“நீ தாமரைப்பூவோட புள்ளைதானே..?”

சாதுர்மாஸ்யம் என்பது சந்நியாசிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விரதம். ஆடி மாத பவுர்ணமி தினத்தன்று மகாகுரு வியாச பகவானுக்கு பூஜை செய்து இந்த விரதத்தை சந்நியாசிகள் துவங்குவார்கள்.

சதுர் என்றால், நான்கு. ‘மாஸ்யம் என்றால் மாதம். நான்கு மாத காலத்துக்கு சந்நியாசிகள் மேற்கொள்கிற விரதம்சாதுர்மாஸ்ய விரதம். நான்கு மாதங்கள் முடியாவிட்டால், சதுர் பட்சம்அதாவது இரண்டு மாத காலத்துக்கு இந்த விரதத்தை மேற்கொள்வார்கள் (ஒரு பட்சம் என்பது 15 நாட்கள்).

சாதுர்மாஸ்ய காலத்தில் சந்நியாசிகளைத் தரிசித்து, அவர்களுக்கு நம்மால் இயன்ற காணிக்கைகளைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்து ஆசிகளைப் பெற வேண்டும்.

இதற்காக காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சார்யர்கள் காஞ்சிபுரத்திலோ அல்லது அந்த வேளையில் அவர்கள் முகாமிட்டிருக்கிற வெளியூர்களிலோ சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம்.

காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சார்யர்களைக் குருவாகக் கொண்டிருக்கிற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சாதுர்மாஸ்ய காலத்தில் தனியாகவும் குழுவாகவும் இணைந்து சென்று ஸ்ரீமடத்து ஆச்சார்யர்களைத் தரிசித்து ஆசி பெறுவர்.

பக்தர்கள் பலரும் இப்படிப் பயணித்து, காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சார்யர்களுக்குக் காணிக்கை சமர்ப்பிப்பதைபிக்ஷாவந்தனம் என்று சொல்வார்கள்.

பிச்சை வேறு. ‘பிக்ஷை வேறு.

ம்மிடம் யாசித்து, வீட்டு வாசலுக்கு வந்து கேட்பது பிச்சை ஆகும்.

நாமே தேடிச் சென்று குருவருள் பெற்று வாழ வேண்டும் என்கிற நோக்கத்துடன் சென்று தருவதுபிக்ஷை.

நமக்குப் பசி ஏற்பட்டால், ஓட்டலுக்குப் போயோ அல்லது வீட்டில் தட்டு வைத்துக் கொண்டோ ஒரு பிடி பிடிக்கிறோம். ஆனால், முற்றும் துறந்த சந்நியாசிகள் அப்படிச் செய்ய முடியுமா? அவர்களுக்குப் பசி உட்பட எதுவுமே ஒரு பொருட்டல்ல. எல்லா நிலையும் அவர்களுக்கு ஒன்றுதான்!

துறவிகள் நினைத்த நேரத்தில் சாப்பிடுவதில்லை. அதுபோல் ஓரிடத்தில் கிடைக்கிறதே என்பதற்காக வகை வகையான பதார்த்தங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கான உணவு முறையைபிக்ஷாவந்தனம் என்கிறோம். சந்நியாச தர்மத்துக்கு வந்து விட்டால், பிக்ஷை எடுத்துதான் உண்ண வேண்டும் என்பது நியதி. சந்நியாசிகளுக்கு பிக்ஷை அளிக்கும் முறையைத்தான்பிக்ஷாவந்தனம் என்கிறோம்.

துறவிகளுக்கு உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களைத் தருவதுபிக்ஷாவந்தனம் எனப்படும். இந்தப் பொருட்களை சமைத்துதான் அவர்கள் பசியாற வேண்டும்.

சந்நியாசி ஒருவருக்கு ஒரு வேளை பிக்ஷாவந்தனம் செய்வதால், இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ஒரு நாள் முழுதும் உணவிட்ட பலன் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தூய்மையான சந்நியாசி ஒருவருக்கு அளிக்கும் பிக்ஷை, பல வருஷம் ஸத்ர யாகம் செய்த பலனை பிக்ஷை அளித்தவர் பெறுகிறார் என்கிறார் துர்வாச மகரிஷி.

ஸத்ர யாகம் என்பது மிகவும் உயர்ந்த யாகம். மகா பெரியவா அருளியதெய்வத்தின் குரல் தொகுப்பில் இந்தஸத்ர யாகம் என்கிற பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமான ஒரு யாகத்தில் யஜமானன் என்கிற ஒருவன் தன் திரவியத்தைச் செலவு செய்து தட்சணை கொடுத்து யாகம் பண்ணுகிறான். ரித்விக்குகள் என்ற பிராமணர்கள் யஜமானனிடம் தட்சணை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், ஸத்ர யாகங்களில் மட்டும் யாகம் பண்ணும் அத்தனை பேருமே யஜமானர்கள். ஒரு யாகத்தில் பங்கு கொள்வதால் உலக நலனும் அதில் கலந்து கொள்கிறவர்களுக்கு சித்த ஸுத்தியும், தரிசிப்பவர்களுக்கு ஏராள நன்மையும் கிடைக்கின்றன.

இந்த நிலையில் பல வருஷம்ஸத்ர யாகம் செய்த பலனை ஒரு பிக்ஷை தருகிறது என்றால், பிக்ஷையின் மகிமை எப்படிப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும்.

சாதாரணமாக உணவளித்தல் என்பது புண்ணியம் தரும் செயல். அதுவும் பற்றற்ற துறவிகளுக்கு பிக்ஷை இடுவது அளவற்ற புண்ணியத்தைத் தரும். நம் பாவங்கள் அனைத்தும் ஓடி விடும். தவிர பிக்ஷை ஏற்றுக் கொண்ட மகான்களிடம் இருந்து கிடைக்கும் நல்லாசி, நம் குடும்பத்தையே வாழ வைக்கும்.

பல தரப்பினரும், பல ஊர்க்காரர்களும் சாதுர்மாஸ்யக் காலகட்டத்தில் காஞ்சி ஸ்ரீமடம் எங்கே முகாமிட்டிருக்கிறதோ, அங்கே தேடி வந்து பிக்ஷை தருவது வழக்கம்.

குழுக்கள் பெயரிலும், ஊரின் பெயரிலும் பிக்ஷாவந்தனம் வருடா வருடம் சிறப்பாக காஞ்சி ஸ்ரீமடத்தில் நடக்கும்.

பெண்கள் இணைந்து செய்வதுசுவாசினிகள் பிக்ஷாவந்தனம், வைதீகர்கள் இணைந்து செய்வதுபுரோகிதர்கள் பிக்ஷாவந்தனம் – இப்படி நிறைய உண்டு.

கொரட்டூர் பிக்ஷாவந்தனம், ‘பெரம்பூர் பிக்ஷாவந்தனம், ‘கும்பகோணம் பிக்ஷாவந்தனம் என்றெல்லாம் உண்டு.

இப்படி வெளியூர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் திரண்டு வந்து அவர்கள் சார்ந்திருக்கிற ஊர் சார்பாக பிக்ஷாவந்தனத்தை நடத்துவார்கள்.

இதில்மதுரை பிக்ஷாவந்தனம் என்பதும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதாவது, மதுரையில் வசிக்கக் கூடிய ஸ்ரீகாஞ்சி மடத்து அன்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி மேற்கொள்வது மதுரை பிக்ஷாவந்தனம்.

வருடா வருடம் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சார்யர் எங்கே முகாமிட்டிருக்கிறாரோ அங்கே மதுரையில் இருக்கின்ற அன்பர்கள் அனைவரும் திரண்டு சென்று இந்த பிக்ஷாவந்தனத்தை மேற்கொள்வது தொன்றுதொட்ட வழக்கம்.

குறிப்பிட்ட அந்த வருடம் மதுரையில் வசித்து வரும் சுப்ரமண்யன் என்பவரும், சேதுராமன் என்பவரும், இந்த பிக்ஷாவந்தனத்தில் கலந்து கொள்ளத் தீர்மானித்தனர்.

அப்போது மகா பெரியவா மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார்.

பெரியவா திருப்பாதம் பட்ட புண்ணிய பூமிசதாரா!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்தான் சதாரா. இன்றைக்கு இது ஒரு மாநகரும்கூட. மும்பையில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவு. புனேவில் இருந்து சுமார் 110 கி.மீ. தொலைவு.

அயல் மாநிலங்களில் யாத்திரை மேற்கொள்ளும்போது அங்குள்ள நகரங்களில் முகாமிடுவது மகா பெரியவாளின் வழக்கம். அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் யாத்திரை புரியும்போதெல்லாம் சதாராவை மறக்க மாட்டார். அங்கே பல நாட்கள் முகாமிடுவார் பெரியவா. இந்த ஊர் அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

சதாராவில் உள்ளஉத்தர சிதம்பரம் நடராஜர் ஆலயம் வெகு பிரசித்தம். இந்த ஆலயம் இங்கே அமைவதற்கு அடித்தளமிட்டவர் காஞ்சி மகா பெரியவா.

சிதம்பரத்தில் இருப்பது போல் நடராஜப் பெருமானுக்கு வடக்கே எதேனும் ஒரு ஊரில் ஆலயம் அமைக்க வேண்டும் என்பது மகா பெரியவாளின் விருப்பம். அதற்குத் தோதான இடமாக சதாரா அமைந்தது. நடராஜப் பெருமான் அமைத்துக் கொண்டார்.

இங்கே நடராஜர் கோயில் அமைவதற்கு எண்ணற்ற பக்தர்கள் உதவி இருக்கிறார்கள். தவிர மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அப்போது முதலமைச்சராக இருந்தவர்கள்உத்தர சிதம்பரம் ஆலயத் திருப்பணிகளுக்குத் தங்களால் ஆன பேருதவிகளைப் புரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 1985-ல் இந்த ஆலயம் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டது.

இன்றைக்கு சதாராவில்உத்தர சிதம்பரம் ஆலயம் நமது தமிழ்க் கலாசாரத்தைப் பறை சாற்றிக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அந்தப் பெருமை மகா பெரியவாளையே சாரும்.

இப்பேர்ப்பட்ட சிறப்புகள் வாய்ந்த சதாரா நகருக்குத்தான் மதுரையில் இருந்து சுப்ரமண்யனும் சேதுராமனும் புறப்பட்டார்கள்.

மதுரையில் இருந்து பிக்ஷாவந்தனக் குழு அன்பர்கள் திரளாக ஏற்கெனவே புறப்பட்டு விட்டார்கள்.

சுப்ரமண்யனும் சேதுராமனும் மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து அங்கிருந்து இன்னொரு ரயிலில் பயணித்து புனேவை அடைந்தார்கள். அங்கே தெரிந்த உறவினர் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அடுத்த நாள் அதிகாலை புனேவில் இருந்து சதாராவுக்குப் பயணப்பட்டார்கள்.

சதாராவில் மகா பெரியவா முகாமிட்டிருக்கிற இடத்தை இவர்கள் இருவரும் அடைந்தபோது காலை மணி எட்டேகால். அந்த ஊரே மிகவும் ஏகாந்தமான சூழ்நிலையில் காணப்பட்டது.

சுப்ரமண்யனுக்கும் சேதுராமனுக்கும் ஓர் ஆனந்தம். இன்னும் சற்று நேரத்தில் மகா பெரியவாளைத் தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணம், இருவருக்கும் பரவசத்தைத் தந்தது.

மகான் எங்கே இருக்கிறார் என்று இருவரும் முகாமுக்குள் தேடினர். அப்போது அங்கிருந்த சிப்பந்தி ஒருவர், இவர்கள் இருவரின் தேடலைப் பார்த்து விட்டு, ”மகா பெரியவா வெளியே இருக்கிறார் என்று முகாமுக்கு வெளியே அவர் இருக்கிற திசையை அடையாளம் காண்பித்தார்.

அந்தத் திசை நோக்கி நடந்தார்கள். பார்த்தவுடனே பரவசம். அங்கே சிறிய ஒரு குன்றின் மேல் பரமேஸ்வர சொரூபமாக அமர்ந்து கொண்டிருந்தார் மகா பெரியவா.

மகானுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்திகள் கீழே கரடுமுரடாகத் தெரிந்த பாறைகளில் அமர்ந்திருந்தனர்.

இவர்களைத் தவிர, பக்தர்கள் என்று பார்த்தால், சுமார் பத்துப் பதினைந்து பேர்தான் அந்த நேரத்தில் தென்பட்டார்கள்.

சுப்ரமண்யனும் சேதுராமனும் மகா பெரியவாளைப் பார்த்ததும், இரு கரங்களையும் மேலே குவித்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். கண்கள் பனிக்க கருணை வடிவாகத் திகழ்கிற மகானைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

அந்தக் காட்சி அவர்களுக்கு எப்படி இருந்தது தெரியுமா? கயிலை மலையில் சாட்சாத் சர்வேஸ்வரன் அமர்ந்திருப்பது போலவும், கீழே சிவ கணங்கள் சேவை செய்து கொண்டிருப்பது போலவும் தெரிந்தது.

இருவரையும் பார்த்துப் புன்னகைத்த மகா பெரியவா கீழே அமரச் சொல்லி சைகை காண்பித்தார்.

மகானைப் பார்த்து வணங்கியபடியே தரையில் அமர்ந்தார்கள்.

அந்த நாளில் பக்கா பட்டிக்காடாகத் தென்பட்ட கிராமம்சதாரா. அந்த ஊரில் உள்ள வசதிகளை விட வசதியின்மை என்று ஆரம்பித்தால், ஏராளம் பட்டியல் போட முடியும்.

ஆனால், பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா இது போன்ற கிராமங்களைத்தான் அதிகம் தேர்ந்தெடுத்து முகாமிடுவார். காரணம் – ‘வசதியான ஊர்களில் வசிக்கிறவர்களை விட, வசதி குறைவான ஊர்களில் வசிக்கின்றவர்களுக்கு அனுக்ரஹம் வழங்க வேண்டும். தனது இன்னருள் அவர்களையும் அடைய வேண்டும் என்பதே!

சுப்ரமண்யனையும் சேதுராமனையும் பார்த்து க்ஷேம லாபம் விசாரித்தார் மகா பெரியவா.

ஆடிட்டர் சேஷனோட பிரதர்தானே நீ? என்று சேதுராமனைப் பார்த்து மகா பெரியவா விசாரித்தது, அவருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதுவரை தான் அமர்ந்திருந்த சின்னஞ் சிறு குன்றில் இருந்து கீழிறங்கினார் மகா பெரியவா. கைங்கர்யம் செய்கிற சிப்பந்திக்கு ஏதோ ஜாடை காண்பித்தார்.

அடுத்த கணம் அந்த சிப்பந்தி சுப்ரமண்யனைப் பார்த்து, ”மகா பெரியவா ஒங்க ரெண்டு பேரையும் கூட வரச் சொல்றா என்றார்.

மகா பெரியவா நடக்க ஆரம்பித்தார்.

மிகப் பெரிய அனுக்ரஹம் நமக்குக் கிடைத்திருக்கிறதே என்ற சந்தோஷத்தில் சுப்ரமண்யனும் சேதுராமனும் மகா பெரியவாளைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

சூரியன் மெள்ள உஷ்ணத்தைக் கக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வரச் சொல்லி விட்டு எங்கே சென்று கொண்டிருக்கிறார் மகா பெரியவா?

வேகமாக நடந்து செல்கிற மகா பெரியவாளைத் தொடர்ந்து சுப்ரமண்யனும் சேதுராமனும் விறுவிறுவென்று நடை போட்டார்கள்.

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்கிற பாலு உட்பட ஓரிரு சிப்பந்திகளும் உடன் வந்து கொண்டிருந்தனர்.

மகா பெரியவாளை ஏகாந்தமாக இந்த சதாரா கேம்ப்பில் தரிசித்து விட்டோமேபிறகு ஏன் தன்னைத் தொடர்ந்து வரச் சொல்கிறார்? என்ன விஷயமாக இருக்கும்? என்கிற யோசனை வேகவேகமாக நடந்து கொண்டிருந்த சுப்ரமண்யன் மனசுக்குள் ஓடியபடி இருந்தது.

தான் தங்கி இருந்த முகாமுக்குள் ஒரு சர்ப்பம் போல் நுழைந்த மகா பெரியவா, அங்குள்ள மிகச் சாதாரணமான ஓர் அறைக்குள் புகுந்தார்.

அந்த அறையின் நிலைவாசலைப் பார்த்தால் உயரம் மிகக் குறைவாகத் தென்பட்டது. எனவே, தன் தலையை லேசாகத் தாழ்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தார் மகா பெரியவா.

சுப்ரமண்யனும் சேதுராமனும் அதே போல் தலையைக் குனிந்தவண்ணம் உள்ளே நுழைந்தார்கள்.

சுமார் ஆறடி நீளமும், நான்கடி அகலமும் கொண்ட சாதாரணமான அறை அது.

மிகவும் நெருக்கடியாகக் காணப்பட்ட அந்த அறையில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார் பெரியவா.

அறையின் மூலையில் அரிக்கேன் விளக்கு ஒன்று காணப்பட்டது. ஸ்ரீமடம் சம்பந்தப்பட்ட ஓரிரு தஸ்தாவேஜுகள் இன்னொரு மூலையில் தென்பட்டது.

இரவு நேரத்தில் அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு, வந்திருக்கிற முக்கிய அடியவர்கள் சிலரிடம் மகா பெரியவா சம்பாஷணை நடத்தக்கூடிய இடம் இதுதான்.

ரொம்பவும் சாதாரணமாகக் காட்சி தந்த அந்த அறையை ஒரு நோட்டம் விட்டார் சுப்ரமண்யன். ரொம்பவும் சிறிய அறை. ஓரிருவரைத் தவிர அங்கே இருக்க முடியாது என்பது தெளிவாகவே புரிந்தது.

இருவருடனும் மகா பெரியவா பேச்சை ஆரம்பிக்கும்போது காலை மணி எட்டேமுக்கால் இருக்கும்.

ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் பாலு உட்பட இன்னும் ஒரு சிலர் அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டார்கள்.

சுப்ரமண்யனைப் பார்த்து மகா பெரியவா, ”ஒனக்கு சொந்த ஊர் எது? என்று கேட்டார்.

புதுக்கோட்டை பக்கமுள்ள கோனாப்பட்டு பெரியவா. கிருஷ்ணஸ்வாமி ஐயரோட புள்ளை.

கணக்குப்பிள்ளையா இருந்தாரேடாக்டர் பத்மநாப ஐயர்அவர் ஒனக்கு என்ன சொந்தம்?

சுப்ரமண்யனுக்கு ஆச்சரியம்நடமாடும் தெய்வம் தன் குடும்பத்தைப் பற்றி அப்படியே சொல்கிறாரே என்று!

ஆமா பெரியவாசொந்தம்னு தெரியும். என்ன சொந்தம்னு தெரியாது. அப்பாகிட்டதான் கேக்கணும்.

போகட்டும். ஒன்னோட சொந்த ஊர் கோனாப்பட்டு இல்லை. அது தெரியுமோ நோக்கு? – மகா பெரியவா சொன்னதைக் கேட்டு சுப்ரமண்யனுக்கு அதிர்ச்சி.

பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. வியப்பின் உச்சத்தில் நின்று, மகா பெரியவா அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சுப்ரமண்யன்.

ஒரு சில விநாடிகளுக்குக் கண்களை மூடி, பின்னர் திறந்து பார்த்த மகா பெரியவா, ”அறந்தாங்கி பக்கம் இருக்கிற கீழாநிலைக்கோட்டை புதுப்பட்டிதான் ஒன்னோட சொந்த கிராமம் என்றார்.

சுப்ரமண்யன், அருகில் இருந்த சேதுராமன் இருவரும் அடுத்து பெரியவா என்ன சொல்லப் போகிறார் என்பதை செவி மடுக்க ஆர்வமாக இருந்தார்கள்.

ஒரு புன்னகையுடன் சுப்ரமண்யனைப் பார்த்து, ”நீ தாமரைப்பூவோட புள்ளைதானே? என்று கேட்டார் பெரியவா.

தாமரைப்பூவோட புள்ளையாபெரியவா என்ன சொல்ல வரார் என்பது சுப்ரமண்யனுக்குப் புரியவில்லை. அவரையே பார்த்து, ”பெரியவாநீங்க என்ன சொல்ல வரேள்னு எனக்குப் புரியல என்றார் தயக்கமாக.

வெளியே அமர்ந்து இந்த சம்பாஷணைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கைங்கர்யம் பாலு இப்படியும் அப்படியும் நெளிந்தார். காரணம்நேரம் போவது தெரியாமல் இங்கே பேசிக் கொண்டே போவதால்வெளியே காத்திருக்கிற பக்தர்களுக்குத் தரிசனம் தருவதில் துவங்கி மகா பெரியவாளின் மற்ற பணிகள் பாதிக்கின்றனவே என்கிற கவலை பாலுவுக்கு.

இருந்தாலும், இந்தப் பேச்சுக்கிடையிலும் இரண்டு மூன்று முறை மகா பெரியவாளுக்கு இதைப் பற்றி ஜாடையில் நினைவுப்படுத்தினார் பாலு.

சித்த நேரம்இது முடியட்டும் என்று சைகையிலேயே பாலுவுக்கும் பதில் சொன்னார் பெரியவா.

அப்படி இப்படி என்று பல விஷயங்களை சுப்ரமண்யனிடம் மிக சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த மகா பெரியவா நண்பகல் 1.30 மணிக்கு இருவருக்கும் பிரசாதம் தந்தார். சுப்ரமண்யனும் சேதுராமனும் மீண்டும் நமஸ்காரம் செய்தார்கள். விடை கொடுத்தார் பெரியவா.

வெளியே காத்திருந்த பக்தர்களுக்கு வியப்பு. சுப்ரமண்யனும் சேதுராமனும் வெளியே வருகின்றபோதுஇத்தனை நேரம் மகா பெரியவா இவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் இந்த இருவரும் என்ன பாக்கியம் செய்திருக்கிறார்களோ என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சதாராவில் இருந்து புனே வந்து, அங்கிருந்து சென்னை வந்து, அடுத்து மதுரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும், சுப்ரமண்யன் தன் தந்தை இருக்கும் இடத்தைத்தான் தேடினார்.

தந்தைக்கு நமஸ்காரம் செய்து விட்டு, சதாரா சென்றுமதுரை பிட்சாவந்தனத்தில் கலந்து கொண்டது பற்றியும், சொந்த ஊர் பற்றி பெரியவா சொன்னதையும் விவரித்தார். மகா பெரியவா மீது அதீத பக்தி கொண்ட சுப்ரமண்யனின் தந்தையான கிருஷ்ணஸ்வாமி ஐயரும் நெகிழ்வுடன் அனைத்தையும் கேட்டார்.

பெரியவா சொன்ன கருத்துக்கள் ஒவ்வொன்றையும் உணர்ச்சிப் பெருக்குடன் கேட்டு அனைத்தையும் ஆமோதித்தார்.

எல்லாம் சரிதாம்ப்பா. ஒரே ஒரு சந்தேகம் என்றுதாமரைப்பூ விஷயத்துக்கு வந்தார் சுப்ரமண்யன்.

அப்பாமகா பெரியவா என்கிட்ட நம்ம குடும்பம் பத்தி விசாரிச்சார். ‘கிருஷ்ணஸ்வாமி ஐயரோட பையன்னு உன்னைப் பத்திச் சொன்னேன். அதுக்குப் பெரியவா சொந்த ஊர், மற்ற விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுண்டு, ‘நீ தாமரைப்பூவோட புள்ளைனு சொன்னார். பெரியவா சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்குக் குழப்பம்.

தாமரைப்பூவோட புள்ளைனு சொன்னதற்கான விளக்கத்தைப் பெரியவாகிட்ட ஆன மட்டும் கேட்டேன். கடேசி வரைக்கும் அவர் சொல்லலை. ‘ஊருக்குப் போயி ஒங்க அப்பாகிட்டயே கேளுனு புன்னகையோட பிரசாதம் குடுத்து அனுச்சுட்டார். என்னப்பா இதுஎனக்குப் புரியலை என்றார் சுப்ரமண்யன் நெகிழ்ச்சியாக. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழியபெரிதாகச் சிரித்த கிருஷ்ணஸ்வாமி ஐயர்தாமரைப்பூ கதையைத் தன் மகனான சுப்ரமண்யனுக்குச் சொல்லத் தொடங்கினார்.

பெரியவா சொன்னது எல்லாமே சரிடாஅப்ப நான்ஏந்தல் இரும்பாநாடுங்கிற ஊர்ல குடி இருந்தேன். புதுக்கோட்டை அரிமளம் பக்கம் இந்த ஊர்.

எனக்கு அப்ப நெடுஞ்சாலைத் துறைப் பணின்னு உனக்குத் தெரியும். அங்கே ஒரு பாலத்தை சரி செய்கிற வேலைக்கு நான் பொறுப்பு ஏத்துண்டேன். புதுக்கோட்டை சம்ஸ்தானம்தான் இந்த வேலையை எடுத்து நடத்திச்சு. பெரிய வேலை. இது முடியறதுக்கு எத்தனை நாளாகும்னு தெரியாது.

அந்த நேரத்துல இரும்பாநாட்டுக்குப் பக்கத்துலகீழாநிலைக்கோட்டை புதுப்பட்டி கிராமத்துல மகா பெரியவா முகாம் இருக்கார்னு தகவல் தெரிஞ்சுது. எனக்கு சந்தோஷமான சந்தோஷம். காரணம்அப்ப வேலை இருந்த சூழல்ல மகா பெரியவாளை நேர்ல போய் தரிசிக்கறது இயலாத காரியம். ‘நாம இருக்கிற இடத்துக்கே மகா பெரியவா வந்திருக்கிறாரேஇந்த வாய்ப்பை நழுவ விட்டுடக் கூடாதுனு முடிவு பண்ணேன்.

புதுப்பட்டி கிராமத்துல மகா பெரியவா கேம்ப் இருக்கிறவரை தினமும் சைக்கிள்ல போய் அந்த மகானைத் தரிசிக்கணும்னு ஆசை.

மகானைத் தரிசனம் பண்ணப் போறப்ப வெறுமனே போகக் கூடாது. தினமும் என்ன எடுத்துண்டு போறதுனு யோசிச்சப்ப நான் வசிக்கிற ஏந்தல் இரும்பாநாட்டுல ஒரு குளம் என் கண்ணுல பட்டுது. ஜலம் அப்படி சுத்தமா இருக்கும். அந்தக் குளத்துல பெரிய பெரிய தாமரைப்பூக்கள் மலர்ந்து பாக்கறதுக்கே அழகா இருக்கும். இந்தப் பூக்களைப் பறிச்சு எங்கேயாவது பூஜைக்குக் குடுக்கலாமேனு அப்பப்ப தோணும். இதுக்கு இப்பதான் ஒரு தீர்வு கெடைச்சுது. ‘ஆகாஇந்தக் குளத்துல மலர்ற அழகழகான தாமரைப்பூக்களைப் பறிச்சுண்டு போய் பெரியவாகிட்ட சேர்த்தா அவர் நடத்தற சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்குப் பயன்படுத்திருப்பாரேனு தோணித்து.

அடுத்த நாள்லேர்ந்து புதுப்பட்டி கேம்ப்புக்குப் போக ஆரம்பிச்சேன். கார்த்தால ஆறரை மணிக்குக் குளத்துல எறங்கி, தாமரைப்பூக்களை ஒவ்வொண்ணா பறிக்க ஆரம்பிச்சேன். பறிச்சதை ஒரு சாக்குப்பையில போட்டுப்பேன்.

கரைக்கு வந்து என்னோட சைக்கிள்ல பெரியவா இருக்கிற இடத்துக்குப் போய் இந்த சாக்குப்பையைக் குடுத்துட்டு, அப்படியே திரும்பிடுவேன்.

ஒரு பத்துப் பதினஞ்சு நாள் தொடர்ந்து கார்த்தால வேளைல கொண்டு போய்க் கொடுத்துண்டு வந்தேன். பாலம் கட்ற வேலைல எனக்கு முக்கிய பொறுப்புங்கிறதால கேம்ப்புக்கு நான் போற நேரத்துல பெரியவாளை தரிசிக்க முடியாது.

தான் நடத்துற சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு தினமும் ஒரு சாக்குப்பைல தாமரைப்பூ தவறாம வந்து சேருவதை ஒரு நாள் பெரியவா நோட்டீஸ் பண்ணி இருக்கா. தன்னோட பூஜை கைங்கர்யத்துக்கு உதவற ஸ்ரீமடத்து சிப்பந்தி ஒருத்தரைக் கூப்பிட்டு தாமரைப்பூ விஷயம் பத்திக் கேட்டிருக்கார்.

ஆமா பெரியவாயார்னு தெரியலை. சொல்லி வெச்ச மாதிரி டயத்துக்கு சைக்கிள்ல கார்த்தால வருவார். தான் கொண்டு வந்த தாமரைப்பூ மூட்டையை என்கிட்ட சேர்த்துட்டு, முகாமைப் பாத்துக் கன்னத்துல போட்டுண்டு போயிடுவார். அவரோட நடவடிக்கையில ஒரு அவசரம் தென்படறதுனால நானும் அவர்கிட்ட எதுவும் கேக்கறதில்லைனு அந்த சிப்பந்தி சொல்லி இருக்கார்.

அப்ப சிப்பந்திகிட்ட பெரியவா, ‘நாளைக்கு தாமரைப்பூ ஆசாமி வர்றப்ப என்னைப் பாக்கக் கூட்டிண்டு வா. நான் பாக்கணும்னு சொல்லு அப்படின்னார்.

ஆக, அடுத்த நாள் சாக்குப்பை நிறைய தாமரைப்பூவைக் கொண்டு போய் வழக்கமா அந்த சிப்பந்திகிட்ட குடுக்கறப்ப, பெரியவா உத்தரவு பத்திச் சொன்னா. ‘இருங்கோபெரியவாகிட்ட சொல்லிட்டு வர்றேன்னு போனார். ‘ஆகாஅந்த மகானோட அருள் கிடைச்சுடுத்துஇருந்து பார்த்துடுவோம்னு அங்கயே உட்கார்ந்தேன்.

கொஞ்ச நேரத்துலயே மகா பெரியவாகிட்டேர்ந்து அழைப்பு வந்தது.

நாம இருக்கிற ஊருக்கே தேடி வந்து தரிசனம் தருகிற மகானது கருணையை எண்ணி, சிப்பந்தியோட நடக்க ஆரம்பிச்சேன்.

மகா பெரியவா இருந்த இடத்தை நெருங்க நெருங்கஎனக்குள் இனம் புரியாத பரவசம்.

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர்.

பெரியவாளை அத்தனை கிட்டக்க பார்த்தவுடனே என்னையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். கண்ணுல இருந்து ஜலம் கசிஞ்சது. நமஸ்காரம் பண்ணிட்டு எழுந்து நின்னேன்.

என்னை மேலயும் கீழயும் பார்த்துட்டு, ‘நீதான் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு தெனோமும் தாமரைப்பூ கொண்டு வந்து குடுக்கறியா?னு கேட்டார்.

ஆமா பெரியவா. அந்த பாக்கியம் நீங்கதான் குடுத்தேள்னு சந்தோஷத்தோட சொன்னேன்.

ரெண்டு கையையும் தூக்கி ஆசிர்வாதம் பண்ணார். பூர்வீகம், குடும்பம் பத்தி எல்லாம் விசாரிச்சார். அப்ப நம்மோட குடும்பம் பத்தி எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொன்னார். அவர் சொல்ற தகவல்களைக் கேக்க ஆச்சரியமா இருந்தது.

எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாகத் தன் நினைவுக்குக் கொண்டு வந்து உணர்வுபூர்வமாக கிருஷ்ணஸ்வாமி ஐயர் சொல்லும்போது, அவரையும் அறியாமல் கண்களில் நீர் பெருக ஆரம்பித்தது.

இந்த சம்பவம் நடந்த காலகட்டத்துக்கே தன் தந்தை சென்று, விவரித்த விதத்தை உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருந்த சுப்ரமண்யன், அடுத்து அவர் சொல்லப் போகும் தகவலுக்காகக் காத்திருந்தார்.

ஒரு சில விநாடிகளுக்குப் பின் விழிகளைத் துடைத்துக் கொண்டு கிருஷ்ணஸ்வாமி ஐயர் பேச ஆரம்பித்தார்.

அப்புறம் பெரியவா என்னைப் பார்த்து, ‘சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்குத் தாமரைப்பூ கொண்டு வந்து குடுக்கறேசர்தான்ஆனா, ஒரு நாள்கூட பூஜைக்கு நீ இருக்கறதில்லையே..?னு கேட்டார்.

வாஸ்தவம் பெரியவாஎனக்கான வேலை அப்படி. அதனால, இங்கே உக்கார்ந்து பூஜையைத் தரிசனம் பண்ண முடியலை பெரியவா. கேம்ப்புக்குள்ள நுழைஞ்சவுடனே தாமரைப்பூவைக் குடுத்துட்டு, உங்க சந்நிதானத்தை எட்டக்க இருந்து பார்த்துட்டு நமஸ்காரம் பண்ணிட்டு என் வேலையைப் பாக்க ஓடிடுவேன்னு சொன்னேன்.

லேசா புன்னகைச்ச பெரியவா, ‘இன்னிக்கு எல்லாருக்கும் உத்தியோகம்தான் பெருசா படறதுனு சொல்லிட்டு, சிப்பந்திக்கு ஏதோ ஜாடை காமிச்சார்.

அவர் உடனே உள்ளே ஓடிப் போய் ருத்திராட்ச மாலை ஒண்ணு கொண்டு வந்தார். பெரியவாகிட்ட குடுத்தார். அந்த மாலையைப் பெரியவா தன் கையில எடுத்துண்டு அனுக்ரஹம் பண்ணார். அப்புறம் அந்த ருத்திராட்ச மாலையோட மத்த பிரசாதங்களையும் சேர்த்து வெச்சு எனக்குக் குடுத்தார்.

ருத்திராட்ச மாலையை ஸ்பெஷலா வரவழைச்சு என்கிட்ட பெரியவா கொடுத்த விதத்தைப் பார்த்ததும், அதை என் கழுத்துல போட்டுக்கச் சொல்றார்னு புரிஞ்சுது. சிப்பந்தியும் அதைக் கழுத்துல போட்டுக்கச் சொல்லி எனக்கு ஜாடை காமிச்சார்.

எனக்கோ தயக்கம்; பயம். ருத்திராட்சம் எவ்ளோ புனிதம்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுவும், நடமாடும் தெய்வம் சாட்சாத் பரமேஸ்வரன் கையால கெடைக்கிற ருத்திராட்சத்துக்கு அதிக சக்தி இருக்குமேஇதைக் கழுத்துல போட்டுண்டா ஓரளவு உண்மையோட நடந்துக்கணும். பொய் சொல்லக் கூடாதுனு புரிஞ்சுது.

தயக்கத்தோட பெரியவாளைப் பார்த்தேன். ‘என்ன?னு ஜாடைல கேட்டார்.

ஒங்க கையால ருத்திராட்சம் கெடைக்காதாபாதுகை கெடைக்காதானு எத்தனையோ பேர் தவமா தவம் கெடக்கா. ஆனா, எந்தத் தகுதியும் இல்லாத எனக்கு சிவாம்சமான ருத்திராட்சம் குடுத்திருக்கேள். இதைப் போட்டுக்கற தகுதி எனக்கு இருக்கானு தெரியலைனு குரல் தேம்பிச் சொன்னேன்.

ஏன் இப்படிப் பேசுறே? ங்கிற மாதிரி ஜாடைல என்கிட்ட ஏதோ சொன்னார்.

பெரியவாநான் பாக்கறது அரசாங்க உத்தியோகம்இந்த உத்தியோகத்துல எல்லா சந்தர்ப்பத்திலும் நேர்மையா இருக்க முடியாது. சில நேரங்கள்ல பொய் சொல்லும்படியா ஆயிடும். அது பெரிய அளவுல யாருக்கும் பாதகம் தராதுன்னாலும் பொய் பொய்தானே பெரியவாஅதனால இந்த ருத்திராட்ச மாலையைப் போட்டுக்கறதுல எனக்கு தயக்கம் இருக்கு பெரியவானு சொன்னேன்.

அங்கிருந்த ஒரு சில பக்தாள்லாம் என்னை விசித்திரமா வேடிக்கை பார்த்தா. ஆனா, நான் எதைப் பத்தியும் கவலைப்படலை. பெரியவாகிட்ட உண்மையா இருக்கணும்னு தோணிச்சு. மனசுல பட்டதைச் சொல்லிட்டேன்.

பரவால்லைஉங்காத்துக்கு எடுத்துண்டு போய் பூஜை ரூம்ல ஸ்வாமி படத்துல மாட்டி வெச்சுடுனு பெரியவா சொன்னார்.

அவர் சொன்ன விதத்தைப் பாத்தா, ‘இந்தக் காலத்துல ஸ்வாமி மட்டும்தான் பொய் பேசாம இருக்கார்ங்கிற மாதிரி எனக்குப் பட்டுது.

பெரியவா சந்நிதிலேர்ந்து உத்தரவு வாங்கிண்டு வந்ததும், மொத வேலையா அந்த ருத்திராட்சத்தை ஆத்துல ஸ்வாமி படத்துக்குப் போட்டுட்டேன் என்று பூர்த்தி செய்தார் கிருஷ்ணஸ்வாமி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்ரமண்யனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது.

தங்கள் குடும்பத்துக்கு மகா பெரியவா எப்படி எல்லாம் அனுக்ரஹம் செய்திருக்கிறார் என்று நினைத்துப் பூரிக்கிற சுப்ரமண்யன் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.