கருணைக் கடலாக விளங்கிய காஞ்சி மகா பெரியவா தன் ஸ்தூல சரீரத்துடன் (தேகத்துடன்) இந்த பூலோகத்தில் நூறு வருடங்கள் வாழ்ந்து நம்மை எல்லாம் ஆசிர்வதித்தார்.
பொது வாழ்க்கையில் தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டு இந்த உலகின் நலனுக்காக மட்டும் உழைப்பவர்களைத்தான் ‘மகான்கள்‘ என்று போற்றுகிறோம்.
வசதிகளையும், படாடோபத்தையும், ஆசைகளையும், போட்டி பொறாமைகளையும் கொண்டிருப்பதுதான் மனித வாழ்க்கை.
ஆனால், ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் உணர்ந்து, ‘காலத்தை வீணாக்கி விட்டோமே…‘ என்று தெளிந்த மனிதன், நிம்மதி தேடிச் செல்கிற இடம் – மகான்களின் வசிப்பிடம்.
அந்த வகையில் இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கானோர் காஞ்சிபுரத்தில் மகா பெரியவா உறைந்து வரும் அவரது பிருந்தாவனம் (அதிர்ஷ்டானம்) செல்கிறார்கள். பிரார்த்திக்கிறார்கள். வேண்டியது நிறைவேறப் பெறுகிறார்கள்.
தனது பதின்மூன்று வயதில் சந்நியாச வாழ்க்கையை ஏற்ற மகா பெரியவா, 87 வருடங்கள் துறவு நெறிப்படி இம்மியும் பிசகாமல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக வாழ்ந்து நம்மையெல்லாம் ஆசிர்வதித்தவர்.
யாத்திரையாகச் சென்ற இடத்தில் எல்லாம் மகானின் திருவிளையாடல்கள் நிகழ்ந்தன. மதுரை சொக்கேசன் நிகழ்த்திய விளையாடல்கள், திருவாரூர் தியாகராஜர் நிகழ்த்திய திருவிளையாடல்கள், பண்டரிபுரம் விட்டலன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி நிகழ்த்திய திருவிளையாடல்கள் என்றெல்லாம் இன்றைக்குப் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம்.
அதுபோல் ‘நடமாடும் தெய்வமாக‘ நம்மிடையே இன்றைக்கும் விளங்கி வருகிற காஞ்சி மகா பெரியவா நிகழ்த்திய திருவிளையாடல்களைத்தான் – பக்தர்களுக்குப் புரிந்த அனுக்ரஹங்களைத்தான் இந்தத் நூலில் பார்த்து வருகிறோம்.
இது மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் மட்டும்தான் என்றில்லை. இன்றைக்கும் இந்த மகானை உண்மையான பக்தியோடு வணங்கி வருகிற அன்பர்கள், இது போன்ற திருவிளையாடல்களை நித்தமும் அனுபவித்து ஆனந்தப்பட்டுத்தான் வருகிறார்கள்.
ஒரு பழைய சம்பவத்தைப் பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நகரமான பூனாவுக்கு அருகே ஒரு கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார்.
மகா பெரியவா ஒரு கிராமத்திலோ, நகரத்திலோ முகாமிடுகிறார் என்றால், அதற்குண்டான எல்லா விஷயங்களும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அதன் பிறகுதான் ‘கேம்ப்‘ போடுவார்கள்.
அதன்படி, பூனா அருகே மகா பெரியவா கேம்ப் போடுவதற்கு முன் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் இந்த ஊருக்கு வந்து எல்லா வசதிகளும் இருப்பதைப் பார்த்து விட்டுத்தான் முகாமும் அமைந்தது.
நித்தமும் மகா பெரியவா நடத்துகிற சந்திரமௌளீஸ்வரர் பூஜையைத் தரிசிப்பதற்காகவும், அவரிடம் தீர்த்த பிரசாதம் பெறுவதற்காகவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தகோடிகள் இந்தக் கிராமத்தில் குவிந்தார்கள்.
பம்பாய், பூனே, சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் ஆன்மிக அன்பர்கள் புறப்பட்டு வந்தார்கள்.
சென்னையில் இருந்தும் ஒரு பக்தர் இந்தக் கிராமத்துக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டி வந்தார். அவர் பெயர் தெரியவில்லை. கட்டுரையின் வசதிக்காக அவர் பெயரை ‘ரமணன்‘ என்று வைத்துக் கொள்வோம்.
‘மகா பெரியவா‘ என்று எவரேனும் இந்தத் திருநாமத்தை உச்சரித்தாலே உருகிப் போய் விடுவார் ரமணன். அந்த அளவுக்கு மகானின் மீது அதீத பக்தி.
சென்னையில் இருந்து பூனேவை ரயில் மூலம் அடைந்து அங்கிருந்து ஒரு வாகனத்தில் பயணித்து, மகா பெரியவா முகாம் இருக்கிற கிராமத்தை அடைந்தார் ரமணன். அங்கு நீராடி, தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டார்.
பகல் வேளையில் மகானைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக பக்தர்கள் நின்று கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகானுக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு சில பழங்களையும், தொடுத்த மலர் மாலையையும் தன் கையில் வைத்திருந்தார்.
மகா பெரியவாளும், ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள் என்றாலும், மகானைத் தரிசிக்க எல்லோருக்கும் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ, அதன்படி நடந்து கொள்வதை ஒரு கண்ணியமாக நினைத்து, அதன்படி நடந்து வந்தார்கள், அந்தக் காலத்திய பக்தர்கள்.
‘மகா பெரியவாளின் பக்தர்கள்‘ என்று அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் சொல்பவர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒருவேளை மகா பெரியவாளே அந்தத் தொண்டரைப் பார்த்து விட்டு, சீடர்கள் மூலம் தன் அருகே அழைத்துக் கொண்டால், அது வேறு விதம்.
அதன்படி, இத்தனை பக்தர்கள் கூடி இருக்கிற இந்த ‘கேம்ப்‘பில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக ரமணனும், வரிசையில் பக்தரோடு பக்தராக வந்து கொண்டிருந்தார்.
சுமார் முக்கால் மணி நேரம் வரிசையில் நின்று மகானை அடைகிற வேளையில் ரமணன் முகத்தில் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத சந்தோஷம்.
‘இன்னும் ஒரு சில சில நிமிடங்களில் கலியுக தெய்வமாக விளங்கி வருகிற மகா பெரியவாளை வெகு அருகே தரிசிக்கப் போகிறோம்.‘ இந்த எண்ணமே அவருக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி இருந்தது.
மகா பெரியவாளை நெருங்குகிற ஒவ்வொரு பக்தருமே கைகளைக் கூப்பிய வண்ணம் அவர் அருகில் சென்று நமஸ்கரித்தார்கள். கண் கண்ட தெய்வத்தை இத்தனை அருகில் தரிசிக்கிறோமே என்கிற பரவசம் காரணமாக விழிகளில் நீருடனும், முகத்தில் தாங்கவொண்ணா சந்தோஷத்துடனும் இருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் மகா பெரியவா அருகே வந்து நின்று, அந்த தெய்வத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தார் ரமணன்.
புன்னகையுடன் ரமணனை ஆசிர்வதித்தார் மகா பெரியவா. தன்னிடம் மகான் ஏதேனும் ஓரிரு வார்த்தைகள் பேசுவாரோ என்கிற ஏக்கம் ரமணன் முகத்தில் தென்பட்டது.
ரமணனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொண்ட மகா பெரியவா, ரமணனைப் பார்த்து, அவரது பூர்வீகம் மற்றும் உத்தியோகம் பற்றி விசாரித்தார்.
எல்லாவற்றையும் ரொம்ப பவ்யமாகச் சொல்லி முடித்தார் ரமணன்.
அதன் பின், “சென்னைக்கு ஒடனே பொறப்படுறியோ?“ என்று கேட்டார் மகான்.
“ஆமா பெரியவா. உங்க தரிசனம் ஆன ஒடனே சென்னைக்குப் புறப்படலாம்ங்கிறது திட்டம். பெரியவா என்ன சொல்றேளோ, அதுபடி நடந்துக்கறேன்“ என்றார்.
“இல்லை. நீ திட்டமிட்டபடி கௌம்பிடு. ஆனா, போற போக்குல எனக்கு ஒரு உபகாரம் பண்றியா?“ என்று கேட்டார் மகான்.
‘உபகாரம் செய்வியா?‘ என்கிற வார்த்தைகளை தன்னைத் தரிசிக்க வருகிற எல்லோரிடமும் மகா பெரியவா கேட்பதில்லை. ஒரு சிலருக்குத்தான் அந்த யோகம் வாய்க்கும்.
“சொல்லுங்கோ பெரியவா… நான் என்ன பண்ணணும்?“ என்று தனக்கு வந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசையில் ஆர்வத்துடன் கேட்டார் ரமணன்.
“பூனாவுல ரானடேன்னு ஒருத்தர் என்னைப் பாக்க ரெண்டு நாள் முந்தி இங்கே வந்திருந்தார். எனக்கு அவர் ஒரு தண்ணித் தொட்டி தரேன்னு சொல்லி இருந்தார். கேம்ப் போட்டிருக்கிற இந்தக் கிராமத்துல தண்ணித் தொட்டி இருந்தா வர்ற பக்தாளுக்கு அது ரொம்ப உபயோகமா இருக்கும். தெனமும் நிறைய பேர் வந்துண்டிருக்கா. அவாளுக்குத் தண்ணியை அதுல சேமிச்சு வெச்சுக்க முடியும். பூனேல நீ ரயில் ஏறுறப்ப அவரைப் பாத்தா, நான் தண்ணித் தொட்டி கேட்டேன்னு சொல்றியா?“ என்றார் மகா பெரியவா.
“நிச்சயம் பெரியவா“ என்றார் ரமணன்.
பிரசாதம் வழங்கப்பட்டது. ஆசியும் கிடைத்து விட்டது. மனம் நிறைய மகிழ்வுடன் முகாமில் இருந்து வெளியே வந்தார்.
‘என்ன காரணத்துக்காக சென்னையில் இருந்து புறப்பட்டு பூனேக்கு அருகில் உள்ள இந்தக் கிராமத்துக்கு வந்தோமோ, அது பரிபூரண நிறைவேறி விட்டது‘ என்ற எண்ணத்துடன் பூனே ரயில் நிலையத்துக்கு எப்படிச் செல்லலாம் என்று ரமணன் யோசித்தபோதுதான், மகா பெரியவா சொன்னது நினைவுக்கு வந்தது.
‘ரானடேவைப் பார்த்து தண்ணித் தொட்டி குடுக்கச் சொன்னேன்னு சொல்லு.‘
இப்போதுதான் தூக்கிவாரிப் போட்டது ரமணனுக்கு.
மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் வசித்து வந்த அந்தணர்களை ‘ரானடேக்கள்‘ என்பர். எப்படி காஷ்மீரில் வசித்து வந்த அந்தணர்களை ‘பண்டிட்கள்‘ என்று சொல்கிறோமோ, அதுபோல். அதாவது, ரானடே என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பெயரல்ல. குடும்பப் பெயர்.
அந்தக் காலத்தில் ஒருவரது இயற்பெயரோடு அவரது குடும்பப் பெயரையும் பின்னால் இணைத்துச் சொல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ‘ரானடே‘ என்பது பொதுப் பெயர்.
மகா பெரியவா சொன்ன ரானடேக்கு ஒரு இயற்பெயர் இருக்கும். அது தெரியாமல் எப்படிக் கண்டுபிடிப்பது?
பூனேவில் ரயில் ஏறுவதற்கு முன் அவரைப் பார்த்துச் சொல் என்று உத்தரவிட்டாரே! மகா பெரியவாளிடம் ‘தண்ணீர்த் தொட்டி தருகிறேன்‘ என்று சொன்ன ரானடே யார் என்று நம்மால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்கிற கேள்வி ரமணனின் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
சென்னை ரயில் ஏறுவதற்குள் மகா பெரியவா உத்தரவை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்விக்குறி ரமணனுக்கு.
பூனே ரயில்நிலையத்துக்கும் வந்து விட்டார். அங்கிருந்து சென்னை செல்லக் கூடிய ரயில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வர இருப்பதாக அறிவிப்பு வந்தது.
ரமணனுக்கு அருகில் ஒரு அன்பரும் சென்னை ரயிலுக்காகக் காத்திருந்தார். தமிழ்க்காரர் என்பது அவரது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.
ரமணன் அவரை நெருங்கி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சென்னைக்காரரான அவரும் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காகத்தான் வந்திருக்கிறார் என்பதை ரமணன் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
பேச்சுவாக்கில், மகா பெரியவா சொன்னது ரமணனின் நினைவுக்கு வர… அருகில் இருக்கிற சென்னை அன்பரிடம், “பெரியவாகிட்ட ஆசி வாங்கறப்ப, ‘ரானடேங்கிறவர் எனக்கு ஒரு தண்ணித் தொட்டி தர்றேன்னு சொன்னார். அவரைப் பாத்துச் சொல்லிடு‘ன்னார். யார் ரானடே… அவரை நான் எங்கே தேடுவது……..“
என்று ஆரம்பித்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், ரமணனுக்கு வெகு அருகில் நின்றிருந்த ஒருவர் நெருங்கினார்.
அவர் – உள்ளூர்க்காரர்!
பேசிக் கொண்டிருக்கும்போது பாதியில் திடீரென்று இவர் யார் உள்ளே நுழைவது என்று ரமணன் குழப்பத்துடன் பார்க்க… அடுத்து நிகழ்ந்தது பேராச்சார்யம்.
உள்ளூர்க்காரர் போல் தென்பட்ட ஒருவர், திடீரென தன்னைப் பிரமிப்புடன் பார்த்து விட்டு, நெருங்குவதைக் கவனித்த ரமணன் குழம்பினார்.
‘யார் இவர்? இதுவரை தனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாரே… இப்போது மெள்ள எழுந்து தன்னை நோக்கி அடியெடுத்து வைக்கிறாரே?‘ என்று காரணம் புரியாமல் ரமணன் பார்த்துக் கொண்டிருந்தார்.
புதியவர் – உள்ளூர்க்காரர் – மெள்ள ரமணனை நெருங்கிப் புன்னகைத்தார். பிறகு, “நான்தான் ரானடே… மகா பெரியவா என்கிட்டதான் ஒரு தண்ணித் தொட்டி கேட்டார்“ என்று ரொம்ப பவ்யமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாரே, பார்க்கணும்!
ரமணனுக்கும் அவருக்கு அருகில் இருந்த தமிழ் அன்பருக்கும் ஆனந்த அதிர்ச்சி.
‘இவ்ளோ பெரிய ஊரில் ‘ரானடே‘ என்பதைக் குடும்பப் பெயராகக் கொண்டவர்கள் பலரும் இருப்பார்களே… இந்த நிலையில் மகா பெரியவா சொன்னது எந்த ரானடே? திருப்பதிக்குப் போய் மொட்டை போட்ட ஆசாமியைத் தேடியது மாதிரி இது அமைந்து விடுமோ?‘ என்றெல்லாம் கவலைப்பட்ட ரமணனுக்கு, நடந்த இந்தக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தின.
மகா பெரியவா தன்னிடம் சொன்ன ஒரு காரியத்தை பூனேவில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறுவதற்குள் பூர்த்தி செய்து விட்டோமே என்கிற சந்தோஷத்தில் ரமணன், “நீங்கதான் ரானடேவா… நீங்கதானா?“ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
ரயில் நிலையம் வழக்கமான பரபரப்பில் இருந்தது. ஆனால், ரயில்கள் இன்னும் வரவில்லை.
“நான்தான் ரானடே… இதே ஊர்தான் என்றாலும், மகா பெரியவாளைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அவரைத் தரிசிக்க ரெண்டு மூணு நாள் முன்னாடி போயிருந்தேன். அப்ப என்கிட்ட ஒரு தண்ணித் தொட்டி கேட்டிருந்தார். இந்த ஊர்ல தண்ணித் தொட்டி தயாரிக்கிறது என்னோட தொழில். தண்ணித் தொட்டி தயாரிக்கிற தொழில்ல நான் இருக்கேன்கிறது அவருக்கு எப்படித் தெரியும்னு எனக்கு ஆச்சரியம். சரி, ஒரு மகான் நம்மகிட்ட ஒரு பொருளைக் கேக்கிறாரே… இதை அவர்கிட்ட குடுக்க எத்தனையோ பேர் இருந்தாலும், என்னைத் தேர்ந்தெடுத்துக் கேக்கறாரேனு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். பெரிய பாக்கியம்.
ஆனா, ஒடனே இதைக் கொண்டு போய் அங்க சேர்க்க முடியலை. காரணம், என்னோட சொந்தக்காரங்க பக்கத்து கிராமத்துலேர்ந்து திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாங்க…. அவங்களை பாம்பே போற ரயில் ஏத்தி விடறதுக்காக இப்ப ஸ்டேஷன் வந்திருக்கேன். இவங்களை ரயில் ஏத்தி விட்டுட்டு, நேரா பெரியவாளைத் தரிசிக்கத் தண்ணித் தொட்டியோட போயிடறேன். தாமதம் ஆனதுக்கு என்னை மன்னிக்கணும்“ என்று அந்த உள்ளூர்க்காரர் உருக்கத்துடன் சொல்ல… ரமணனும் உடன் இருந்தவரும் விக்கித்துப் போனார்கள்.
ரானடேவைப் பார்த்துப் பெரிய கும்பிடு போட்டார் ரமணன்.
அதே நேரம் பாம்பே செல்லும் ரயில், பெரிய அலறலுடன் பிளாட்பாரத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ரமணனிடமும் நண்பரிடமும் விடைபெற்றுக் கொண்டு உறவினர்களை ஏற்றி விடுவதற்காக ரானடே நகர்ந்தார்.
மகா பெரியவாளின் பரிபூரணமான அருள் நமக்கு இருந்து விட்டால், இந்த உலகில் எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டாம்.
‘கிடைக்கவே கிடைக்காது‘ என்று நாம் நினைக்கிற விஷயம் கிடைத்து விடும்.
‘தீரவே தீராது‘ என்று மருத்துவர்கள் சர்டிபிகேட் கொடுத்த நோய்கள் காணாமல் போய், சம்பந்தப்பட்டவர்கள் உடல்நலம் தேறி விடுவார்கள்.