“மகா புருஷனா வருவான்?”

லியுகத்தின் ஒவ்வொரு நாளும் நகர நகர, அதர்மங்களும் அநியாயமும் பெருக்கெடுத்துக் கொண்டே போகும். இந்த அவலங்களில் இருந்து அப்பாவி மக்களை மீட்பதற்கென்று தேசத்தின் பல திக்குகளிலும் மகான்களது அவதாரம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

தர்மத்தின் வழியில் நடந்து, நியாயத்தை நிலை நாட்டுவதே மகான்களின் தலையாய பணியாக இருக்கும். எவரெவருக்கெல்லாம் பாக்கியமும் கொடுப்பினையும் இருக்கின்றதோ, அவர்களெல்லாம் மகான்களது அறிவுரைகளைக் கேட்டு, அவர்களது வழிகாட்டுதல்படி நடந்து, நற்கதியை அடைவார்கள்.

அதுபோல்தான் காஞ்சி மகா பெரியவா என்கின்ற கலியுக தெய்வத்தின் அவதாரமும் இந்த பூமியில் நிகழ்ந்தது.

காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்ய புருஷர்களாக விளங்கிய பீடாதிபதிகளில் ஆதி சங்கரருக்குப் பிறகு கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திரர் ஓரளவு பேசப்பட்டார்.

அவருக்குப் பின், சமீப காலத்தில் வாழ்ந்த காஞ்சி மகா பெரியவா பெரிதும் பேசப்பட்டார்.

தான் வாழ்ந்த ஒரு நூறாண்டு முழுக்கத் தன்னலம் கருதாமல், பிறரது நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த இந்த மகானது கடைக்கண் பார்வை நம் மீது திரும்பினால், வாழ்க்கையில் எத்தனையோ கோடி சூர்யப் பிரகாசங்களைக் காணலாம். காஞ்சி மகா பெரியவரது அருளானது ஒரு பக்தருக்குக் கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எண்ணிப் பார்க்க முடியாத உயரத்துக்கு இவர் அழைத்துச் செல்வார்.

இன்றைக்கும் இந்த மகான் பிருந்தாவனம் (ஜீவ சமாதி) கொண்டுள்ள காஞ்சிபுரத்தில், நித்தமும் இவரது திருச்சந்நிதி தேடி வந்து தரிசித்து ஆசி பெறுகின்றனர் பக்தகோடிகள். மகானது கருவறையை பக்திபூர்வமாக வலம் வந்து, கண்ணீர் மல்கத் தங்களது பிரார்த்தனைகளைக் கொட்டுவோர் ஏராளம்.

காஞ்சிபுரம் நகரத்தில் மத்தியில் புராதனம் வாய்ந்த ஸ்ரீசங்கர மடத்திலேயே மகானது பிருந்தாவனம் அமைந்துள்ளது. நித்தமும் இதற்கு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மகானின் அவதார நட்சத்திரமான அனுஷம், மகான் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நட்சத்திரமான மூலம், மாதம் இருமுறை வரக் கூடிய பிரதோஷம் போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகின்றன.

தங்கள் மனதில் இருக்கக் கூடிய கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் இந்த மகானது திருவுருவத்துக்கு முன்னால் நின்று உளமாரச் சொல்கின்றனர் பக்தகோடிகள். அவரது திருச்சந்நிதிக்குத் தங்களால் இயன்ற எளிய காணிக்கைகளை (வில்வ மாலை, துளசி மாலை, மலர்கள், கல்கண்டு போன்றவை) வாங்கிக் கொடுத்து மகானது கடைக்கண் பார்வையைப் பெறுகின்றனர்.

1994-ஆம் ஆண்டு மகா பெரியவா ஸித்தி (மறைவு) ஆனாலும், இன்றைக்கும் நம்மிடையே நடமாடி வருகிறார்பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான அற்புதங்கள் நித்தமும் இவரது திருச்சந்நிதியில் நடந்து கொண்டுதான் வருகின்றன. பொய்யின்றி மெய்யோடு எவர் இந்தத் திருச்சந்நிதிக்குச் சென்றாலும், அவர்களைக் காத்து அருள மகான் காத்துக் கொண்டிருக்கிறார்.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல பக்தர்கள் மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்து பிரார்த்தித்து நலம் பெறுவது கண்கூடு.

தர்மத்தின் பாதையில் இருந்து ஊசிமுனைகூட பிசகாமல் வாழ்ந்து காட்டியது, பக்தி மார்க்கத்தைப் பாரதம் எங்கும் பரப்பியது, எளியோர்களைக் கண்டால் மனமிரங்கி அவர்களுக்கு ஆதரவளித்தது, வேதம் வளர வேண்டும்வேத பாடசாலைகள் பெருக வேண்டும் என்பதற்காக இந்த மகான் வித்திட்டது, பசுக்களை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்பதற்காக அவற்றைப் பராமரித்ததுஇப்படி மகா பெரியவாளின் நூற்றாண்டு வாழ்க்கையில் எண்ணற்ற நற்காரியங்களைப் பட்டியலிட முடியும்.

கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது என்பார் சுவாமி விவேகானந்தர்.

உயர்ந்த சிந்தனைகளினாலும், மேம்பட்ட குணங்களினாலும்தான் மனிதனது வாழ்க்கை சிறக்கிறது. அதற்கு உண்டான நல் உபதேசங்களை உலகத்தோருக்கு வழங்கிய காஞ்சி மகா பெரியவா 1894-ஆம் வருடம் மே மாதம் 20-ஆம் தேதி விழுப்புரத்தில் அவதாரம் செய்தார். தெய்வக் குழந்தையை மகனாகப் பெற்றெடுக்கும் பாக்கியம் அடைந்த பெற்றோர் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகள்மகாலட்சுமி தம்பதியர். குழந்தைக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன்.

எட்டு வயது வரை தந்தையிடம் கல்வி பயின்றார். சங்கீதப் பயிற்சியையும், ஸ்லோகங்களையும் தாயிடம் கற்றார்.

திண்டிவனத்தில் பள்ளிப் படிப்பு ஆரம்பமானது. எதிலும் முதன்மை மாணவராகத் திகழ்ந்தார் சுவாமிநாதன். பள்ளி ஆசிரியர்களிடமும், பெரியோர்களிடமும் இவர் கொண்டிருந்த மரியாதையும் பணிவும் மெச்சத்தக்கதாக இருந்தன. பள்ளியில் நடந்த போட்டிகளில் வென்று பரிசுகளை வாங்கிக் குவித்தார். பள்ளியில் நடக்கின்ற விழா என்றாலே, சுவாமிநாதனுக்குப் பரிசுகள் காத்திருக்கும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வயதில் திருப்புமுனை ஏற்படுமல்லவா? அந்த வகையில் சிறுவன் சுவாமிநாதனுக்கு 12 வயது இருக்கும்போது மாபெரும் திருப்புமுனை நடந்தது. இதைத் திருப்புமுனை என்று சொல்வதை விட ஆன்மிகத்தின் உச்சத்துக்கு இவரை அழைத்துச் செல்ல இறைவன் திட்டமிட்ட காலம் என்று சொல்லலாம்.

அப்போது காஞ்சி காமகோடி பீடத்தின் 66-வது பீடாதிபதியாக விளங்கிய மகான், திண்டிவனம் அருகில் உள்ள பெருமுக்கல் என்னும் ஊரில் தங்கி இருந்தார்.

இந்த பீடாதிபதியைத் தரிசிப்பதற்காக சுவாமிநாதனைக் கூட்டிக் கொண்டு அவனது பெற்றோர் பெருமுக்கலுக்குச் சென்றனர். திரளான பக்தர்கள் அங்கே கூடி இருந்தாலும், பீடாதிபதியின் பார்வை சிறுவன் சுவாமிநாதன் மீது விழுந்தது. அன்புப் பார்வையால் அவனை ஈர்த்தார். ‘எதிர்காலத்தில் காமகோடி பீடத்தைக் கட்டி ஆள வேண்டியவன் அல்லவா நீ? என்று மனதுக்குள் ஒரு குறும் புன்னகையுடன் சுவாமிநாதனை உற்று நோக்கி விட்டுத் தன் அருகே அவனை அழைத்தார்.

அறநெறி சார்ந்தும், ஆன்மிகத்தை ஒட்டியும் சிறுவனிடம் பல கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் தங்கு தடை இல்லாமல் பதில்கள் பளிச் பளிச்சென்று வந்து விழுந்தன. இவற்றில் திருப்தி அடைந்தார் 66-வது பீடாதிபதி. அவனை மனம் திறந்து பாராட்டினார்.

பிறகு சுவாமிநாதனின் பெற்றோரையும், அருகில் வீற்றிருந்த மற்ற பக்தகோடிகளையும் பார்த்து, “இவன் எதிர்காலத்தில் ஒரு மகா புருஷனாக வருவான் என்று பெருமையுடன் தெரிவித்தார்.

தனக்கு அடுத்துசுவாமிநாதன் இந்த காமகோடி மடத்தின் பீடாதிபதி ஆக வேண்டும் என்று 66-வது பீடாதிபதி தீர்மானித்தார். ஆனால், அடுத்து வந்த காலத்தில் இவர் ஸித்தி (மறைவு) ஆனதும், காலத்தின் கட்டாயமாக 67-வது பீடாதிபதியாக லட்சுமிகாந்தன் என்பவர் பொறுப்பேற்க நேர்ந்தது.

விதியின் விளையாட்டைப் பாருங்கள்… 67-வது பீடாதிபதி தான் பொறுப்பேற்றுக் கொண்ட ஏழே நாட்களுக்குள் ஸித்தி ஆக, தன் குருவான 66-வது பீடாதிபதியின் விருப்பப்படி சிறுவனான சுவாமிநாதனை 68-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்க வைத்தார். ‘இந்த பீடத்தை தாங்கள் அலங்கரிக்க வேண்டும் என்பது பலரது விருப்பம். அது என் மூலமாக நிறைவேறுகிறது என்று சொல்லி விட்டு, சுவாமிநாதனை ஆசிர்வதித்து விட்டு ஸித்தி ஆனார் 67-வது பீடாதிபதி.

தனது 13-வது வயதில் 68-வது பீடாதிபதியாகஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்கிற திருநாமத்துடன் பொறுப்புக்கு வந்தார் சுவாமிநாதன். பின்னாளில்மகா பெரியவா, ‘மகா ஸ்வாமிகள், ‘பெரியவா என்றெல்லாம் உலகம் இவரைப் போற்றி அழைக்க ஆரம்பித்தது.

நூறு வயது வரை வாழ்ந்து காஞ்சி ஸ்ரீகாமகோடி மடத்துக்கும், இந்து சனாதன தர்மத்துக்கும் பெருமை சேர்த்தார். இன்றைக்கு நம்மிடம் சாஸ்திரங்களும், வழிபாட்டு முறைகளும், பக்தி சிந்தனையும் இருந்து வருகிறதென்றால், அதற்கு காஞ்சி மகா பெரியவா ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் எந்தக் காலத்திலும் மறந்து விடக் கூடாது.

மகா பெரியவாளிடம் மிகவும் அதிசயித்துப் பேசப்பட்ட நற்குணங்கள் ஏராளம். எளிமை, கருணை, காருண்யம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தன்னைத் தரிசிக்க வருகின்ற அனைத்து பக்தர்களையும்அவர் ஏழையாக இருந்தாலும் சரிபணக்காரராக இருந்தாலும் சரிஒரே தராசுத் தட்டில் வைத்துப் பார்ப்பார். பணக்காரர் என்றால் ஒரு மரியாதைஏழை என்றால் ஓர் ஏளனம் என்பது இவரது அகராதியில் என்றென்றும் இருந்ததில்லை.

எத்தனையோ பிரபலங்களுக்கு இவரைத் தரிசிக்க உடனடி அழைப்பு கிடைக்காமல் ஒரு வாரம் வரை கூட இவரது திருச்சந்நிதியில் காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், மிகச் சாதாரணமான ஒரு ஏழை இவரது சந்நிதிக்கு வந்தால், அவருக்கு உடனடி அழைப்பு கிடைத்து, ஆசிர்வாதம் வழங்கிய சந்தர்ப்பங்களும் அநேகம் உண்டு.

போன் எடுத்துப் பேசியதில்லை.

பணத்தைக் கையால் தொட்டதில்லை.

கார் போன்ற உல்லாச வாகனங்களில் ஏறிப் பயணித்ததில்லை.

தான் மிகவும் சாதாரணமானவரே என்பதைப் பெரும் சபைகளில் இயல்பாகச் சொல்லிக் கொண்டவர்.

புலனடக்கம் என்பது சந்நியாசிகளுக்கு முக்கியம். அதன்படி ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார். இவற்றுள் அதிகம் நாம் கட்டுப்படுத்த வேண்டியது, நாக்கை.

இந்த நாக்கு சுவைக்கும் அடிமையாகிறது. பலரைத் தாறுமாறாக விமரிசனம் செய்வதற்கும் தயாராக இருக்கிறது.

ஒரு முறை மகா பெரியவா பிட்சை (சந்நியாசிகள் எடுத்துக் கொள்ளும் உணவை இப்படித்தான் சொல்வார்கள்) எடுத்துக் கொள்ளும்போது அதில் கீரை பரிமாறப்பட்டது. சுவை காரணமாக அந்தக் கீரையை மகா பெரியவா முழுக்கச் சாப்பிட்டு விட்டார். பிட்சை தயாரிக்கக் கூடியவர்மகா பெரியவாளுக்குக் கீரை ரொம்பப் பிடித்திருக்கிறது போலும் என்று எண்ணி அடுத்தடுத்த நாளும் அதைத் தயாரித்து மகா பெரியவாளுக்குப் பரிமாற ஆரம்பித்தார்.

இரண்டு மூன்று நாட்கள் கீரையை எடுத்துக் கொண்ட மகா பெரியவா, அடுத்த நாளில் இருந்து திடீரென அறிவிக்கப்படாத ஒரு உபவாசத்தை (விரதம்) மேற்கொள்ள ஆரம்பித்தார்.

ஏதடாபெரியவா பிட்சை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லையேநாம் ஏதேனும் தவறு செய்து விட்டோமா? என்று பிட்சை தயாரிப்பவரும், ஸ்ரீமடத்து அதிகாரிகளும் கலங்கித் தவித்தார்கள். தங்கள் மேல் தவறு இருந்தால், மன்னித்து அருளுமாறு மகா பெரியவாளிடம் வேண்டினார்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது.

இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கீரையை பிட்சையில் சேர்த்துக் கொண்டதால், அதன் மீது ஒரு ஆர்வம் வந்து விட்டது மகா பெரியவாளுக்கு. அடுத்தடுத்த நாளும் இந்தக் கீரையை மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுமே என்று தன் நாவைக் கட்டுப்படுத்தும் விதமாக உபவாசம் துவங்கி விட்டார் என்று. உணவின் மீது தனக்கு ஆர்வம் வந்து விடக் கூடாது என்பதற்காக சாப்பிடுவதையே சில நாட்கள் நிறுத்தியதாகப் பின்னர் ஸ்ரீமடத்து அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

மகான்கள் என்பவர்கள் ஆசைகளை முற்றிலும் வேரறுத்தவராக வாழ வேண்டும். ஆசைகளை மனதில் கொண்டு வாழ்ந்தால், அதன் பெயர் துறவு வாழ்க்கை அல்ல. போக வாழ்க்கை! அதற்குக் காவி அவசியமில்லை.

பெரிய பெரிய தனவந்தர்கள் ஸ்ரீமடத்துக்குப் பணம், பொருள், நிலம் போன்றவற்றைக் காணிக்கையாக வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.

ஸ்ரீமடத்தின் அன்றாடத் தேவைக்குப் போக எஞ்சியதை அன்னதானத்துக்கும், ஆலய கும்பாபிஷேகங்களுக்கும், ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தினார்.

உதவிகளை எதிர்பார்த்து ஏழைகள் ஸ்ரீமடத்தின் வாசலை மிதித்து விட்டால், தன் ஞான திருஷ்டியின் மூலம் அவர்களது தேவையை அறிந்து, கேட்காமலேயே அருகே அழைத்து உதவினார் மகா பெரியவா.

மனித வடிவில் மகானாகத் தெரிந்தார்.

மகான் வடிவில் தெய்வமாகத் தெரிந்தார்.

இவரது அருளையும், ஆசியையும் பெற்று வாழ்ந்தால் வாழ்வில் மேம்படலாம் என்று பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கு உலகம் முழுக்க இவருக்கு வழிபாடு செய்து வருகின்றன.

இவரது பிறந்த நட்சத்திரமான அனுஷம், மாதா மாதம் உலகம் முழுக்க பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இந்த மகானது பிருந்தாவனம் அமைந்துள்ள இடத்தில் சிறப்பு அபிஷேகமும், தங்கத் தேர் பவனியும் நடைபெறும்.

ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் பல மாகாணங்கள்இப்படி இந்த அனுஷ பூஜை இன்றைக்கு நடக்காத உலக நாடுகள் இல்லை என்று சொல்லலாம்.

அமெரிக்காவில் இவருக்குப் பிரமாண்டமான மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் பல உலக நாடுகளில் உள்ள ஆலயங்களில் இவருக்குத் திருச்சந்நிதிகள் அமைக்க அங்குள்ள பக்தர்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

1994-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி இந்த மகான் பிருந்தவனஸ்தர் (மறைவு) ஆனதையே ஆராதனை தினம் என்ற பெயரில் வணங்கி வருகிறோம்.

காஞ்சி மகா பெரியவாளின் திருப்பாதம் பணிந்து, அவரைப் போற்றி ஆசிகள் பெறுவோம். ஆனந்த வாழ்வு அடைவோம்!