மயிலை கற்பகாம்பாள் மகிமை

மிகப் பெரிய தமிழறிஞர் கி.வா.வை (கி.வா. ஜகந்நாதன்) அறியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய மருமகளான திரிபுரசுந்தரி ஒரு முறை காஞ்சி மகா பெரியவாளை மயிலாப்பூர் முகாமில் தரிசித்தார்.

கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் அருளும் மயிலாப்பூரில் மகா பெரியவாளைத் தரிசிக்க திரளான பக்தர்கள் முகாமில் குவிந்தனர்.

மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மகா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி. மகானை வெகு அருகே பார்க்க நேர்ந்தபோது அவரையும் அறியாமல் பக்திப் பரவசத்தில் கண்கள் பனித்தன.

மகா பெரியவாளுக்குத் திரிபுரசுந்தரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மகானுக்குத் தான் கொண்டு வந்த பழங்கள், புஷ்பங்கள் போன்ற காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு நமஸ்கரித்தார்.

தன் வலக்கையை உயர்த்தி, திரிபுரசுந்தரியை ஆசிர்வதித்து விட்டு, “மெட்ராஸ்ல எங்க தங்கி இருக்கே? என்று கேட்டார் மகா பெரியவா.

மயிலாப்பூர்லதான் பெரியவா. – திரிபுரசுந்தரி.

மயிலாப்பூர்ல கோயில்களுக்குப் போற வழக்கம் உண்டா?

ஆமாம் பெரியவா. அதுவும் கபாலீஸ்வரர் கோயில்ல கற்பகாம்பாள்னா எனக்கு அவ்ளோ இஷ்டம் என்றார் முகம் முழுக்க பரவசத்துடன்.

கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?

எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா. தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுனு என் மாமனார் (கி.வா..) சொல்வார்.

பலேநான் ஒண்ணு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ என்றவர், திரிபுரசுந்தரி மட்டுமல்லாமல், தன் அருகே கூடி இருந்த அனைவரையும் நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ண புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே. மயிலாப்பூர் மண்ணுல வசிக்கறதுக்கு ஒரு சின்ன ரூம் இருந்தாலே போதும்னு நினைக்கணும்.

இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம். தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அதுபோல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் குடுத்துவா என்று மகா பெரியவா சொன்னபோது, மயிலாப்பூர்வாசிகள் அனைவரும் பரவசம் மேலிட, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

மகா பெரியவா தொடர்ந்தார்: “கற்பகாம்பாள்கிட்ட, ‘இன்னும் எத்தனை ஜன்மம் இருக்குன்னு தெரியாது. ஆனா, அடுத்தடுத்து பிறப்புன்னு ஒண்ணு எனக்கு இருந்தா, மயிலாப்பூர்லயே பிறக்கறதுக்கு அருள் புரி தாயேனு தினமும் பிரார்த்தனை பண்ணு. ‘எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும். உன்னை தரிசிச்சுண்டே இருக்கணும்னு அவகிட்ட கேட்டுக்கோ.

அவளோட பார்வைல யாரும் பசியோட இருக்கறதைப் பாத்துண்டு இருக்க மாட்டா. மயிலாப்பூர்ல இருக்கிற பிச்சைகாரா, நாய்கள் போன்ற அனைவருக்கும் கற்பகாம்பாள்தான் சாப்பாடு போடறா என்று மகா பெரியவா முடித்ததும், திரிபுரசுந்தரி கண்களில் நீர் கசியபெரியவா என்று பெரும்குரலெடுத்து மீண்டும் அந்த மகானை வணங்கினார் திரிபுரசுந்தரி.