குறையை போக்கிய குரு பார்வை

புதுக்கோட்டை ஜகதீசய்யரின் ஒரு பெண்ணின் பெயர் உமா ரவி (இவரது இளைய சகோதரி லலிதா சிவகுமாரின் அனுபவம் பற்றி அண்மையில் பார்த்தோம்). இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, மூன்றும் அடுத்தடுத்து இறந்து போயின.

மகா பெரியவா அனுக்ரஹத்தால் அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் குதூகலம். சந்தோஷமான சந்தோஷம். குழந்தைக்கு அரவிந்த் என்று பெயரிட்டார்கள்.

மகா பெரியவா அருளால், அரவிந்த் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று மகா பெரியவாளை மானசீகமாகப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

அடுத்து, அரவிந்த்தின் பிறந்த வேளையை உள்ளூரிலேயே உள்ள ஒரு ஜோசியரிடம் கொடுத்து, ஜாதகத்தைக் கணிக்கச் சொன்னார்கள் பெற்றோரான உமாவும் ரவியும்.

குழந்தை பிறந்த வேளையை வைத்து ஜாதகம் கணித்த ஜோசியர், மெள்ள உதட்டைப் பிதுக்கினார். பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உதறல் எடுத்தது. ஜோசியர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அவரையே பதற்றத்துடன் பார்த்தனர்.

குழந்தைக்கு குரு பார்வை மந்தமாக இருக்கிறது. குருவின் பார்வை பரிபூரணமாகக் கிடைக்க வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் ஜோசியர்.

நித்தமும் பூஜையறையில் நின்று மகா பெரியவாளையே பிரார்த்தித்தனர் உமாவும் ரவியும்.

அரவிந்த்துக்கு ஒண்ணரை வயது ஆன பின், அவனை அழைத்துக் கொண்டு எல்லோரும் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.

குழந்தையின் தாயான உமா, மகனை மகா பெரியவா பாதங்களுக்குக் கீழே போட்டார். கணவர் ரவியோடு நமஸ்காரம் செய்தார் உமா. உடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் மகானை வணங்கினர்.

பெரியவா அனுக்ரஹத்தால் குழந்தை பிறந்திருப்பதையும், குரு பார்வை மந்தமாக இருப்பதாக ஜோசியர் சொன்ன விஷயத்தையும் பவ்யமாகத் தெரிவித்தார்கள்.

தனக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஒரு சிப்பந்தியிடம், அந்தக் குழந்தையை மெள்ளத் தூக்கித் தனக்கு முன்னால் நிறுத்துமாறு உத்தரவிட்டார் மகா பெரியவா.

அதன்படி அந்தச் சிப்பந்தியும், அரவிந்த்தின் அருகே சென்று அவனைத் தூக்கினார். புதியவர் கைதொட்டுத் தூக்கியும், அரவிந்த் சிணுங்கவில்லை.

இருக்கின்ற இடம்மகா பெரியவா திருச்சந்நிதி ஆயிற்றே! எந்த விதமான அழுகையும் இல்லாமல் ஸ்ரீமடத்துச் சிப்பந்தியிடம் சாதுவாக இருந்தது.

மகா பெரியவாளின் திருப்பார்வை அரவிந்த்தின் மேல் படும் விதத்தில், குழந்தையை நேராகப் பிடித்துக் கொண்டார் சிப்பந்தி. பெரியவாளும் குழந்தையும் நேருக்கு நேர் பார்க்கும் விதத்தில் இருந்தனர்.

அரவிந்த்துக்கு அருகில் இருந்த சிப்பந்தியிடம், “குழந்தைக்கு நான் தெரியறேனானு கேளு என்றார் மகா பெரியவா.

அந்தக் கேள்வியை அப்படியே குழந்தையிடம் கேட்டார் சிப்பந்தி.

பதில் சொல்லவில்லை.

உமா, ரவி உட்பட குடும்பத்தினர் அனைவரும் குழந்தையை நெருங்கி அதே கேள்வியைக் கேட்டார்கள் – “உம்மாச்சித் தாத்தா ஒங் கண்ணுக்குத் தெரியறாரா?

குழந்தையும் முகம் மலர்ந்து, புன்னகைத்தது. “உம்மாச்சித் தாத்தா என்று மகா பெரியவாளை நோக்கிக் கையை நீட்டியது. எல்லோருக்கும் திருப்தி.

குழந்தையின் தாயான உமாவையும், அவரது கணவரான ரவியையும் பார்த்து ஒரு புன்னகையுடன், “குழந்தைக்கு குரு பார்வை கெடைச்சுடுத்து என்று புன்னகையுடன் சொல்லி, தன் அருகே அரவிந்த்தை வரவழைத்து கல்கண்டு தந்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

அதன் பின் குழந்தை அரவிந்த்துக்கு எந்த ஒரு பங்கமும் வரவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

தற்போது சென்னையில் உத்தியோகத்தில் இருந்து வருகிறார் அரவிந்த்.

குரு பார்வை என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதுநவக்கிரக குரு பகவான்.

ஆனால், உண்மையான பக்தியோடு அவரவர்கள் அவரவர்களது குருவை ஆராதித்து வந்தால், இந்த குருவின் பார்வையும், கொட்டிக் கொடுக்க ஆரம்பித்து விடும்.

ஒருவர் வணங்குகிற குருவிடம் ஆத்மார்த்தமான பக்தியுடன்உண்மையாக இருந்துநேர்மையாக நடந்து கொண்டால், குருவாகப்பட்டவர் மகிழ்ந்து என்ன நேரத்தில் என்னென்ன தேவையோ, அனைத்தையும் வழங்கி விடுவார். அது ஜகதீசய்யர் குடும்பத்தில் நிதர்சனமாயிற்று.