நெல்பொரிக்கு கிடைத்த யோகம்

கும்பகோணத்துக்கு அருகே அமைந்திருக்கிற புராதனமான திருத்தலம் திருவிடைமருதூர். இங்கே எழுந்தருளி இருக்கிற ஈசன்மகாலிங்க ஸ்வாமி ஆவார். எண்ணற்ற திருச்சந்நிதிகளைக் கொண்ட பிரமாண்டமான ஆலயம் இது.

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்துக்கு திருவிடைமருதூரில் ஒரு கிளை மடம் உண்டு.

சுமார் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஆதி சங்கரர் தமிழகத்திலும் நீண்ட யாத்திரையை அப்போது மேற்கொண்டிருந்தார்.

அந்த யாத்திரையின் ஒரு பகுதியாகத் திருவிடைமருதூருக்கும் வந்தார்.

திருவிடைமருதூருக்கு வந்த ஆதி சங்கரருக்கு அங்கே வசிக்கின்ற சைவப் பண்டிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பெரும் மகானான ஆதி சங்கரரை ஏன் எதிர்த்தார்கள்?

ஆதி சங்கரர் வலியுறுத்திச் சொன்ன அத்வைதக் கோட்பாட்டை திருவிடைமருதூரில் வசித்து வந்த சைவப் பண்டிதர்கள் ஏற்கவில்லை.

ஆதி சங்கரர் சொன்ன அத்வைதக் கொள்கை என்ன தெரியுமா?

ஜீவாத்மா (ஜீவன்) என்பதும் பரமாத்மா (இறைவன்) என்பதும் ஒன்றுதான். இரண்டும் வேறல்ல. அனைத்து உயிர்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவே விளங்குகிறது என்பதே ஆதி சங்கரர் வலியுறுத்திச் சொன்ன அத்வைதம்.

திருவிடைமருதூர் பண்டிதர்கள், “எல்லாம் வல்ல சிவபெருமான்தான் இந்த உலகையே ஆக்கிப் படைத்து அழிக்கும் கடவுள். அவரால் படைக்கப்பட்ட நாமெல்லாம் அற்பமான ஜீவன்கள். அப்படி இருக்கும்போது எப்படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகும்? எனவே, உங்களது அத்வைதக் கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்.

உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், நாங்கள் வணங்குகிற சிவபெருமானே உங்கள் அத்வைதம் உண்மையானது என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் உங்கள் கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள்.

எதிர்ப்புக் கருத்து தெரிவித்த பண்டிதர்கள் அனைவரையும் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்துக்கு அழைத்தார் ஆதி சங்கரர்.

ஏன் நம்மை ஆலயத்துக்கு அழைக்கிறார்? சரி, அதையும்தான் பார்த்து விடுவோமேஒருவேளை மகாலிங்க ஸ்வாமி சொன்னால், இவரது கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டு விடுவோம் என்று கலந்து பேசிய பண்டிதர்கள், ஆதி சங்கரரின் பின்னால், மகாலிங்க ஸ்வாமியின் ஆலயத்துக்குள் சென்றார்கள்.

ஈசனின் திருமேனி முன் நின்று கண்களை மூடிப் பிரார்த்தித்தார் ஆதி சங்கரர். பண்டிதர்கள் உடன் காணப்பட்டனர்.

அப்போது மகாலிங்க ஸ்வாமி லிங்கத் திருமேனியில் இருந்துசத்தியம் அத்வைதம் என்ற கம்பீரமான முழக்கம் அசரீரியாக எழுந்தது. ஒரு முறை அல்லஇரு முறை அல்ல. மும்முறை இந்த அசரீரி வாக்கு எழுந்து அடங்கியது.

ஒவ்வொரு முறை அசரீரி வாக்கு எழும்போதும் லிங்கத் திருமேனியில் இருந்து ஒரு திருக்கரம் உயர்ந்து சத்தியம் செய்வது போல் உயர்ந்து அடங்கியதாம்.

கூடி இருந்த பண்டிதர்கள் அனைவரும் மெய் சிலிர்த்துப் போனார்கள். அதன் பின் அங்குள்ள சைவப் பண்டிதர்கள் ஆதி சங்கரரை குருவாக ஏற்றுக் கொண்டனர்.

அத்வைதம் சத்தியம் என்கிற ஆதி சங்கரரது கொள்கையை மகாலிங்க ஸ்வாமியே ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கிய இந்த திருவிடைமருதூர் திருத்தலத்துக்கு அடிக்கடி வந்து முகாமிடுவார் காஞ்சி மகா பெரியவா.

சத்தியம் அத்வைதம் என்பதைத் தன் அசரீரி வாக்கு மூலம் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி எப்படி இந்த உலகுக்குத் தெரியப்படுத்தினாரோஅதே திருக்கோலத்தில்அதாவது லிங்கத் திருமேனியும், அதில் இருந்து ஒரு திருக்கரமும் இருப்பது போல் திருவிடைமருதூரில் உள்ள சங்கர மடத்தில், ஒரு விக்கிரகத்தை வடித்து வைக்கச் செய்தார் காஞ்சி மகா பெரியவா.

தான் வாழ்ந்த காலத்தில் மகா பெரியவா மிகவும் விரும்பி வந்து தங்கும் இந்த திருவிடைமருதூர் சங்கர மடத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்பேர்ப்பட்ட சிறப்புகள் கொண்ட திருவிடைமருதூர் திருத்தலத்தில் ஒரு காலத்தில் மிக வசதியாக வாழ்ந்த குடும்பம்நாயக் பரம்பரையினர். இறை பக்தியிலும் தர்ம காரியங்களிலும் தங்களைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள்நாயக் வழியில் வந்தவர்கள்.

இந்தக் குடும்பத்தில் வந்தவர்களுள் ஒருவர்தான் சுப்ரமண்ய நாயக் என்பவர். மகா பெரியவா மீது அத்தனை பக்தி இவருக்கு உண்டு.

ஒரு முறை சுப்ரமண்யனும் (சுப்ரமண்ய நாயக்கை இனி சுப்ரமண்யன் என்றே பார்ப்போம்) அவரது ஒன்றுவிட்ட சகோதரர் மகாலிங்கமும் மகா பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.

பைக் தயாரிக்கும் பிரபலமான கம்பெனி ஒன்றில் அப்போது பணி புரிந்து வந்தார் மகாலிங்கம். எனவே, தனது பைக்கிலேயே சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு இவர்கள் இருவரும் அன்று மாலை 4 மணிக்குப் புறப்பட்டனர்.

ஒண்ணரை மணி நேரப் பயணத்துக்குப் பின் காஞ்சிபுரத்தை இவர்கள் இருவரும் அடையும்போது மாலை மணி 5.30.

காஞ்சி சங்கர மடத்தை அடைந்தவர்கள், பைக்கை ஓரமாக நிறுத்தினர். ஸ்ரீமடத்தினுள் நுழைந்தனர்.

ஆனால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சங்கர மடத்தில் அன்றைக்கு ஆளரவம் தென்படவில்லை. சுப்ரமண்யனுக்கும் மகாலிங்கத்துக்கும் திகைப்பு.

ஸ்ரீமடத்தில் மகா பெரியவா இருந்தால், மிகுந்த சுறுசுறுப்பாகக் காணப்படுமேஒருவேளை மகான் வெளியே எங்கேனும் சென்றிருக்கிறாரோ? என்கிற சந்தேகத்துடன் சுரத்தின்றி நடந்த சுப்ரமண்யன் எதிர்ப்பட்ட சிப்பந்தி ஒருவரிடம் விசாரித்தார்.

சுப்ரமண்யனையும் மகாலிங்கத்தையும் ஏற இறங்கப் பார்த்த சிப்பந்தி, “நீங்கள்லாம் பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கேளா? என்று கேட்டார்.

ஆமாம் என்பது போல் இருவரும் தலையசைக்க… “பெரியவா இப்ப இங்கே இல்லை. பாலுச்செட்டிசத்திரத்தில் முகாமிட்டிருக்கிறார். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் போற ரூட்ல இந்த ஊர் இருக்கு என்று சொல்லி விட்டு, அந்த சிப்பந்தி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

மடத்தை விட்டு வெளியே வந்தவர்கள், பாலுச்செட்டிசத்திரத்தை நோக்கி பைக்கில் புறப்பட்டனர்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் இருவரும் பாலுச்செட்டிசத்திரத்தை அடைந்தார்கள். மகா பெரியவா அங்கே முகாமிட்டிருக்கும் இடத்தை விசாரித்தறிந்து போய்ச் சேர்ந்தார்கள்.

அந்த முகாமை சுப்ரமண்யனும் மகாலிங்கமும் அடைந்தபோது இருட்டி விட்டிருந்தது.

பக்தர்களுக்குப் பெரியவா தருகிற தரிசனமும் அன்றைக்கு முடிந்து விட்டிருந்தது. எனவே, இவர்கள் இருவருக்கும் அந்த இரவு வேளையில் தரிசனம் கிடைக்கவில்லை. இது ஒரு சின்ன ஏமாற்றம்தான். இருந்தாலும், மகா பெரியவா தங்களுக்கு எப்போது தரிசனம் தர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அப்போதுதான் கிடைக்கும் என்பதில் இருவரும் தெளிவாக இருந்தனர்.

மகா பெரியவா முகாமிட்டிருந்த இடத்தின் எதிர்ப் பக்கம் ஒரு குளம் தென்பட்டது. குளத்தில் நீர் நிரம்பிக் காணப்பட்டது. குளத்துக்கு அருகே ஒரு மண்டபம்.

வெகு நேரம் தொடர்ந்துஅதுவும்பைக்கிலேயே பயணித்து வந்திருந்ததால் இருவருக்கும் பசியும் அசதியும் ஒன்று சேர்ந்து காணப்பட்டது.

சுற்றும்முற்றும் பார்த்தார் சுப்ரமண்யன். பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள் இரவு உணவு சாப்பிடும் உணவுக் கூடம் கண்களுக்குத் தெரிந்தது.

உணவு சாப்பிட்டு முடித்த அன்பர்கள் அந்தக் கூடத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

பசி முற்றிக் காணப்படுகிற நேரத்தில் இனியும் தாமதிக்கக் கூடாது என்று இருவரும் அந்த உணவுக் கூடத்துக்குள் சென்றார்கள்.

திருப்தியானநிறைவான உணவு. சாப்பிட்டு முடித்தார்கள். வெளியே வந்தார்கள். உண்ட மயக்கம், ஒரு தூக்கத்தைக் கிளப்பி விட்டது.

பக்கத்தில் இருக்கும் மண்டபத்தைப் பார்த்தார்கள். இரவு அங்கே படுத்து ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது.

ஏற்கெனவே படுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் தராமல், குறைந்த வெளிச்சத்தில் மெள்ள நடந்து, இருவரும் படுப்பதற்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். மேலுக்குப் போர்த்தி இருந்த துண்டை எடுத்துத் தரையில் விரித்தார்கள். முழங்கைகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தார்கள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் தூக்கம் இவர்கள் இருவரையும் தழுவ ஆரம்பித்தது.

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கைதான் எல்லாவற்றையும் சாதித்துக் கொடுக்கும்.

நான் தூங்குவதற்குத் தலையணை வேண்டும், போர்வை வேண்டும் என்று மனம் தீர்மானித்து விட்டால், இவை கிடைக்காதபோது தூக்கத்தையே தொலைக்க வேண்டி வரும்.

படுப்பதற்குப் போர்வையும் தலையணையுமா தேவை? தரைதான் தேவை.

அசதியின் காரணமாக மண்டபத்தில் துண்டை விரித்துப் படுத்த சுப்ரமண்யனும் மகாலிங்கமும் நன்றாகவே உறங்கி விட்டனர்.

இருவரும் கண் விழித்தபோது பொழுது மெள்ளப் புலரத் தொடங்கி இருந்தது.

நேற்று இரவு பக்கத்தில் படுத்திருந்தவர்கள் யாரேனும் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா என்று சுப்ரமண்யன் இடமும் வலமும் பார்த்தார். யாரையும் இப்போது காணவில்லை. எல்லோரும் அதிகாலையே எழுந்து சென்று விட்டிருந்தார்கள் போலிருக்கிறது.

தாங்கள் மட்டும் தனியே படுத்திருக்கிறோம் என்பதை ஒரு குற்ற உணர்வாக உணர்ந்த இருவரும், அரக்கப் பரக்க எழுந்தார்கள்.

மளமளவெனக் காலைக் கடன்களை முடித்தார்கள்.

நீராடுவதற்காக அருகில் உள்ள குளத்துக்குச் செல்லலாம் என்று நடந்தார்கள்.

குளத்தை நெருங்கிப் பார்த்தால்அங்கே ஓர் ஆச்சரியம்!

எந்த தெய்வத்தைத் தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று சுப்ரமண்யனும் மகாலிங்கமும் மனதில் பக்தியோடு வந்தார்களோ, அந்த தெய்வம் திருக்குளத்தில் இறங்கி, தண்டத்தால் நீரை விலக்கி விட்டு நீராடிக் கொண்டிருந்தது.

புவனமே கொண்டாடுகிற போற்றுதலுக்குரிய தெய்வம். எத்தனையோ பெரிய பெரிய பிரமுகர்கள் தரிசிக்க வந்தாலும், அவர்களில் சிலருக்கு பெரியவாளைத் தரிசிக்க உடனடியாக உத்தரவு கிடைத்து விடாது.

உத்தரவு கிடைக்கும் வரைஅதாவது தன்னை தரிசிக்க மகா பெரியவா அழைக்கும்வரைஅந்தப் பிரபலங்கள் காத்திருக்க வேண்டும்

ஒரு நாளா, இரு நாளா, ஒரு வாரமா? தெரியாது. ஆனால், தரிசனம் கிடைக்கிற வரை அங்கிருந்து நகர்வது என்கிற எண்ணமே ஏற்படாது. காத்திருந்து அருள் பெற்றுத்தான் திரும்புவார்கள். அதுதான் மகா பெரியவாளின் காந்த சக்தி.

உலகமே வியந்து பிரமித்துப் பார்க்கிறகொண்டாடுகிற மகான்கிராமத்தில் ஒரு திருக்குளத்தில் இறங்கி, தானும் சாமான்யன்தான் என்பது போல் நீராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த மகான் இங்கே நீராடும்போது நாமும் இதே திருக்குளத்தில் சற்று தள்ளி நீராடினால், பெரும் புண்ணியம் ஆயிற்றேஅந்த மகானின் திருமேனியைத் தீண்டிய நீர் நம்மையும் தழுவுமே என்று எண்ணி நெகிழ்ந்து, சுப்ரமண்யனும் மகாலிங்கமும்ஜய ஜய சங்கர கோஷத்தை மனதுக்குள் சொல்லியபடி குளத்துள் இறங்கினார்கள்.

மகா பெரியவா நீராடிக் கொண்டிருக்கிற திசையைப் பார்த்து இரு கைகளையும் உயர்த்தி வணங்கி விட்டு, குளத்து நீருக்குள் மூழ்கினர் சுப்ரமண்யனும் மகாலிங்கமும்.

மகா பெரியவா நீராடுகின்ற அதே வேளையில் நாமும் இந்தக் குளத்தில் நீராடி விட்டோம்சர்வேஸ்வர சொரூபமான அந்த மகானின் உடலைத் தழுவிய அதே நீர் நம் மீதும் பட்டிருக்கிறது என்று எண்ணுகிற போதே இருவருக்கும் இனம் புரியாத பரவசம்.

அடுத்த ஒரு சில விநாடிகளில் சர்ப்பம் போல் தண்டம் சுமந்து கரையேறத் துவங்கினார் மகா பெரியவா.

மகானது அசைவுக்கும் பார்வைக்கும் ஏற்ப, அவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிற சிப்பந்திகள் கர்மமே கண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

கரையேறியவுடன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்த மகா பெரியவா, தன் அனுஷ்டானங்களைச் செய்யத் துவங்கினார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் சுப்ரமண்யனும் மகாலிங்கமும் கரையேறினார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த மாற்று உடுப்புகளை அணிந்து கொண்டார்கள். நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு, இருவரும் அனுஷ்டானங்களை முடித்தார்கள்.

அதற்குள் மகா பெரியவா குளக்கரையில் இருந்து முகாமுக்குக் கிளம்பி விட்டிருந்தார்.

இரவே தரிசனம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டோம். கிடைக்கவில்லை. காலை வேளையில் இந்தக் கிராமத்தில் பக்தர்களின் கூட்டம் சேர்வதற்குள் மகானை ஆனந்தமாகத் தரிசித்து விட வேண்டும் என்று இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு குளக்கரையில் இருந்து கிளம்பினர். கேம்ப்பை அடைந்தார்கள்.

மகா பெரியவா தங்கி இருந்த அறையின் மரக் கதவுகள் வெறுமனே சாத்தப்பட்டிருந்தன. அறைக்கு வெளியே சிப்பந்தி ஒருவர் கதவின் அருகே நின்று கொண்டிருந்தார்.

சுப்ரமண்யன், மகாலிங்கத்துடன் மேலும் நாலைந்து பேர் பெரியவா தரிசனத்துக்குக் காத்திருந்தனர்.

ஒரு சில நிமிடங்களில் சொர்க்க வாசல் கதவுகள் திறப்பது போல் மகா பெரியவா வீற்றிருந்த அறையின் கதவுகள் இரு பக்கமும் உட்பக்கமாகத் திறந்தன.

நடமாடும் கலியுக தெய்வம்கண்களுக்கு எதிரே திருக்காட்சி தந்து கொண்டிருந்தது!

இந்தப் பரவசக் காட்சியைக் காண நேரிட்டவெளியே காத்திருந்த சொற்பமான பக்தர்கள் நெகிழ்ந்து இரு கரம் உயர்த்தி மகானை வணங்கினர்.

பக்தர்கள் ஒவ்வொருவராககுடும்பம் என்றால் குடும்பத்துடன்மகா பெரியவா அருகே சென்று நமஸ்கரித்து கிடைத்தற்கரிய அந்தப் பேரானந்தத்தில் திளைக்க ஆரம்பித்தனர்.

சுப்ரமண்யனும், மகாலிங்கமும் அந்த சிறிய வரிசையில் காத்திருந்தனர். மகானுக்கு என்னென்ன அர்ப்பணிக்க வேண்டும் என்று கொண்டு வந்திருந்தார்களோ, அதை வெளியே எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் என்னென்ன எடுத்து வந்திருந்தார்கள்?

ஒரு சிறிய கோணிச் சாக்கில் நாலைந்து இளநீர். தவிர பெரிய ஒரு காகித உறையில் நெல்பொரி.

இளநீர், சந்திரமவுலீஸ்வரர் பூஜைக்குப் பயன்படலாம். நெல்பொரி, மகா பெரியவாளின் பிட்சைக்குப் பயன்படும்.

மகான் சாப்பிடக் கூடியது அதுதானே! காஞ்சி மகா பெரியவாளை அந்த நாளில் தரிசிக்கச் செல்லும்போது சில அன்பர்கள் பழங்கள், முந்திரி, பாதாம்இப்படிப்பட்ட பொருட்களை வாங்கிச் செல்வார்கள். ஆனால், சில அன்பர்கள் நெல்பொரி வாங்கிச் செல்வர்.

இந்த நெல்பொரியை எத்தனையோ அன்பர்கள் வாங்கித் தந்தாலும், சிலர் தருகின்ற நெல்பொரிக்குத்தான் யோகம் அடிக்கும். அதாவது, அவற்றைத் தன் ஆகாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வார்.

மகா பெரியவாளின் முன்னால் காணிக்கைப் பொருட்களை சமர்ப்பிக்கின்ற அத்தனை பேருக்குமே தாங்கள் கொண்டு வந்த பொருட்களை மகா பெரியவா எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், யார் யாருக்கு அந்தப் பாக்கியம் இருக்கிறதோ, தெரியாது.

தனக்கு முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்ட இளநீர், நெல்பொரி இவற்றைப் பார்த்த மகா பெரியவா, அருகே நின்று கொண்டிருந்த சிப்பந்தியை ஜாடை காட்டி, அருகில் அழைத்தார். நெல்பொரியை மட்டும் அடையாளம் காண்பித்து, சைகையால் ஏதோ சொன்னார். அதன் பின் நெல்பொரியை மட்டும் அந்த சிப்பந்தி எடுத்து உள்ளே சென்றார்.

ஆஹாஇந்த மகான் நாம் கொண்டு வந்த நெல்பொரியை தனது பிட்சையில் சேர்த்து விட்டார் என்று சுப்ரமண்யனும் மகாலிங்கமும் இந்தக் காட்சிகளைப் பார்த்துப் பேரானந்தம் கொண்டனர்.

இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டிக்குத் தெரியும்இந்த நெல்பொரி எப்படிப் பெறப்பட்டதுநேர்மையான சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டதா? கொடுப்பவரின் மனம் எப்படி இருக்கிறது என்பனவற்றை எல்லாம் அறிந்துதான், ஏற்றுக் கொள்வார்.

அந்த வகையில்சுப்ரமண்யனும் மகாலிங்கமும் கண்கள் கலங்க மகா பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர்.

புன்னகையுடன் மகா பெரியவா இருவரையும் ஆசிர்வதித்தார். இருவரது குடும்பத்தையும் பற்றி நிறைய கேள்விகள் கேட்டு, விசாரித்து அறிந்தார்.

சுமார் இருபது நிமிடங்கள் கடந்த பின், பிரசாதம் தந்து விடை கொடுத்தார்.

பாலுச்செட்டிசத்திரம் முகாமை விட்டு வெளியே வரும்போது, இருவரின் மனமும் லேசாகி இருந்தது.

பைக்கில் ஏறி மகாலிங்கம் ஸ்டார்ட் செய்தார். சுப்ரமண்யன் பின்னால் அமர்ந்தார்.

சாலையில் கலந்து பறந்தது பைக், சென்னையை நோக்கி.

சமீப காலத்தில் எத்தனையோ துறவிகள், மகான்கள் வாழ்ந்தாலும் அவர்களில் மகா பெரியவா கொண்டிருந்த சந்நியாச வாழ்க்கை, மிகவும் பிரமிக்கத் தக்கது.

காரணம்தான் வாழ்ந்த நூறாண்டு காலத்தில் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை.

தான் கொண்டிருந்த சந்நியாச தர்மப்படி, குறைவில்லா துறவு வாழ்க்கை வாழ்ந்து இந்த மனித குலம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்தவர் மகா பெரியவா.

இந்தக் காலத்தில் ஒரு குரு என்பவர், அனைவருக்கும் அவசியம் தேவை. குரு என்றால் வழிகாட்டுபவர். பொறாமைகளும் போட்டிகளும் நிறைந்த இந்தக் கலியுகத்தில் மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கு மனதுக்குப் பிடித்த ஒரு குரு தேவை. அவரவர் தாங்கள் விரும்புகிற குருவைஆத்ம குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

நித்தமும் அவரை வழிபட்டால், அவரே நமக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கி, எப்போதும் உடன் இருப்பார்.

மனிதர்கள் பெரும்பாலும் நிதானமற்றவர்கள். ஒரு முடிவை செயல்படுத்தும்போது அதற்கு முன் அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்ப்பதில்லை.

கோபப்படுகிற ஒருவர் நம் நட்பு வளையத்திலோ, அலுவலகத்திலோ இருக்கிறார் என்றால், அவரது மோசமான இந்த குணம் அறிந்து, நாம் சற்று பொறுமையாகப் பேசுகிறோம். இது இயற்கை.

ஆனால், கோபம் என்பது சம்பந்தப்பட்டவரது சுபாவமல்ல. செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வது.

தான் இருக்கிற நிலைக்குக் கீழே இருக்கின்றவர்களிடம் மட்டும்தான் தன் கோபத்தை அவரால் வெளிப்படுத்த முடியும். தான் சார்ந்திருக்கிற அலுவலகத்திலோ, அல்லது அவரது மனைவியிடமோ அந்தக் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார். வெளிப்படுத்தவும் முடியாது. அப்படி அங்கே கோபத்தைக் காண்பித்தால், முதல் இடத்தில் சம்பளம் கிடைக்காது. இரண்டாம் இடத்தில் சாப்பாடு கிடைக்காது.

ஆக, மனிதர்கள் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறக் கூடிய பச்சோந்தி வர்க்கங்கள்.

மகான்கள் மட்டுமே சத்தியம். இந்த உலகில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.

அவர்கள் உடலால் அழிந்துபட்டாலும், இன்றைக்கும் ஆன்மா சொரூபத்தில் நம்மிடம் நடமாடிக் கொண்டிருப்பவர்கள். நமது பிரார்த்தனைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவி சாய்ப்பவர்கள்.

காஞ்சி மகா பெரியவா பிருந்தாவனம் (மகா சமாதி) கொண்டிருக்கிற காஞ்சிபுரம் சென்று அவரைத் தரிசித்தால், மனதில் மாற்றம் வருவது நிச்சயம்.

சென்னையை அடுத்த பொன்னேரியில் இருந்து ஒரு அன்பர் பேசினார்.

அவரது சகோதரியின் பெண்ணுக்குத் திருமணமாகி, ஒன்பது வருடங்கள் ஆகியும், புத்திரப் பேறு அமையவில்லையாம். பொன்னேரி அன்பர், மகா பெரியவா பக்தர். சகோதரி குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார் – “நீங்க ஒரு நாள் என்கூட காஞ்சிபுரம் வாங்க. அவர் சந்நிதிக்குப் போய்ப் பிரார்த்தனை பண்ணா, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சகோதரி குடும்பத்தினருக்கு சந்நியாசிகளிடம் அப்போது நம்பிக்கை இல்லை. ஆனாலும், பொன்னேரி அன்பர் மனம் தளராமல் பேசி இருக்கிறார். அதன் பின் நம்பிக்கையுடன் அவர்களும் காஞ்சிக்கு வந்து, மகா பெரியவா பிருந்தாவனத்தில் பிரார்த்தித்தார்கள். இப்போது அந்தப் பெண் தாய்மைப் பேற்றை அடைந்திருக்கிறாள் என்று நெகிழ்ச்சியோடு சொன்னார் பொன்னேரி அன்பர்.

ஏதேனும் முடிவெடுக்க முடியாதகுழப்பமான சூழ்நிலையில் மகா பெரியவாளின் பிருந்தாவனம் வந்து, ஒரு சில மணி நேரங்கள் அமர்ந்து, தெளிவு பெற்றுத் திரும்பியவர்கள் அநேகம்.

குரு பக்திக்குத் தேவைநம்பிக்கை!