கும்பகோணத்தில் தற்போது வசித்து வரும் லலிதா சிவகுமாரின் அனுபவங்கள் தொடர்கின்றன. காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண ஆசியைப் பெற்ற இந்தக் குடும்பத்தினரின் வாழ்க்கையில் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் பஞ்சமில்லை.
மகா பெரியவா போன்ற மகான்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு – அவரது திருவடிகளை ‘நீயே துணை எனக்கு‘ என்று நிரந்தரமாகப் பற்றிக் கொண்டால், எல்லா நேரத்திலும் குருவே நமக்குத் துணை இருந்து காத்து அருள்வார்.
குருவே தெய்வமாகவும் நம்முடன் துணை இருக்கும்போது நாம் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? எந்தக் கவலையும் நம்முடையது இல்லை.
அப்படிப்பட்ட ஒரு ஆத்மார்த்தமான குடும்பத்தினரது அனுபவங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மகா பெரியவாளுக்கு வெள்ளிப் பாதுகைகள் செய்து அர்ப்பணிக்க வேண்டும் என்கிற ஆசை ராஜலட்சுமியின் மகளான லலிதாவுக்கு வந்தது.
அதன்படி மரத்தாலான அற்புதமான பாதுகைகளைத் தயார் செய்தார். அதற்கு வெள்ளித் தகடுகள் பதித்தார். இதை இன்னும் அலங்கரிக்கலாமே என்று லலிதாவுக்குத் தோன்ற, கால்கட்டை விரலும் மற்ற விரல்களும் இறுகப் பற்றிக் கொள்ளும் இடத்தில் காணப்படுகிற குமிழை – தங்கத்தால் செய்தார். இது போதாதென்று, பாதுகையின் இன்ன பிற இடங்களில் நவரத்தினங்களையும் பதித்தார்.
முற்றிலும் தயாராகி, மகா பெரியவாளுக்கு அர்ப்பணிக்க இருக்கிற பாதுகைகளைப் பார்க்கும்போது லலிதாவுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் சந்தோஷமான சந்தோஷம். குருவுக்கும் தெய்வத்துக்கும் ஏதாவது செய்ய முற்படும்போது அதில் கணக்கே பார்க்கக் கூடாது. ‘இன்னும் செய்தால் அழகாக இருக்குமே‘ என்று மனதில் தோன்றினால், யோசிக்கவே கூடாது. உடனே செய்து விட வேண்டும்.
தயாரான இந்தப் பாதுகைகளை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் காஞ்சிக்குச் சென்றார் லலிதா.
பாதுகைகளை அர்ப்பணித்தார். அந்தப் பாதுகைகளில் செய்யப்பட்டிருக்கிற அற்புதமான வேலைப்பாடுகளைப் பார்த்துப் புன்னகைத்த மகா பெரியவா, தன் திருப்பாதங்களில் அணிந்து கொண்டு லலிதாவையும் அவரது குடும்பத்தினரையும் பார்த்தார். கண்கள் பனிக்க, எல்லோரும் பெரியவாளைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு நமஸ்கரித்தனர்.
அதன் பின் தன் தொண்டர்களை அழைத்து, பாதுகைகளை உள்ளே வைக்கச் சொல்லி விட்டார்.
இன்னொரு முறை மகா பெரியவாளுக்கு வெள்ளி கிரீடம் தயார்செய்து எடுத்துப் போயிருந்தார் லலிதா. அதைத் தன் திருக்கரங்களில் வாங்கி, இப்படியும் அப்படியும் திருப்பி அதன் வேலைப்பாடுகளைப் பார்த்து ரசித்தார். பிறகு, தன் தலையில் கிரீடத்தை அணிந்து கொண்டு லலிதாவையும் அவரது குடும்பத்தினரையும் பார்த்தார்.
எல்லோரும் சாட்சாத் கயிலைவாசனையே தரிசிப்பது போல் கன்னத்தில் போட்டுக் கொண்டு நமஸ்கரிக்க… இரு கரங்களையும் உயர்த்தி ஆசிர்வதித்தார்.
அப்போதுதான் லலிதாவின் தாயார் ராஜலட்சுமி, “எம் பொண்ணு லலிதா, பெரியவா பாதுகைகளை வெச்சுண்டு பூஜை பண்ணணும்னு ஆசைப்படறா… அனுக்ரஹம் வேணும்“ என்று தன் இரு கைகளையும் யாசகம் கேட்பது போல் மகா பெரியவாளைப் பார்த்து நீட்டினார்.
அடுத்த கணம் தன் பக்கத்தில் இருந்த ஒரு சிப்பந்திக்கு பெரியவா ஏதோ ஜாடை காட்ட… உள்ளிருந்து ஒரு ஜோடி பாதுகை வந்தது. அதை மகா பெரியவா தன் திருப்பாதங்களில் அணிந்து லலிதாவிடம் கொடுத்தார். இது நடந்தது 1988-ல்.
ஆரம்பத்தில் வேதாரண்யத்தில் லலிதாவின் மாமனார் ராஜாரமய்யரும் மாமியார் செல்லம்மாளும் இந்தப் பாதுகைகளுக்கு பூஜை செய்து வந்தனர். மாமனார் காலத்துக்குப் பின் தற்போது லலிதாவின் கும்பகோணம் இல்லத்தில் பாதுகைகள் இருந்து வருகின்றன. தோடகாஷ்டகம், அஷ்டோத்திரம் எல்லாம் பாதுகைகளுக்குச் சமர்ப்பித்து வழிபட்டு வருகிறார்கள் லலிதாவும் சிவகுமாரும்.
காஞ்சி காமாட்சி அம்மனுக்குத் தங்க ரதம் செய்வதற்காக மகா பெரியவாளின் திருவாக்குப்படி அப்போது தங்கம் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.
உலகையே காத்து அருளும் நாயகி உலா வருவதற்குச் செய்யப்படுகிற ரதம் ஆயிற்றே… இதில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு, அவரவர்களின் சக்திக்கு ஏற்றாற்போல் தங்கத்தை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வழங்கி வந்தார்கள்.
லலிதாவின் தாயார் ராஜலட்சுமி, தானும் இந்தக் கைங்கர்யத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினார். இதற்காக இரண்டு பவுன் காசுகளை (பதினாறு கிராம்) தயார் செய்து மகா பெரியவாளிடம் சமர்ப்பிக்க வேண்டி, காஞ்சிபுரம் சென்றார்.
எண்ணற்ற பக்தர்கள் திரண்டிருந்த திருச்சந்நிதியில் ஒவ்வொருவரிடமும் அவரவரது குடும்ப நலனைத் தனிப்பட்ட முறையில் விசாரித்து, அனைவருக்கும் அருள் வழங்கி அனுப்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
தன் பார்வையை அப்படியே திருப்பிக் கூட்டத்தினரைப் பாக்கும்போது ராஜலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் கண்களில் பட்டார்கள். ஒரு ஜாடை காண்பித்து அருகே வரச் சொன்னார்.
ஓட்டமும் நடையுமாகக் கூட்டத்தில் நீந்தி வந்த ராஜலட்சுமி, தன் குடும்பத்தினருடன் நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றார்.
‘என்ன விஷயம்?‘ என்பது போல் சைகையில் கேட்டார் மகா பெரியவா.
“காஞ்சி காமாட்சியோட தங்க ரதம் திருப்பணிக்குப் பெரியவாகிட்ட சொர்ண பிட்சை (தங்கம் வழங்குவது) பண்ணலாம்னு வந்திருக்கேன்“ என்றார் ராஜலட்சுமி.
“முடிச்சுட்டு இங்கிருந்து அடுத்து எங்கே போகப் போறே?“
“மாங்காடு காமாட்சி அம்மனை தரிசனம் பண்ணப் போகணும்.“
‘என்ன விஷயம்?‘ – மீண்டும் ஜாடையில் கேள்வி.
“மாங்காடு காமாட்சிகிட்ட ஒரு பிரார்த்தனை இருக்கு பெரியவா. அதை அங்கே பண்ணணும்.“
“என்ன பிரார்த்தனை?“ – ராஜலட்சுமியிடம் கேட்டார் மகா பெரியவா.
“அங்கப்பிரதட்சணம் பண்ணணும் பெரியவா.“
மகா பெரியவா இதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. தவிர, சொர்ண பிட்சை வழங்குவதற்கு அப்போது உத்தரவாகவில்லை. எனவே, சிறிது நேரம் அங்கேயே இருந்து நிறைவான தரிசனம் பெற்று நகர்ந்தார் ராஜலட்சுமி.
‘சொர்ண பிட்சை‘ வழங்குவதற்கு நாளைக்காவது உத்தரவாக வேண்டுமே என்று அந்த சர்வேஸ்வர சொரூபத்தையே பிரார்த்தனை செய்து விட்டு, தங்கி இருந்த ஸ்ரீமடத்தின் அறைக்கு வந்தார்கள்.
மறுநாள் அதிகாலைப் பொழுது.
காஞ்சி ஸ்ரீமடத்தில் இரவுப் பொழுதில் தங்கி இருப்பவர்கள் அடுத்த நாள் விடிந்ததும், மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை (அதிகாலையில் மகா பெரியவாளை தரிசிப்பதை விஸ்வரூப தரிசனம் என்பர்) தவற விட மாட்டார்கள். மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் என்பது, தரிசிப்பவர்களின் தீவினைகளை எல்லாம் பொடிப் பொடி ஆக்கி விடும். எனவே, மகானைத் தரிசிக்கச் செல்பவர்கள் ஒரு இரவு வேளையாவது ஸ்ரீமடத்திலோ, அல்லது அவர் இருக்கிற முகாமிலோ தங்கி விட்டு, அதிகாலை தரிசனத்தை முடித்துக் கொண்டுதான் ஊருக்குப் புறப்படுவார்கள்.
லலிதாவும் அவரது தாயார் ராஜலட்சுமி உட்பட குடும்பத்தார் அனைவரும் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு, நீராடச் செல்லும் மகா பெரியவாளைப் பின்தொடர்ந்து சென்றனர்.
ஸ்நானம் செய்வதற்காகச் சென்று கொண்டிருக்கும் மகா பெரியவாளைத் தொடர்ந்து அவரது தொண்டர்கள் வேகவேகமாக நடை போட்டனர்.
–ஒரு சில பக்தர்களே சென்று கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில் லலிதா, ராஜலட்சுமி குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.
அரைகுறை இருட்டு. அந்த மகான் தன் பிஞ்சுப் பாதங்களை மணல் பொதிந்த தரைப் பகுதியில் வேக வேகமாக எடுத்து வைத்து, வழக்கமாகத் தான் நீராடும் இடத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
மகா பெரியவா நீராடுவதற்குத் தேவையானவற்றைத் தொண்டர்கள் அங்கே தயாராக வைத்திருப்பார்கள்.
மகா பெரியவாளைப் பொறுத்தவரை அது நீராடல்.
ஆனால், உடன் வருகிற தொண்டர்களுக்கு இது அபிஷேகம்.
ஆலயத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு நடக்கிற அபிஷேகத்தை எப்படிக் கண் கொட்டாமல் பார்த்து ஆனந்தப்படுகிறோம்… பரவசப்படுகிறோம்…
அதுபோல் மகா பெரியவா நீராடும்போது அந்தத் திருக்காட்சிகளைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு, ‘சர்வேஸ்வரா… சங்கரா‘ என்று வணங்குவது பக்தர்கள் வழக்கம்.
மகான் நீராடும்போது ஓடி வரும் நீரில் இருந்து சிறிதளவு எடுத்துத் தங்கள் தலையில் தெளித்துக் கொள்வார்கள். மகானின் பிரசாதமாக சிறிதளவு உட்கொள்வார்கள். என்னென்ன பிணிகள் வாட்டிக் கொண்டிருக்கிறதோ, என்னென்ன பிரார்த்தனைகளை அந்த வேளையில் வைத்தார்களோ, அனைத்தும் அடுத்த கணம் நிறைவேறி விடும்.
நீராடுவதற்குத் தொண்டர்கள் பட்டாளத்துடன் விறுவிறுவென்று சென்று கொண்டிருந்த மகா பெரியவா திடீரென்று அப்படியே நின்றார். அவர் நின்ற இடம் – ஒரு மாமரத்தின் அடியில்!
மாமரத்தில் சாய்ந்து நின்றவாறு பின்னால் வருகின்ற பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்துத் திரும்பிப் பார்த்தார். அனைவரும் கைகளை உயர்த்திக் கும்பிட்டனர். மணலில் விழுந்து மகானை நமஸ்கரித்தனர்.
லலிதாவின் தாயார் ராஜலட்சுமியைப் பார்த்து சைகை காண்பித்து அருகே அழைத்தார்.
பெரியவாளின் அனுக்ரஹம் தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதாக மகிழ்ந்த ராஜலட்சுமி ஓடி வந்தார். பின்னால், லலிதா மற்றும் குடும்பத்தினரும் வந்து நின்றனர்.
மாமரத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்ட மகா பெரியவா, ராஜலட்சுமியைப் பார்த்துக் கேட்டார்: “மாங்காட்டில் தபஸ் காமாட்சி எப்படி தரிசனம் தருவாள்னு தெரியுமா?“
தூக்கி வாரிப் போட்டது. இன்றைய தினம் மகா பெரியவாளுக்கு இரண்டு பவுன் சொர்ண பிட்சை வழங்கி விட்டு, இங்கிருந்து மாங்காடு செல்லப் போவதாக ராஜலட்சுமி முந்தைய தினம் இரவு மகானிடம் சொல்லி இருந்தார்.
அதை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறாரே என்று பெருமிதப்பட்ட ராஜலட்சுமிக்கு அப்போதைக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. பதில் ஏதும் பேசாமல் இரு கைகளும் கூப்பிய வண்ணம், பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ராஜலட்சுமியைத் தீர்க்கமாகப் பார்த்து விட்டு, “மாங்காடு போய் தபஸ் காமாட்சியைத் தரிசனம் பண்ணணும்னு சொன்னியே… இப்ப பாத்துக்கோ அந்தக் காமாட்சியை“ என்று சொன்னவுடன், அங்கிருந்த ராஜலட்சுமியும், உடன் இருந்த ஒரு சில பக்தர்களும் மெய் சிலிர்த்தனர்.
மகா பெரியவா அப்போது நின்றிருந்த திருக்கோலம் அப்படியே மாங்காடு தபஸ் காமாட்சியை அனைவரின் கண்களுக்கு முன்னாலும் கொண்டு வந்தது.
“மாங்காடு போய் அங்கப்பிரதட்சிணம் பண்ணணும்னு சொன்னியே… நான்தான் மாங்காடு காமாட்சி. இங்கயே நீ அங்கப்பிரதட்சணத்தைப் பண்ணிடு“ என்றாரே, பார்க்கணும்.
ராஜலட்சுமியும் அவருடன் வந்த குடும்பத்தவர்கள் அனைவரும் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிய… அந்த நடமாடும் தெய்வத்தைப் பார்த்தனர்.
தெய்வம் தேடித் தேடி தரிசனம் தரும் என்பார்களே… இதுதானா அது?
ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு என்னே ஒரு பாக்கியம்.
‘பெரியவா… பெரியவா… பெரியவா…“ என்று விழிகளில் பொங்கும் நீருடன், நா தழுதழுக்க ஏதேதோ குழறியபடி பேசிக் கொண்டிருந்தார் ராஜலட்சுமி. ‘நான்தான் மாங்காடு காமாட்சியும்‘ என்று தரிசனம் தந்த அந்தத் திருக்காட்சியை எண்ணி எண்ணி, பரவசமும், ஆனந்தமும் கொண்டார். மனசுக்குள் தான் நினைப்பதை, வார்த்தைகளாக மகா பெரியவாளிடம் வெளிப்படுத்த நினைத்தார். ஆனால், அவரால் முடியவில்லை.
மாமரத்தில் சாய்ந்து கொண்டு மகா பெரியவா திருக்காட்சி தந்து கொண்டிருந்தார். மாமரங்கள் அடர்ந்த வனம் என்பதால், ‘மாங்காடு‘ என்ற பெயர் அந்த நாளில் ஏற்பட்டது.
கைகளைக் கூப்பியபடி ஒரு சில விநாடிகளுக்கு மகா பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருந்தார்.
பிறகு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “மாங்காடு காமாட்சியோட பிரத்யட்ச தரிசனத்தை இங்கயே எனக்குக் காட்டிட்டேளே பெரியவா…“ என்று கலியுக தெய்வத்தைப் பார்த்துக் கன்னத்தில் கைகளால் மாறி மாறி அறைந்து தேம்பிக் கொண்டிருந்தார் ராஜலட்சுமி.
அப்போது அந்தப் பரப்பிரம்மம் தன் அருகே நின்று கொண்டிருந்த ஒரு தொண்டரைப் பார்த்து, “டேய்… இவ (ராஜலட்சுமியைக் காட்டி) இங்கே அங்கப் பிரதட்சணம் பண்ணப் போறா… அதுக்குத் தோதா இந்த இடத்துல இருக்கிற கல், குப்பை எல்லாத்தையும் எடுத்து, சுத்தம் பண்ணு“ என்று உத்தரவிட்டார்.
அடுத்த இரண்டே நிமிடங்களில், மகா பெரியவாளின் உத்தரவை சிரமேற்கொண்டு செய்து முடித்தார் தொண்டர்.
‘இப்ப அங்கப் பிரதட்சணம் பண்ணலாம்‘ என்பது போல் ராஜலட்சுமியைப் பார்த்து மகா பெரியவா சைகை காண்பித்தார்.
இரு கைகளையும் இணைத்துக் கும்பிட்டார். அப்படியே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தார். அதன் பின் அங்கப் பிரதட்சணம் செய்ய ஆரம்பித்தார் ராஜலட்சுமி. அவரது உதடுகள் ‘மகா பெரியவா… மகா பெரியவா‘ என்கிற வார்த்தைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தது.
மாமரத்தின் அடியில் – கற்களும் குப்பையும் நீக்கப்பட்ட மணல்வெளியில் மகா பெரியவாளைச் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்து முடித்து எழுந்து நின்றார் ராஜலட்சுமி. மகானை வணங்கினார்.
அடுத்து நடந்தது இதைவிட அற்புதம் என்று சொன்னேன் அல்லவா?
ராஜலட்சுமியைப் பார்த்து, மகா பெரியவா சொன்னார்: “சொர்ண பிட்சை பண்றதுக்காக வந்தேன்னு சொன்னியே… அதை இங்கயே என் பாதத்துல பண்ணிடு.“
முந்தின நாள் மாலை ஸ்ரீமடத்தில் மகானை நிதானமாக தரிசிக்கச் சென்றபோது, சொர்ண பிட்சை செய்து விடுகிற எண்ணத்தில் சென்றிருந்தார் ராஜலட்சுமி. ஆனால், அப்போது இந்த பிட்சையைக் கேட்டு வாங்கவில்லை.
ஆனால், இப்போது – இந்த அதிகாலை வேளையில் மகா பெரியவாளே கேட்கிறார்!
சொர்ண பிட்சை செய்வதற்கா இப்போது ராஜலட்சுமி வந்திருக்கிறார்? மகானின் காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு ஆனந்தப்படவும், அதன் பின் அவர் நீராடச் செல்லும் நீர்நிலைக்குச் சென்று அந்த அபிஷேகத்தைப் பார்த்துப் பரவசப்படவும் ராஜலட்சுமி தன் குடும்பத்தாருடன் சென்று கொண்டிருந்தார்.
பிட்சை செய்வதற்கான வேளை இதுவல்ல என்று ‘சொர்ண பிட்சை‘க்குத் தான் கொண்டு வந்திருந்த இரண்டு பவுன் காசை, தங்கி இருந்த அறையிலேயே ஒரு சிறு பெட்டிக்குள் வைத்து பூட்டி விட்டு வந்திருக்கிறார் ராஜலட்சுமி.
ஆனால், மகா பெரியவா ‘இப்போதே பிட்சை செய்‘ என்று உத்தரவிடுகிறாரே… என்ன செய்வது?
இந்த இடத்தில் மற்றவர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்? ‘பெரியவா… இதோ, வந்துடறேன்… ஒங்களுக்கு பிட்சை பண்ண வேண்டியதை ரூம்ல வெச்சிட்டு வந்திருக்கேன். தோ, ஓடிப் போய் எடுத்துண்டு வந்துடறேன்‘ என்று சிட்டாக இங்கிருந்து ஓடிப் போய் எடுத்து வருவார்கள். இல்லையா? இதுதானே சாத்தியம்!
ஆனால், ராஜலட்சுமி என்ன செய்தார் தெரியுமா?
‘இப்பவே பிட்சை பண்ணு‘ என்று இந்த நடமாடும் தெய்வம் உத்தரவிட்டு விட்டதே… இதற்குள் நாம் அறைக்குச் சென்று எடுத்து வந்தால் தாமதம் ஆகி விடுமே என்றெல்லாம் யோசித்து, அடுத்து தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் கழுத்தில் அணிந்திருந்த இருபத்திரண்டு பவுன் இரட்டை வடச் சங்கிலியை – நன்றாகக் கவனிக்க வேண்டும்… இரண்டு பவுன்… நான்கு பவுன் அல்ல… இருபத்திரண்டு பவுன் சங்கிலியை அப்படியே கழற்றி மகா பெரியவாளின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து, ‘சர்வேஸ்வரா… சங்கரா… எத்தனை பெரிய பாக்கியத்தை எனக்குக் குடுத்திருக்கேள்‘ என்று வாய் விட்டு அழுது, கங்கையாகக் கண்ணீர் பீரிட வணங்கினார்.
யோசித்துப் பாருங்கள்… பிட்சைக்காகக் கொண்டு வந்தது இரண்டு பவுன் தங்கக் காசு. ஆனால், இப்போது பிட்சையாக வழங்குவது இருபத்திரண்டு பவுன் சங்கிலி.
காரணம் – கலியுக தெய்வம் கேட்டவுடனே தயக்கமே காட்டாமல் அதை உடனே செய்து விட வேண்டும் என்கிற மாறாத பக்தி.
அப்போது ராஜலட்சுமிக்கு நான்கு மகள்கள். நால்வருக்கும் அடுத்தடுத்து கல்யாணம் நடத்த வேண்டிய வயது வேறு. மகள்களின் திருமண காலத்தில் இந்த இருபத்துரண்டு பவுன் சங்கிலி தன் கைவசம் இருந்தால், பெரிதும் பயன்படுமே என்றெல்லாம் யோசிக்காமல், சட்டென எடுத்து மகா பெரியவாளின் திருப்பாதங்களில் அர்ப்பணித்தார் என்றால், மகா பெரியவா மீது ராஜலட்சுமி எந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்தார் என்று பார்க்க வேண்டும். ‘நம் குடும்பத்தைக் காப்பாற்ற இவர் இருக்கிறார்… இவருக்குத் தெரியாதா நம் நல்லதும் கெட்டதும்‘ என்கிற எண்ணம்!
ராஜலட்சுமியின் குடும்பத்துக்கு மகா பெரியவாளின் பரிபூரண ஆசி இன்றைக்கும் இருந்து வருகிறது என்பதை, அவரது வாரிசுகளின் ஆனந்தமான வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
அடுத்து சொல்லப் போகிற சம்பவமும் ராஜலட்சுமி சம்பந்தப்பட்டதே!