மேடை ஏறவைத்து வழங்கிய மகாபிரசாதம்

ற்போது பார்க்கப் போகும் அனுபவத்துக்குச் சொந்தக்காரர் பெயர் சுவாமிநாதன். இவர் மத்திய அரசுப் பணியில் செகந்திராபாத்தில் வசித்து வந்தார்.

அப்போது வட மாநில யாத்திரை மேற்கொண்டிருந்த மகா பெரியவா செகந்திராபாத் நகரில் முகாமிட்டிருந்தார்.

மகா பெரியவாளைக் குல குருவாக ஏற்றிருக்கும் சுவாமிநாதனுக்கு மகானை நேரில் சென்று தரிசிக்க ஆசை.

அன்றைய தினம் புறப்பட்டார். அவரது நண்பரும் உடன் பணி புரிபவருமான விஜயரத்தினம் என்பவரும் ஒட்டிக் கொண்டார்.

முகாமில் கூட்டமான கூட்டம். செகந்திராபாத்தில் தமிழர்கள் அதிகம் உண்டு. தவிர, உள்ளூர் பக்தர்களும் திரளாகத் திரண்டு வந்ததால், எங்கு பார்த்தாலும் தலைகள்.

மதியம் சாப்பாட்டு நேரம் வேறுஒருபுறம் இலை போட்டு தடபுடல் சாப்பாடு விருந்து

மகா பெரியவா இருக்கிற காஞ்சிபுரத்துக்கு நம்மால போக முடியலஆனா, அந்த மகானே நம்மைத் தேடி வந்திருக்கார் என்று இருவரும் சந்தோஷமாகக் காணப்பட்டார்கள்.

இவர்கள் வந்து சேர்ந்தது மதிய நேரம்

மகா பெரியவா அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்த இடத்தில் குறைவான பக்தர்களும், பெரும்பாலான பக்தர்கள் சாப்பாட்டுப் பந்தியிலும் காணப்பட்டார்கள்.

தாமதமாக முகாமுக்கு வந்த சுவாமிநாதனும் விஜயரத்தினமும் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக அவர் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றார்கள். ஒரு சில சிப்பந்திகள் அருகே நின்று கொண்டு பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு குடும்பம் மகா பெரியவாளிடம் ரொம்ப பவ்யமாகப் பேசிக் கொண்டிருந்தது. உருக்கத்துடன் அவர்கள் பேசுகிற வார்த்தைகளை எல்லாம் அந்தப் பரப்பிரம்ம சொரூபம் காதில் வாங்கிக் கொண்டு, தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. ஐந்து நிமிடம் கழித்து அவர்களை ஆசிர்வதித்து, ஒரு புன்னகையுடன் பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

பெரியவாளிடம் இருந்து பிரசாதம் கிடைத்து விட்டால், அது ஒரு சந்தோஷம் வருகிற பக்தர்களுக்கு. மகானின் திருச்சந்நிதியில் அவர் கொட்டிய குறைகள் அனைத்தும் நல்லவிதமாக நிவர்த்தி ஆகி விடும் என்கிற நம்பிக்கை!

மகா பெரியவாளை நோக்கி சுவாமிநாதனும் விஜயரத்தினமும் நகர முற்பட்டபோது, வேறு யாரோ சிலர் கடகடவென்று வந்து நின்றனர்.

சுவாமிநாதனும் விஜயரத்தினமும் மதியச் சாப்பாடு சாப்பிடவில்லை. பசி வேறு சேர்ந்து கொண்டிருந்தது.

அவ்வப்போது சாப்பாடு பந்தி நடக்கும் இடத்தை மெள்ள நகர்ந்து சென்று எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அங்கே கூட்டம் குறைந்து கொண்டே வருவதைப் பார்த்தால் இருவரின் வயிற்றில் லேசாகப் புளி கரைக்க ஆரம்பித்தது.

நல்லவேளையாகஅந்த சிலரும் மகா பெரியவாளிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இருவரும் ஓட்டமாக ஓடாத குறையாகப் பெரியவா முன் போய் நின்றார்கள். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.

பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா இருவரைப் பற்றியும் விசாரித்தார். சொந்த ஊர், குடும்பம் எல்லாவற்றையும் பேசி பதினைந்து நிமிடத்துக்குப் பின் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அனுப்புகிறபோது, ”சாப்டுட்டுப் போங்கோ என்று பந்தி நடக்கிற இடத்தையும் கை காண்பித்தார் பெரியவா.

பசி உச்சத்தில் கோரத் தாண்டவம் ஆடஇருவரும் கண்மண் தெரியாமல் சாப்பாட்டுப் பந்தி நடக்கிற இடத்துக்கு ஓடினார்கள்.

ரயிலைப் பிடிக்கத் தாமதமாக பிளாட்பாரத்துக்குள் நுழைகிறபோது, கண்களுக்கு நேரே அந்த ரயில் புறப்பட்டு வேகம் எடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

ஓடிப் போய்த்தான் ஏற முடியுமா? ஆபத்தாயிற்றே!

அதுபோல்தான் இருந்தது.

மகா பெரியவா சொல்லி சாப்பாட்டுப் பந்தி நடக்கும் இடத்துக்கு மூச்சிரைக்க வந்து சேர்ந்த சுவாமிநாதனும் விஜயரத்தினமும் சுரத்திழந்து போனார்கள்.

பந்தி நடந்த இடம் காலியாக இருந்தது. சற்று முன் அங்கே மிகப் பெரிய சாப்பாட்டுப் பந்தி நடந்தது என்பதற்கான அறிகுறிகளே தற்போது இல்லை.

ஒரு மூலையில் பெரிய பெரிய பாத்திரங்களைச் சிலர் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாட்டு ஹாலுக்கு இன்சார்ஜ் போல் தெரிந்த ஒரு பிராமணரிடம் சென்ற சுவாமிநாதன், ”மாமாசாப்பாடு இருக்கா? நாங்க ரெண்டு பேரு இருக்கோம் என்று விஜயரத்தினத்தையும் காட்டி ஈனஸ்வரத்தில் கேட்டார்.

அந்த இன்சார்ஜ் மாமா, உதட்டைப் பிதுக்கி, ”இப்பதாம்ப்பா காலி ஆச்சு. சித்த முன்னாடியே கடைசிப் பந்திப்ப வந்திருந்தா, இருக்கிறதை அட்ஜஸ்ட் பண்ணிப் போட்டிருக்கலாமே என்று வருத்தப்பட்டார்.

சாப்பாடு இல்லை என்பதை சற்றும் முகம் சுளிக்காமல்இத்தனை அசதியிலும்இவ்வளவு தன்மையாகச் சொல்கிறாரே என்கிற சந்தோஷத்தில், ”பரவாயில்லை மாமாநாங்க வெளில பாத்துக்கறோம் என்று சுவாமிநாதன் அங்கிருந்து நகர்ந்தார்.

ஆனாலும், இவர்கள் இருவரின் வயிற்றுக்குள் பசி என்னும் அரக்கன் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான்.

பரவால்லைசாப்பாட்டு டைம் முடிஞ்சு ரொம்ப நேரமும் ஆயிடுத்துஅவா என்ன பண்ணுவாசாப்பாடு வெச்சுண்டு இல்லேன்னா சொல்றா? என்று தன்னைத் தேற்றிக் கொள்ளும் விதமாக விஜயரத்தினத்தையும் பார்த்துச் சொல்லி விட்டு, நகர முற்பட்டார் சுவாமிநாதன்.

முகாமை விட்டு வெளியே வர வேண்டும் என்றால், மகா பெரியவா இருக்கிற இடத்தைக் கடந்துதான் போயாக வேண்டும்.

தனித்து ஏகாந்தமாக அமர்ந்திருக்கிற மகா பெரியவாளைக் கடந்து போக முற்பட்டார்கள் இருவரும்.

மகா பெரியவா பார்வை வேறு எங்கோ இருந்தது. இருவரும் வேகமாக நடந்து, கிட்டத்தட்ட கடந்தும் விட்டார்கள்.

திடீரென்று ஒரு சொடக்குச் சத்தம் கேட்டது.

தற்செயலாக சுவாமிநாதன் திரும்பிப் பார்த்தார்.

பார்த்தால்சொடக்குச் சத்தம் வந்தது மகா பெரியவாளிடம் இருந்து.

தன் அருகே வருமாறு சுவாமிநாதனுக்கு ஒரு ஜாடை காண்பித்தார் மகா பெரியவா.

சுவாமிநாதனுக்குப் பரவசம். ‘நடமாடும் தெய்வம் மீண்டும் நம்மை ஆசிர்வதிக்க அழைக்கிறதோ?

தன் பின்னால் வருமாறு விஜயரத்தினத்துக்கும் சைகை காண்பித்து விட்டு, பெரியவா அமர்ந்திருக்கிற இடம் நோக்கி ஓடினார் சுவாமிநாதன்.

சாப்டுடுட்டு வர்றியா?

சுவாமிநாதன் யோசித்தார். என்ன பதில் சொல்வது?

சாப்பிட்டேன் என்று சொன்னால் பொய்.

சாப்பிடலை என்று சொன்னால், குற்றம் சுமத்துவது போல் ஆகி விடும்.

மகா பெரியவா அதே கேள்வியை சுவாமிநாதனைப் பார்த்து மீண்டும் கேட்டார்.

உண்மையையே சொல்லி விடலாம் என்று தீர்மானித்து, ”பெரியவாசாப்பிடலாம்னுதான் போனோம். ஆனா, காலி ஆயிடுத்து. பாத்திரமெல்லாம் தேய்ச்சுண்டிருக்கா பெரியவா.

மகா பெரியவாளிடம் இருந்து பதில் வரவில்லை. பூரண அமைதி!

சுவாமிநாதனும் விஜயரத்தினமும் கைகளைக் கட்டிக் கொண்டு மரியாதையுடன் நின்றிருந்தார்கள்.

மேனேஜரை அருகே வரவழைத்து இந்த விஷயத்தை உறுதி செய்து கொண்டார் பெரியவா.

ஸ்ரீமடத்தின் மேனேஜருக்கும் சங்கடம். ‘அடடாஎல்லா பக்தாளுக்கும் சாப்பாடு போட்டோம். இந்த ரெண்டே ரெண்டு பேருக்கும் மட்டும் இல்லாம போயிடுத்தே.

தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தார் மகா பெரியவா.

அருகே ஒரு மேடை காணப்பட்டது. ஏதேனும் கச்சேரி போன்றவை இருந்தால், இந்த மேடையில் நடக்கும்.

அந்த மேடையை மகா பெரியவா அடையாளம் காண்பித்து இருவரையும் அதில் ஏறி நிற்கச் சொன்னார்.

சுவாமிநாதன் குழம்பினார். அதன் மேல் ஏன் நிற்கச் சொல்கிறார்? ‘பெரியவா கீழே இருக்கின்றபோது, நாம் எப்படி மேடையில் ஏறி நிற்பது?

முதலில் ஏறவில்லை. தயங்கினார்.

ஆனால், மகா பெரியவா தன் உத்தரவை மீண்டும் சுவாமிநாதனுக்குத் தெரியப்படுத்தினார்.

இல்லேபெரியவாநீங்க கீழ நிக்கறபோது நாங்க ரெண்டு பேரும் மேடைல ஏறக் கூடாது என்றார் பவ்யமாக. தவிர, ஏன் மேடை மேல் ஏறச் சொல்கிறார் என்பதும் புரியவில்லை.

மதியம் உறக்கம் வருகிற வேளை என்றாலும், வந்திருந்த பக்தர்கள் எவரும் ஓய்வெடுக்கச் செல்லாமல், இங்கே என்ன நடக்கப் போகிறது என்று வேடிக்கைப் பார்ப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

மொதல்ல ரெண்டு பேரும் மேடை மேல ஏறுங்கோ என்ற மகா பெரியவா, சிப்பந்திகளைப் பார்த்துஅவர்களை ஏத்துங்கோ என்பது மாதிரி ஜாடை காண்பித்தார்.

இதற்கு மேல் தட்ட முடியாது என்பதால், சுவாமிநாதனும் விஜயரத்தினமும் ஒன்றாக மேடை ஏறினார்கள். மையப் பகுதியில் நின்றார்கள்.

ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் மேடைக்கு முன்னால் முட்டி மோதிக் கொண்டு திரண்டு விட்டது. ‘எதற்காக இவர்களை மகா பெரியவா மேடை ஏறச் சொன்னார்? என்று குழம்பினார்கள்.

ஒரு சிப்பந்தியை அழைத்து, மகா பெரியவா ஏதோ குறிப்பால் சொன்னார்.

அவர் ஓடிப் போய் ஒரு மூங்கில் தட்டைக் கொண்டு வந்தார். பெரியவாளிடம் நீட்டினார்.

அந்தத் தட்டில் டிரை ஃப்ரூட்ஸ் (உலர்ந்த பழங்கள்) காணப்பட்டன. முந்திரி, பாதாம், திராட்சை போன்றவை தனித் தனியே அட்டைப்பெட்டியில் இருந்தன.

முந்திரி, பாதாம், திராட்சைஇவற்றில் இருந்து கொஞ்சம் தன் கையில் எடுத்துக் கொண்டார்.

மேடை மேல் நின்று கொண்டிருக்கிற சுவாமிநாதன், விஜயரத்தினம்இருவர் மீதும் அனைவரின் பார்வையும் காணப்பட்டது. இருவரும் சற்று சங்கோஜத்துடன் பார்வையைப் பல்வேறு பக்கங்களில் திருப்பிக் கொண்டனர்.

மேடைக்கு அருகே சென்ற மகா பெரியவா, சுவாமிநாதனை முதலில் அருகே வரச் சொன்னார். அதுவும் மேடையில் இருந்து கீழே இறங்காமல் வருமாறு சைகை காண்பித்தார்.

யோசித்துப் பாருங்கள்மகா பெரியவா மேடைக்குக் கீழே நிற்கிறார். மேடையில் இருந்தபடி ஒருவர் அவரிடம் பேசினால் எப்படி இருக்கும்?

இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் அதிசயித்தார்கள்.

சுவாமிநாதனிடம் இவற்றைக் கையில் கொடுத்தார். அதேபோல் விஜயரத்தினத்தையும் அருகே வரச் சொல்லி அவரிடமும் கொஞ்சம் கொடுத்தார்.

பிறகு, இருவரையும் பார்த்து மகா பெரியவா சொன்னார்: ”உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு இங்கே சாப்பாடு போட முடியலை. பசியோட இருக்கிற ஒங்களை சாப்பிடாம அனுப்பக் கூடாது. நான் குடுக்கற இதைச் சாப்பிடுங்கோ என்றார்.

மகா பெரியவாளின் அன்பை நினைத்து சுவாமிநாதனுக்கும் விஜயரத்தினத்துக்கும் கண்ணீரே வந்து விட்டது.

அங்கு கூடி இருந்த பக்தகோடிகள் அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்துப் பேசிக் கொண்டனர். ”பாருங்கோஎத்தனை பெரிய பாக்கியம் அவாளுக்குக் கெடைச்சிருக்கு. மகா பெரியவா தன் கையாலயே குடுத்திருக்கா. இது அவா வாய்க்குள்ள போன மறுவிநாடி அதுவரை அவாளுக்கு இருந்த பசி எல்லாம், இருந்த எடம் தெரியாம ஓடிப் போயிடும்.

உண்மைதான்!

சுவாமிநாதன் பிற்பாடு சொன்னார்: ”மகா பெரியவா குடுத்தது எல்லாம் ரெண்டே ரெண்டுதான். ரெண்டு முந்திரி. ரெண்டு பாதாம். ரெண்டு திராட்சை. ஆனா, அதை வாய்க்குள்ள போட்ட மறு கணம் எங்க வயிறு ரொம்பிடுத்து. அது சாதாரண பிரசாதம் அல்ல. மகா பிரசாதம்.

அன்னதானம் வழங்கிய வள்ளல், பசியோடு இருப்பவரை அப்படியே வீட்டுக்கு அனுப்புவாரா, என்ன?!