ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்றைக்கு மன்னார்குடி ஒரு தாலுகா. ராஜமன்னார்குடி என்றும் வழங்குவார்கள். ஸ்ரீராஜகோபால ஸ்வாமியும், செங்கமலத் தாயாரும் அருள் புரியும் அற்புத பூமி. இன்றைக்குத் திருவாரூர் மாவட்டம்.
மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் பள்ளிவர்த்தி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாராயணஸ்வாமி என்கிற பக்தரது அனுபவத்தைப் பார்க்க உள்ளோம்.
கும்பகோணம் ஸ்ரீமடத்தில் காஞ்சி பீடம் இயங்கிய காலத்தில் மகா பெரியவாளைத் தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு சமைத்துப் போட ஸ்ரீமடத்தில் கைமணம் கொண்ட சமையல்காரர்கள் அதிகம் உண்டு. அவர்களுள் ஒருவரான ரங்கஸ்வாமி என்கிற சமையல் கலைஞர், இதே பள்ளிவர்த்தியைச் சேர்ந்தவர்.
பம்பாய் நகரத்தில் ரயில்வேயில் பணி புரிந்த கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்பவரும், அங்கு ‘ஸ்ரீகாஞ்சி சேவா சமிதி‘ ஏற்படுத்தி, காஞ்சி ஸ்ரீமடத்தின் மீதான பக்தியைப் பரப்பியவர். இவரும் பள்ளிவர்த்தியே!
இப்படி மகா பெரியவா கைங்கர்யத்தில் தன்னை அதிகம் இணைத்துக் கொண்ட கிராமம் பள்ளிவர்த்தி.
திருவிடைமருதூருக்கு 1949-ல் யாத்திரை வந்த மகா பெரியவா, மன்னார்குடிக்கும் ஒரு விசிட் அடித்தார்.
தடபுடலான வரவேற்பு மகா பெரியவாளுக்கு வழங்கப்பட்டது. ஊரே திரண்டு வந்து மன்னார்குடி எல்லையில் அவரை வரவேற்று ஊருக்குள் அழைத்துச் சென்றனர். ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி ஆலயம் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்தார் மகா பெரியவா. மகான் தங்கி இருக்கக் கூடிய முகாமுக்கு வந்து மன்னார்குடிவாசிகள் வணங்கி, பேரருள் பெற்றனர்.
அந்த யாத்திரையின்போது மகா பெரியவாளை நேரில் தரிசித்து, தன் இல்லத்துக்கு வருமாறு நாராயணஸ்வாமியின் தகப்பனார் அழைப்பு விடுத்தார்.
நாராயணஸ்வாமியின் தந்தை விடுத்த அழைப்பை ஏற்று அவருடைய இல்லம் சென்றார் மகா பெரியவா. அவர்கள் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஒரு நாள் முழுக்க அங்கு தங்கினார்.
ஸ்ரீமடத்தின் பிரதான பூஜா விக்கிரகமான சந்த்ரமௌளீஸ்வரருக்கு அந்த இல்லத்திலேயே வழிபாடு நடத்தினார். திரளான அன்பர்கள் கூடி இந்த பூஜையைத் தரிசித்துப் பரவசம் அடைந்தனர்.
இந்த வேளையில்தான் மகா பெரியவாளை அருகில் நின்று தரிசிக்கக் கூடிய பேறு நாராயணஸ்வாமிக்குக் கிடைத்தது. முதன் முதலாக பெரியவாளின் தரிசனம் – அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெகு அருகில்.
அப்போது சிறுவனாக இருந்தாலும், மகா பெரியவாளைப் பார்த்த மாத்திரத்தில் காந்தம் போல் ஈர்க்கப்பட்டு விட்டார் நாராயணஸ்வாமி. மகான் தரிசனத்துக்குப் பிறகு அவரிடம் இருந்து நகர்ந்து செல்வதற்கு மனம் வரவில்லை. இனம் புரியாத பக்தியும் பரவசமும் ஏற்பட்டு விட்டன.
மகா பெரியவாளின் அருகில் இருந்து அவருடைய ஆசிகளைப் பெற்றதன் பலனை விரைவிலேயே உணர ஆரம்பித்தார் நாராயணஸ்வாமி. ஆம்! மன்னார்குடியில் படிப்பை முடித்தவர், உத்தியோகத்துக்காக பம்பாய்க்குப் பறந்து செல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
நல்ல வேலையும் பம்பாயில் கிடைத்தது. குருவருளும் உடன் சேர்ந்திருக்கும்போது அவருக்கு என்ன கவலை இருக்க முடியும்?
காலத்தின் சுழற்சியில் எது – எப்போது – எப்படி ஆகும் என்பதை மனிதர்களால் கணிக்க முடியாது.
1963-ல் நாராயணஸ்வாமியை ஒரு சோகம் ஆட்கொண்டது. ஆம்! கர்ம வினையோ, என்னவோ… அல்சர் (குடலில் புண்) நோய் இவரைத் தாக்கியது.
சரியாகச் சாப்பிட முடியவில்லை. எந்த ஒரு உணவை வயிற்றுக்குள் அனுப்பினாலும், அது தாங்க முடியாத குடைச்சலைக் கொடுத்தது.
எப்போது பார்த்தாலும் ‘வயிற்று வலி… வயிற்று வலி‘ என்று வயிற்றையே பிடித்தபடியே காணப்பட்டார்.
என்னென்னவோ கைவைத்தியங்கள்… எண்ணற்ற பரிகாரங்கள்… கணக்கிலடங்கா கோயில் தரிசனங்கள்… எல்லாமும் பலனற்றுப் போயின. வயிற்று வலி கொஞ்சமும் குறையவில்லை. வெறுத்துப் போனார் நாராயணஸ்வாமி.
பம்பாயிலேயே புகழ்பெற்ற ஒரு டாக்டரிடம் போனார். எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முடிவுகளை ஆராய்ந்து பார்த்த அந்த டாக்டர், ”தாங்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், அது உங்களது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும். கொஞ்சமும் காலம் தாழ்த்தக் கூடாது” என்றார் கறாராக.
விவரம் கேட்டறிந்த குடும்ப உறுப்பினர்கள் கலவரமானார்கள்.
அப்போது நாராயணஸ்வாமிக்குத் தோன்றியது – ‘எப்படியும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார். அதை ஏன் பம்பாயில் செய்து கொள்ள வேண்டும்? நம்மூருக்குப் போய் செய்து கொண்டால் செலவும் குறையும்… கூடமாட உதவுவதற்கும் சொந்த பந்தத்தில் ஆட்கள் இருப்பார்களே!‘
இதையடுத்து சொந்த ஊரான பள்ளிவர்த்திக்குப் புறப்பட்டார்.
அப்போது அறுவை சிகிச்சை போன்ற உயர்ரக மருத்துவ சிகிச்சைகளுக்கு மன்னார்குடியில் அவ்வளவாக வசதி கிடையாது. தஞ்சாவூருக்குத்தான் போக வேண்டும்.
எனவே, தஞ்சாவூரில் பிரபலமாக இருக்கும் ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கும் பழையபடி எல்லா சோதனைகளும் செய்யப்பட்டன.
சோதனைகளின் முடிவில் அங்கிருந்த மருத்துவர், ”இனி சற்றும் கால தாமதம் செய்யாமல் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால்தான் பிழைக்க முடியும். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலத்தைத் தாங்கள் தள்ளிப் போட்டிருக்கிறீர்கள். உடனடியாக இதை செய்து கொள்ளாவிட்டால் பலனில்லை” என்று கடுமையாகச் சொல்லி, அடுத்த ஒரு சில நாட்கள் கழித்து அறுவை சிகிச்சைக்குத் தேதியும் குறித்தார்.
அறுவை சிகிச்சைக்குத் தஞ்சாவூர் செல்லப் போகின்ற விவரத்தைத் தன் தாயிடம் தெரிவித்தார் நாராயணஸ்வாமி.
அப்போது தாயார் சொன்னார்: ”ஏண்டா… ஆபரேஷன் பண்ணிக்கிறதுன்னு தீர்மானிச்சு… வேற வழி இல்லேன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டா. அதுக்கு முன்னாடி நமக்கெல்லாம் குருநாதரான மகா பெரியவாகிட்டேர்ந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ. அவரோட ஆசிர்வாதத்துல எல்லாம் நன்னா முடியும்.”
நாராயணஸ்வாமியின் முகத்தில் ஒரு திடீர் பிரகாசம். ‘முக்கியமான இந்தக் கட்டத்தில் மகா பெரியவாளை எப்படி மறந்து போனோம்?‘ என்று தன்னையே கடிந்து கொண்டார்.
பிறகு, ‘உடனடியா ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு டாக்டர்ஸ் கெடு வெச்சிருக்கிற இந்த சூழலில் மகா பெரியவாளைத் தேடிப் போய் தரிசனம் செய்ய உடல் நிலை இடம் கொடுக்குமா? தவிர, அந்த மகான் இப்போ எந்த ஊர்ல – எந்த ஸ்டேட்ல கேம்ப்ல இருக்காரோ?‘ என்று பல கேள்விகளுடன் நாராயணஸ்வாமி யோசித்தார்.
உடனே அவரது தாயாரே குறுக்கிட்டு பிரமிப்பூட்டும் அந்தத் தகவலைச் சொல்ல ஆரம்பித்தார்:
”கவலைப்படாதடா நாராயணஸ்வாமி… மகா பெரியவா இப்ப இளையாத்தங்குடில கேம்ப் இருக்காராம். நமக்குன்னு அந்த தெய்வம் பக்கத்துலயேதான் வந்து உக்காந்துண்டுருக்கார். நீ ஒரு எட்டு இளையாத்தங்குடிக்குப் போயி, அவரை நேர்ல பார்த்து ஒரு நமஸ்காரம் பண்ணு. ‘இதான் விஷயம்‘னு நீ ஆபரேஷன் பண்ணிக்கப் போற தகவலை அவர் காதுல போட்டுட்டு வா. எல்லாம் சுமுகமா ஆயிடும். ஒடம்பு பலஹீனமா இருக்கே… அதனால நீ தனியா போக வேண்டாம். துணைக்கு உன் சகோதரியையும் கூட்டிண்டு போ.”
– தாயார் சொல்வதைக் கேட்டாலே, தான் சுகம் பெற்றது போல் உணர்ந்தார் நாராயணஸ்வாமி.
மகா பெரியவாளை முதன் முதலாக – இதே இல்லத்தில் தான் தரிசித்து ஆசி பெற்ற நாள், நாராயணஸ்வாமியின் மனதில் பசுமையாக நினைவில் இருந்தது.
”அப்படியே ஆகட்டும்மா” என்று தாயை வணங்கி உற்சாகமாகச் சொன்னவர், சகோதரியிடம் விவரம் சொன்னார். அவரும் உடன் வருவதாகச் சம்மதித்தார்.
தன் சகோதரியுடன் அடுத்த நாள் அதிகாலையே இளையாற்றங்குடிக்குப் புறப்பட்டார் நாராயணஸ்வாமி.
காஞ்சி காமகோடி பீடத்தின் 65வது ஆச்சார்யராக விளங்கிய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (காலம் கி.பி. 1851 – 1890) இந்தத் திருத்தலத்தில்தான் ஜீவ முக்தி அடைந்தார். காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் இளையாற்றங்குடி அமைந்துள்ளது.
காஞ்சி மகா பெரியவாளுக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் பெரும் அபிமானம் உண்டு. புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும்போதெல்லாம், மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். 1925-ல் காஞ்சி மகா பெரியவா, இளையாற்றங்குடிக்கு வந்தபோது இங்கு வியாஸ பூஜை நடத்தி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.
தவிர, மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவார். வில்வ மரத்தை பிரதட்சணம் வருவார். ”ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த வில்வ மரமும், இடமும் பவித்திரமானது” என்று நெகிழ்வார். இந்த வில்வ இலைகளைக் கொண்டு, மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம்.
பேருந்தில் பயணித்துத் தன் தமக்கையுடன் இளையாத்தங்குடியில் இறங்கி விட்டார் நாராயணஸ்வாமி.
மகா பெரியவா தங்கி இருக்கிற இடம் பற்றி விசாரித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
பெரியவா தங்கி இருக்கிற இடத்தை அடைவதில் நாராயணஸ்வாமிக்கு சிரமம் இல்லை. காரணம், பக்தர்கள் பலரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நடந்து பெரியவா கேம்ப் இருக்கும் இடத்தை அடைந்தார்.
மகா பெரியவாளை இளையாற்றங்குடியில் தரிசித்து ஆசி பெறுவதற்காக சுற்றுவட்டாரங்களில் வசிக்கக் கூடிய நகரத்தார் அன்பர்கள் திரளாக வந்திருந்தனர். கூட்டமான கூட்டம்.
முகாமுக்குள் நுழைந்து கை, கால்களை சுத்தம் செய்து கொண்டனர். மகானைத் தரிசிக்க பக்தர்கள் நின்றிருக்கும் வரிசையில் நாராயணஸ்வாமியும் அவரது சகோதரியும் நின்றனர்.
வரிசையும் விரைவாகவே நகர்ந்தது. இவர்கள் இருவரும் மகா பெரியவாளை அடைந்தனர்.
மகானின் திருச்சந்நிதியில் இருவரும் தனித் தனியே நமஸ்கரித்தனர்.
அப்போது, ”என் சகோதரன் நாராயணஸ்வாமிக்கு அல்சர் வியாதி தொந்தரவு தந்து கொண்டிருக்கிறது பெரியவா. ரொம்ப கஷ்டப்படறார். அடுத்த வாரம் (அந்த நாளையும் குறிப்பிடுகிறார்) அவருக்குத் தஞ்சாவூர்ல ஆபரேஷன் செய்ய உள்ளது. பெரியவா அனுக்ரஹம் வேண்டும்” என்று கண்களில் நீருடன் தெரிவித்தார் சகோதரி.
இவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தபடி, ”நீங்கள் இருவரும் இந்த முகாமிலேயே தங்கி, பூஜையைப் பார்த்து விட்டு பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்கள் இங்கே தங்கி விட்டுச் செல்லவும்” என்றார் மகா பெரியவா.
உற்சாகத்துடன் இருவரும் தலையை அசைத்து சம்மதித்தனர்.
காரணம் – அன்றைய காலத்தில் மகா பெரியவா அனுக்ரஹத்துடன் ஸ்ரீமடத்திலேயோ, ஸ்ரீமட முகாமிலேயோ தங்கி பூஜைகளைப் பார்ப்பதற்கு ஈடு இணை இல்லை.
மகா பெரியவா எங்கே தங்கினாலும், அங்கு வருகின்ற பக்தர்களுக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. தங்குவது, சாப்பிடுவது, குளிப்பது, உறங்குவது என எல்லாவற்றுக்கும் விஸ்தாரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கைக்குழந்தையோடு வந்திருக்கிற ஒரு தாய்க்கும் தேவையான வசதிகள் அங்கே தாராளமாகக் கிடைக்கும்.
இளையாற்றங்குடி முகாமில் இரண்டு நாட்கள் பெரியவா நடத்தும் பூஜையைத் தரிசிப்பது, தீர்த்தப் பிரசாதம் பெறுவது என்று இனிதே கடந்தது.
அடுத்து, தாங்கள் இங்கிருந்து புறப்படுவதற்கு மகா பெரியவாளிடம் இருந்து உத்தரவு வர வேண்டுமே என்று அவரது திருச்சந்நிதிக்கு முன் காத்திருந்தனர் நாராயணஸ்வாமியும், அவரது சகோதரியும்.
மூன்றாம் நாள் மாலை சுமார் 4 மணிக்கு நாராயணஸ்வாமியைத் தன் அருகே அழைத்து பிரசாதம் கொடுத்தார். முகத்தில் ஒரு புன்னகை தவழ, இருவரும் ஊருக்குச் செல்ல உத்தரவு கொடுத்தார் மகா பெரியவா.
‘வயிற்று வலி பற்றிச் சொன்னோம். ஆபரேஷன் இருக்குனும் சொன்னோம். பெரியவா அது பத்தி ஒரு வார்த்தைகூடச் சொல்லலியே‘ என்று இருவருக்கும் மன வருத்தம்.
‘கவலைப்படாத… ஒனக்கு இருக்கற வயித்து வலி சரியாப் போயிடும். பயப்படாம ஆபரேஷன் பண்ணிக்கோ‘ என்று நம்மை ஆசிர்வாதம் செய்யவில்லையே என்று நாராயணஸ்வாமியின் மனம் ஏங்கியது. உடன் வந்த அவரது சகோதரிக்கும் இதே ஏக்கம்தான்.
தன்னை தரிசிக்க வந்திருக்கிற பக்தர்களுக்கு மகா பெரியவா பிரசாதம் கொடுத்து விட்டார் என்றால், அவ்வளவுதான்… அதற்கு மேல் அங்கே இருக்கக் கூடாது. மேலும், எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. அப்படியே கிளம்பிப் போய் விட வேண்டும். இது எழுதப்படாத நடைமுறைச் சட்டம்.
நாராயணஸ்வாமியும் அவரது சகோதரியும் அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவே பள்ளிவர்த்திக்கு வந்து சேர்ந்தனர்.
எல்லாவற்றையும் தாயிடம் சொன்னார். ”நீ ஏண்டா கவலைப்படறே… மகா பெரியவா நாமெல்லாம் பூஜிக்கிற தெய்வம்டா… அவரை நீ நேர்ல பாத்து ஆசி வாங்கினதே போதும். எதுக்கும் கவலைப்படாத… நாளைக்குக் கார்த்தால கௌம்பி தஞ்சாவூருக்குப் போய் அட்மிட் ஆகணும். பெரியவா கிருபைல ஆபரேஷன் நன்னா நடக்கட்டும்” என்று ஆறுதல் படுத்திய தாய், நாராயணஸ்வாமியை உறங்கச் செல்லுமாறு அனுப்பினார்.
அடுத்த நாள் குடும்பத்தினருடன் சென்று தஞ்சாவூரில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நாராயணஸ்வாமி.
மகா பெரியவா உட்பட சகல தெய்வங்களையும் பிரார்த்தித்துக் கொண்டனர்.
‘நாராயணஸ்வாமியிடம் சில சோதனைகள் எடுக்க வேண்டும்‘ என்று குடும்பத்தாரிடம் சொன்ன மருத்துவர்கள், அனைவரையும் தனியே ஓர் அறையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
எக்ஸ்–ரே உட்பட அனைத்துப் பரிசோதனைகளும் அடுத்தடுத்து எடுக்கப்பட்டன.
அவை அனைத்தும் தலைமை மருத்துவரின் பார்வைக்குச் சென்றன. மருத்துவர் குழு ஒன்று அமர்ந்து நெடு நேரம் இந்தப் பரிசோதனை முடிவுகளை வைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தது.
அதன் பின் நாராயணஸ்வாமியின் குடும்பத்தினரைத் தன் அறைக்கு அழைத்த தலைமை மருத்துவர், அனைவரையும் அமரச் சொன்னார்.
”சொல்லுங்க டாக்டர்… டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டீங்களே… எப்ப ஆபரேஷன் பண்ணப் போறீங்க எம் புள்ளைக்கு?” – நாராயணஸ்வாமியின் தாயார் கண்களில் ஒரு ஏக்கத்துடன் கேட்டார்.
தன் எதிரே அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு புன்னகையுடன் பார்த்தார் தலைமை மருத்துவர். பிறகு சொன்னார்:
”ஒரு சந்தோஷமான செய்தி… மிஸ்டர் நாராயணஸ்வாமிக்கு எந்த ஆபரேஷனும் செய்ய வேண்டாம்.”
எதிரே இருந்த அனைவருக்கும் குழப்பம் கலந்த அதிர்ச்சி.
”டாக்டர், என்ன சொல்றீங்க? ஆபரேஷன் வேண்டாம்னா மருந்து மாத்திரை குடுத்தே இதை சரி பண்ணிடலாம்னு சொல்றீங்களா?”
”அதுவும் வேண்டாம் நாராயணஸ்வாமிக்கு. இவர் வயித்துல புண்ணே இல்லைனு இப்ப எடுத்த எக்ஸ் ரே உட்பட அனைத்து பரிசோதனை முடிவுகளும் காட்றது. சோதனை பண்ணிப் பார்த்த எங்களுக்கே ஆச்சரியம். இதை அற்புதம்னுதான் சொல்லணும். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நாராயணஸ்வாமியை டெஸ்ட் பண்ணப்ப இருந்த மோசமான உடம்பு கண்டிஷன் இப்ப இல்லை. அவரோட வயித்துல புண்களே இல்லேன்னு இப்ப முடிவு சொல்றது. ரொம்ப நார்மலா இருக்கார்.”
அனைவருக்கும் ஆச்சரியம். நம்ப முடியவில்லை. நாராயணஸ்வாமியின் தாயாரும், இளையாற்றங்குடிக்கு உடன் வந்த சகோதரியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கு ஒரே காரணம் – மகா பெரியவா. அவர்தான் இந்த அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார் என்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர்.
மகா பெரியவா சொல்படி அங்கே இரு நாட்கள் தங்கி, சந்திரமௌலீஸ்வரர் பூஜையை தரிசித்து விட்டு, அந்த மகான் கையால் பிரசாதம் பெற்றது, எல்லா கர்ம வினைகளையும் போக்கி விட்டது.
காஞ்சியில் உறையும் கருணை தெய்வமான மகா பெரியவாளை மானசீகமாக வணங்கினார்கள். எதிரே இருக்கிற தலைமை டாக்டரை கண்கள் கலங்க இரு கரங்களை உயர்த்தி வணங்கினார்கள்.
”இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்திரில இருக்கட்டும். நாளைக்கு நீங்க அவரை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம். உணவு சாப்பிடுவதற்கு மட்டும் சில பத்திய முறை சொல்றேன்… ஒரு சில மாத்திரைகளை எழுதித் தரேன்” என்றார் டாக்டர்.
அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார் நாராயணஸ்வாமி.
பள்ளிவர்த்திக்கு வந்தார்கள். சாப்பாட்டில் பத்திய முறையைக் கடைப்பிடித்து வந்தார். அதிக காரம், புளிப்பு போன்றவற்றைத் தவிர்த்தார். மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை அவ்வப்போது எடுத்து வந்தார்.
நாராயணஸ்வாமிக்கு எந்த ஒரு சிரமமும் வரவில்லை. இயல்பு நிலைக்கு வந்து விட்டார்.
சுமார் ஒரு வருடம் கடந்த பின் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக குடும்பத்துடன் தேனம்பாக்கம் சென்றார்.
மகானைத் தரிசிக்கத் தன் முறை வந்ததும், நெகிழ்வோடு நமஸ்காரம் செய்தார் நாராயணஸ்வாமி. கூப்பிய கரங்களை விலக்கவே இல்லை. கும்பிட்ட நிலையிலேயே மகானை கண்கள் கலங்கத் தரிசித்துக் கொண்டிருந்தார்.
நாராயணஸ்வாமியைப் பார்த்து மகா பெரியவா கேட்டார்: ”இப்ப வயித்துல வலி ஒண்ணும் வர்றதில்லைதானே?”
அந்த சந்நிதியில் உடைந்து அழுதே விட்டார் நாராயணஸ்வாமி. ”பெரியவா… ஒங்க கருணையால எனக்கு எந்த வலியும் இல்லை பெரியவா.”
அதன் பின் அவருக்கும் குடும்பத்தினருக்கும் பிரசாதம் தந்து அனுப்பினார்.
ஊர் திரும்பிய பின் மகா பெரியவா பக்தியால் மேலும் ஈர்க்கப்பட்டு, தர்ம காரியங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார் நாராயணஸ்வாமி.