அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல்

ரு முறை திருச்சிக்கு மகா பெரியவா விஜயம் செய்திருந்தார். திருவானைக்கா சங்கர மடத்தில் முகாம். காவிரி ஸ்நானம், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர் பூஜை, தீர்த்தப் பிரசாதம், அருளுரை என்று அற்புதமாக இருந்தது.

தினம்தோறும் திரளான பக்தர்கள் கூட்டம். ஸ்ரீமடத்தின் சிப்பந்திகளுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனுப்புவதே பெரும் பாடாகிப் போனது.

திருவானைக்கா முகாமில் பெரியவா இருக்கும்போது ஒரு நாள் திருச்சி மாநகரைச் சேர்ந்த பிடி அரிசி அன்பர்கள் மூட்டைகளோடு தரிசனத்துக்கு வந்தார்கள்.

பிடி அரிசி அன்பர்களை ஆசிர்வதித்த மகா பெரியவா, “மொத்தம் எத்தனை மூட்டை இந்த மாசம்? என்று கேட்டார்.

மாசா மாசம் பத்து மூட்டை சேர்றது பெரியவா. அன்னதான கைங்கர்யத்துக்கு ஆங்காங்கே குடுத்துண்டு இருக்கோம். அதுபோல் இப்பவும் பத்து மூட்டை அரிசி பெரியவா.

அம்பாள் அகிலாண்டேஸ்வரி ராஜ்ய பரிபாலனம் பண்ணிண்டு இருக்கிற இடத்துல இந்தப் பத்து மூட்டை அரிசியைக் கொண்டு வந்து சேர்த்துருக்கேள். இது அவளுக்கானது. இப்ப தட்சிணாயணம் ஆரம்பிச்சிருக்கு. இது ஆடி மாசம். நீங்கல்லாம் என்ன பண்றேள்னா, ஆடி கடேசி வெள்ளிக்கிழமை அன்னிக்கு இந்தப் பத்து மூட்டை அரிசியையும் வெச்சுண்டு சக்கரைப் பொங்கல் பண்ணுங்கோ. இது தயார் பண்றதுக்குத் தேவையான வெல்லம், நெய், முந்திரிஇதுக்குல்லாம் ஒரு வழி சொல்றேன். பிடி அரிசி கலெக்ட் பண்ணப் போறப்ப அவா அவா தங்களால முடிஞ்ச காசைக் குடுத்திருப்பா, இல்லியா? அது இப்ப உங்ககிட்ட கையிருப்புல இருக்கும். அதை வெச்சுண்டே மத்த சாமான்களை வாங்குங்கோ.

சக்கரைப் பொங்கல் தயார் பண்ணிட்டு, அதை லோகமாதா அகிலாண்டேஸ்வரிக்கு நிவேத்தியம் பண்ணுங்கோ. அப்புறமா, மொத்தத்தையும் எடுத்துண்டு, சத்திரம் மாதிரி ஒரு பொது இடத்துல வெச்சுண்டு எல்லாருக்கும் பிரசாதம் கிடைக்கும்படியா விநியோகம் பண்ணுங்கோ. ஆடி மாசத்துல அம்பாள் பிரசாதத்துக்கு அவளே ஏற்பாடு பண்ணிக்கிறா என்று சொல்லிப் புன்னகைத்தார்.

வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் சந்தோஷம். “அப்படியே ஆகட்டும் பெரியவா. நீங்க சொன்னபடியே நிறைவேத்திடறோம் என்று அங்கிருந்து நகர்ந்தனர்.

அதன்படி மூட்டை மூட்டையாக அச்சு வெல்லம், கிலோ கணக்கில் நெய், முந்திரி, திராட்சை வாங்கப்பட்டு, ஆடி மாத கடைசி வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யப்பட்டது.

விஷயம் மகா பெரியவாளுக்கும் தெரிவிக்கப்பட்டு, அதன் பின் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு நிவேதனம் செய்யப்பட்டது.

றகு, ஒட்டுமொத்த சர்க்கரைப் பொங்கலும் திருவானைக்கா வடக்கு வீதி நகரத்தார் சத்திரத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கே வைத்து, பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்கு விநியோகம் நடந்தது.

பெறற்கரிய இந்தப் பிரசாதம் வேண்டி, எத்தனையோ ஏழைகள் வந்து வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். ‘சர்க்கரைப் பொங்கலே ஆனந்தம். அதுவும் அகிலாண்டேஸ்வரிக்கு நிவேதனம் செய்யப்பட்டது வேறு என்று கேட்டுக் கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

ஒரு பொருள் தானமாகக் கிடைத்தால், அது பலருக்கும் பலன் தர வேண்டும் என்ற வகையில் மகா பெரியவா ஏற்பாடு செய்த இந்தப் பிரசாதத்தை எல்லோரும் பாராட்டி, அந்த மகானை உளமார வாழ்த்திச் சென்றனர்.

இன்றைக்கும் உலகம் முழுக்க இருக்கக் கூடிய மகா பெரியவா பக்தர்கள் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, இதன் பலன் பலருக்கும் செல்லும் வகையில் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.