தேடி வந்த தெய்வம்

பிரார்த்தனை, வழிபாடு போன்றவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்த ஒரு தடையும் எவருக்கும் இல்லை. ஆனால், எந்த தெய்வத்துக்கென்று நேர்ந்து கொண்டு இவற்றைச் செய்கிறோமோ, அந்த தெய்வம் இந்த வழிபாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் முக்கியம்.

அப்படி நாம் செய்கிற வழிபாட்டை சம்பந்தப்பட்ட தெய்வம் மனமுவந்து ஏற்றுக் கொண்டு விட்டால், வழிபாட்டின் பரிபூரண பலனைப் பெற்றவர்கள் ஆகி விடுவோம்.

கடமைக்கென்று செய்யப்படும் பூஜைக்கும், பிறர் வற்புறுத்துகிறார்களே என்கிற கட்டாயத்தின் பேரில் செய்கிற பூஜைக்கும் பலன் கிடைக்காது.

இறை வழிபாட்டுக்கு உள்ளார்ந்த ஈடுபாடு முக்கியம். பக்தியின்போது அத்தகைய அர்ப்பணிப்பு இருந்தால்தான், அதற்கேற்றாற் போன்ற நல்விளைவுகளும் சம்பந்தப்பட்டவர் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும்.

மகா பெரியவா மீது நாம் கொண்டிருக்கக் கூடிய பக்தியும் இப்படித்தான் இருக்க வேண்டும். அவரது திருப்பெயரைச் சொல்வதற்கும், அவரை வழிபடுவதற்கும் முந்தைய பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அந்த மகான் விருப்பப்பட்டால்தான் அவர் மீது நமக்கு பக்தி வரும். அதாவது, அவரது கடைக்கண் பார்வை நம் மேல் திரும்புகிற விதத்தில் ஆத்மார்த்தமான பக்தியும் சிந்தனையும் நமக்கு இருக்க வேண்டும்.

மகா பெரியவாளை வணங்கினால் இது கிடைக்கும் என்கிற பக்தி கூடாது. ‘இது கிடைக்க வேண்டும் என்று இருந்தால் மகா பெரியவா நிச்சயம் அருள்வார் என்ற வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம்.

சென்னை மாநகரத்தில் குமரக் கடவுளான முருகப் பெருமான் பெயரில் அமைந்த ஒரு சத் சங்கத்தில் சுமதி என்ற பெண்மணி இருந்தார்.

சத் சங்க நடவடிக்கைகளில் தன்னைப் பெருமளவு ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். முருகப் பெருமானுக்கு ஒரு விசேஷம் என்றால், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வார். அந்த அளவுக்குப் பக்தி.

இதைத் தாண்டி மகா பெரியவா என்றால், அளவுக்கு அதிகமான பக்தி. அவர் பெயரை எங்கு கேட்டாலும், அவரது திருவுருவத்தை எங்கு பார்த்தாலும் பரவசமாக உணர்வார்.

சுமதியின் இல்லத்தில் எதுவாக இருந்தாலும், மகா பெரியவாளை வணங்கிவிட்டுத்தான் அந்தக் கார்யத்தை ஆரம்பிப்பார்.

சுமதியின் மகளுக்குத் திருமணம் நிச்சயமானது.

ஒரு சுப முகூர்த்த தினத்தில் திருமணமும் நடந்தது. அந்தத் திருமணத்துக்கு எண்ணற்ற அன்பர்கள் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்த வந்திருந்த அன்பர் ஒருவர், வாழ்த்தி விட்டு, சுமதியிடம் காஞ்சி மகா பெரியவாளின் அற்புதமான படம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனார்.

ஆகாதனக்கு மிகவும் இஷ்டமான மகா பெரியவாளே தன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறாரே என்று ஒரு கணம் பூரித்துப் போன சுமதி, அந்தப் படத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். ‘மகா பெரியவாமகா பெரியவா என்று கண்கள் பனிக்க மனசுக்குள் பிரார்த்தித்தார்.

பிறகுதான் சுமதிக்குப் புரிந்ததுஇந்த மகா பெரியவா திருவுருவப் படத்தைக் கொடுத்துச் சென்ற அன்பர், மணமகன் வீட்டாருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பது. அப்படி என்றால், இந்தப் படம் மணமகன் வீட்டாரிடம் அல்லவா சேர்ப்பிக்க வேண்டும் என்று அதை அப்படியே கொண்டு போய் மாப்பிள்ளை வீட்டாரிடம் அடுத்த கணமே கொடுத்து விட்டார்.

அவர்களும் ரொம்ப மரியாதையுடன் இந்தப் படத்தை வாங்கிக் கொண்டார்கள். தங்கள் உறவினர் ஒருவரிடம் இந்தப் படத்தைக் கொடுத்து, உள்ளே கொண்டு போய் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார்கள்.

சுமதியின் கையில் வந்து சேர்ந்த மகா பெரியவா, சுமதியின் சம்பந்தி கையில் போய்ச் சேர்ந்து விட்டார்.

திருமணம் நல்ல விதமாக நடந்து முடிந்தது.

சுமார் இரண்டு வருட காலம், கடகடவென ஓடியே போய் விட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில்மகள் திருமணத்தின்போது தன் கைக்கு வந்து சேர்ந்த மகா பெரியவா படத்தைப் பற்றியும், பின்னர் அதை மணமகன் வீட்டாரிடம் கொண்டு போய்க் கொடுத்ததையும் அநேகமாக மறந்தே விட்டிருந்தார் சுமதி.

அன்றைய தினம் இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார் சுமதி.

பெர்த்தில் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது சுமதிக்கு ஒரு கனவு. மகா பெரியவா கனவில் வந்தார்.

கனவில் வந்தவர் சுமதியிடம் என்ன சொன்னார், தெரியுமா?

நான் உன்னோட வீட்டுக்கு வரணும்னு விருப்பப்பட்டு உன் பொண்ணு கல்யாணத்தன்னிக்கு உன் கையில் வந்து சேர்ந்தேன். ஆனா, நீ என்ன செய்தாய்? என்னைக் கொண்டு போய் மாப்பிள்ளை வீட்டார்கிட்ட குடுத்துட்டே. ஏன் அன்றைய தினம் அப்படி செய்தாய்? சரி, இது பழைய சமாசாரம். நடந்து ரொம்ப காலமாச்சு. அப்படியே போகட்டும். இப்ப நீ என்ன பண்றே, தெரியுமா? உன் மாப்பிள்ளை வீட்டுல குடுத்த என்னோட படத்தை வாங்கிட்டு வந்து உன் வீட்டுல வெச்சுக்கோ என்றார்.

இந்தக் கனவு வந்து பூர்த்தி ஆன மறுகணம் தான் படுத்திருந்த ரயில்பெர்த்தில் இருந்து எழுந்து உட்கார்ந்தார் சுமதி. இது கனவா, நனவா என்பதை உணர்வதற்கே ஒரு சில விநாடிகள் பிடித்தன சுமதிக்கு.

கனவுதான் என்று தெளிந்தவர், இருந்த இடத்தில் இருந்தபடியே மகா பெரியவாளை நினைத்துக் கைகளைக் கூப்பினார். அவரது கண்கள் பனித்தன.

தொண்டை வறண்டு போனது போல் இருந்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்தார். ‘மடக் மடக்கெனக் குடித்தார்.

கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. அன்னிக்கு என் கைக்கு வந்து சேர்ந்த படத்தைப் பத்தி இப்ப பெரியவா ஆர்வமா விசாரிக்கறாளே என்று ஆச்சரியப்பட்ட சுமதிக்கு அதன் பின் உறக்கம் வரவில்லை.

திருமணம் நடந்த தினத்தின்போது மகா பெரியவா படம் தன் கைக்கு வந்து சேர்ந்த காட்சிகளே சுமதியின் மனக்கண் முன் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன.

சரி, மகா பெரியவா கனவுல வந்து சொல்லிட்டார். ஆனா, இதை இப்ப போய் மாப்பிள்ளை வீட்டுல கேக்கறது நல்லா இருக்குமா? ‘அவங்களுக்குத் தெரிஞ்சவர் கொடுத்த படம்னு கல்யாணம் நடந்த அன்னிக்கே இந்தப் படத்தை அவங்ககிட்ட குடுத்தாச்சு. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கழிச்சு, ‘அன்னிக்கு நான் குடுத்த அந்தப் படத்தை என்கிட்ட குடுங்கனு எந்த முகத்தை வெச்சிட்டு எப்படிக் கேக்கறது? அது நல்லா இருக்குமா? இதை ஏதாவது தப்பா நினைச்சிட்டாங்கன்னா…. என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார் சுமதி.

ஆனால், சுமதியின் இந்தக் குழப்பத்துக்கு மகா பெரியவாளே சிரமம் இல்லாமல் ஒரு தீர்வும் சொல்லி விட்டார்.

என்ன தீர்வு தெரியுமா?

அடுத்த நாள் இரவு மாப்பிள்ளை வீட்டாரின் கனவில் மகா பெரியவா தோன்றினார். ‘இத்தனை காலம் வரை நான் உங்கள் வீட்டில் இருந்தேன். இரண்டு வருட சாதுர்மாஸ்ய விரதத்துக்குக்கூட உங்கள் வீட்டில் இருந்து விட்டேன். என்னை உங்களிடம் யார் கொடுத்தாரோ (சுமதி), அவரிடமே என்னை சேர்ப்பித்து விடுங்கள். இனிமேல் நான் அங்கு இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான்சுமதியின் சம்பந்தி வீட்டினர் கனவு கண்டு கண் விழித்தனர். மகா பெரியவாளை மானசீகமாக வணங்கி, அந்த மகானின் திருவுருவப் படம் இருக்கும் பூஜையறைக்குச் சென்றனர். அங்கே அவருக்கு நமஸ்காரம் செய்து விட்டு, “அப்படியே ஆகட்டும் பெரியவாநீங்க உத்தரவு குடுத்தபடி உங்களை அங்கேயே பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி வணங்கினார்கள்.

அடுத்த நாள், மகா பெரியவா திருவுருவப் படத்தை எடுத்துக் கொண்டு சம்பந்தியான சுமதியின் வீட்டுக்குச் சென்றனர்.

திடீரென தன் இல்லம் தேடி வந்த சம்பந்தி குடும்பத்தினரை வரவேற்று அமர வைத்தார் சுமதி. ‘எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடுதிப்பென நம் வீடு தேடி வந்திருக்கிறார்களேகனவில் மகா பெரியவா சொன்னபடி, அவரது திருவுருவப் படத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுமாறு கேட்டு விடலாமா? என்று ஒரு கணம் யோசித்தார் சுமதி. பிறகு, ‘வீடு தேடி வந்தவர்களிடம் இப்படிக் கேட்கலாமாஅவர்கள் என்ன காரணத்துக்காக நம் வீடு தேடி வந்திருக்கிறார்களோநாமே அவர்களது வீடு போய்க் கேட்பதுதானே முறையாக இருக்கும் என்று தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டார்.

சம்பந்தி வீட்டுக்காரர்களுக்குக் குடிப்பதற்கு நீர் எடுத்து வருவதற்காக உள்ளே சென்று திரும்பிய சுமதிக்கு ஏகத்துக்கும் ஆச்சரியம்.

சம்பந்தி குடும்பத்தினர் மகா பெரியவாளின் அந்தத் திருவுருவப் படத்தைத் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். அந்தப் படத்தில் இருக்கிற மகா பெரியவாளே, சுமதியைப் பார்த்து, ‘என்ன, நானே உன் வீட்டுக்கு வந்துட்டேன் பார்த்தியா என்று சொல்வது போல் பட்டது.

சுமதிக்கு ஆச்சரியமும் பிரமிப்பும் தாங்க முடியவில்லை. அவரது கண்களில் இருந்து நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

அதன் பின் சம்பந்தி வீட்டுக்காரர்கள் தங்களுக்கு வந்த கனவைப் பற்றிச் சொல்லசுமதியும் தனக்கு வந்த கனவை அவர்களுக்குச் சொல்லசம்பந்தி வீட்டாருக்கும் பிரமிப்பு தாங்க முடியவில்லை.

அதன் பின் விழிகளில் ஜலம் புரளமகா பெரியவாளின் அந்தத் திருவுருவப் படத்தைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டார் சுமதி.

இரண்டு வருடங்களுக்கு முன் சுமதியிடம் இருந்து இடம் மாறிய படம், இப்போது சம்பந்தி வீட்டாரிடம் இருந்து சுமதிக்கே வருகிறது.

இரண்டு வருடங்கள் அந்தக் குடும்பத்தினருக்கு ஆசிகள் வழங்கி விட்டு, இப்போது மகா பெரியவா சுமதியின் வீட்டுக்கே வந்திருக்கிறார்.

மகா பெரியவா திருவுருவப் படத்தை வாங்கிக் கொண்டு போய் பூஜையறையில் வைத்தார் சுமதி. மணக்க மணக்க ஒரு மல்லிகைப்பூ கிள்ளலையும் பெரியவாளுக்கு வைத்தார்.

மகா பெரியவா மீது நாம் கொண்டிருக்கிற பக்திஉண்மையானதாகவும், நேர்மையானதாகவும் விளங்கினால் மகான் நம்மிடமே விரும்பிக் குடியேறுவார். நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் உடன் இருப்பார்.