திருச்சியில் எழுந்த “திரும்பி போ” கோஷம்

னிதர்கள் விரும்புவது சுற்றுலா.
சந்நியாசிகள் விரும்புவது யாத்திரை.
சுற்றுலா என்பது இன்பம்.
யாத்திரை என்பது பேரின்பம்.

சுற்றுலாவில் பெறக் கூடிய இன்பம், புறத்தேஅதாவது வெளியில் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

யாத்திரையில் பெறக் கூடிய இன்பம், அகத்தேஅதாவது ஆழ்மனதுக்குள் ஆனந்தத்தை விளைவிக்கும்.

அந்த நாட்களில் நம் முன்னோர்கள் திருப்பதிக்கும், காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் யாத்திரை சென்றார்கள்.

சுற்றுலாவெல்லாம் பிற்காலத்தில் வந்தவை.

துறவிகளுக்கு அழகும் லட்சணமும் யாத்திரைதான். ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்க வேண்டும். அதுவும் ஒரே ஊரில் மூன்று நாட்கள் தங்கி இருக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

எனவே, துறவிகள் ஓரிடத்தில் நெடு நாட்கள் தங்க மாட்டார்கள். தாங்கள் தங்கி இருக்கின்ற இடத்தில் தேடி வருகின்ற பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கி விட்டு அடுத்தடுத்துப் பயணப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

மனிதர்களான நமக்குத்தான் ஒரு கிரவுண்டும், ஒரு ஏக்கரும் உற்சாகத்தைத் தரும். இதுதான் உலகம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

மகான்களுக்கோபரந்து விரிந்து பட்ட தேசமும் சொந்தம். எங்கு சென்றாலும், பூர்ணகும்ப வரவேற்பு. மகான்களின் வருகையால், ஊர் மகிழும். நிலம் பூரிக்கும். மழை பெருகும். பயிர் பச்சைகள் நல்ல மகசூல் கிடைக்கும்.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

காஞ்சி மகா பெரியவாளின் பார்வை பட்ட இடமெல்லாம் ஜொலிப்பு.

பாரத தேசம் முழுக்கத் தன் பொற்பாதங்களால் நடந்து, ஆங்காங்கு வசிக்கிற ஜனங்களுக்கு ஆசிகளைத் தன் திருக்கண்களாலும், திருக்கரங்களாலும்

வழங்கியவர் மகா பெரியவா.

அநேகமாகத் தற்போது வசித்துக் கொண்டிருக்கிற மனிதர்கள் தெய்வத்தை நேரில் தரிசித்திருக்க முடியாது என்று கருதுகிறேன். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் மகா பெரியவாளை நேரில் தரிசித்திருக்கிறார்கள்.

தெய்வத்தைத் தரிசிக்கவில்லையே என்கிற குறை, நடமாடும் தெய்வமான மகா பெரியவாளது தரிசனம் நிச்சயம் போக்கி இருக்கும்.

கி.மு. 509-ல் சர்வேஸ்வரனே சங்கரராக (ஆதி சங்கரர்) அவதாரம் செய்தார். அதே சர்வேஸ்வரனே கி.பி. 1894-ல் சுவாமிநாதனாக (மகா பெரியவா) அவதாரம் செய்தார்.

மகா பெரியவாளை நேருக்கு நேராகத் தரிசிக்கவில்லையேநான் வசிக்கின்ற ஊருக்கு அந்த மகான் வந்திருந்தும், அஞ்ஞானத்தின் காரணமாக தரிசிக்காமல் விட்டு விட்டேனேமகா பாவி ஆகி விட்டேனே என்று எவரும் குறைப்படாதீர்கள்.

மகான் எங்கும் செல்லவில்லை. உடல் என்கிற சட்டையை மட்டும் துறந்து நம்மிடையே இன்றும் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

பசியோடு இருப்பவன் எப்படி உணவை விரைந்து தேடுவோனோ, அதுபோல் ஆன்மிகப் பசியோடு இருப்பவர்கள் விரைந்து மகா பெரியவாளைத் தேடினால்கண்களுக்குப் புலப்படுவார்.

முக்காலங்களையும் கடந்தவர் காஞ்சி மகா பெரியவா!

மகா பெரியவா போல் ஒரு மகான் இனி வருவாரா?

இவரைப் போல் எளிமை இன்னொருவருக்கு வாய்க்குமா?

இவருக்கு இருந்த தவ வலிமையையும் அருட்திறனையும் நேரில் கண்டு வியந்து மனம் நெகிழ்ந்த பக்தகோடிகளின் மன மகிழ்வை எப்படி விவரிப்பது?

உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கிற விஷயங்களைதன் அத்யந்த பக்தன் ஒரு மூலையில் இருந்து கொண்டு செய்து கொண்டிருக்கும் காரியத்தைதன் ஞான திருஷ்டியால் தான் வாசம் கொண்டிருந்த இடத்தில் இருந்தபடியே அநாயாசமாகத் தன் உதடுகள் மூலம் சொல்லி எப்படி வந்திருந்தோரை பிரமிக்க வைத்தார்!

பசியோடுஅது வயிற்றுப் பசியோ, அல்லது பிழைப்புப் பசியோவந்த ஒருவரை மயக்கத்தோடும் கவலையோடும் வெளியே அனுப்பாமல், எந்தப் பசியோடு வந்தாரோஅந்தப் பசிக்கு உணவிட்டுத் திருப்தியோடு அனுப்பினாரே அந்தக் கருணைக் கடல்!

மகா பெரியவாகருணை தெய்வமேகாருண்ய சொரூபமேநீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்கிற அற்ப சந்தோஷமே எங்களுக்குப் போதும்

தரிசனத்துக்காகச் செல்லும் நாங்கள் காஞ்சி அதிஷ்டானத்தில் கண்களை மூடி அமர்ந்திருக்கும்போதும்தேனம்பாக்கம் தரிசனத்தில் திளைத்திருக்கும்போதும்ஓரிருக்கை மகா மணிமண்டபத் திருக்கோயிலில் பாலாற்றின் காற்று தழுவ, உணர்வுப் பெருக்குடன் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும்போதும்கலவையிலேகயிலாசவாசாசங்கரா என்கிற திருநாமங்களை ஜபித்துக் கொண்டிருக்கும்போதும் நாங்கள் இன்னொன்றையும் சேர்த்தே உணர்கிறோம் மகா பெரியவா.

அதுதான்தங்களது மூச்சுக் காற்று. நாங்களும் சுவாசித்து மகிழ்கிறோமே!

மேலே சொன்ன இத்தகைய இடங்களில் தாங்கள் இன்றும் நடமாடி, வருகின்ற பக்தனது உணர்வையும் உள்ளத்தையும் புரிந்து கொண்டு ஆசி வழங்குகிறீரேஆனந்தம் தருகிறீரே

மகா பெரியவா என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் இன்றைக்கு மனமெல்லாம் பூரிக்கிறதே

இந்த மகா மந்திரம், எங்களை மயக்குகிறதே

உங்களது நினைவு இல்லாத நாள், நாளில்லை.

உங்களது திருநாமத்தைச் சொல்லாத உதடுகள், இருந்தும் பலனில்லை.

உங்களது அன்புக்கும், கருணைக்கும் பாத்திரமான பக்தர்கள் இன்றைக்கும் சொல்கின்ற மெய் சிலிர்க்க வைக்கின்ற அனுபவங்கள் மூலமாக நாங்கள் உங்களையும் நேரில் வணங்குகின்றோம் பெரியவா! உங்கள் காலத்தையும் பின்னோக்கித் தரிசிக்கின்றோம் பெரியவா!

காவிரியும் கொள்ளிடமும் வளம் பெருக்கும் திருச்சி மாநகரத்தில் மகா பெரியவா அப்போது முகாமிட்டிருந்தார்.

திரளான பக்தர்கள் நித்தமும் மகா பெரியவா தரிசனத்துக்காக அவர் முகாமிட்டிருக்கிற இடங்களில் கூடினார்கள்.

சந்திரமௌளீஸ்வரர் பூஜையைத் தரிசித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக் கொண்டு, ஸ்ரீமட முகாமில் நடக்கிற அன்னதானத்தில் உணவும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

திருச்சியில் வசிக்கிற தனவந்தர்கள் சர்வேஸ்வர சொரூபமே தங்கள் ஊரில் முகாமிட்டிருப்பதாக மகிழ்ந்து, நித்தமும் தரிசித்துப் பரவசப்பட்டார்கள்.

அருகில் கிராமங்களில் வசிக்கிற விவசாயிகள் தங்களால் இயன்ற காய்கறிகளையும், மளிகைச் சாமான்களையும் வண்டிகளில் ஏற்றி கொண்டு, மனமுவந்து முகாமில் சேர்ப்பித்தார்கள்.

திருச்சி மாநகரத்தில் வசிக்கின்ற விவசாயிகள் இப்படிக் கொண்டு வந்து சேர்த்த வாழைத்தார்கள், பூசணிக்காய்கள், பரங்கிக்காய்கள், புடலங்காய்கள், அவரைக்காய்கள்இப்படி எண்ணற்ற காய்கள் ஸ்ரீமட முகாமின் சமையல்கட்டில் அணிவகுத்திருந்தன. அதேபோல் அரிசி மூட்டைகள், பருப்பு வகையறாக்கள், புளி, அச்சு வெல்லம்இப்படி சமையலுக்குத் தேவையான பொருட்கள் ஒரு பக்கம்.

சந்நியாசிகளின் முகாம்களுக்குப் பொருட்களைக் கொண்டு வந்து குவிக்க பணக்காரராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நல்ல மனம் கொண்டவராக இருந்தாலே போதும்.

ஸ்ரீமடத்தின் திருச்சி முகாம் நித்தமும் பிஸியாக இருந்தது. கைங்கர்யம் செய்கிற சீடர்கள், தன்னார்வத் தொண்டர்கள், சிப்பந்திகள் அனைவரும் அதிகாலையில் மகா பெரியவா கண் விழித்தெழுகிற வேளையில் எழுவார்கள்.

மகா பெரியவா சயனத்துக்குப் போகிறபோதுதான் இவர்கள் அனைவரும் ஓய்வுக்குச் செல்வார்கள்.

அன்றைய தினம் பகல் பொழுதில் மகா பெரியவா பட்டணப் பிரவேசம் செய்தார். அதாவது, திருச்சி நகரத்தின் குறிப்பிட்ட தெருக்கள் வழியாகச் சென்று அங்குள்ள பக்தகோடிகளுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

பட்டணப் பிரவேசம் என்றால், ஸ்ரீமடத்தின் யானை, குதிரை போன்றவை உரிய நபர்களின் வழிகாட்டுதலோடு கோலாகலமாக நடந்து செல்லும்.

வேத கோஷமும், பாராயணமும் மனதுக்கு இதம் தரும்.

மகா பெரியவா பல்லக்கில் அமர்ந்து செல்வார்.

சில வேளைகளில் நடந்தும் செல்வார்.

அன்றைய தினம் திருச்சி நகரத்தின் பிரதான சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்தார் மகா பெரியவா.

அப்போது ஒரு குறிப்பிட்ட பிரதான சாலை வழியே ஸ்ரீமட முகாமின் அதிகாரி ஒருவர் எதிர்த் திசையில் இருந்து ஓடி வந்தார். மகா பெரியவா வந்து கொண்டிருந்த பல்லக்கின் அருகே மூச்சிரைக்க நின்றார்.

மகா பெரியவா அவரைஎன்ன? என்று கேட்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

பெரியவாநாம நேரா போறதா திட்டம் போட்டிருந்தோம். இப்ப கொஞ்சம் வழிய மாத்தி இப்படியே போயிடலாம்னு இருக்கோம் என்று தகவல் தெரிவித்தார்.

ஏன், ரூட்டை மாத்தணும்? பிளான்படி நேராவே போயிடலாமே? – மகா பெரியவா.

இல்லை பெரியவாஇந்த வழி வேண்டாம். – அதிகாரி.

பரவால்லைநேராவே போகலாம் என்றபடி தீர்க்கமாக பெரியவா சொல்லஅதிகாரிகப்சிப் ஆனார். அதற்கு மேல் யாரும் பேசவே முடியாது.

வேறு வழியில்லாமல் ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் பட்டணப் பிரவேச ஊர்வலம் நகர்ந்தது.

ஆயிரக்கணக்கான ஜனங்கள் இதில் கலந்து கொண்டுஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்தை முழங்கியபடி உடன் வந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீமடத்தின் அதிகாரிதிக் திக் மனசோடு பெரியவா அமர்ந்திருந்த பல்லக்குடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்த அதிகாரியின் மனதில், ‘குறிப்பிட்ட அந்தப் பிரமாண்டமான போர்டை மகா பெரியவா பார்த்து விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டே வந்தார்.

அதற்கேற்றாற் போல் சாலையின் எந்தப் பக்கம் அந்த போர்டு வைக்கப்பட்டிருக்கிறதோ, அது பெரியவா கண்களில் பட்டு விடக் கூடாது என்று பெரியவாளின் மேல் பட்டு விடாமலும், அதே வேளையில் அவரை ஒட்டியும் வந்து கொண்டிருந்தார்.

எது நடக்கக் கூடாது என்று ஸ்ரீமடத்தின் அதிகாரி நினைத்தாரோ, அது நடந்து விட்டது.

ஆம்!

பிரமாண்டமான இந்த விளம்பரப் பலகை மகா பெரியவா உட்பட அனைவரின் கண்களிலும் பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு வைக்கப்பட்டிருந்த போர்டு, அனைவரின் கண்களிலும் பட்டு விட்டதுமகா பெரியவா உட்பட!

என்ன விளம்பரப் பலகை?

மகா பெரியவாளைத் திருச்சி மாநகரத்துக்கு வாழ்த்தி வரவேற்ற அறிவிப்பா?

இல்லை!

இந்த லோகத்தில் மகா பெரியவாளின் சேவை இன்னும் பல காலம் தேவை என்ற வேண்டுதல் அறிவிப்பா?

இல்லை!

அப்படியென்றால்?

வாழ்த்தி வரவேற்கிற பதாகை இல்லை அது!

மகா பெரியவாளுக்கு எதிரான வாசகங்கள்.

திருச்சிக்கு வரும் சங்கராச்சாரியேதிரும்பிப் போ

இதுதான் அந்தப் பலகையின் வாசகம்!

பலகையை வைத்தவர் யார் தெரியுமா?

ஓர் அந்தணர்!

அதுவும் நாத்திக எண்ணங்களால் அதிகம் கவரப்பட்ட அந்தணர் அவர்.

ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் ஸ்தம்பித்தது.

பட்டணப் பிரவேசம் செல்கின்ற சாலையில் அனைவரின் கண்களிலும் படுகிற விதத்தில் வைக்கப்பட்டிருந்த எதிர்ப்புப் பலகை, மகா பெரியவா கண்களிலும் பட்டு விட்டது.

இந்த விஷயம் ஏற்கெனவே தெரிந்து, இதை மகா பெரியவாளிடம் சொல்லாமல் மறைத்து, பட்டணப் பிரவேசம் வேறு சாலையில் செல்லலாமா என்று கேட்டிருந்தார் ஸ்ரீமடத்தின் அதிகாரி. ஆனால், முக்காலமும் உணர்ந்த மகான் திட்டமிட்ட பாதையிலேயே செல்லட்டும் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அவருக்குத் தெரியாதா, எந்த மூலையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று!

மகா பெரியவா கண்களில் இது பட்டு விட்டதே என்று கைகளைப் பிசைந்தபடி அவருக்கு அருகே நின்று கொண்டிருந்தார் அதிகாரி.

இந்தத் திடீர் களேபரம் காரணமாகப் பட்டணப் பிரவேச யாத்திரையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டு அங்கேயே ஒரு சில விநாடிகள் ஸ்தம்பித்தது.

மகா பெரியவாளின் திருச்சி வருகையை எதிர்த்து பிரமாண்ட விளம்பரப் பலகையை வைத்தவர்திருச்சியிலேயே வசித்து வரும் அந்தணர் ஒருவர். அவரும் இந்த விளம்பரப் பலகைக்குக் கீழே தைரியத்துடன் நின்று கொண்டிருந்தார். அவரது கருத்தை ஆமோதிக்கின்ற வகையில் ஒரு சில நண்பர்களும் உடன் காணப்பட்டனர்.

கலியுக தெய்வமான மகா பெரியவாளை எதிர்த்து அந்தண இளைஞர் ஒருவர் இப்படியும் செய்வாரா? என்று பட்டணப் பிரவேசத்தில் வந்த பலரும் கோபப்பட்டுப் பேசியபோது, மகா பெரியவா வாய் திறக்கவே இல்லை.

துறவு நிலையை ஏற்றுக் கொண்டு விட்டால், பரப்பிரம்ம நிலையை அடைய வேண்டும். எத்தகைய நிகழ்வும் சம்பந்தப்பட்ட துறவியிடம் சிறு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. அப்பேர்ப்பட்ட துறவு இலக்கணத்துக்கு ஒரு நடமாடும் சாட்சியாக மகா பெரியவா விளங்கி வந்தார்.

இந்தப் பட்டணப் பிரவேசத்தில் கலந்து கொண்ட மகா பெரியவா பக்தர்கள் சிலர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்த விளம்பரப் பலகையை வைத்த இளைஞரோடு வாக்குவாதத்தில் இறங்க ஒரு சிலர் தயாரானார்கள். மேலும் சிலர் அந்தப் பலகை அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால், மகா பெரியவா உத்தரவின் பேரில் ஸ்ரீமடத்தின் அதிகாரி, பக்தர்களைத் தடுத்தார். சலசலப்பு அடங்கியது.

அதன் பின்ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர கோஷத்துடன் யாத்திரை வழக்கமான உற்சாகத்துடன் தொடர்ந்தது.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு திருச்சியில் இருந்து அடுத்த ஊருக்கு மகா பெரியவா புறப்பட்டு விட்டார். ஊர் மக்கள் அனைவரும் விமரிசையாக வழியனுப்பி வைத்தனர்.

இந்த விளம்பரப் பலகையை வைத்த அந்தண இளைஞர் இறை பக்தி, ஆச்சார அனுஷ்டானம் என்று நம்பிக்கை கொண்ட பரம்பரையில் வந்திருந்தாலும், ஏதோ சகவாசம் காரணமாக நாத்திகத்தால் ஈர்க்கப்பட்டு விட்டார். ‘கடவுள் என்பவர் இல்லைபக்தி என்பது வெறும் வேஷம் என்றெல்லாம் ஆவேசத்துடன் முழங்கி, பொது இடங்களில் தன் நாத்திகக் கருத்துக்களை முன்வைத்துப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

மகான்கள் எவரேனும் திருச்சிக்கு வந்தால், அவர்களை எதிர்த்துப் பேசுவது, பலகை வைப்பது இவரது வழக்கம்.

அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். “நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஆகாதுடாஉன்னோட தாத்தா இப்படி இருந்தார். உன்னோட கொள்ளுத் தாத்தா இப்படி இருந்திருக்கார் என்று அவர்கள் பரம்பரையில் வந்த முன்னோர்களைப் பற்றியும், அவர்களது ஆன்மிக சேவை பற்றியும் விலாவாரியாக எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், நாத்திக பிராமண இளைஞர் இவற்றை எல்லாம் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.

குடும்பத்தில் இருந்த பெரியவர் ஒருவர், “அவனுக்கு யாரும் புத்திமதி சொல்லாதீங்கோ. எல்லாம் அவனோட கர்மா. விதி. என்ன கர்மாவை அனுபவிக்கணுமோ, அதை அனுபவிச்சுத்தான் ஆகணும். அது யாரா இருந்தாலும் சரி. அவன் கொஞ்ச காலம் நாத்திகத்துல இருக்கணும்கறது கர்மா போலிருக்கு. யார் சொன்னாலும் கேக்க மாட்டான். கர்மா தன்னோட வேலையை செஞ்சு முடிச்சுட்டுத்தான் அடங்கும். ஆனா, ஒரு நாள் பாருங்கோகோயிலே கதின்னு கிடக்கப் போறான். உங்க எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கப் போறான் என்று சொன்னார்.

அனுபவப்பட்ட அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள், அடுத்து வந்த ஒரு சில வருடங்களிலேயே உண்மையாகிப் போனது!

ஆம்! பூர்வ ஜன்ம வினைகளின் காரணமாக ஒருவரை ஆட்கொண்ட கர்மா அந்தப் பிறவியில் என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை எல்லாம் செய்து முடித்து விட்டு, உரிய காலத்தில் பொசுக்கென்று விலகி விடும்.

நாம்தான் வாழ்க்கையில் பார்க்கிறோமேஒருவருக்குக் கஷ்டம் என்றாலும், சந்தோஷம் என்றாலும் எதுவும் நிரந்தரம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எதுவும் மாறும்.

அதுபோல் இந்த அந்தண இளைஞரை இது நாள் வரை ஆட்கொண்டிருந்த நாத்திகத் தாக்கம் மெள்ள மெள்ள வலுவிழந்தது.

மெள்ள நெற்றியில் திருநீறு வைக்க ஆரம்பித்தார். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆலயங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். நாத்திகக் கருத்துடன் வாழ்ந்து வரும் தன் நண்பர்களை மெள்ள மெள்ள தவிர்க்க ஆரம்பித்தார். ‘தெய்வ பக்தி இல்லாவிட்டால், இந்தப் பிறவியே வீண் என்று பேச ஆரம்பித்து, அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தன.

குடும்பத்தினர் மட்டுமல்லநண்பர்கள், சுற்று வட்டாரத்தினர் அனைவரும் வியப்புடன் அந்தண இளைஞரைப் பார்த்தார்கள். கோயில் கோயிலாக ஏறி இறங்கினார்.

சபரிமலை ஐயப்பன் இவரை ஆட்கொண்டார். தெரிந்த ஒரு குருஸ்வாமியை அடைந்தார். ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டார். விரதம் இருந்தார். சபரிமலை சென்றார்.

குடும்பத்தினரின் சந்தோஷமும் குதூகலமும் பன்மடங்கானது. குடும்பத்துப் பெரியவர் ஏற்கெனவே சொன்னது போல், கர்மா விலகி, ஞானம் பெற்று விட்டார் என்று மகிழ்ந்தனர்.

வருடங்கள் ஓடியே விட்டன.

திருச்சிக்கு வந்த மகா பெரியவாளை எதிர்த்து விளம்பரப் பலகை வைத்து சுமார் அறுபது வருடங்கள் கழித்து, நண்பர்களுடன் காஞ்சிக்குச் செல்லும் பேறு கிடைத்தது இவருக்கு.

காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்ததும், இவரும் நண்பர்களும் மேல்சட்டையைக் கழற்றி விட்டு, கால்களைக் கழுவிக் கொண்டு ரொம்பவும் ஆச்சார சுத்தமாக மகா பெரியவா வீற்றிருக்கும் திருச்சந்நிதிக்குச் சென்றிருக்கிறார்கள்.

நடமாடும் தெய்வத்தை அன்றைக்குத் தரிசிக்க எக்கச்சக்க கூட்டம். திருச்சி அன்பரும் தரிசனத்துக்குச் செல்லும் நீண்ட வரிசையில் நின்றார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாநகரத்தில் மகா பெரியவா வருகையை எதிர்த்துத் தான் ஒரு பேனரை வைத்தது, கிட்டத்தட்ட இவருக்கு மறந்தே விட்டிருந்தது.

ரயிலில், பஸ்ஸில் பலரை நாம் சந்திக்கிறோம். ஏதோ ஒரு விஷயத்தை உடன் வந்த பயணிகளுடன் பேசி இருக்கலாம், ஒரு சில நிமிடங்களுக்கு. அதன் பின் நாமோ அல்லது அவரோ இறங்க வேண்டிய இடம் வந்த பிறகு, சொல்லிக் கொண்டு இறங்கிப் போயிருப்போம்.

ஆனால், பயணித்த அன்பரை நாம் நினைவில் வைத்திருப்போமா? இல்லை. ஒருவேளை இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தால், இருவருக்கும் நினைவுக்கு வரலாம். ஆனால், ஒரு சில வருடங்கள் கடந்து விட்டால், நிச்சயமாக நினைவு இருக்காது.

ஆக, நம் பயணத்திலோ, அல்லது வழிப்போக்கிலோ ஒருவரைப் பார்த்தோம் என்றால், அவரை அடுத்து வரக் கூடிய நாட்களில் மறந்து விடுவோம்.

இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நிகழ்வில் திருச்சி அன்பர், நாத்திகராக இருந்து பேனர் வைத்து, சுமார் அறுபது வருடங்கள் கழித்து மகா பெரியவாளைப் பார்க்க இன்றைக்கு வந்திருக்கிறார்.

மகா பெரியவாளை இவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், மகா பெரியவாளுக்கு இவரை நினைவில் இருக்குமா?

கேள்வியே அபத்தமாக இருக்கிறது அல்லவா? அறுபது வருடங்களுக்கு முன்னால் தான் பார்த்த ஒருவரை மகா பெரியவா எப்படி நினைவில் வைத்திருப்பார்? நித்தமும் அந்த மகானின் ஆசி பெற வேண்டி பலரும் வருகிறார்கள்எப்படி இது சாத்தியம் என்றுதானே நமக்குத் தோன்றும்?!

ஆனால், அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த திருச்சி அன்பர் தன் முறை வந்ததும், பரவசத்துடன் நெருங்கினார். தான் கொண்டு வந்திருக்கும் பழங்களை மகா பெரியவா முன் வைத்து விட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பிரசாதம் வேண்டி திருச்சி அன்பர் எழுந்து நின்றார். கூப்பிய கைகள் அதே நிலையில் காணப்படுகிறது.

மகா பெரியவா அவரது முகத்தைப் பார்த்து விட்டு, தன் முகத்தைத் திருப்பி அருகில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்தியைப் பார்த்தார்.

சிப்பந்தியிடம், “டேய்இங்க மடத்துக்கிட்ட எதாவது எதிர்ப்பு பேனர் வைக்கறதுக்காக திருச்சிலேர்ந்து இங்கே வந்திருக்கானானு இவன்கிட்ட கேளு என்று அந்த அன்பரை அடையாளம் காட்டதற்போது வயது முதிர்ந்த கோலத்தில் காணப்படுகிற திருச்சி அன்பர் வெலவெலத்துப் போய் விட்டார்.

பெரியவா…. என்று பெரும்குரலெடுத்து அவரது திருச்சந்நிதியில் மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

பயப்படாதசும்மா கேட்டேன் என்று ஒரு புன்னகையுடன் சொல்லி விட்டுப் பெரியவா பிரசாதம் கொடுத்தபோது, இந்த விஷயம் அங்கிருந்த அவருக்கும் திருச்சி அன்பருக்கும் மட்டும்தானே புரியும்!

மகா பெரியவா கேட்ட கேள்வியின் பொருள் மற்றவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?!