானம், சொர்ண தானம், பூதானம், வஸ்திர தானம் என்று எத்தனையோ தானங்கள் இருப்பதாகப் படிக்கிறோம். ஆனால், இத்தகைய தானங்களில் மிகவும் சிறந்தது அன்னதானமே என்று வேதம் சொல்கிறது.
பசியுடன் இருக்கிற ஒருவருக்குத் தேவையான உணவை வழங்கி அவரின் பசியைத் தணிப்பது, புண்ணியம் தரும் செயலாக சாஸ்திரம் சொல்கிறது. அதுவும் வேதம் படிக்கிற மாணவர்களுக்கு நாம் செய்யக் கூடிய உதவி என்பது, பரிபூரண பலனைப் பெற்றுத் தரும்.
பசிக் கொடுமையைப் போக்குவதற்கு அன்றைய நாளில் எண்ணற்ற அன்னதான சத்திரங்கள் ஊர்கள்தோறும் இருந்தன. அங்கெல்லாம் மூன்று வேளையும் உணவு பரிமாறப்படும். உணவுக்கு வழி இல்லாத உள்ளூர்க்காரர்களும், ஊர் ஊராக யாத்திரை செல்கின்றவர்களும் இது போன்ற அன்ன சத்திரங்களில் சாப்பிட்டுச் செல்வது வழக்கம்.
திருவண்ணாமலையில் ‘ஓயா மடம்‘ என்கிற ஒரு மடம் இன்றைக்கும் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்த மடத்தில் காலை முதல் இரவு வரை சற்றும் ஓயாமல் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுமாம். எந்த வேளையில் அங்கே சென்றாலும் பந்தி போட்டுப் பரிமாறப்படுவதைப் பார்க்கலாம்.
ஆக, உணவு என்பது எல்லோருக்கும் அவசியம். குறிப்பாக – பொருளாதாரத்தில் நசிந்த நிலையில் வாழ்ந்து வரும் ஏழைகளுக்கு வேளா வேளைக்கு உணவு கிடைத்தாலே அது அவர்களுக்குப் பெருத்த சந்தோஷத்தைக் கொடுத்து விடும்.
இப்படிப் பலரது வயிறுகளையும் நிறைக்க வைக்கிற இந்த ‘பிடி அரிசி‘ திட்டம் பற்றி அப்போது இருந்த பத்திரிகைகளும் வரவேற்றுச் செய்திகள் வெளியிட்டன.
‘பிடி அரிசி‘ திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
இந்தத் திட்டத்தின்படி, நித்தமும் சமையலைத் துவங்குகிற பெண்கள் அரிசியை உலையில் போடுவதற்கு முன் – எந்த மூட்டையில் (அல்லது டிரம் எக்ஸட்ரா) இருந்து அரிசியை எடுத்தார்களோ, அதிலிருந்து ஒரு கைப்பிடியை அள்ளி பொதுவான ஒரு பாத்திரத்திலோ, பையிலோ போட்டு விட வேண்டும். தினமும் சமைக்கத் துவங்கும் முன் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தினம் தினம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
பிறரது வயிற்றுப் பசியைப் போக்க தானமாக நாம் தருகின்ற அரிசி, நம் குடும்பத்தில் இருக்கிறவர்கள் சாப்பிடுகிற அதே தரத்தோடு இருக்க வேண்டும் என்பதுதான் மகா பெரியவா எண்ணம். எனவேதான், சமைக்க அரிசியை எடுக்கும்போது அதே கையால் ஒரு பிடி எடுத்து வைக்க வேண்டும்.
‘அன்னதானத்துக்கு உங்களால் இயன்ற அரிசி தாருங்கள்‘ என்று யாசகம் கேட்டால், ஒருவேளை விலை குறைந்த அரிசியை வாங்கித் தருகிற அன்பர்களும் உண்டு. அதுபோல் இருந்து விடக் கூடாது என்பதற்காக, தினமும் ஒரு கைப்பிடி அரிசி.
பிடி அரிசியை நித்தமும் ஒரு தனி பாத்திரத்தில் போடுவதோடு, கொஞ்சம் பருப்பையும் ஒரு டப்பாவிலோ, பாத்திரத்திலோ சேகரிக்க வேண்டும்.
தவிர, ஒரு உண்டியலையும் வைத்து, தினமும் காசுகளை அதில் போட வேண்டும். அது பத்துப் பைசாவாக இருக்கலாம்; நாலணாவாக இருக்கலாம்; எட்டணாவாகக்கூட இருக்கலாம். இதெல்லாம் அவரவர்கள் வசதியைப் பொறுத்தது.
இப்படிப் பலரும் தங்கள் இல்லங்களில் சேகரித்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு மற்றும் காசுகளை ஸ்ரீமடத்தின் தன்னார்வத் தொண்டர்கள் மாதா மாதம் நேரில் சென்று சேகரிப்பார்கள். காஞ்சி மகா பெரியவா உத்தரவுப்படி இந்தப் பொருட்களும் பணமும் எங்கு சேர்க்க வேண்டுமோ, அங்கே கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். இதன் மூலம் எத்தனையோ லட்சக்கணக்கான ஏழைகள் இந்தியா முழுக்கப் பலன் பெற்றார்கள்.
இப்படிச் சேகரிக்கப்பட்ட அரிசி – சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று பல வகை அன்னங்களாக ரூபமெடுத்தது.
அரிசி, பருப்போடு காசையும் கொடுக்கிறார்கள் அல்லவா? அந்தக் காசைக் கொண்டு சமையலுக்குத் தேவையான வெல்லம், எண்ணெய், கடுகு, புளி, காய்கறிகள் போன்றவற்றை வாங்குவதற்கும், இதை சமைத்துத் தருகிற சமையல்காரருக்கு ஒரு ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட்டது.
மீண்டும் கல்பாக்கம் நாகராஜனிடம் வருவோம்.
மகா பெரியவா உத்தரவுடன் கல்பாக்கத்தில் பிடி அரிசி சேகரிக்கும் பணியை மேற்கொண்டார் நாகராஜன். அப்படி வீடு வீடாகப் போய் தான் சேகரித்த அரிசியை மாதா மாதம் தேனம்பாக்கத்தில் உள்ள பாடசாலையில் சேர்த்து விடுவார். காரணம் – கல்பாக்கத்தில் சேருகிற அரிசி மூட்டை தேனம்பாக்கம் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்று நாகராஜனுக்கு மகா பெரியவா உத்தரவிட்டிருந்தார்.
மாதா மாதம் பிடி அரிசி மூலம் சேகரிக்கப்பட்ட ஒரு மூட்டை அரிசியை கல்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பேருந்தில் எடுத்துச் செல்வார் நாகராஜன்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ‘எனக்கு ஒரு மூட்டை அரிசி குடுப்பியா?‘ என்று அந்த நடமாடும் தெய்வம் கேட்டது, இன்றைக்கு பிரத்யட்சமாக நடந்து வருகிறதே என்று பூரித்துப் போவார் நாகராஜன்.
பெற்றோர்களுடன் கல்பாக்கத்தில் அரசு உத்தியோகம், மாதா மாதம் காஞ்சிக்குச் சென்று பெரியவா தரிசனம், பிடி அரிசியை சேர்ப்பது என்று போயிற்று நாகராஜனுக்கு.
அடுத்து வந்த ஒரு சில வருடங்களில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாகராஜனின் பணி, நிரந்தரமும் செய்யப்பட்டாகி விட்டது.
அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், எல்லா காலத்திலும் ஒரே இடத்திலேயே பணியில் இருக்க முடியாது அல்லவா? அதன்படி 1985-ஆம் வருடம் நாகராஜனை வட இந்தியாவுக்கு மாற்றம் செய்ய வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. இட மாறுதலுக்குத் தயாராக இருக்கும்படி அதிகாரிகள் நாகராஜனை நெருக்க ஆரம்பித்தார்கள்.
துவண்டு போனார் நாகராஜன். வயதான பெற்றோரை எப்படி அங்கே அழைத்துச் செல்வது என்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை வருடங்களாக உற்சாகத்துடன் செய்து வரும் பிடி அரிசி கைங்கர்யம் பாதிக்குமே என்கிற கவலை மறுபுறம்.
அதிகாரிகளுக்கு என்ன பதில் சொல்வது? எந்த வேளையில் டிரான்ஸ்பர் என்கிற லெட்டர் வந்து பயமுறுத்தும் என்றெல்லாம் யோசித்தபடி இருந்த நாகராஜனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை நாகராஜனுக்கு.
இதற்கு ஒரே தீர்வு – நேராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சென்று காஞ்சி மகா பெரியவாளை தரிசிப்பதுதான் என்று தீர்மானித்தவர் காஞ்சிக்குச் செல்லும் பேருந்தில் ஏறினார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, ஸ்ரீமடத்தை நோக்கி பதட்டத்துடன் நடந்தார்.
அன்றைய தினம் பசுக்கள் கட்டப்பட்டிருந்த பெரிய கொட்டகைக்குள் மகா பெரியவா தங்கி இருந்தார்.
பசுக்கள் இப்படியும் அப்படியும் அசைந்த வண்ணம் சாணியைப் போட்டவாறும், கோமியம் தெளித்தவாறும் இருந்தன.
மாட்டுக் கொட்டடி என்றால், மூக்கைச் சுளித்தபடி வெளியேறுவது இந்தக் காலம். ஆனால், அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசனம் செய்வதற்காக எண்ணற்ற அன்பர்கள் தரையில் மாட்டுச் சாணமும், கோமியமும் கலந்த இடத்தில் பக்தி சிரத்தையுடன் கூடி இருந்தனர்.
திரளான பக்தர்கள் அன்றைய தினம் மாட்டுக் கொட்டகையில் கூடி, மகா பெரியவா என்கிற அந்த நடமாடும் தெய்வத்தை நிதானமாக தரிசித்து அவரின் ஆசி பெற்றுச் சென்று கொண்டிருந்தனர்.
தரிசனம் வேண்டிக் காத்திருப்பவர்கள், தங்களின் முறை வரும்வரை மகா பெரியவாளின் திருநாமத்தை உச்சரித்தபடி, அந்தத் தெய்வ சொரூபத்தை ஆனந்தமாக தரிசித்தபடி வரிசையில் வந்து கொண்டிருந்தனர்.
பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவாளுக்கு அன்றைய தினம் குமரேசன் மாமா கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
பசுக்கள் கட்டப்பட்டிருந்த மாட்டுக் கொட்டகை என்பதால், சாணத்தின் வாசமும், கோமியத்தின் வாசமும் நிரம்பிக் காணப்பட்டது.
காஞ்சி மகா பெரியவாளுக்கு மிகவும் பிடித்த இடம் இதுதான். காஞ்சியாக இருந்தாலும், வெளியூர் முகாமாக இருந்தாலும் சரி… அங்கே பசுக்கள் கட்டப்பட்டிருக்கும் இடம் மகானின் கண்களில் பட்டு விட்டால், ‘இங்கேயே நான் தங்கிக் கொள்கிறேன்‘ என்பதாகத் தன் ஜாகையை அந்த இடத்தில் போட்டு விடுவார். எத்தனை பெரிய பங்களாவை மகா பெரியவா ஜாகைக்குக் கொடுத்தாலும், மாட்டுக் கொட்டகை கிடைத்தால், அதற்குத்தான் முதலிடம்.
கோமாதாவை அந்த அளவுக்குப் போற்றுவார். பசுக்களைக் கனிவு பொங்கத் தடவி விடுவார். பசுக்களுக்குத் தெரியாதா, கலியுக தெய்வத்தின் அருகில் நாம் வீற்றிருக்கிறோம் என்று! எனவே, பசுக்களும் மகானை நன்றியுடன் பார்த்துத் தங்களது பரவசத்தை வெளிப்படுத்தும்.
பெரிய பெரிய பணக்காரக் குடும்பத்தில் இருந்தெல்லாம் மகா பெரியவா தரிசனத்துக்காக அன்றைக்கு வந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் ‘நாம் மாட்டுத் தொழுவத்தில் இருக்கிறோம்‘ என்பதான சிந்தனையே இல்லை.
மகா பெரியவா காலத்தில் மகானைத் தரிசிக்க வருபவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் பேர் ஆத்மார்த்தமான பக்தியுடன் வருபவர்கள். மகா பெரியவா வீற்றிருக்கிற இடம் மாட்டுத் தொழுவமா, சாலையோரமா, ஆற்றங்கரையா, பழைய ஆலயமா… இப்படி எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை – மகா பெரியவாளின் ஆசி மட்டுமே!
அதுபோல் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் மகா பெரியவா தரிசனத்துக்கு கல்பாக்கம் நாகராஜன் சென்றிருந்த வேளையிலும் பக்தர்கள் எவரும் மாட்டுத் தொழுவ வாசனையை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
ஆங்காங்கே மாட்டுச் சாணம் கண்டபடிக்கு இறைந்திருந்தது. கோமியம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. இவை எல்லாம் நம் உடலுக்கு ஏற்ற சூழல் என்பது இந்தக் காலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்குத் தெரியாதது பெரும் சோகம்.
கல்பாக்கம் நாகராஜனின் முறையும் வந்தது. மகா பெரியவாளுக்கு வெகு அருகில் தான் வந்து விட்டோம் என்பதை உணர்ந்ததும், கண்கள் கலங்க… குரல் கமற… “மகா பெரியவா…“ என்று தரையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் – கீழே மாட்டுச் சாணம் கண்டபடிக்கு இறைந்திருப்பதையும் பொருட்படுத்தாமல்!
நாகராஜன் அணிந்திருந்த வேஷ்டி மற்றும் மேல்துண்டில் பசுவின் சாணங்களும் கோமியச் சிதறல்களும் ஆங்காங்கே ஈஷிக் கொண்டது.
‘மகா பெரியவாளின் ஆசி மட்டும் கிடைத்து விட்டால் போதும்… தொடர்ந்து கல்பாக்கத்திலேயே இருந்து கொண்டு பிடி அரிசி சேகரிக்கலாம். அம்மா
அப்பாவை இருந்த இடத்தில் இருந்தபடியே பார்த்துக் கொள்ளலாம்‘ – இதுதான் நாகராஜனின் பிரார்த்தனை.
அப்போது மகா பெரியவா தனக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த குமரேசன் மாமாவிடம், “என்ன சொல்றான் கல்பாக்கம்? பக்கத்துல வந்து சொல்லச் சொல்லு“ என்று உத்தரவிட… நாகராஜனை அருகே அழைத்தார் குமரேசன்.
மனதில் இருக்கக் கூடிய பாரத்தை அப்படியே மகா பெரியவாளிடம் இறக்கி வைத்தார்.
பிறகு, நாகராஜனைப் பார்த்து மகா பெரியவா ஒரு புன்னகை பூத்தார். “நீ நன்னா இருப்பே… கல்பாக்கத்துலயே இருந்து தொடர்ந்து பிடி அரிசி கைங்கர்யம் பண்ணுவே…“ என்று அந்தப் பரப்பிரம்மம் திருவாய் மலர்ந்து ஆசிர்வதித்தது.
நெக்குருகிப் போய் விட்டார் நாகராஜன். ‘உனக்கு வடக்கே டிரான்ஸ்பர் எல்லாம் கிடையாது. கல்பாக்கத்துலயே இருப்பே‘ என்று நேரடியாக ஆசிர்வதித்தது போல் உணர்ந்தார்.
ஆம்! மகா பெரியவா திருவாக்கு அப்படியே பலித்தும் விட்டது.
அடுத்த நாள் கல்பாக்கம் அலுவலகம் சென்றதும், நாகராஜனின் மேலதிகாரி சீஃப் இன்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தி இவரை அழைத்து, “உன் டிரான்ஸ்பரை மட்டும் கஷ்டப்பட்டு கேன்சல் பண்ணிட்டேன். இனிமே நீ கல்பாக்கம்தான்“ என்று சொன்னபோது, இருந்த இடத்தில் இருந்தபடியே நடமாடும் தெய்வத்தை மானசீகமாக வணங்கினார் நாகராஜன்.
அதன் பின் கல்பாக்கத்துலயே இருந்து பிடி அரிசி கைங்கர்யத்தைத் தொடர்ந்து வந்தார். பணியும் சிறப்பாகப் போயிற்று.
மகா பெரியவா அன்றே ஆசிர்வதித்தது போல், கல்பாக்கம் அணுமின் நிலையப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் – காஞ்சி ஸ்ரீமடத்திலேயே தன் கைங்கர்யத்தை இன்றளவும் செய்து வருகிறார் நாகராஜன்.
மகா பெரியவா தொடர்புடைய அந்த நாளைய பக்தர்கள் இன்றைக்கும் இவரைப் பார்த்தால், ‘என்ன கல்பாக்கம் பிடி அரிசி கைங்கர்யம்… எப்படி இருக்கே?‘ என்றுதான் விசாரிப்பார்களாம்!
பிடியரிசியும் கண்ணதாசனும்
நாத்திகராக இருந்து மகா பெரியவா தரிசனத்தால் ஆஸ்திகராக மாறிய கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை மகானைத் தரிசிக்கச் சென்றிருந்தார்.
அப்போது ‘பிடி அரிசி‘ சேகரிக்கின்ற அன்பர்கள் பலர் மகா பெரியவா சந்நிதானத்தில் இருந்தார்கள்.
கண்ணதாசனைப் பார்த்துப் புன்னகைத்த பெரியவா தன் வலக் கையில் ஒரு பிடி அரிசியை வைத்துக் கொண்டிருப்பது போல் கற்பனை செய்து, கண்ணதாசனிடம் அந்தக் கையை நீட்டினார். பிறகு சொன்னார்: “ஒரு பிடின்னா ஒரு பிடி அளவுதான்னு இல்லே“ என்றவர், தன் கையை அப்படியே விரித்து, “இந்தக் கையோட அமைப்பைப் பாரு.. என்ன தோன்றது… ஹிருதயம் மாதிரி இருக்கா? நாம குடுக்கறது ஒரு பிடி அரிசியா இருந்தாலும் அதைக் குடுக்கறப்ப ஹ்ருதயபூர்வமா – அதாவது உளப்பூர்வமா குடுக்கணும்“ என்றார்.கண்ணதாசன் உட்பட அனைத்து அன்பர்களும் இந்த விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்