செம்பருத்திப்பூ வைத்தியம்

ன்றைக்குக் குடும்பத்தில் இருக்கிற ஒருவருக்கு ஏதேனும் ஒரு வியாதி என்றால், உடனடியாக மருத்துவரிடம் ஓடுகிறோம். ‘அங்கே மருத்துவர் சொன்னது சரியா? என்பதைத் தெரிந்து கொள்ள இன்னொரு மருத்துவரிடம் ஓடுகிறோம்முதல் மருத்துவர் தந்த ரிப்போர்ட்டுகளை எடுத்துக் கொண்டு.

குடும்பத்தில் தீர்க்கவே முடியாத பிரச்னை என்றால் அடுத்த கணம் நீதிமன்றம் ஓடுகிறோம். அதுவரை நீதிமன்றத்தின் பக்கமே தலைவைத்துப் படுத்திராத குடும்பத்தினர்களும் விதியை நொந்து கொண்டு கோர்ட் படி ஏறுகிறார்கள்.

சமூகத்தில் இன்றைக்கு இருக்கின்ற அவலங்களை இது போல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில், ஒரு பிரச்னை என்றால் தற்போது வாழ்ந்து வருகின்ற காலத்தில் தெய்வத்தையோ, மகான்களையோ நம்புவதை விட மற்றவற்றையே நம்புகிறார்கள் பெரும்பாலானோர்.

ஆனால், மகா பெரியவா காலத்தில் வாழ்ந்த அவரது பக்தகோடிகள் எந்த ஒரு பிரச்னை என்றாலும் வேறு எங்கும் நாடிச் சென்றதில்லை.

அடிப்படையான ஒரு விஷயத்தை ஆழமாக நாம் புரிந்து கொண்டால்தான் ஆன்மிகத்தில் நம்பிக்கை வரும்.

மனிதன் என்பவன் தானே உருவாகவில்லை.

உருவாக்கப்பட்டிருக்கிறான்.

அதாவது, இறைசக்திதான் மனிதனைப் படைத்திருக்கிறது. அப்படிப் படைத்த இறைவனே, அவனுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும், எந்தெந்தக் காலங்களில் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் பார்த்துப் பார்த்து வழங்குகிறான்.

இப்படிப்பட்ட நம்பிக்கையுடன் வாழுகின்றவர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் எவ்விதமான துயரும் வராது. இறைவனை நம்பாமல், நமக்கு வந்த பிரச்னைக்கு நாமே தீர்வைத் தேடிக் கொள்வோம் என்று தன் சிற்றறிவைப் பயன்படுத்தி வாழ நினைக்கின்றவர்களுக்குத்தான் சொல்லொணா துயரங்கள் சூழ்கின்றன.

வாருங்கள், இதே கருத்தை வலியுறுத்தக் கூடிய ஒரு சம்பவத்தைத் தற்போது பார்ப்போம். தற்போது சொல்லக் கூடிய குடும்பத்தினருக்கு இருந்த மிகப் பெரிய இன்னல், மகா பெரியவா அருளால் எப்படி விலகியது என்பது ஆச்சரியம். மகானின் திருவாக்கால் விளைந்த அந்த அற்புதத்தை இனி பார்க்கலாம்.

பழைய தஞ்சை மாவட்டத்தில் நடுநாயகமாக இருந்த நகரம் மன்னார்குடி. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது.

மன்னார்குடி, ஆன்மிக பூமி. புகழ்பெற்ற ராஜகோபால ஸ்வாமி ஆலயம் இங்குதான் இருக்கிறது. ‘ராஜகோபால ஸ்வாமி அருளக் கூடிய தலம் என்பதால், இந்த ஊரைராஜமன்னார்குடி என்று சொல்வார்கள்.

இங்கு சொல்லப் போகிற நிகழ்வு 1945-ல் இருந்து 1952-க்குள் நடந்திருக்கலாம்.

மன்னார்குடியில் விஸ்வநாத ஐயர்மீனாட்சி அம்மாள் என்கிற தம்பதியர் வசித்து வந்தனர். இறை பக்தியிலும், பிறருக்கு உதவுவதிலும் தங்களைப் பெருமளவு ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஒட்டுமொத்தக் குடும்பத்தினருமே அதுபோன்ற எண்ணம் கொண்டவர்கள்.

விஸ்வநாத ஐயர்மீனாட்சி அம்மாள் தம்பதிக்கு மூன்று மகன்கள். இரண்டு பெண்கள்.

இறையருளால் அனைவருக்குமே நல்ல குடும்பத்தில் சம்பந்தம் அமைந்து, திருமணமும் சிறப்பாக நடந்தேறியது.

கடைசி மகளான சரஸ்வதி, திருமணம் ஆகும்வரை பூப்பெய்தவில்லை. அதாவது, பருவம் அடையவில்லை.

கடைசி மகளான சரஸ்வதிக்கும் ஒரு நல்ல வரன் தேடி வரதந்தையாரான விஸ்வநாத ஐயர் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போனார். கோபாலகிருஷ்ணன்சரஸ்வதி ஆகிய இருவரின் ஜாதகமும் ஏகத்துக்கும் பொருந்தி இருந்தது.

பிறகென்ன, இரு குடும்பத்தினரும் திருமணத்துக்குப் பேச ஆரம்பித்தார்கள்.

சரஸ்வதி இன்னும் பருவத்துக்கு வராததையும், இறையருளால் கூடிய விரைவில் அதை எட்டி விடுவாள் என்பதையும் மணமகன் கோபாலகிருஷ்ணன் வீட்டாரிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டு, இந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது.

மாப்பிள்ளை கோபால கிருஷ்ணனுக்கு வட இந்தியாவில் உத்தியோகம் என்பதால், சரஸ்வதி அங்கே ஜாகை போனாள்.

திருமணம் ஆகி ஒரு சில மாதங்கள் ஓடிய பிறகு, அக்கம் பக்கத்தில் இருக்கின்றவர்களில் ஆரம்பித்து எல்லோரும் என்ன கேட்பார்கள் – ‘ஏங்க, வீட்டுல ஏதேனும் விசேஷம் உண்டா?

அதாவது, ‘மருமகள் முழுகாமல் இருக்கிறாளா? எப்போது குழந்தை பிறக்கப் போகிறது? என்பதை ஆவலுடன் கேட்பார்கள். கேட்கத்தானே செய்வார்கள்.

ஆனால், சரஸ்வதியின் மாமியார் மற்றும் மாமனாரல் இதற்குப் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியவில்லை.

காரணம்சரஸ்வதி இன்னும் பருவம் எய்தவில்லை. ‘திருமணம் ஆன பின் பூப்பெய்தி விடுவாள் என்கிற நம்பிக்கையில் பருவம் அடைவதற்கு முன்னாலேயே திருமணம் நடந்து விட்டது (அந்தக் காலத்தில் இதுபோல் நடப்பது சாதாரணம்). ஆனால், சரஸ்வதி மருமகளாக வந்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும், இன்னும் பருவம் எய்தவில்லை. இது அந்தக் குடும்பத்தில் இருக்கின்றவர்களுக்கு ஏமாற்றமாகத்தானே இருக்கும்?!

இதோ, அதோ என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் ஒவ்வொரு நாளும் நல்ல செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்களே தவிர, தேனாறு போன்ற அந்தச் செய்தி காதில் விழுவதாகத் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் சரஸ்வதியின் மாமனார் மற்றும் மாமியார் தங்கள் பொறுமையை இழந்து விட்டார்கள். கேட்கின்றவர்களுக்குப் பதில் சொல்லவே முடியவில்லை.

முக்கியமான ஒரு தகவலை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழ்வது நமக்காக. பிறருக்காக அல்ல. ‘பிறர் கேட்பார்களேஅவர்கள் அப்படி நினைப்பார்களே என்றெல்லாம் வாழ ஆரம்பித்தால், அது முறையான வாழ்க்கை அல்ல. எனவே, ‘நம்மைப் பார்த்து யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்இறைவன் என்ன விதித்திருக்கிறானோ, அதுபடி எல்லாமே நடக்கும் என்று இறைவன் திருவடிகளை சரண் புகுந்து அடுத்த காரியத்தைப் பார்க்க ஆரம்பித்தால், எல்லாம் சுபமாக பூர்த்தி ஆகும்.

சரஸ்வதியின் மாமியாருக்கு எல்லாமே புரியும். அவரும் ஒரு பெண்தானே! ஒரு பெண் பூப்படைவது என்பது இறையருளால் நிகழக் கூடியது. அதனால்தான், இன்றைக்கும் கிராமங்களில் ஒரு சிறுமி பூப்பெய்தி விட்டால், அதை திருமணம் போல் சடங்கு செய்து விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

மருமகள் சரஸ்வதி இன்னும் பருவம் அடையவில்லையே என்ற ஏக்கம் மாமியாருக்கு இருந்தாலும், அவரும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை.

இது போன்ற சூழ்நிலையில்ஆலோசனை என்ற பெயரில் விஷமான வார்த்தைகளை சிலர் உதிர்த்து விட்டுப் போவது பல குடும்பங்களில் வழக்கம். கடைசியில் அது விஸ்வரூபம் எடுத்து வளரவும் செய்து விட்டது.

அதாவது சரஸ்வதியை விவாகரத்து செய்து விட வேண்டும் என்பதுதான் விஷத்தைக் கக்கக் கூடிய முடிவு!

இது குறித்து, சரஸ்வதியின் குடும்பத்தில் ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்கிற வேளையில்சரஸ்வதியின் தந்தையான மன்னார்குடி விஸ்வநாத ஐயருக்கு இந்தத் தகவல் வந்து சேர்ந்தது. குரல் உடைந்து போய் மனைவி மீனாட்சியிடம் இந்தத் தகவலைச் சொன்னார்.

பெற்ற தாய் எப்படி இதைப் பொறுப்பாள்? ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள் மீனாட்சி.

ஒண்ணும் கவலைப்படாத மீனாட்சிநம்ம பொண்ணுக்கு அப்படியெல்லாம் ஆகாது. நாம வணங்குற தெய்வங்களும், நடமாடும் தெய்வமாக நாம பூஜிக்கிற மகா பெரியவாளும் அப்படி ஒரு நிலையை நமக்குக் குடுத்துட மாட்டா என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னார் விஸ்வநாத ஐயர்.

மிகச் சரியாக இந்த வேளையில்தான் காஞ்சி மகா பெரியவா கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் முகாமிட்டிருக்கிறார் என்கிற தேனினும் இனிய தகவல் கிடைத்தது விஸ்வநாத ஐயருக்கு.

மகள் சரஸ்வதியின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்றால், இந்த மகானின் திருவடிகளை சரண் அடைந்தால் போதும் என்று தீர்மானித்து மனைவியைக் கூட்டிக் கொண்டு சற்றும் தாமதியாமல் திருவிடைமருதூருக்குப் புறப்பட்டார் விஸ்வநாத ஐயர்.

காஞ்சி மகான் முகாமிட்டிருக்கிற திருவிடைமருதூர் ஸ்ரீசங்கட மடத்தில் திரளான பக்தர்கள் கூட்டம்.

நடமாடும் தெய்வமாக விளங்கக் கூடிய அவரை வணங்கி, ஆசி பெறுவதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் நீந்தி நீந்திச் சென்று மகா பெரியவா என்கிற தெய்வத்தைப் பார்த்து வணங்கி, தம்பதி சமேதராக நமஸ்கரித்தனர் இருவரும்.

குடும்ப நலன் பற்றி விசாரித்தார் மகா பெரியவா. அதன் பின் தன் மகள் சரஸ்வதிக்கு இருக்கும் பிரச்னை பற்றிக் கண்ணீர் மல்க விஸ்வநாத ஐயரும் மீனாட்சியும் சொன்னார்கள்.

ஒரு சில விநாடிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த மகா பெரியவா, இருவரையும் பார்த்துச் சொன்னார்.

உன் பொண்ணை ஒரு நூத்தியெட்டு நாட்களுக்கு, நான் இப்ப சொல்லப் போற மாதிரி பண்ணச் சொல்லு. தெனமும் நூத்தியெட்டு செம்பருத்திப் பூக்களால வீட்டுல அம்பாளுக்கு பூஜை பண்ணணும். தெனமும் பூஜை முடிந்த பிறகு அந்தப் பூக்களை எடுத்து நல்ல வெயில்ல காய வைக்கணும். செம்பருத்திப் பூக்கள் நன்னா காஞ்ச பிறகு, அதைப் பொடி பண்ணி, வெந்நீர்ல போட்டு, கஷாயமா குடிக்கச் சொல்லு. எல்லாம் சரி ஆயிடும் என்று ஆசிர்வாதம் செய்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்த உடனேயே அதுவரை தங்களைப் பெருமளவு அழுத்திக் கொண்டிருந்த மன பாரம் முற்றிலும் இறங்கி விட்டதாக உணர்ந்தார்கள் விஸ்வநாத ஐயரும் மீனாட்சியும்.

மன்னார்குடி வந்தார்கள். மகள் சரஸ்வதி இருக்கும் வட இந்தியாவுக்கு போன் போட்டு சம்பந்தியிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தார்கள். மகா பெரியவா சொன்ன பூஜை முறையை மகளிடமும் விளக்கிச் சொன்னார் விஸ்வநாத ஐயர்.

அதுவரை சோகத்தில் இருந்த சரஸ்வதிக்கு, மகா பெரியவா சொன்ன பூஜை முறை ஒரு மாமருந்தாகப் பட்டது.

பிறகென்ன… 1952-ஆம் ஆண்டு அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் சரஸ்வதி. ஒட்டுமொத்தக் குடும்பமும் கொண்டாடியது. மகா பெரியவா அருளால் பிறந்த இந்தக் குழந்தைக்குசங்கரன் என்று பெயர் வைத்தார்கள்.

பிற்காலத்தில் சங்கரன் பொறியாளராக மத்திய அரசில் உயர் பதவி வகித்தார். அவருக்கு இரண்டு மகன்கள்.

தங்களுக்குக் குழந்தை பிறக்குமா என்கிற ஏக்கத்தில் சில காலம் தவித்து இருந்த கோபாலகிருஷ்ணன்சரஸ்வதி தம்பதியருக்கு, தங்கள் காலத்திலேயே மகன் வழி பேரக் குழந்தைகளைக் கொஞ்சுகிற பேறு கிடைத்தது என்றால், அது மகா பெரியவாளின் பரிபூரண ஆசியே!

மகா பெரியவாளை நம்பியவர்கள் எந்த ஒரு காலத்திலும் கைவிடப்பட்டதில்லை!