தன்னைத் தரிசிக்க வருகின்ற பக்தர்களின் பிணிகளை இன்றளவும் அகற்றி அருளி வருகிறார் மகா பெரியவா. மனதில் நம்பிக்கையோடும், எண்ணத்தில் தூய்மையோடும் செல்கிற ஒருவரை மகா பெரியவா எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றுவதில்லை.
மகா பெரியவா ஒரு முறை குல்பர்கா நகர் வழியே யாத்திரை சென்று கொண்டிருந்தார். இந்த நகரம் வடக்கு கர்நாடகாவில் உள்ளது. அதன் பின் குல்பர்காவில் இருந்து புறப்பட்டு மஹாகாவ் என்கிற சிற்றூருக்குச் சென்றார். அங்கேயே ஒரு சில நாட்கள் தங்கினார்.
அன்றைய தினம் மாலை டெல்லியில் பணி புரிந்து வந்த இளைஞரான இன்ஜினீயர் ஒருவர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மகான் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்த அவர், தரிசித்து ஆசி பெறுவதற்காக பக்திப் பெருக்கோடு வந்திருந்தார். தன்னுடன் ஒரு சில பழங்களையும், மகான் திருக்கழுத்தில் அணிந்து கொள்வதற்கு வில்வ மாலை ஒன்றையும் வாங்கி வந்திருந்தார்.
மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்தவுடன் தான் எடுத்து வந்திருந்த பழங்கள் மற்றும் வில்வ மாலையை ஒரு மூங்கில் தட்டில் மகா பெரியவாளிடம் சமர்ப்பித்தார். கண் கண்ட தெய்வத்துக்கு நமஸ்காரம் செய்தார்.
இளைஞரைப் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் மகா பெரியவா விசாரித்து அறிந்தார். இந்தப் பேச்சு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
இளைஞருக்கு சந்தோஷம் என்றால், அதை வார்த்தைகளில் வர்ணிக்க இயலவில்லை. ‘இந்த மகானின் கடைக்கண் பார்வை நம் மேல் விழாதா?‘ என்கிற ஏக்கத்துடன் மஹாகாவ் வந்திருந்தார். ஆனால், அவருக்கு யோகம்தான்.
இளைஞருடன் பேசி முடித்த பின், மூங்கில் தட்டில் அவர் வைத்த வில்வ மாலையைத் தன் வலக் கையால் எடுத்தார். அதை அப்படியே தன் தலையில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னுமாகத் தேய்த்தார். தான் வாங்கி வந்த வில்வ மாலையை மகா பெரியவா தன் கைப்பட எடுத்து இப்படிச் செய்தது, இளைஞரைப் பரவசப்பட வைத்தாலும், இதன் பொருள் என்னவென்று புரியவில்லை.
ஒரு சில நிமிடங்கள் கடந்த பின் வில்வ மாலையைத் தன் தலையில் இருந்து எடுத்து, மார்பில் வைத்துத் தேய்த்தார். இன்ஜினீயர் இளைஞர் மட்டுமல்ல… இங்கு வந்திருந்த பக்தகோடிகள் பலரும் இவற்றை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“உன் அப்பாவுக்கு என்ன வயசு இருக்கும்?“ – இளைஞரைப் பார்த்துக் கேட்டார் மகா பெரியவா.
சொன்னார்.
“நல்ல ஆரோக்கியமா – திடகாத்திரமா இருப்பாரா?“
“இருப்பார் பெரியவா.“
இதுக்கு முன்னாடி உங்க அப்பாவுக்கு இதய நோய் வந்தது உண்டா?“
இளைஞனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆரம்பத்தில் கேட்ட கேள்விகள் எல்லாம் ஓகே! கடைசியாகக் கேட்டாரே, இதய நோய் வந்தது உண்டா என்று..!
“இல்லை பெரியவா.“
தன் மார்பில் வெகு நேரம் வைத்துக் கொண்டு ஜபித்த வில்வ மாலையை இளைஞனிடமே கொடுத்தார். பிறகு, “நீ உடனே டெல்லிக்குப் புறப்படு. இந்த வில்வ மாலை ஒன் அப்பாகிட்ட சேரணும். ஒரு நிமிடம்கூட இங்க நிக்கக் கூடாது“ என்று உத்தரவிட்டார்.
அவ்வளவுதான்… என்ன காரணத்துக்காக மகா பெரியவா தனக்கு இப்படி ஒரு உத்தரவிட்டிருக்கிறார் என்பதை அப்போது இன்ஜினீயர் இளைஞரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு வெளியேறினார். டெல்லியை நோக்கிய அவரது பயணம் துவங்கியது.
தடையே இல்லாத பயணத்தில் அடுத்த நாள் இரவு டெல்லியை அடைந்தார். ‘இதய நோய் என்றாரே… அப்பாவிடம் இந்த வில்வ மாலையை உடனே கொடு என்றாரே… இதற்கெல்லாம் என்ன பொருள்?‘ என்பது புரிந்தும் புரியாமலும் காணப்பட்டாலும், மகா பெரியவாளைப் பிரார்த்தித்தபடியே வீட்டை அடைந்தார்.
வீடு பூட்டப்பட்டிருந்தது. குழப்பம் கூடியது.
பக்கத்து வீட்டில் தென்பட்ட நண்பரிடம் விசாரித்தார்.
“சார்… நீங்க இப்பதான் வர்றீங்களா? டெல்லில இன்டர்நேஷனல் லெவல்ல பெரிய விளையாட்டுப் போட்டிங்க ஆரம்பிச்சிருக்கு, இல்லியா? அந்த விளையாட்டுகளைப் பாக்கறதுக்கு உங்கப்பா நேத்திக்கு சாயந்திரம் சந்தோஷமா புறப்பட்டுப் போயிருக்கார். ஒரு ஸீட்டுல உக்காந்து விளையாட்டுகளை வேடிக்கை பார்த்திட்டிருந்திருக்கார். அந்த நேரம் பார்த்து திடீர்னு அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கு. தான் உட்கார்ந்திட்டிருக்கிற ஸீட்டுல அப்படியே சாஞ்சுட்டார். ஒடனே பக்கத்துல இருந்த ஒரு ஆஸ்பிட்டல்ல சேர்த்து, ஆக்ஸிஜன் குடுத்தாங்க. இப்ப அவசர சிகிச்சைப் பிரிவுல இருக்காரு. ஆனா, நல்ல முன்னேற்றம் இருக்காம். ஒண்ணும் கவலைப்படாம போய்ப் பாருங்க…“ என்று சொன்னவரின் கைகளைப் பிடித்து நன்றி சொல்லி விட்டு, இளைஞர் ஓடினார் மருத்துவமனைக்கு.
மருத்துவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் சென்றார். தந்தையைப் பார்த்து மகனும், மகனைப் பார்த்துத் தந்தையும் பரஸ்பரம் கண்ணீர் சிந்தினர். அப்பாவால் பேச முடிந்தது.
மஹாகாவ் சென்று மகா பெரியவாளைத் தான் தரிசித்த நிகழ்வை வெகு உருக்கமாகச் சொல்லி, அங்கு இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை ரத்தினச்சுருக்கமாகத் தந்தைக்கு விளக்கினான்.
திடகாத்திரமா இருப்பாரா, இதய நோய் உண்டா என்றெல்லாம் மகா பெரியவா விசாரித்ததையும், அதன் பின் வில்வ மாலையை தலையிலும் நெஞ்சிலும் வைத்து ஜபித்து, அரை மணி நேரம் கழித்துக் கொடுத்ததையும் சொன்னான்.
இவற்றை எல்லாம் கண்ணீர் மல்கக் கேட்டுத் தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டுக் கூப்பினார் அந்தத் தந்தை. மகா பெரியவாளை மானசீகமாக வணங்கினார்.
அதன் பின் மகன் தந்த வில்வ மாலையைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். நெஞ்சில் அழுத்தி வைத்துக் கொண்டார். மகா பெரியவாளின் திருக்கரம் பட்டு, அவரால் ஆசிர்வதித்துக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த வில்வ மாலையால் மட்டுமே அபாயக் கட்டத்தில் இருந்து தான் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது. கண்ணீராலேயே மகானுக்கு நன்றி கூறினார்.
அதன் பின் வந்த ஒரு சில நாட்களில் அவர் முற்றிலும் குணமாகி, வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இதுபோல் மெய் சிலிர்க்கக் கூடிய ஏராளமான சம்பவங்களை மகா பெரியவா வாழ்க்கையில் இருந்து பட்டியல் இட முடியும்.
தெய்வங்கள் அருள மறுப்பதை உறுதியான குரு பக்தி இருந்தால், மகான்களிடம் இருந்து பெற்று விடலாம். இதற்கு மகா பெரியவா கண் கண்ட உதாரணம்.
இன்றைக்கு உலகெங்கும் வாழ்ந்து வருகிற மகா பெரியவா பக்தர்கள், எதுவாக இருந்தாலும் மகா பெரியவாளையே – தெய்வமாகவும் குருவாகவும் நினைத்துப் பிரார்த்திக்கிறார்கள்.