“ஆவி”யால் வந்த அவஸ்தை

காஞ்சி மகானின் கருணைப் பார்வை தங்கள் மீது பட வேண்டும்அவரது பரிபூரண ஆசிகளைப் பெற வேண்டும் என்பதற்காக நண்டு சுண்டுகளில் ஆரம்பித்து, நடை தளர்ந்து போன முதியவர்கள் வரை மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வருவது வழக்கம்.

பிரார்த்திக்க வருகின்ற பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைப் பெரியவா சந்நிதியில் பட்டியலிட்டு விட்டுப் போவார்கள். அவரவர்களது பக்தியின் தன்மைக்கேற்றவாறு பலன்களை மகா பெரியவா அருள்வார்.

இது மட்டுமல்லபேய், பிசாசு பிடித்தவர்கள், ஏவல்பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரையும் சம்பந்தப்பட்டவர்களது உறவினர்கள் மகா பெரியவா சந்நிதிக்குக் கூட்டி வந்து, ஆசியும் பிரசாதமும் பெற்றுச் செல்வது வாடிக்கை.

பேய் பிசாசுகள் உண்டா? ஒருவர் மீது ஏவப்படும் பில்லி சூன்யங்கள் இந்த விஞ்ஞான யுகத்திலும் பலிக்குமா? என்கிற ஆராய்ச்சிக்குள் நாம் போக வேண்டாம்.

ஆனால், இவை எல்லாம் இன்றைக்கும் இருந்து வருகின்றன என்பதை அவ்வப்போது உதாரண சம்பவங்கள் மூலமும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமாகவும் படித்து வருகிறோம்.

தற்போது சொல்லப் போகிற இந்த சம்பவம் சுமார் 50 வருடங்களுக்கும் முன்னால் நடந்தது.

ஆவிகளுடன் பேசக் கூடிய நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி (இவரின் பெயரை உதாரணத்துக்கு சுமதி என்று வைத்துக் கொள்வோம்) அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள்.

சுற்றுவட்டாரத்தில் இருக்கின்றவர்கள் தங்கள் ஊரில் ஏதேனும் பேய் பிசாசு தொந்தரவு என்றால், சுமதியிடம் வருவார்கள். தவிர, தங்கள் இல்லத்தில் இறந்து போனவர்களின் ஆவிகளை அழைத்து ஏதேனும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றாலும் சுமதிதான்! சுமதியிடம் வந்தால், எல்லாப் பிரச்னைகளும் சுபம்தான்!

ஆவிகளுடன் பேசுவதற்குப் பல விதமான முறைகள் அப்போது இருந்தன. அவற்றுள் மை, செஸ் போர்டு, ஸ்டவ் உள்ளிட்ட பல முறைகள் அடங்கும்.

ஸ்டவ் ஜோசியம் பிரபலமாக இருந்த காலகட்டம் இது. ஸ்டவ்வில் பாத்திரங்களை வைக்கும் முக்காலி போன்ற ஸ்டாண்டை தரையில் அரிசி மாவைப் பரப்பி அதன் மேல் வைப்பார்கள். பிறகு ஆவியை வரவழைத்துப் பேசுவார்கள். இந்த ஸ்டவ் ஸ்டாண்டு சுமதி கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும். தவிர, இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும்.

இன்றைக்குப் பலருக்கு நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், அந்தக் காலத்தில் இப்படிப் பலரது இல்லங்களில், இறந்து போன முன்னோர்களை வரவழைத்து என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ, அவற்றை எல்லாம் கேட்டு பதிலை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார்கள்.

சில வேளைகளில் இந்த ஆவி ஜோசியர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால், ஏதேனும் ஒரு ஆவியை வரவழைத்து அதோடு அரட்டையடித்துக் கொண்டிருப்பதும் உண்டாம். அதுபோல் சுமதி ஒரு முறை ஆவி ஒன்றை வரவழைத்து பேசிக் கொண்டிருந்திருக்கிறாள்.

சுமதியுடன் அந்த ஆவி பேசிக் கொண்டிருக்கும்போது தான்அம்பாள் என்று சொல்லி இருக்கிறது.

சுமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘வந்த ஆவி தன்னை அம்பாள் என்று சொல்கிறதேஅம்பாள் எப்படி ஆவியாக வர முடியும்? இந்த ஆவி நம்மிடம் ஏதோ பித்தலாட்டம் செய்ய நினைக்கிறதுஅம்பாளின் பேரைச் சொல்லி அந்த அன்னைக்கே பங்கம் விளைவிக்கிறது. இதற்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்து, ஆவியை போலியாக வணங்குவது போல் நடித்தாள்.

பெரும்பாலும் ஆவியுடன் பேசுபவர்கள் தாங்கள் பயந்ததாகக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். தைரியமாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆவி சொல்கிற பதில் திருப்தி இல்லை என்றால், மிரட்டுவது போல் எதிர்க் கேள்விகள் வேறு கேட்பார்கள். சில வேளைகளில் ஆவிகளும் பணிந்து போய் விடும்; சில வேளைகளில் முரண்டு பண்ணி ஏடாகூடம் செய்து விட்டுப் போகும் ஆவிகளும் உண்டு.

தான் வரவழைத்த ஆவியிடம், “நீதான் அம்பாள்னு சொல்றியேஅப்படின்னா எனக்கு ஏதாவது மந்திர உபதேசம் செய்து விட்டுப் போ. புண்ணியமாக இருக்கும் என்று சொன்னாள் சுமதி.

மந்திர உபதேசம் வேண்டும் என்றால், நீயும் உன் கணவரும் ஒரு குருநாதரிடம் சென்று உபதேசம் பெற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நல்லது என்று சாந்தமாகச் சொன்னது ஆவி.

குருவிடம் போய் உபதேசம் பெற்றுக் கொள் என்று சொல்ல நீ எனக்குத் தேவை இல்லை. உன்னை அம்பாள் என்று சொல்லிக் கொள்கிறாய். அப்படியானால் அந்த ஸ்தானத்தில் இருந்து உபதேசம் செய்து விட்டுப் போ என்று ஆவியிடமே சற்று எகிறி இருக்கிறார் சுமதி.

சாதாரணமாக நண்பர்களுடனோ உறவினர்களுடனோ ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது வார்த்தைகள் சற்று தடித்துப் போனால் இரு தரப்பாருக்குமே கோபம் தலைக்கு மேல் ஏறி விடும். அதுவும் ஆவியின் கோபத்துக்குக் கேட்பானேன்!

ஆவிக்குக் கெட்ட கோபம் வந்து விட்டது. ‘என்னை நம்பாமல் என்னிடம் உபதேசமா கேட்கிறாய் உபதேசம்? உன்னை உண்டு இல்லைன்னு பண்றேன் பார். இனி நீ சிரிப்பா சிரிக்கப் போகிறாய் என்று கெக்களிப்புடன் உறுமிக் கொண்டு ஏதோ ஒரு மந்திரத்தைப் பிரதானப்படுத்தி அதை வேகமாகவும், அதிக சத்தத்தோடும் உபதேசம் செய்தது.

இந்த உபதேசத்தை கர்ணகடூரமாக அந்த ஆவி வழங்கிக் கொண்டிருக்கும்போது அலறல் சத்தம் பொறுக்காமல் ஒரு கட்டத்தில் தன் காதுகளையே சுமதி பொத்திக் கொண்டு விட்டாள் என்றால், பாருங்கள்!

தவிர, மாவுக் கோலத்தின் மேல் இவர் வைத்த ஸ்டவ் அதுவரை இப்படியும் அப்படியும் நகர்ந்து, ஓட்டமாக ஓடி என்னென்னவோ பிணாத்திக் கொண்டிருந்தது. இந்த அதீத விளையாட்டின் உச்சகட்டமாகதரையில் இருந்த அந்த ஸ்டவ் சற்று எகிறி, சுமதியின் மடியில்நங்கென்று வந்து அமர்ந்து விட்டது. அடுத்த கணம் மயக்கம் அடைந்து, கீழே சாய்ந்தாள் சுமதி.

சுமதியுடன் இருந்த வீட்டு அன்பர்களும், வெளி அன்பர்கள் சிலரும் பயந்து போனார்கள். அவள் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்தார்கள். குடிப்பதற்கு சூடாகப் பால் கொடுத்தார்கள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆனவுடன் சுமதி எழுந்து உட்கார்ந்தாள். தன் இரு கைகளையும் இப்படியும் அசைத்து, நெட்டி முறித்து, தன்னை பலசாலியாகக் காட்டிக் கொண்டாள். சுமதியின் பார்வையில் ஒரு கனிவு இல்லை. உடலில் ஒரு மென்மை இல்லை.

கடகடவென்று பற்களைக் கடித்துக் கொண்டு எதிரில் இருப்பவர்களைப் பார்த்து கன்னாபின்னாவென்று பேச ஆரம்பித்து விட்டாள். வார்த்தைகளில் மென்மை இல்லை. கண்களில் படுகின்றவர்களை எல்லாம் திட்ட ஆரம்பித்தாள். உடன் இருந்தவர்கள்சாந்தமாகப் பேசும் சுமதியா இவள்? என்று அதிர்ந்து போனார்கள்.

திடீரென்று வீட்டுக் கூடத்தில் காணப்படும் ஊஞ்சல் மேலே ஏறி நின்று இரு கைகளாலும் பக்கவாட்டில் காணப்படும் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு கால்களால் பிரஷர் கொடுத்து ஊஞ்சலை வேகமாக வீசி ஆட்டினாள்.

அழகாகப் பின்னப்பட்டிருந்த தலைமுடியை அவிழ்த்துப் போட்டுத் தலைவிரி கோலமாக ஆக்கிக் கொண்டாள்.

இதுவரை தமிழில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த சுமதி தற்போது ஆங்கிலம், ஜெர்மன் என்று பல மொழிகளில் பேச ஆரம்பித்தாள்.

யார் என்ன கேட்டாலும், அதற்கு சுமதியிடம் இருந்து பதிலே இல்லை.

எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள்!

சுமதியின் கணவர் உட்பட குடும்பத்தார் அனைவரும் பதறிப் போனார்கள். “தலையால அடிச்சு அடிச்சுச் சொன்னேன்ஆவிகளோட விளையாடாதேடீஇதெல்லாம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காதுன்னும் சொன்னேன்கேக்கலையேஇப்ப நான் என்ன பண்ணுவேன்? என்று சுமதியின் தாயார் ஓவென்று கதறினார்.

நேரம் ஆக ஆக உக்கிரம் அதிகமாகிக் கொண்டு போனதே தவிர, குறையவில்லை.

குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இவர்களுக்குப் புதுக்கோட்டையில் சொந்தபந்தங்கள் அதிகம் உண்டு. எனவே, புதுக்கோட்டை சொந்தங்களுக்கு விஷயத்தை விளக்கி தபால் எழுதினார்கள்.

புதுக்கோட்டையில் இருந்து ஒரு பெரிய கும்பலே அடித்துப் பிடித்துக் கொண்டு சுமதியின் கிராமத்துக்கு வந்தது. அவர்களுள் வேதம் படித்த ஒரு பண்டிதரும் உண்டு.

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சுமதியின் கிராமத்துக்கு வந்த அந்தப் பண்டிதர் அன்று அதிகாலையில் திண்ணையில் அமர்ந்து கணபதி மந்திரத்தை ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது வாசலுக்கு வந்த சுமதி, பண்டிதரைப் பார்த்து, “என்ன ஜபமா? கணபதி மந்திரமா? என்று கேட்கஎல்லாம் தெரிந்த பண்டிதரே ஆடிப் போயிருக்கிறார்.

ஒரு பத்து நிமிடம் போனவுடன் காயத்ரி ஜபத்தைத் துவங்கினார். அப்போது மீண்டும் வாசலுக்கு வந்த சுமதி, பண்டிதரைப் பார்த்து, “கணபதி மந்திரத்துக்கு அப்புறம் காயத்ரி மந்திர ஜபம் ஓடிக் கொண்டிருக்கிறதாக்கும் என்று கேட்டு விட்டு, விர்ரென்று நகர்ந்து போனாள்.

அரை மணி நேரம் கழித்து ஜபம் முடிந்து எழுந்த பண்டிதர் வியப்பின் விளிம்புக்குப் போனார். ‘உதடுகள் கூட முணுமுணுக்காமல் நான் ஜபிக்கிற கணபதி மந்திரம் இவளுக்கு எப்படித் தெரிந்ததுகாயத்ரி மந்திரம் எப்படித் தெரிந்தது? என்று வீட்டில் உள்ளோரிடம் தன் ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, எவரும் விளக்கம் சொல்ல முன்வரவில்லை.

சுமதியின் பிரச்னை ஒரு க்ளைமாக்ஸுக்கு வந்தது. எந்த ஸ்டவ்விலிருந்து இவளது வாழ்க்கை தடம் புரள ஆரம்பித்ததோ, அதே ஸ்டவ்விலிருந்து சில குறிப்புகள் வர ஆரம்பித்தன. எல்லாம் பண்டிதரின் கணபதி ஜபமும், காயத்ரி மந்திர ஜபத்தின் மகிமையும்தான்!

சுமதிக்கு குணமாக என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி ஸ்டவ்விடம் வைக்கப்பட்டது.

அதற்கு, “காமகோடியிடம் அழைத்துப் போ என்று பதில் வந்தது.

பண்டிதர் கேட்டார்: “காமகோடியா? எந்தக் காமகோடி?

காஞ்சி காமகோடி பெரியவா என்று தெளிவாக பதில் வந்தது.

எல்லோருக்கும் ஒன்றே ஒன்று நன்றாகப் புரிந்ததுசுமதிக்கு வந்த இந்தப் பிரச்னையைப் போக்க வல்லவர் காஞ்சி மகா பெரியவா என்று.

மகா பெரியவா அப்போது எங்கே இருக்கிறார் என்று விசாரணை துவங்கியது.

விசாரணையின் முடிவில்ஆனந்தச் செய்திபுதுக்கோட்டைக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் மகான் முகாமிட்டிருக்கிறார் என்று.

மகா பெரியவாளிடம் சுமதியை அழைத்துப் போ என்கிற குறிப்பு, ஸ்டவ் ஆவியிடம் இருந்து கிடைத்ததும், குடும்பத்தினரும் சொந்தக்காரர்களும் இளையாற்றங்குடி செல்வது என்று தீர்மானித்து விட்டனர்.

புதுக்கோட்டை வந்து உறவினர்கள் இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குப் பயணத்தைத் துவங்கினார்கள். புதுக்கோட்டையில் இருந்து இளையாற்றங்குடி சுமார் 42. கி.மீ. தொலைவு.

இந்தப் பயணத்தின்போது சுமதியின் அழிச்சாட்டியம் , ஊவென்று கொடூரமாக இருக்கத்தான் செய்தது. அவளது பேச்சையும் செயலையும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காஞ்சி மகா பெரியவா திருநாமங்களைச் சொல்லியபடி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். ‘இவள் நன்றாக குணமாக வேண்டுமேஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே என்கிற பிரார்த்தனையின் காரணமாக அவளுக்குள் புகுந்திருக்கிற ஆவி செய்கிற அட்டகாசங்களைப் பெரிதுபடுத்தாமல் பயணம் செய்தார்கள் குடும்பத்தினர்.

ஒரு வழியாக இளையாற்றங்குடி வந்தாயிற்று. மகா பெரியவா முகாமுக்குள்ளும் நுழைந்தாயிற்று. சர்வேஸ்வர சொரூபமாக மகா பெரியவா வீற்றிருந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஆசிர்வதித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

மகா பெரியவா திருச்சந்நிதிக்குள் நுழைந்தார்கள். சுமதி பற்றின விவரத்தை புதுக்கோட்டை உறவினரான பண்டிதர், மகா பெரியவாளிடம் விளக்கிச் சொன்னார்.

நாளைக்குப் பவுர்ணமி. நான் பூஜை பண்ற சந்நிதில அந்தப் பொண்ணை உக்கார வைங்கோ. இன்னிக்கு இங்க தங்கிடுங்கோ என்றார் மகா பெரியவா.

நடமாடும் தெய்வமான மகா பெரியவா இருக்கிற இடத்துக்கு வந்ததுமே சுமதி ஓரளவு கட்டுப்பாட்டுக்கு மாறினாள். இந்த முகாமுக்குள் நுழைவதற்கு முன் இருந்த அவளது பார்வை, செயல்பாடு அனைத்திலும் ஓரளவு வித்தியாசத்தை குடும்பத்தாரால் உணர முடிந்தது.

மகா பெரியவா உத்தரவுப்படி அன்றைய தினம் அங்கேயே தங்கி விட்டார்கள்.

மறுநாள் காஞ்சி ஸ்ரீமடத்தின் பிரதான வழிபாட்டு விக்கிரகமான ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு மகா பெரியவா பூஜை செய்வதற்காக வந்து அமர்ந்தார். இந்த பூஜையை தரிசிக்க வேண்டும் என்பதற்காக திரளான பக்தர்கள் அங்கே கூடி இருந்தனர். மகா பெரியவா உத்தரவுப்படி இந்த பூஜையைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக முன்வரிசையில் உட்கார்த்தி வைக்கப்பட்டாள் சுமதி.

ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் திருச்சந்நிதிக்கு வந்து பூஜையை ஆரம்பித்தார் மகா பெரியவா. வைத்த கண் வாங்காமல், இந்த பூஜையையே பார்த்துக் கொண்டிருந்த சுமதி, ஒரு வார்த்தை பேசவில்லை. அவளது உதடுகள் அசையவில்லை. உடம்பும் இப்படி அப்படி என்று திரும்பவில்லை.

இவை எல்லாம் எப்படித்தான் சாத்தியமாயிற்று என்பது கலியுக தெய்வமான அந்த மகா பெரியவாளுக்கு மட்டும்தான் தெரியும்.

பூஜை முடிந்தது. சுமதியை முதலில் அழைத்து அவளுக்குத் தீர்த்தப் பிரசாதம் தந்தார் மகா பெரியவா. வம்பு ஏதும் செய்யாமல் வாங்கிக் குடித்து மகானை வணங்கினாள். அனைத்தும் முடிந்து மகா பெரியவாளும், ஏனைய பக்தர்களும் இங்கிருந்து அகன்று விட்டாலும், இவர்கள் அதே சந்நிதியிலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள்.

இரவு புதுக்கோட்டைக்குத் திரும்பினார்கள். மகா பெரியவா உத்தரவுப்படி அடுத்த நாள் காலையிலும் இளையாற்றங்குடிக்குப் பயணம் ஆரம்பமானது.

இப்படித் தொடர்ந்து நாற்பது நாட்கள் புதுக்கோட்டைக்கும் இளையாற்றங்குடிக்குமாக இருந்தது பயணம். சுமதி முற்றிலும் குணமாகிற வரை தங்களுக்கு ஏற்படுகிற சிரமத்தைக் குடும்பத்தினர் யாரும் பொருட்படுத்தவில்லை.

நாற்பது நாள் நெருங்குகிற வேளையில் ஒரு நாள் மகா பெரியவா, சுமதியை ஜாடை காட்டி அருகே அழைத்தார்.

தாயைத் தேடிச் செல்கிற சிசு போல் எழுந்து ஓடிச் சென்று மகா பெரியவா அருகே பவ்யமாக நின்றாள் சுமதி.

ஒனக்குக் கதை சொல்லத் தெரியுமா? என்று கேட்டார் பெரியவா.

ம்ம்ம் – ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் சுமதி.

ஒரு தபஸ்வியைப் பத்திக் கதை சொல்வாளே… ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவானு ஒரு இல்லத்தரசி அந்த தபஸ்விகிட்ட கேப்பா. அந்தக் கதை தெரியுமோ?

தெரியும் என்று சொல்லும் விதமாகத் தலையை இட வலமாக அசைத்தாள்.

எங்கே, சொல்லு பார்க்கலாம் என்று பெரியவா புன்சிரிப்புடன் ஆணையிட்டுக் கதையைக் கேட்கத் தயாராகசொல்ல ஆரம்பித்தாள் சுமதி.

கொங்கணவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கொக்கு அவரது தலையில் எச்சமிட்டு விட்டது. இத்தனை தவ வலிமை கொண்ட தன்னிடம் கொக்கு இப்படி நடந்து கொண்டு விட்டதே என்ற கோபத்தில், சாபம் இடுவது போல் கொக்கை உக்கிரமாகப் பார்த்தார் கொங்கணவர். அடுத்த விநாடி கொக்கு தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது. ‘ஆஹா, என் தவம் ஸித்தி ஆகி விட்டது என்று மகிழ்ந்து போனார்.

அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட்டார். ஒரு கிராமத்தை கொங்கணவர் அடைந்தபோது பசி அவரை வாட்டியது. ஒரு இல்லத்தின் முன்னால் நின்று, உணவிடுமாறு குரல் கொடுத்தார். வீட்டினுள் இருந்து இல்லத்தரசி வெளியே வந்துசற்றுப் பொறுங்கள்உணவுடன் வருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டினுள் சென்றாள்.

ஆனால், உடனே திரும்பவில்லை. வீட்டினுள் கணவருக்கு உரிய பணிவிடைகளை எல்லாம் செய்து முடிப்பதற்குச் சற்று நேரம் ஆகி விட்டது அவளுக்கு. அதன் பின், கொங்கணவருக்கு உணவை எடுத்துக் கொண்டு இல்லத்தரசி வெளியே வரகொங்கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

தன் தலையில் எச்சமிட்ட கொக்கை எப்படிக் கோபத்துடன் பார்த்தாரோ, அது போல் உணவு கொண்டு வந்த இல்லத்தரசியையும் கோபத்துடன் கொங்கணவர் பார்க்கஅவள் புன்னகைத்தாள். கொங்கணவர் அதிர்ந்தார்.

என்னையும் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று பரிகாசத்துடன் கேட்ககொங்கணவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. ‘கணவருக்கு உரிய பணிவிடைகளை செய்வதே ஒரு இல்லத்தரசியின் முதல் தர்மம். அதன் பின்தான் எல்லாமும்சந்நியாசிகளுக்கு உணவிடுவது உட்பட என்று சொல்லி விட்டு, வெகு இயல்பாக வீட்டினுள் சென்றாள். இதுதான் அந்தக் கதை.

கொஞ்சமும் திக்காமல், திணறாமல் இந்தக் கதையை நீளமாகஅழகாக சுமதி சொல்லி முடித்ததும், குடும்பத்தினர் அனைவரும் அதிசயித்துப் போனார்கள். மகானின் திருச்சந்நிதியில் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

அதன் பின் சுமதி உட்பட அனைவருக்கும் பிரசாதம் வழங்கி, ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

நாற்பது நாட்கள் மகா பெரியவா தரிசனத்துக்குப் பின் வெகு இயல்பான நிலைக்கு வந்து விட்டாள் சுமதி. அடுத்தடுத்து வந்த நாட்களில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆவிகளுடன் பேசுவதையும் அறவே நிறுத்தி விட்டாள்.

சுமதிக்கு இருந்த பிரச்னைக்கு எந்த மருந்தும் மாத்திரையும் தரவில்லை. எந்த ஒரு மருத்துவரும் சிகிச்சை வழங்கவில்லை. ஆனால், கலியுக தெய்வமாக விளங்கிய மகா பெரியவாளின் பரிபூரண அருளே, அவளை இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.தஞ்சாவூரில் இருக்கும் தன் சொந்த கிராமத்துக்கு வந்த பிறகு மகா பெரியவா திருவுருவப் படத்தை இல்லத்தில் வைத்து நித்தமும் பதினோரு முறை வலம் வந்து அவரை வணங்க ஆரம்பித்தாள் சுமதி