பிரமித்த ரயில்வே அதிகாரி

ரு இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் என்ன நடக்கிறது என்பதை மகான்கள் மட்டுமே அறிவர். அஷ்டமாஸித்திகள் போன்றவை இவர்களுக்குக் கைவந்த கலை.

நடமாடும் தெய்வமாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிற காஞ்சி மகா பெரியவா, இது போல் நிகழ்த்திய பல அற்புதங்களை இந்த நூலில் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.

மகா பெரியவா தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் படித்து முடித்த பின், ‘இப்படி எல்லாம் ஞான திருஷ்டி கொண்ட ஒரு மகான் சமீப காலத்தில் நம்முடன் வாழ்ந்திருக்கிறாரா? என்கிற ஆச்சரியமும் பிரமிப்பும் ஒவ்வொருவருக்கும் மேலோங்குவதில் வியப்பில்லை.

தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிற ஞானிகள் ஆகாயத்தைப் பார்த்து, ‘மழை பெய் என்றால் பெய்து விடும். கொட்டுகிற மழையை நிற்க வைக்க வேண்டும் என்றாலும், அவர்களால் இது சாத்தியமே!

காஞ்சியில் கொளுத்துகிற வெயில் வேளையில் சங்கர மடத்தில் இருந்து கொண்டு, மயிலாப்பூரில் மழை கொட்டே கொட்டென்று கொட்டுவதைப் பற்றித் தன் பக்தர்களுக்கு ஒரு முறை சொல்லி இருக்கிறார் மகா பெரியவா. எல்லோருக்கும் ஆச்சரியம்காஞ்சியில் அக்னி நட்சத்திர காலம் போல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும்போது மயிலையில் எப்படி மழை பெய்யும்? மயிலைக்கும் காஞ்சிக்கும் அவ்வளவு பெரிய தொலைவில்லையே என்று யோசித்தார்கள்.

பிறகுதான் அனைவருக்கும் தெரிந்ததுபிரபல ஆன்மிக சொற்பொழிவாளரான எம்பார் விஜயராகவாச்சார்யர், மயிலையில் பிரசங்கம் செய்யும்போது மகா பெரியவாளைப் பற்றி நெகிழ்வாகப் பேசி இருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நாத்திக அன்பர் குறுக்கிட்டுநீங்க சொல்ற மகா பெரியவா நினைத்தால் மயிலையில் மழையை பெய்ய வைக்க முடியுமா? என்று குதர்க்கமாகக் கேட்கஎம்பாரும் மகா பெரியவாளை மனதுக்குள் பிரார்த்தித்து, வாக்கு கொடுத்து விட்டார்.

மழைக்காக மயிலை ஏங்கிய காலம் அது. சென்னையே காய்ந்து போயிருந்தது. உண்மையான தன் பக்தன் எம்பார் கொடுத்த வாக்கை மெய்ப்பிப்பதற்காக அரை மணி நேரம் காஞ்சியில் தவம் இருந்து, மயிலையின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டார் மகா பெரியவா.

இதேபோல் இன்னொரு மழை சம்பவம். இது அரசியல்வாதி சம்பந்தப்பட்டது.

தமிழகம் முழுக்க மழையே இல்லை சாமீநான் அமைச்சரா இருக்கேன். இனியும் மழை வரலேன்னா மக்கள் என்னை முற்றுகையிட ஆரம்பிச்சிடுவாங்க என்று காஞ்சியில் மகா பெரியவாளிடம் ஒரு முறை தெரிவித்திருக்கிறார், எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்த . ராஜாராம்.

மகா பெரியவா ஆசிர்வதித்து அனுப்பினார் ராஜாராமை.

செங்கல்பட்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டார் ராஜாராம். பத்து நிமிடம்கூடப் பயணித்திருக்க மாட்டார். மழை பிய்த்துக் கொண்டு அடிக்ககார் வைப்பர் வேலை செய்வது நின்று போய்அங்கிருந்து ஓரடிகூட நகர முடியவில்லையாம்.

மகா பெரியவாளின் ஞான திருஷ்டியைச் சொல்கிற இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

மகா பெரியவா அப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாரா நகரத்தில் முகாமிட்டிருந்தார்.

பூனாவில் இருந்து சதாராவுக்கு சுமார் 110 கி.மீ. தொலைவு. மும்பையில் இருந்து சுமார் 260 கி.மீ. தொலைவு.

நதிகள் வளம் கொழிக்கும், நாகரிகம் சிறந்து விளங்கும் இந்த சதாரா, மகா பெரியவாளுக்கு மிகவும் பிடித்த ஊர்.

மகா பெரியவாளோடு தொடர்புடைய காஞ்சிபுரம், கும்பகோணம், திருவானைக்கா, திருவிடைமருதூர், ஓரிக்கை, தேனம்பாக்கம், கலவை போன்ற இடங்களுக்குச் சென்று, அவர் பாதம் பட்ட இடங்களைத் தரிசிப்பதை எத்தனை புண்ணியமாக நினைக்கிறோமோ, அதுபோல் சதாராவுக்கும் சென்று தரிசிக்க வேண்டும். மகான் தங்கி இருந்த இடங்களை விசாரித்து அங்கெல்லாம் அமர்ந்து, ஆனந்தப்பட வேண்டும்.

சதாராவில் முகாமிட்டிருந்தபோதுதான் இந்த சர்வேஸ்வரன் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

தமிழ்நாட்டில் நடராஜப் பெருமான் அருளுகின்ற சிதம்பரம் ஆலயம் போலவே, சதாராவிலும் அற்புதமான ஒரு ஆலயத்தைக் கட்டலாமேஅதற்குஉத்தர சிதம்பரம் (உத்தரவடக்கு) என்று பெயரிடலாமே என்று மகானுக்குத் தோன்றியது.

மகான்கள் மனதளவில் நினைத்தாலே போதும்அத்தனையும் செயலாக்கம் பெற்று விடும். இந்தப் பணியை முடிப்பதற்கு உரியவர்கள் யார் யார் எனத் தீர்மானித்து, அவர்களிடம் பொறுப்பையும் ஒப்படைத்தார் மகா பெரியவா.

சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சதாராவில் உத்தர சிதம்பரம் ஆலயம் கட்டுவதற்கென இடம் வாங்கப்பட்டது.

சிதம்பரம் அளவுக்குப் பிரமாண்டம் இல்லை என்றாலும், சிதம்பரத்தை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த ஆலயம் அமைய வேண்டும் என்பது மகா பெரியவா உத்தரவு.

மகா பெரியவா உள்ளத்தில் இருக்கிற விருப்பத்தைப் புரிந்து கொண்ட தனவந்தர்கள், ஆடல்வல்லான் ஆலயம் அமைவதற்கு செல்வத்தை அள்ளி வழங்கினார்கள்.

அப்போதைய ஆட்சியாளர்கள், மகா பெரியவா மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள். மகா பெரியவாளை தெய்வமாகவே மதித்தவர்கள். எனவே, தங்கள் மாநிலத்தின் பங்கும் இந்த நடராஜர் ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் அப்போதைய முதல்வர்கள்.

மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, தமிழக அரசாங்கங்கள் தங்கள் பங்குக்கு நிதியை வாரி வழங்கின. கேரள அரசு மட்டும் சும்மா இருக்குமா? தன் பங்காக ஆலயக் கொடிமரத்துக்கான மரம் மற்றும் ஆலயக் கட்டுமானத்துக்கு உண்டான மரங்கள் அனைத்தையும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தது.

வேலைகள் துரித கதியில் நடந்தன. நான்கு திக்குகளிலும் நான்கு கோபுரங்கள். ஆலயத்தில் பிரதான மூலவர்களாக ஸ்ரீநடராஜப் பெருமான் மற்றும் ஸ்ரீசிவகாம சுந்தரி. தவிர, விநாயகரில் ஆரம்பித்து அனைத்து பரிவாரங்களும் இங்கே பிரதிஷ்டை ஆயின.

மூன்றே வருடத்துக்குள் ஆலயம் அற்புதமாகக் கட்டப்பட்டு, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. மகா பெரியவாளுக்கு அப்போது வயது 91.

மகா பெரியவாளின் திருப்பெயரைப் பறைசாற்றும் விதத்தில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சதாராஉத்தர சிதம்பரம் ஆலயம்.

உத்தர சிதம்பரம் ஆலயக் கட்டுமானப் பணிகள் சதாராவில் நடந்து கொண்டிருந்த வேளையில் மகா பெரியவாளும் அதே ஊரில் கேம்ப் இருந்தார்.

மகா பெரியவா பக்தர்களுக்கு சதாரா என்பதும் இன்னொரு காஞ்சிபுரம் மாதிரிதான். காஞ்சியில் பெரியவாளைத் தரிசிக்க வருவது போல் சாதாரா கேம்ப்பிலும் இந்த மகானைத் தரிசிக்கத் தமிழகத்தில் இருந்து பெரும் திரளாகப் புறப்பட்டுப் போவார்கள்.

அதுபோல் அன்றைய தினம் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா பெரியவா தரிசனத்துக்கென்று சதாரா முகாமில் காத்திருந்தார்கள்.

ரயில்வேயில் சி.ஜி.எம்.மாக இருந்த உயர் அதிகாரி ஒருவரும் மகா பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தார்.

ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் அவரை மகா பெரியவா அருகே அழைத்து வந்து அறிமுகப்படுத்தி, அமர வைத்தார்கள்.

அப்போதுதான் கேரள அரசின் சார்பாக அங்கிருந்து மரங்கள் ரயில்வே மூலமாக சதாராவுக்கு அனுப்பி வைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஏனோ, சதாரா ஆலயப் பணிகளுக்குத் தேவையான மரங்கள் உரிய வேளையில் கேரளாவில் இருந்து ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டும், அவை சதாராவை வந்து அடையவில்லை. எங்கோ ஓரிடத்தில் இந்த மரங்கள் அடங்கிய ரயில் வேகன்கள் நின்று விட்டன போலும்!

இந்த விஷயம் குறித்து மகா பெரியவா அந்த சி.ஜி.எம்.மிடம் சொன்னார். இது குறித்துத் தானே களத்தில் இறங்கி, அந்த வேகன்கள் தாமதம் இல்லாமல் சதாரா வருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இது தனக்கு மிகப் பெரிய பாக்கியம் என்றும் சந்தோஷத்துடன் உறுதி அளித்தார் சி.ஜி.எம்.!

அதன் பின் சப்ஜெக்ட் மாறிய மகா பெரியவா, “கேரளாவில் இருந்து மகாராஷ்டிராவில் இருக்கிற இன்ன ஊருக்கு (ஊர் பெயரைச் சொல்கிறார்) செல்லும் பயணிகள் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து போகுமோ? என்று அதிகாரியைப் பார்த்துக் கேட்டார்.

அதிகாரிக்குக் குழப்பம். காரணம் மகா பெரியவா குறிப்பிட்ட அந்த ரயில் சென்னைக்கே வராது. ஜோலார்ப்பேட்டை தாண்டி, காட்பாடியிலேயே பாதை மாறி ஆந்திரா சென்று, மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட ஊரை அடைந்து விடும். மகா பெரியவா ஏன் இதைக் கேட்கிறார் என்று சிந்தித்த சி.ஜி.எம்., “பெரியவாஅந்த ரயில் சென்னைப் பக்கமே வராது. அது காட்பாடியில் பிரிந்து ஆந்திரா மார்க்கமாக தாங்கள் சொன்ன ஊரை அடைந்து விடும் என்றார்.

இல்லைஅந்த ரயில் இப்ப சென்னை சென்ட்ரல் போயிருக்கு. நீ விசாரிச்சுப் பாரு என்று சொல்லி விட்டு, அடுத்த பக்தரைப் பார்த்துப் பேச ஆரம்பித்து விட்டார் மகா பெரியவா.

முகம் நிறைய குழப்பத்துடன் அந்த ரயில்வே அதிகாரி கேம்ப்பை விட்டு வெளியே வந்தார்.

எப்படி அந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்துக்குச் செல்லும்? – இது அவரது மனசைக் குடைந்து கொண்டே இருந்தது.

மகா பெரியவா ஒரு விஷயத்தைச் சும்மா சொல்ல மாட்டார். அப்படி ஒருவேளை மகான் தன் திருவாய் திறந்து மலர்ந்தால், அது வேத வாக்கு. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர் அந்த ரயில்வே அதிகாரி.

போன் பேசக் கூடிய ஓரிடத்துக்குச் சென்று சென்னை ரயில்வே அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, மகா பெரியவா சொன்ன ரயில் குறித்த விவரத்தைக் கேட்டார். அங்கிருந்து அவர்கள் சொன்ன பதில், அதிகாரியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆம்!

காட்பாடியில் தடம் மாற வேண்டிய ரயில், எப்படியோ சில டெக்னிக்கல் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரலுக்கே வந்து விட்டதாம்!

சென்னையில் இருந்து வந்த இந்த பதிலைக் கேட்டதும், அதிகாரி ஆடிப் போனார்.

மகாராஷ்டிராவின் சாதாரணமான சதாரா என்கிற ஊரில் அமர்ந்து கொண்டு உலக இயக்கத்தையே கண்காணித்துக் கொண்டிருக்கிறாரே என்று வியந்து, கேம்ப்பினுள் மீண்டும் சென்றார்.

மகா பெரியவாளுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

ஆமா பெரியவாநீங்க சொன்னது உண்மைதான் என்றார் பவ்யமாக.

பாவம்ஏதோ குழப்பம் ஆயிடுத்து போலிருக்கு. உடனே அதை சரிபண்ணு என்று ரயில்வே சி.ஜி.எம்.முக்குப் பிரசாதம் கொடுத்து அவரை ஆசிர்வதித்து அனுப்பினார் மகா பெரியவா!