விஷ்ணு சஹஸ்ரநாம விசேஷம்

கா பெரியவா 1960-களில் புதுக்கோட்டைக்கு அருகே இளையாற்றங்குடியில் முகாமிட்டிருந்தார்.

காஞ்சி காமகோடி பீடத்தில் 65-வது பீடாதிபதியாக விளங்கிய மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் இளையாற்றங்குடியில் அமைந்துள்ளது.

அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்டமான வில்வ மரம் இருக்கிறது. மகாதேவேந்திர சுவாமிகள் இங்கே தங்கி இருந்த காலம்தொட்டு இந்த வில்வ மரம் இருந்து வருகிறது. இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாராம். “இது போன்ற உயர்வான வில்வ இலைகள் இதுவரை சிவ பூஜைக்குக் கிடைத்ததில்லை என்று பெருமைப்படுவாராம் சுவாமிகள். அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஓர் ஈடுபாடு.

காஞ்சி மகா பெரியவாளுக்கு மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது பெரும் அபிமானம் உண்டு. புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரை வரும்போதெல்லாம், மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் சில நாட்கள் தங்கி, தியானத்தில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.

1925-ல் மகா பெரியவா இளையாற்றங்குடிக்கு வந்தபோது இங்கு வியாச பூஜை நடத்தி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.

1961-ல் மகா பெரியவா இங்கு முகாமிட்டிருந்தார். தான் வந்து சேர்ந்த முதல் நாள் சந்திரமௌளீஸ்வர பூஜையை முடித்து விட்டு, பிட்சை (ஆகாரம்) எடுத்துக் கொள்வதற்கான வேளை வந்தது. அதற்கு முன்னதாக மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் சென்று தரிசித்து விட்டு வரத் தீர்மானித்தார்.

மகா பெரியவா முகாமிட்டிருந்த இடத்தில் இருந்து அதிஷ்டானம் செல்ல வேண்டுமென்றால், சிறிது தொலைவு தெருவில் இறங்கி நடக்க வேண்டும். ஆனால், தெருவில் நடந்து செல்லும்போது ஆசாரக் குறைவு ஏற்படும். இது சந்நியாசிகளுக்கு உண்டான நடைமுறை. நடந்து சென்றதால் ஏற்பட்ட ஆசாரக் குறைவில் இருந்து விடுபடுவதற்காக, அதிஷ்டானம் சென்று வணங்கி வந்த பின் நீராடுவதும் கூடாது.

இதற்கு மகா பெரியவா என்ன உபாயம் செய்தார் தெரியுமா?

அங்கே கூடி இருந்த பக்தர்களைப் பார்த்து விட்டு, “உங்கள்ல யாருக்காவது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத் தெரியுமா? என்று கேட்டார்.

உடனே ராஜலட்சுமியும், அப்போது புதுக்கோட்டையில் இருந்து வந்திருந்த இன்னொரு பெண்மணியான ராஜமும் தங்களுக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லத் தெரியும் என்று மகா பெரியவாளிடம் தெரிவித்தார்கள்.

அவர்கள் இருவரையும் பார்த்து, “அதிஷ்டான தரிசனத்துக்குப் புறப்படப் போறேன். நான் நடந்து போறப்ப நீங்க ரெண்டு பேரும் கூட வாங்கோ. இங்கே இருக்கிற பக்தாளும் தொடர்ந்து வருவா. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காம சன்னமா சொல்லிண்டு வாங்கோ. கூட வர்ற புருஷால்லாம் (ஆண்கள்) நீங்க சொல்றதைக் கேட்டுட்டு அவாளும் சத்தமா சொல்லுவா என்றார் மகா பெரியவா.

புதுக்கோட்டையில் வசித்து வந்த ராஜலட்சுமிக்கும் ராஜத்துக்கும் ஏக சந்தோஷம்.

இருக்காதா, பின்னே?!

மகா பெரியவாளே விருப்பப்பட்டுக் கேட்டு, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதுஅதுவும் அவருடன் நடந்தபடி சொல்லிக் கொண்டே செல்வது எத்தனை பெரிய பாக்கியம்!

அதிஷ்டானத்தை தரிசிப்பதற்காக மகா பெரியவா கேம்ப்பை விட்டு வெளியே வந்தார். ராஜலட்சுமி, ராஜம் உட்பட ஏராளமான பக்தர்கள், மகா பெரியவாளை சுற்றி வளைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத் துவக்கினார்கள் ராஜலட்சுமியும், ராஜமும். உடன் இருந்தவர்கள் அப்படியே மீண்டும் சொன்னார்கள். இவற்றைத் தன் செவியில் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தார் மகா பெரியவா. அதிஷ்டான தரிசனம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. அதன் பின் கேம்ப்புக்கு வந்து பிட்சை எடுத்துக் கொண்டார்.

சரி, சாலையில் நடந்து அதிஷ்டானம் செல்வது தனக்கு ஆசாரக் குறைவு என்று மகா பெரியவா சொன்னாரேஅந்த ஆசாரக் குறைவு எப்படிப் போயிற்று?

சந்நியாச தர்மம் என்ன சொல்கிறதோ, அதை சற்றும் புறம் தள்ளாமல், அதன்படி வாழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவா.

இன்றைக்கு வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற பல நல்லது கெட்டதுகளுக்கு நாம் கடைப்பிடித்து வருகிற தர்மமும் ஒரு காரணமாகிறது என்பதை மறந்து விடக் கூடாது.

தர்ம சாஸ்திரம் என்பது ஏட்டளவில் இருக்க வேண்டியது மட்டுமல்ல. வீட்டளவிலும் இருக்க வேண்டும். ஒரு தேசத்தில் தர்மம் மலிந்து போகும்போது என்னென்ன சோகங்கள் நடக்கும் என்பனவெல்லாம் நூல்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தர்மத்தைப் பற்றிப் பெருமளவில் பேசிய மகா பெரியவா, அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.

மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தைத் தரிசித்து விட்டுத் தான் தங்கி இருக்கிற முகாமுக்கு வந்ததும், ஆசாரக் குறைவு எப்படி அகன்றது என்பதை மகா பெரியவாளே தன் திருவாயால் பக்தர்களிடம் விளக்கினார்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்தாலோ, அல்லது அதைப் பிறர் சொல்லி நாம் கேட்டாலோ எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகி விடுகின்றன. நம்மிடம் இருக்கிற ஆசாரக் குறைவும் அகன்று விடுகிறது. தவிர, சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்புக் கவசமாக விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் இருக்கும்.

என்னே ஒரு அற்புதமான விளக்கம்அதுவும் சிவ சொரூபமாக விளங்கி வருகிற மகா பெரியவாளிடம் இருந்து!

நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிற இடத்தில் எந்த விதமான தோஷங்களும், பாவங்களும் குடி இருக்காது. அங்கே நிலவி வரும் தோஷங்கள் அனைத்தும் மாலவன் சக்தியால் அகற்றப்படுகின்றன.

தவிர, சொன்னவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் புண்ணியம் கூடுகிறது. மகா பெரியவா இதைத் தன் திருவாயால் மலர்ந்திருக்கிறார். இனியாவது, இந்த ஸ்லோகங்களின் பாராயண வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆலயங்களிலோ, அல்லது இல்லங்களிலோ குழுவாக அமர்ந்து கொண்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தை அடிக்கடி செய்ய வேண்டும்.

தவிர, அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பெண்களுக்கும் மகா பெரியவா ஒரு மெஸேஜ் கொடுத்தார்.

இது அந்தக் காலத்துப் பெண்களுக்கு மட்டுமல்லஇந்தக் காலத்துப் பெண்களுக்கும் பொருந்தக் கூடியதே!

என்ன மெஸேஜ்?

அன்றைய தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்த ராஜலட்சுமி மற்றும் ராஜத்தைப் பார்த்து மகா பெரியவா கேட்டார்: “இந்தப் பாராயணத்தை நீங்க யார்கிட்டேர்ந்து கத்துண்டேள்?

பெரியவாபுதுக்கோட்டைல கைலாச கனபாடிகள்னு பெரியவர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்டேர்ந்து கத்துண்டோம் என்றார் ராஜலட்சுமி.

கைலாச கனபாடிகளா? ஆத்துல சுத்துப்பட்டு எல்லா வேலைங்களையும் பாத்துண்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் கத்துக்கறதுக்கு ஒங்களுக்கு டைம் இருக்கா?

கொஞ்சம் கஷ்டம்தான் பெரியவா. அதுக்குத்தான் எங்களுக்குக் கொஞ்சம் ஓய்வா இருக்கிற மதியான நேரத்துல கனபாடிகள் ஆத்துக்குப் போய்க் கத்துக்கறோம். ஆர்வமா நாங்க கத்துக்க வரோம்கிறதுனால கனபாடிகளும் சந்தோஷமா சொல்லிக் கொடுக்கறார்.

ஒரு புன்னகையுடன் இவர்களை ஆசிர்வதித்தார் மகா பெரியவா. அதன் பின் அங்கே இருந்தவர்களிடம் சொன்னதுதான் மெஸேஜ்.

இன்னிக்கு நகரங்கள்ல வசிக்கிற பெண்கள்லாம் மதிய நேரத்துல சினிமா தியேட்டருக்குப் போயிடறா. அதுக்குப் பதில் அவால்லாம் இது போன்ற பாராயணங்களைக் கத்துண்டா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் என்ற மகா பெரியவா, அங்கிருந்த புதுக்கோட்டை ஜகதீசய்யரை (விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்ன ராஜலட்சுமியின் கணவர்) பார்த்து அருகில் வரச் சொன்னார்.

பெண்கள்லாம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் கத்துக்கணும். நல்ல பண்டிதாளை விட்டுச் சொல்லச் சொல்லி அதை டேப் பண்ணிக்கோ. எல்லா ஊர்கள்லேயும் கத்துத் தர்றதுக்குப் பண்டிதாள் ஃப்ரீயா இருப்பானு சொல்ல முடியாது. இப்படி டேப் பண்ணி வெச்சுண்டா அதை நிறைய காப்பி எடுத்து மத்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். அங்கே ஆர்வமா இருக்கற லேடீஸ் இதைக் கத்துக்கலாம்.

பல நகரங்கள்ல வசிக்கிற குடும்பப் பெண்கள்கிட்ட இந்த டேப் போய்ச் சேரும்படியா ஏற்பாடு பண்ணு. அவா அவா ஆத்துல இருந்தபடியே இந்த டேப்பை ஆன் பண்ணிட்டு, அதுல சொல்றதைக் கேட்டு, புரிஞ்சுக்கறதுக்கும் கத்துக்கறதுக்கும் சுலபமா இருக்கும். ஒவ்வொரு ஊர்லயும் கத்துத் தர்றதுக்கு ஆட்களைத் தேட வேண்டிய அவசியமும் இருக்காது என்று சொல்லஜகதீசய்யர் தலையசைத்து அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அந்தக் காலத்தில் மகா பெரியவா ஏதாவது சொன்னால், அதை அப்படியே சிரமேற்கொண்டு செய்து முடிப்பதை பெரும் பேறாக எண்ணியவர்கள் மகானைச் சுற்றி இருந்தார்கள்.

மகான் இட்ட உத்தரவை செய்து முடிப்பது என்பது மகேசன் போட்ட உத்தரவாகவே எண்ணினார்கள்.

தங்களுக்கு ஏதேனும் ஒரு உத்தரவை மகா பெரியவா வழங்க மாட்டாரா என்று அவரைத் தரிசிக்க வருகிற தனவந்தர்கள் ஏங்குவார்கள். ஆனால், எவருக்கு எது போக வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அதுவே நடக்கும்.

மகா பெரியவாளுக்கு மிகுந்த சிரத்தையுடன் கைங்கர்யம் செய்த அடியவர்களுடைய குருபக்தி, தேவைப்படுகிற காலத்தில்தேவையான அனுக்ரஹத்தை அந்த மகானிடம் இருந்தே பெற்றுத் தந்தது.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தை டேப் எடுத்து எல்லா ஊர்களுக்கும் கொண்டு செல்லும் பணியை ஏற்றுக் கொண்ட புதுக்கோட்டை ஜகதீசய்யரே இதற்கு ஓர் உதாரணம். மகானின் வாக்குப்படி நடந்து கொண்டதால், அவரது குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை மகானே பார்த்துக் கொண்டார்.