தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வரும் பெண்மணி கதம்பம். இந்த சம்பவம் நடந்தபோது இவர் சென்னை திருவல்லிக்கேணியில் அப்பா, அம்மா, மூன்று இளைய சகோதரர்கள் ஆகியோருடன் வசித்து வந்தார்.
1975-ல் திருவல்லிக்கேணியில் கதம்பம் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தபோது அவரது குடும்பத்தில் அந்த சோகம் ஆட்கொண்டது.
ஆம்! தெள்ளிய நீரோடை போல் அழகாகச் சென்று கொண்டிருந்த அந்தக் குடும்ப வாழ்வில் திடீரென ஒரு புயல் வீசியது. குடும்பத்தின் அமைதியை சூறையாடியது.
கனவிலும்கூட பிறருக்குக் கெடுதல் நினைக்காத கதம்பத்தின் தாயாருக்குத் திடீரென ஒரு வயிற்று வலி ஆரம்பமானது. வலி என்றால் அப்படி ஒரு வலி. தாங்கவே முடியாது.
சில வியாதிகள் ஏன் வந்தன என்கின்ற காரணத்தை எவரும் ஆராயக் கூடாது. வியாதிகளும், கஷ்டங்களும் ஒருவருக்கு வருகின்றன என்றால், அது முன்வினைப் பலன்கள் என்பதை உணர வேண்டும்.
போன பிறவியின் தொடர்ச்சியைத்தான் இந்தப் பிறவியில் அனுபவித்து வருகிறோம் என்பதைப் பலரும் உணர மறுக்கிறார்கள்.
சந்தோஷத்தை அனுபவிக்கும்போது, உற்சாகமாக அதைக் கடந்து விடுகிறோம். ஆனால், துக்கம் நம்மிடம் சேரும்போது சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.
அதுபோல் கதம்பத்தின் குடும்பத்தில் இருக்கிற அனைவரும் அப்படியே முடங்கிப் போனார்கள்.
காரணம், வந்த வயிற்று வலி சாதாரணமானது அல்ல. எத்தனையோ கை வைத்தியம் பார்த்தார்கள். அக்கம்பக்கத்தில் இருக்கிற மருத்துவர்களிடம் கூட்டிப் போனார்கள். கோயில் குளங்களுக்குப் போனார்கள். என்னென்னவோ பரிகாரங்கள் செய்தார்கள்.
ஆனால், கதம்பத்தின் தாயாருக்கு இருந்த வயிற்று வலி சற்றும் குறையவில்லை.
உறவினர்கள் சொன்னதன் பேரில் அப்போது சென்னையில் டாக்டர் லட்சுமிகுமாரி என்பவரிடம் அழைத்துப் போய்க் காட்டினார்கள்.
ஒரு சில பரிசோதனைகளைத் தாயாருக்குச் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார் லட்சுமிகுமாரி.
பரிசோதனைகள் முடிந்து, அதன் ரிசல்ட்டைப் பார்த்த டாக்டர் லட்சுமிகுமாரி, சொன்ன பதிலைக் கேட்டுக் குடும்பமே அதிர்ந்து போனது.
கதம்பத்தின் தாயார் வயிற்று வலிக்குக் காரணம் அவரது வயிற்றில் இருக்கும் ஒரு கட்டிதானாம். அதுவும் அந்தக் கட்டி கருப்பையில் வளர்கிறது. அதோடு புற்றுநோயும் அதில் பரவி இருப்பதாகத் தெரிவித்தார் டாக்டர் லட்சுமிகுமாரி.
உடலில் என்ன இருக்கிறதோ, அதைச் சொல்லத்தான் முடியும் மருத்துவர்களால். அதன் பின், இருக்கின்ற மருத்துவ வசதிகளைக் கொண்டு அந்தப் பிரச்னையை அகற்ற முற்படுவார்கள்.
சிலருக்கு சிகிச்சைகள் பலன் கொடுக்கும். எல்லோருக்கும் பலன் தரும் என்று எவராலும் உறுதி தர முடியாது.
“இப்ப என்ன செய்யணும் டாக்டர்?“ என்று தவித்துப் போய் டாக்டரிடம் கேட்ட கதம்பம் குடும்பத்தினருக்கு, லட்சுமிகுமாரி அளித்த பதில்: “ஒடனே சென்னையில இன்ன ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி, கட்டியை முழுவதுமாக அகற்ற ஆபரேஷன் பண்ணணும். நானே ஆபரேஷன் பண்ணித் தர்றேன். ஒடனே அட்மிட் பண்ணுங்க.“
சிக்கலான நேரத்தில் மருத்துவர்கள் ஆலோசனை சொன்ன பிறகு, பெரும்பாலும் யோசிக்க எவருக்குமே நேரம் இருக்காது. ‘ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டும்‘ என்று எல்லோருக்கும் தோன்றுமே தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்திக்க அவகாசம் இருக்காது.
அதன்படி டாக்டர் லட்சுமிகுமாரி சொன்ன சென்னை மருத்துவமனையில் தன் தாயாரைச் சேர்த்தார் கதம்பம்.
ஒட்டுமொத்த குடும்பமே ஆடிப் போனது. ‘கேன்சர் என்கிறார்களே… கருப்பையில் என்கிறார்களே… இதுவரை நான்கு உயிர்களை சுமந்த அந்தக் கருப்பைக்கு இப்போது ஏன் இப்படி ஒரு சோதனை?‘ என்று கதம்பம், அவரது தகப்பனார், மூன்று இளைய சகோதரர்கள் அனைவருமே கண்ணீர் விட்டனர்.
டாக்டர் லட்சுமிகுமாரி ஆறுதல் சொன்னார். “கவலைப்படாம கடவுளை வேண்டிக்குங்க… எல்லாம் சரியாயிடும்“ என்று சொல்லி விட்டு, கட்டியை அகற்ற வேண்டிய அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தார்.
அறுவை சிகிச்சைக்குக் குறித்த நாளும் வந்தது.
வேண்டாத தெய்வம் இல்லை. நினைக்காத சாமி இல்லை. எல்லாப் பிரார்த்தனைகளையும் முடித்து விட்டுக் கதம்பமும், அவரது தகப்பனாரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
ஆபரேஷன் நடக்கின்ற இடம் அருகே தென்பட்ட மர பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டனர் கதம்பமும், அவரது தந்தையாரும். ஆபரேஷன் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது வெளியே வருகிற ஊழியர்கள் ஆறுதலுடன் சொல்லிவிட்டுப் போனார்கள்.
‘கடவுளே… அம்மா நல்லபடியா பிழைக்கணும். எனக்கும் கீழே மூன்று தம்பிகள். ஒண்ணும் ஆகக் கூடாதம்மா… நீ எங்க கூடவே இருக்கணும்‘ என்று மனமுருகி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் கதம்பம்.
நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. நான்கு மணி நேரம், நாற்பது நிமிடங்களாக ஓடி விட்டது.
அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் லட்சுமிகுமாரி, நேராக கதம்பத்திடம் வந்தார்.
டாக்டரைப் பார்த்தவுடனே கைகளைக் கூப்பிக் கொண்டு, எழுந்து நின்றார்கள் கதம்பமும் அவரது தந்தையும்.
கதம்பத்தின் கைகளைப் பிடித்துக் கொண்ட டாக்டர் லட்சுமிகுமாரி சொன்னார்: “அறுவை சிகிச்சை பண்ணி அந்தக் கட்டியையும் புற்றுநோய் தடத்தையும் எடுத்துடலாம்னு போராடினோம். ஆனால், புற்றுநோய் உடல் முழுக்கப் பரவி இருக்கிறது. அதில், கை வைத்தால் பெரும் ஆபத்தாகப் போய் விடும் என்பதை உணர்ந்தோம். தவிர, புற்றுநோய்த் தடங்களை முழுக்க அகற்றுவது என்பது உங்க அம்மாவின் உடல் நிலையைப் பொறுத்தவரை இயலாத காரியமும்கூட. எனவே, எப்படி வயிற்றை ‘ஓப்பன்‘ செய்தோமோ, அதுபோல் தையல் போட்டு மூடி விட்டோம்“ என்ற டாக்டர், ஓரிரு நிமிடங்கள் கதம்பத்தையும் அவரது தந்தையாரையும் உற்று நோக்கினார்.
டாக்டர் முகத்தில் தென்பட்ட இந்தத் திடீர் அமைதி, கதம்பத்திடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தன் தாயின் வயிற்றில் புற்றுநோய்த் தடயங்கள் பல இடங்களில் பரவி இருப்பதைக் கேட்ட கதம்பம், திக்பிரமை பிடித்தது போல் ஆனார்.
கதம்பமும் அவரது தந்தையாரும் ஒரு சில நிமிடங்களுக்கு எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு வார்த்தைகள் நாவிலிருந்து எழவில்லை.
இவர்களின் இந்த நீண்ட அமைதியைக் கலைக்கும் விதமாகப் பேச ஆரம்பித்தார் டாக்டர்.
“கதம்பம்… உன்னோட ஃபேமிலி நிலைமையைக் கேட்டா என் மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, என்ன உண்மையோ அதை அப்படியே சொல்றது டாக்டரான என்னோட கடமை. மனசைத் திடப்படுத்திட்டு நான் சொல்றதைக் கண் கலங்காம கேளு“ என்கிற ஒரு பீடிகையுடன் மெள்ளப் பேசத் துவங்கினார் டாக்டர் லட்சுமிகுமாரி.
“உன் அம்மா ரொம்ப ரொம்ப மோசமான கண்டிஷன்ல இருக்காங்க. இதுவரைக்கும் உன்னோட அம்மாவுக்கு நான் குடுத்த சிகிச்சை முறைகள் எல்லாவற்றையும் பத்திச் சொல்லி இருக்கேன். அதுபோல இனிமேல் நான் சொல்லப் போகும் இந்தச் செய்தியையும் நீ அமைதியா கேக்கணும். இதனோட சீரியஸைத் தாங்கிக் கொள்ள வேண்டும் கதம்பம்.“
சொல்லி முடித்த டாக்டர் லட்சுமிகுமாரியின் இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்ட கதம்பம், கண்ணீருடன் அவரை ஏறிட்டார். “டாக்டர்… நீங்க சொல்லப் போற எந்த ஒரு செய்தியும் எங்களுக்கு ஆறுதலா இருக்க வேண்டுமே தவிர, அதிர்ச்சி தருவதாக இருக்கக் கூடாது. என்னோட மூன்று தம்பிகளையும், அப்பாவையும் நினைச்சுப் பார்த்து எதா இருந்தாலும் சொல்லுங்க“ என்று டாக்டரிடம் இருந்து கைகளை எடுத்து இரு கரம் கூப்பினார் கதம்பம்.
“கதம்பம்… சுத்தி வளைச்சு நான் பேச விரும்பலை. நேரடியா விஷயத்தைச் சொல்லிடுறேன். நாளை காலை சுமார் பத்தரை மணி வாக்கில் உனது தாயார் இறந்து விடுவார். இதுதான் அவரது தற்போதைய நிலைமை. தகவல் தெரிவிக்க வேண்டிய உறவினர்களுக்கு உடனே சொல்லி விடு. ஒருவேளை சென்னையில் இருக்கக் கூடிய உனது சொந்தக்காரர்கள் உடனே வந்து பார்த்து விட்டுச் செல்லலாம்“ என்று இறுக்கமான குரலில் சொல்லி விட்டு, அங்கிருந்து அகன்றார் டாக்டர் லட்சுமிகுமாரி.
அதுவரை அழுதழுது தேம்பிக் கொண்டிருந்த கதம்பத்தின் முகம் இயல்பான நிலைக்கு மாறியது. டாக்டர் லட்சுமிகுமாரி செல்கின்ற திசையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, தன் தந்தையாரை ஏறிட்டார்.
“என்னப்பா, டாக்டர் இப்படிச் சொல்லிட்டுப் போறாங்க? சொந்தக்காரங்களுக்குத் தகவல் குடுக்கணுமா?“
“ஒண்ணும் வேண்டாம்.“
“அப்படீன்னா இப்ப என்ன பண்றது?“ – கதம்பம்.
கதம்பத்தின் தந்தையார் தன் மேல்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு, “நான் காஞ்சிபுரம் போய் மகா பெரியவாளைத் தரிசனம் பண்ணப் போறேன். இப்ப நமக்கு ஆறுதலையும், நிம்மதியையும் தரக் கூடியவர் அவர்தான். அந்தத் தெய்வத்தைத் தரிசிக்கப் போறேன். அவரோட அருள் கிடைச்சா உன்னோட அம்மா கண் திறந்து பார்ப்பா. இன்னும் கொஞ்ச நாள் இருப்பா. அந்த நம்பிக்கை எனக்கு திடமா இருக்கு“ என்று குரலில் பிசிறு தட்டாமல் பேசினார்.
அந்த சூழ்நிலையிலும் கதம்பத்தின் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது. “ஆமாம்ப்பா… நீங்க சொல்றது வாஸ்தவம்தான். நானும் உங்ககூட காஞ்சிபுரம் வர்றேம்ப்பா…“ என்றார். இதை அடுத்து, கதம்பத்தையும் அழைத்துக் கொண்டு தந்தையார் வெளியே வந்தார்.
காஞ்சிக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்க, இருவரும் பிராட்வே பேருந்து நிலையம் சென்றார்கள்.
அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் கதம்பமும் தகப்பனாரும் காஞ்சிபுரத்தில் இருந்தனர்.
ஆனால், மகா பெரியவா அப்போது தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருப்பதாக ஸ்ரீமடத்தில் தெரிவித்தார்கள். காஞ்சியில் இருந்து தேனம்பாக்கம் பயணமானார்கள்.
தேனம்பாக்கத்தில் கிணற்றுக்கு அருகே சர்வேஸ்வர சொரூபமாக வீற்றிருந்தார் மகா பெரியவா.
ஒரு சில பக்தர்கள் மட்டுமே அன்றைக்கு மகா பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் காணப்பட்டனர்.
வேத பண்டிதர்கள் ஒரு மூலையில் மிகவும் சன்னமான குரலில் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தனர்.
மகா பெரியவாளுக்கு அருகில் இருந்த தொண்டர்கள், மகானது பணிகளுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
கதம்பமும் அவரது தகப்பனாரும் திருச்சந்நிதிக்குள் மெள்ள நடந்து மகா பெரியவா அருகில் சென்றனர். ‘யார்? என்ன?‘ என்கிற விவரம் கேட்ட தொண்டர்களிடம் விவரம் சொன்னார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஒரு தொண்டர், மகா பெரியவாளை சற்றே நெருங்கி, இவர்கள் சொன்னதை அப்படியே ஒப்புவித்தார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சங்கர சொரூபம், கதம்பத்தையும் அவரது தந்தையாரையும் அண்ணாந்து பார்த்தது.
துக்கம் தொண்டையை அடைக்க – தனக்கு வருகின்ற அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டு இரு கைகளையும் கூப்பியபடி மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் கதம்பம். கலங்குகின்ற தன் கண்களை மேல்துண்டால் துடைத்தபடி பரப்பிரம்மம் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தார் அவரது தந்தையார்.
தனக்கு முன்னால் காணப்பட்ட மூங்கில் தட்டில் இருந்து ஒரு ஆப்பிளைத் தானே கையில் எடுத்தார் மகா பெரியவா. ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானம் செய்தார். பிறகு, கண்களைத் திறந்து குங்குமத்தை அள்ளி, அந்த ஆப்பிள் மீது போட்டார். அப்படியே கதம்பத்தின் தகப்பனாரிடம் கொடுத்து விட்டு, “இந்த ஆப்பிளை உன்னோட ஆத்துக்காரிக்கு (மனைவி) சாப்பிடக் குடு. நாளைக்குக் கார்த்தால பத்தரை மணிக்குள்ள அவ சாப்பிட்டுடணும்“ என்றார் மகா பெரியவா.
‘பத்தரை மணி‘ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் கதம்பத்துக்கும் அவரது தகப்பனாருக்கும் சுருக்கென்றிருந்தது.
டாக்டர் லட்சுமிகுமாரி சொன்னதும் இதே நேரம். ‘நாளை காலை பத்தரை மணி சுமாருக்கு உன் அம்மா இறந்து விடுவார்.‘
மகா பெரியவாளும் இதே நேரத்தையே சொல்கிறார்.
பத்தரை மணிக்கு இறந்து விடுவார் என்பது மருத்துவக் குறிப்பு. ஆனால், அதே பத்தரை மணிக்குள் இந்த ஆப்பிளைக் கொடுத்துச் சாப்பிடுமாறு தெய்வத்திடம் இருந்து ஓர் உத்தரவு.
மகா பெரியவா வழங்கிய இந்த ஆசியைக் கண் குளிர நேருக்கு நேராகப் பார்த்ததும், கதம்பமும் அவரது தந்தையாரும் மகா பெரியவாளுக்கு மீண்டும் நமஸ்காரம் செய்தனர். மகானிடம் இருந்து உத்தரவு பெற்று, காஞ்சியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டனர்.
சென்னையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.
மறுநாள் காலை பத்தரை மணிக்குள்தானே இந்த ஆப்பிள் பிரசாதத்தைக் கொடுக்குமாறு மகா பெரியவா சொல்லி இருக்கிறார்! நாளை காலை நீராடி விட்டு, வீட்டில் மகா பெரியவாளையும் பிரார்த்தித்து விட்டு, அதன் பின் மருத்துவமனை வந்து பிரசாதத்தைத் தாயாருக்குக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தார் கதம்பம்.
டாக்டர் லட்சுமிகுமாரி கெடு விதித்த தினத்தின் பொழுது விடிந்தது.
‘இன்றைய தினம் டாக்டர் சொன்னது போல் அமையுமா? அல்லது மகா பெரியவா தந்த பிரசாதம் அற்புதத்தை ஏற்படுத்துமா?‘ இந்தக் கேள்விகளுடனே காலையில் எல்லா வேலைகளையும் வீட்டில் முடித்து விட்டுத் தந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு கதம்பம் புறப்பட்டபோது மணி சுமார் ஒன்பது இருக்கும்.
ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தவுடன் அம்மாவுக்கு ஆப்பிளைக் கொடுக்கலாம் என்று கதம்பம் சிந்தித்தபோதுதான் அந்த விஷயம் நினைவுக்கு வந்தது.
புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானித்தபோது அதற்கு முன்னதாக – தாயாரின் பற்கள் அனைத்தும் எடுக்கப்பட்டிருந்தன. எனவே, மகா பெரியவா பிரசாதமாகத் தந்த ஆப்பிளைத் துண்டுகளாக்கி, அதை அப்படியே கடித்துச் சாப்பிடும் நிலையில் தாயார் இல்லை.
அதனால், ஆப்பிளின் தோலை நீக்கி, அதை தண்ணீரில் கொதிக்க வைத்தார் கதம்பம். ஆப்பிள் நன்றாக வெந்ததும், அதைக் கையால் மாவு போல் பிசைந்தார். இந்த ஆப்பிள் கலவையில் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து ஜூஸ் ஆக்கினார். அதை ஒரு டம்ளரில் ஊற்றித் தாயாருக்குக் குடிக்கக் கொடுத்தார் கதம்பம். மகா பெரியவாளைப் பிரார்த்தித்துக் கொண்டே தாயாரைக் குடிக்க வைத்தார். சிரமப்பட்டுத் தாயாரும் குடித்தார்.
காலை மணி பத்தரையை நெருங்கியது.
டாக்டர் லட்சுமிகுமாரி வந்தார்.
கதம்பத்தின் தாயாரை சோதித்தார்.
அருகே கதம்பமும், அவரது தாயாரும் சோகமே உருவாகக் காணப்பட்டனர்.
வயிற்றைத் தொட்டு, கைகளைப் பிடித்துப் பார்த்து என எல்லா விதமான பரிசோதனைகளையும் சுமார் கால் மணி நேரத்துக்குச் செய்து முடித்த டாக்டர் லட்சுமிகுமாரியின் முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம்.
கதம்பத்தை உற்று நோக்கினார். அவரது தந்தையாரையும் பார்த்தார்.
ஆனால், இவர்கள் இருவரும் என்ன ஏதென்று புரியாமல் டாக்டரையே ஏறிட்டனர்.
லட்சுமிகுமாரி சொன்னார்: “கதம்பம்… உன் அம்மா பிழைத்துக் கொண்டு விட்டார்.“
அவ்வளவுதான்… இந்த வார்த்தைகளைக் கேட்டதும், கதம்பமும் அவரது தகப்பனாரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டனர்.
பிறகு, டாக்டர் லட்சுமிகுமாரியைப் பார்த்துக் கதம்பம் கேட்டார்: “டாக்டர்… உண்மையாத்தான் சொல்றீங்களா? என் அம்மா அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டாரா? தாங்கள் விதித்த கெடுவைக் கடந்து பிழைத்து விட்டாரா?“
கதம்பத்தின் கையைப் பிடித்துக் கொண்டு டாக்டர் சொன்னார்: “ஆமாம்மா… உன் அம்மாவுக்கு இனி ஆபத்து இல்லை. நன்றாக இருக்கிறார்.“
அடுத்து நடந்த விஷயங்கள் அனைத்தும் ஆச்சரியங்களே!
டாக்டர் லட்சுமிகுமாரி சொன்னார்: “இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. உனது தாயார் மிக மோசமான நிலையில் இருந்தது உண்மை. அதனால்தான், உனது உறவினர்களிடம் விஷயத்தைத் தெரிவிக்குமாறு நாங்கள் சொன்னோம். ஆனால், எல்லாவற்றையும் மீறி உன் அம்மா பிழைத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியம். இடையில் ஏதோ ஒரு பெரிய அற்புதம் நடந்திருக்கிறது. ஆனால், அந்த அற்புதம் என்னவென்றுதான் எங்களுக்குப் புரியவில்லை….“
– பிரமிப்புடன் டாக்டர் இப்படிச் சொல்லி முடித்ததும், கதம்பத்துக்கும் அவரது தகப்பனாருக்கும் அந்த அற்புதம் என்ன என்று புரிந்து விட்டது.
தன் திருக்கரத்தால் மகா பெரியவா கொடுத்த ஒற்றை ஆப்பிளே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்பது கதம்பத்துக்கும் அவரது தகப்பனாருக்கும் மட்டும்தானே தெரியும்! அமைதியாக நடந்த இந்த அதிசயம் வேறு எவருக்கும் தெரியாதே!
‘சரி, இறை நம்பிக்கையுள்ள இந்த டாக்டரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி விடுவோம்‘ என்று தீர்மானித்த கதம்பம், குழப்பமான ஒரு சூழ்நிலையில் தானும் அப்பாவும் காஞ்சிக்குச் சென்று நடமாடும் தெய்வமான மகா பெரியவாளைத் தரிசித்ததையும், அவரது அறிவுரைப்படி ஆப்பிள் பிரசாதத்தை ஜூஸ் ஆக்கி அம்மாவுக்குச் சாப்பிடக் கொடுத்ததையும் விரிவாகச் சொல்லி முடித்தார் கதம்பம்.
இரு கைகளையும் ஆகாயத்தைப் பார்த்துக் கூப்பிய டாக்டர் லட்சுமிகுமாரி, “எல்லாம் அவரது அருளே… இனி உன் அம்மாவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது“ என்று சொல்லி விட்டுத் தன் அறையை நோக்கி நகர்ந்தார்.
இதோடு, இந்த அற்புதம் முடியவில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் கதம்பத்தின் தாயார் சுய நினைவுக்கு வந்து மகளிடம் ஆச்சரியமாகச் சொன்னார்: “நான் ஆபரேஷனுக்கு ஆஸ்பத்திரில இருந்தப்ப மகா பெரியவா என்கூடவே இருந்தாரு, தெரியுமா?“
தாயாரை ஆச்சரியமாகப் பார்த்தார் கதம்பம். “என்னம்மா சொல்றே?“
“ஆமா கதம்பம். எனக்கு ஆபரேஷன் நடக்கறப்ப என் கனவில் (மயக்க நிலையில் இருந்தபோது) மகா பெரியவா வந்தார். ஆபரேஷன் நடக்கறபோது என் நெஞ்சுக்கு மேல கால்களைக் குறுக்கா போட்டுண்டு மார்பு மேல மகா பெரியவா நின்னுண்டிருந்தார். ‘ஒனக்கு இப்ப ஆபரேஷன் நடக்கப் போறது… நன்னா முடிவு பண்ணிச் சொல்லு – ஒனக்கு நான் வேணுமா? ஆபரேஷன் வேணுமா?‘ அப்படின்னு கேட்டார்.
எனக்கு அழுகையே வந்துடுத்து. ‘பெரியவா… எனக்கு நீங்கதான் வேணும்‘னு அவரோட கால்களைக் கெட்டியா பிடிச்சுண்டு கதற ஆரம்பிச்சுட்டேன்.
பெரியவா என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘கவலைப்படாத… ஒனக்கு ஆபரேஷன் முடியற வரை நானும் கூட இருப்பேன். அதுக்குப் பிறகும் ஒன்கூட இருப்பேன். ஆனா, இந்த ஆபரேஷன்ங்கறது பலரது திருப்திக்காக மட்டும்தான். இதனால ஒனக்கு ஒரு பலனும் விளைஞ்சுடாது‘னு சொன்னார்.
நான் இன்னிக்குப் பொழைச்சு ஒங்ககூட இருக்கேன்னா, அது மகா பெரியவாளோட அனுக்ரஹம்“ என்று கண்ணீர் விட்டார் கதம்பத்தின் தாயார்.
தாயாரைக் கட்டிக் கொண்டு ஓவென்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் கதம்பம். “அம்மா… நம்மளோட பக்தி வீண் போகலை. பெரியவா கூடவே இருந்து காப்பாத்தி இருக்கார். ஒனக்கு இனிமே ஒரு கவலையும் இல்லம்மா. தைரியமா இரும்மா.“
அதன் பிறகு இரண்டு வருடங்கள் வரை அதாவது 1977 வரை கதம்பத்தின் தாயாருக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ரொம்பவே சவுகரியமாக நடமாடிக் கொண்டிருந்தார். என்ன ஒன்று, மகள் கதம்பத்துக்கு ஒரு திருமணத்தை செய்து பார்த்து விட வேண்டும் என்று ஆசை!
ஆனால், அதே 1977-ல் கதம்பத்தின் தாயாருக்கு மீண்டும் சிக்கல் ஆரம்பித்தது.
உடனே கதம்பமும் அவரது தந்தையாரும் ஆபத்பாந்தவனான நடமாடும் தெய்வத்தைத் தேடிக் காஞ்சிக்கு ஓடினார்கள்.
இருவரும் மகானுக்கு நமஸ்காரம் செய்தார்கள். பின், கைகளைக் கூப்பியபடி மகா பெரியவாளைப் பார்த்துக் கதம்பம் சொன்னார்: “ரெண்டு வருஷமா எங்க அம்மா எழுந்து நடமாடுறா அப்படீன்னா அதுக்கு நீங்கதான் காரணம் பெரியவா. ஆஸ்பத்திரில ‘எல்லாருக்கும் தகவல் சொல்லிடுங்கோ‘னு சொன்னப்ப நீங்கதான் காப்பாத்தினேள். இப்ப அம்மாவுக்கு மீண்டும் கஷ்ட காலம் வந்துடுத்து. எங்களுக்கு நம்பிக்கை கொறையறது. ஒங்க அனுக்ரஹம் வேணும்.“
அவர்களை ஆசிர்வதித்த மகா பெரியவா, “ரெண்டு வருஷமா ஒங்க அம்மாவுக்கு நான்தான் உயிர் கொடுத்தேன்னு சொல்றேள்… அப்படி இல்லே. ஒங்க அம்மாவுக்கு வந்த ஆபத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட்டேன். காமாட்சியோட அருளாசியால ரெண்டு வருஷம் நன்னா இருந்தா“ என்று அடக்கமாகப் பேசியது, கதம்பத்தின் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.
‘நான்தான் அதைச் செய்தேன்… நான்தான் இதைச் செய்தேன்‘ என்று பலரும் மார் தட்டி வரும் இந்தக் காலத்தில், இறைவனடி சேர இருந்த ஒரு ஜீவனைக் காப்பாற்றிய விஷயத்துக்கு காமாட்சி அன்னையே காரணம் என்று கையை நீட்டுகிறது இந்த பரப்பிரம்மம்!
“இல்லை பெரியவா… உங்களோட கண்ணசைவு இல்லாம காமாட்சி எப்படி எங்களுக்குக் கருணை காட்டுவா? எங்களுக்குக் காமாட்சியும் நீங்கதான்… ஏகாம்பரேஸ்வரரும் நீங்கதான்“ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்தார் கதம்பம்.
அதன் பின் மகா பெரியவா எதுவும் பேசவில்லை.
‘ஒன்றுக்குமே உதவாமல் காயலான் கடைக்குப் போக வேண்டிய ஒரு வண்டியை ஏதோ சர்வீஸ் செய்து இரண்டு வருடம் ஓட வைத்திருக்கிறார்.‘
உலகின் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவராக கதம்பமும் அவரது தந்தையாரும் எழுந்தனர். இரண்டு வருடம் அம்மாவுக்கு ஒரு நீட்டிப்பை மகா பெரியவா வழங்கினார். அதுவே போதும் என்கிற திருப்தி இருவருக்கும்.
கதம்பத்தின் தாயாருக்கு ஓர் ஆசை இருந்தது. அதாவது, தான் கண்களை மூடுவதற்குள் தன் ஒரே மகள் கதம்பத்துக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். அதே திருமணத்தின்போது தன் மகன்களுக்கும் உபநயனம் செய்து வைத்து விட வேண்டும். இதுதான் அந்தத் தாயின் ஆசை.
தன் மனைவியின் இந்த ஆசை பற்றி மகா பெரியவாளிடமே சொல்லி, அவரது உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கதம்பத்தின் தந்தையார்.
மகா பெரியவா என்ன சொன்னார் தெரியுமா? “ஒன்னோட ஆத்துக்காரிக்கு (கதம்பத்தின் தாயார்) என்ன ஆசை தெரியுமா? தன் உயிர் போறதுக்குள்ளே ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசைப்படறா… அதை விடக் குழந்தைகளுக்கு உபநயனம் பண்றதும் முக்கியம். எனவே, நீ என்ன பண்றே… குழந்தைகளுக்குப் பூணூலைப் போட்டுடு. ஒன் ஆத்துக்காரி இந்த வைபவத்துல கலந்துப்பா. அதன் பிறகு ஒன் மகளோட கல்யாணத்தை நானே நடத்தி வைக்கறேன்“ என்று சொல்ல… கதம்பத்தின் தந்தையாருக்கு இதைவிட என்ன சந்தோஷம் இருக்க முடியும்?!
மகா பெரியவா சொல்வதைப் பார்த்துக் கதம்பமும், அவரது தந்தையாரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது, திருமணம் ஆகின்ற வேளை இன்னமும் வரவில்லை. எனவே, மகன்களுக்குப் பூணூல் வைபவத்தையாவது உடனே நடத்து. அந்தத் தாயார் கண்டு மகிழட்டும்!
எல்லாவற்றுக்கும் தெளிவான பதில் கிடைத்த திருப்தியில் கதம்பமும் அவரது தந்தையாரும் மகா பெரியவா திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்து விழுந்து நமஸ்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு எழுந்தவர்கள், “பெரியவா… இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்துக்கு நாங்க எத்தனை கொடுத்து வெச்சிருக்கணும்… தெய்வமே“ என்று கைகளைக் கூப்பித் தொண்டை கமறப் பேச… இருவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பினார் பெரியவா.
சென்னை திருவல்லிக்கேணிக்குத் திரும்பினர். மகா பெரியவா உத்தரவுப்படி பூணூல் முதலில் நடந்து முடிந்தது.
எல்லாம் மகா பெரியவா திருவாக்குப்படியே நடந்தது.
மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது ‘இவரே பரப்பிரம்மம்… இவர்தான் சகலமும்‘ என்று உணர்ந்து வந்தவர்களுக்கு எல்லாமும் அப்படியே பலித்தது.
ஒருவருடைய மனதில் எந்த அளவுக்குப் பக்தி இருக்கிறதோ, அதற்கேற்றாற் போல்தான் தெய்வங்களும் அருள் புரியும்.
பக்தி சிரத்தையே இல்லாமல், ஒரு ஆலயத்துக்கோ, மகானின் திருச்சந்நிதிக்கோ போவது வீண். நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தத் தெய்வத்தை – இந்த மகானை ஆராதித்தால், இவர் நம்மைக் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை ஆழ் மனதில் பரிபூரணமாக இருக்க வேண்டும். கடுகளவுகூட சந்தேகம் வந்து விடக் கூடாது.
ஆனால், இன்றைக்கு இந்தக் கலிகாலத்தில் பூரண பக்தியை பெரும்பாலானவர்களிடம் காண முடிவதில்லை. அதனால்தான், சம்பந்தப்பட்டவரது பிரார்த்தனைகள் பலிக்க மாட்டேன் என்கிறது.
பிரார்த்தனையை மட்டும் வைத்தால் போதாது. உருக வேண்டும்… அந்த பக்தியில் கரைய வேண்டும். ‘உன்னைத் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?‘ என்று திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட அன்பர்களுக்கு மகா பெரியவா அருளி வருகிறார் என்பது, அந்த மகானது பிருந்தாவனம் (சமாதி) அமைந்திருக்கிற காஞ்சியில் இன்றைக்கும் நாம் காணலாம்.
இந்தக் கலி காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய பொக்கிஷம் மகா பெரியவா. அவரை வணங்கி, அவரது அருளைப் பெற்றால், இந்தப் பிறவிக்கு நல்லது. பாவங்கள் கரைந்து, புண்ணியம் பெறுவோம்.வ்