‘தர்மமிகு சென்னை‘ என்று தமிழகத்தின் தலைநகரைச் சிறப்பித்தவர் வள்ளலார் அடிகளார்.
அந்த அளவுக்கு ஆலயங்களும் வழிபாடுகளும் பன்னெடுங் காலமாகச் சிறந்து விளங்கி தர்மத்தை இன்றளவும் பரப்பி வருகின்றன.
சென்னையின் அடையாளத்தைச் சொல்லும் மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர், மண்ணடி ஸ்ரீகாளிகாம்பாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் என்று ஏராளமான ஆலயங்கள் உண்டு.
அவற்றுள் அஷ்டலட்சுமி ஆலயமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு கோயில்.
சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையில் அமைந்திருந்திருக்கிறது அஷ்டலட்சுமி ஆலயம். ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி ஆகிய எட்டு லட்சுமிதேவிகளுக்கும் இங்கே தனித் தனியாக திருச்சந்நிதிகள் உண்டு.
‘அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று அமோகமாக வாழுங்கள்‘ என்று பெரியவர்கள் வாழ்த்துவதைப் பார்த்திருக்கிறோம். இத்தகைய அஷ்ட ஐஸ்வர்யங்களையும் ஒருசேர வழங்க வல்ல லட்சுமிதேவியர் ஒரே இடத்தில் சென்னை – பெசன்ட் நகரில் குடி கொண்டிருப்பது சிறப்பு.
நித்தமும் திரளானோர் இங்கு வந்து தேவியர்களை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் காற்றும் வாங்கிச் செல்கிறார்கள்.
காஞ்சி மகா பெரியவாளின் கனவில் மகாலட்சுமிதேவி ஒரு நாள் தோன்றி, தனக்கு இப்படிப்பட்ட – அதாவது எட்டு லட்சுமியர்களுக்கும் சேர்த்து ஓர் ஆலயத்தை நிர்மாணிக்குமாறு கேட்டுக் கொண்டாள். மகா பெரியவாளின் கனவில் மகாலட்சுமிதேவி கேட்டுக் கொண்டதை நிறைவேற்றுகிற பேறு முக்கூர் சீனிவாச வரதாச்சார்யருக்குக் கிடைத்தது. வைணவத்தைச் சார்ந்தவர் என்றாலும், காஞ்சி மகா பெரியவா மீது சீனிவாச வரதாச்சார்யருக்கு அளவு கடந்த பக்தி உண்டு.
முக்கூர் சீனிவாச வரதாச்சார்யர் கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான தேவராஜுலு நாயுடுவுடன் இணைந்து அஷ்டலட்சுமி ஆலயத் திருப்பணிகளைத் துவங்கினார்.
அவ்வப்போது இருவரும் காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளைத் தரிசித்து, ஆலயத் திருப்பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது குறித்து விளக்கி விட்டு வருவது வழக்கம்.
காஞ்சி மகா பெரியவாளின் குருவருளாலும், லட்சுமிதேவியின் திருவருளாலும் 1976-ல் பணிகள் பூர்த்தி அடைந்தன.
அடுத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமே! அதற்கு உரிய ஒரு தினத்தையும் வேத பண்டிதர்களைக் கொண்டு குறித்தார்கள்.
கும்பாபிஷேகத் தேதி குறிக்கப்பட்ட விவரம் பற்றி மகா பெரியவாளிடம் தெரிவித்து அவரது ஆசிகளைப் பெறலாம் என்று முக்கூர் சீனிவாச வரதாச்சார்யரும், தொழிலதிபர் தேவராஜுலு நாயுடுவும் காஞ்சிக்குச் சென்றனர்.
மகா பெரியவாளை வணங்கி விட்டு, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகத் தேதி பற்றிய விவரத்தை இருவரும் உற்சாகமாகச் சொன்னார்கள்.
எதுவும் பேசாமல் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் மகா பெரியவா. பிறகு, ”கும்பாபிஷேகத்தன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் எங்கே இருப்பேள்?” என்று கேட்டார்.
ஆச்சார்யருக்கும் நாயுடுவுக்கும் தூக்கி வாரிப் போட்டது. ‘கும்பாபிஷேக தினத்தன்று எங்கே இருப்போம்… பார்த்துப் பார்த்துக் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகம் நடக்கின்ற அன்று பெசன்ட் நகரில்தானே இருப்போம்? எல்லாம் சரியாக நடைபெறுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டாமா? பெரியவா ஏன் இப்படிக் கேட்கிறார்?‘ என்று இருவரும் ஏகத்துக்குக் குழம்பினார்கள்.
ஆனாலும், நடமாடும் தெய்வமான மகா பெரியவா குண்டு போட்டது மாதிரி இப்படிக் கேட்டால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று தெளிந்த இருவரும் அவரை வணங்கினார்கள். பிறகு, மிகுந்த விநயத்துடன், ”பெரியவா… கோயில் கும்பாபிஷேகத்தன்னிக்கு கர்த்தாவான நாங்க ரெண்டு பேரும் அங்கேயே இருப்பதுதானே முறை? ஏற்பாடு பண்ணபடி எல்லாம் சரிவர நடக்கறதானு பாக்க வேண்டாமா? அன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் கோயில்லதான் இருப்போம் பெரியவா” என்றனர் கோரஸாக.
பெரியவா முகத்தில் ஒரு தீர்க்கம். இருவரையும் உற்று நோக்கினார். பிறகு, ”நா சொல்றதைக் கேக்கறேளா?” என்றார்.
என்ன சொல்லப் போகிறாரோ என்று குழம்பிய இருவரும் ”நிச்சயம் பெரியவா. நீங்க என்ன சொன்னாலும் அது எங்களுக்கு வேத வாக்கு” என்று தலையசைத்தனர்.
மகா பெரியவா நிதானமாக ஆரம்பித்தார்: ”கும்பாபிஷேகம் நடக்கிற அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு வரக் கூடாது. அது மட்டுமல்ல… பெசன்ட் நகர் பக்கமே வரக் கூடாது” என்றார் தீர்மானமான குரலில்.
இருவரும் அதிர்ந்தார்கள். ‘இரவு பகல் பாராது – கால நேரம் பாராது நாங்கள் இருவரும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கோயில் அது… அந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தின்போது நாங்கள் இருவரும் அங்கே இருக்கக் கூடாதா? பெசன்ட் நகர் பக்கமே வரக் கூடாதா?‘ என்று அடுக்கடுக்கான கேள்விகள் இருவர் மனதில் அடுத்தடுத்து உதித்தன. என்றாலும், கலியுக தெய்வமான மகா பெரியவா சொன்னால், அதில் ஒரு பொருள் இருக்கும் என்கிற அசாத்தியமான நம்பிக்கை இவர்கள் இருவருக்குமே உண்டு.
இருவரையும் பார்த்து, ”நீங்க ரெண்டு பேரும் அன்னிக்குக் கோயில் பக்கமே வரக் கூடாது. ஏதாவது கண் காணாத எடத்துக்குப் போயிடணும்” என்றார்.
இதைக் கேட்டவுடன் கண்கள் பனிக்க இருவரும் மகா பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார்கள்.
அன்றைய தினம் மகா பெரியவாளைச் சுற்றி இருந்த ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஆலய நிர்வாகஸ்தர்கள் சிலரும் மகா பெரியவாளின் இந்த உத்தரவுக்கு விடை காண முடியாமல் குழம்பினார்கள்.
ஆச்சார்யருக்கும் நாயுடுவுக்கும் கிட்டத்தட்ட கண்கள் கலங்கவே ஆரம்பித்து விட்டன.
தொண்டையை சற்றே செருமிக் கொண்டு, முக்கூர் சீனிவாச வரதாச்சார்யர் மகா பெரியவாளிடம் ஏதோ கேட்பதற்காக வாயைத் திறந்தார்.
என்ன கேட்டார் மகா பெரியவாளிடம்?
முக்கூர் சீனிவாச வரதாச்சார்யர், ”மகா பெரியவா… இப்ப நான் கேக்கறதுக்கு மன்னிக்கணும். இந்தக் கோயில் அமைவதற்கு அடியேனும் தேவராஜுலு நாயுடுவும் பெருமாளோட அனுக்ரஹத்தின்படியும் ஒங்களோட ஆசியின்படியும் ஒரு காரணமாக இருந்துள்ளோம்.
இப்படிப்பட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறபோது நாங்கள் இருவரும் அங்கே இல்லை என்றால், எங்கள் மனம் பெரிதும் சங்கடப்படுமே… தவிர, இந்த கும்பாபிஷேகப் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்கள் பலரும் எங்களை அங்கே காணாமல் தவறாக எண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறதே… கும்பாபிஷேகம் நடக்கின்ற நேரத்தில் கோயிலிலே இருக்கக் கூடாத அளவுக்கு நாங்க என்ன தவறு செய்தோம் பெரியவா…” என்று தேம்புகிற குரலில் கேட்டார்.
இதை ஆமோதிப்பது போல் கோவை தேவராஜுலு நாயுடுவும் கண்கள் பனிக்க, மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்தக் கேள்விக்கான பதிலை மகா பெரியவா உடனே சொல்லவில்லை. இருவரையும் பார்த்து, ”சொன்னபடி ரெண்டு பேரும் பண்ணுங்கோ. காரணத்தை ஒங்களுக்கு அப்புறமா சொல்றேன்” என்று பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
மகா பெரியவா உத்தரவிட்டபடி அவரது திருவாக்கை மீறாமல், கும்பாபிஷேகத்துக்கு முந்தின நாள் வரை ஆலயத்தில் என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்து முடித்தார்கள். ‘கும்பாபிஷேக நேரத்தில் எங்கள் இருவரையும் தேடாதீர்கள்‘ என்று பொத்தாம்பொதுவாக நிர்வாகக் குழு அன்பர்களிடம் சொல்லி விட்டு, இருவரும் அகன்றார்கள்.
அடுத்த நாள் குறித்த நேரத்தில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம். ஆனால், வந்திருந்த பலரும் முக்கூர் சீனிவாச வரதாச்சார்யரையும், கோவை தேவராஜுலு நாயுடுவையும் தேடித் தேடி அலுத்துப் போய் விட்டார்கள். என்ன காரணத்தினால் இவர்கள் இருவரும் கும்பாபிஷேக வேளையில் ஆலயத்தில் இல்லை என்பதற்கான பதில் எவருக்கும் தெரியவில்லை. யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தார்கள். ‘என்ன காரணம் என்று தெரியவில்லை‘ என்று எல்லோருமே உதட்டைப் பிதுக்கினார்கள்.
எப்படித் தெரியும்? இந்தக் கேள்விக்கான பதில் மகா பெரியவாளுக்கு மட்டும்தானே தெரியும்! ‘கும்பாபிஷேக வேளையில் கோயில் பக்கமே தலை காட்டக் கூடாது‘ என்று கண்டிப்புடன் அல்லவா அந்த மகான் உத்தரவிட்டிருக்கிறார்! இந்த நிலையில் அவர் திருவாய் மலர்ந்தால்தானே உண்மைக் காரணம் அனைவருக்கும் புரியும்?!
கும்பாபிஷேகம் முடிந்த அன்று மாலை பிரசாதங்களையும் மலர்மாலைகளையும் எடுத்துக் கொண்டு முக்கூர் சீனிவாச வரதாச்சார்யரும், தேவராஜுலு நாயுடுவும் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குச் சென்றார்கள். மடத்துக்குப் போய் மகா பெரியவா சொல்லப் போகிற காரணத்தை அறிந்து கொள்கிற வரை இருவருக்கும் இனம் புரியாத படபடப்பு.
மகா பெரியவாளிடம் கும்பாபிஷேகப் பிரசாதத்தை பவ்யத்துடன் சேர்த்து விட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்கள்.
அவர்கள் கொண்டு வந்து வைத்த மூங்கில் தட்டில் இருந்து கும்பாபிஷேக ரக்ஷையையும், தீர்த்தத்தையும், குங்குமத்தையும் ஸ்வீகரித்துக் கொண்டார் மகா பெரியவா.
என்ன காரணத்துக்காகத் தங்களை கும்பாபிஷேகம் நடக்கின்ற வேளையில் கோயிலில் இருக்க வேண்டாம் என்பதற்கான காரணத்தை மகா பெரியவாளிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருவரும் மகானது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தார் மகா பெரியவா. பிறகு, ”என்ன காரணத்துக்காக கும்பாபிஷேகம் நடக்கிற எடத்துல நீங்க தலை காட்ட வேண்டாம்னு சொன்னேன்… அதுக்கான காரணத்தைத் தெரிஞ்சுக்க ரெண்டு பேரும் பொறப்பட்டு வந்திருக்கேள்… சர்தானா?” என்று ஒரு புன்னகையுடன் மகா பெரியவா கேட்க… இருவரும் ஆமோதித்தார்கள்.
‘நா எதுக்காகச் சொன்னேன்னா அது ஒங்களோட நல்லதுக்குத்தான். காரணத்தைச் சொல்றேன். கேளுங்கோ.
காஞ்சிபுரத்துல இருக்கிற வரதராஜ பெருமாள் கோயில் ஒங்களுக்கு நன்னாவே தெரியும். அந்தக் கோயிலோட பிரதான வாசல்ல இருக்கிற ராஜகோபுரத்தை விட அதுக்கு நேர் பின்புறம் இருக்கிற ராஜகோபுரம்தான் பெருசு. அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு அந்த ராஜகோபுரம் இருக்கும்.
ஆனா, வரதராஜர் கோயில்ல ஒரு உத்ஸவம்னா, பின்புறம் இருக்கிற பிரமாண்ட ராஜகோபுரம் வழியா பெருமாள் உத்ஸவர் விக்கிரகங்களை எடுத்துண்டு போக மாட்டா.
காரணம், என்ன தெரியுமா? அந்தப் பெரிய ராஜகோபுரத்தைக் கட்டிய அரசன், கும்பாபிஷேகத்தின்போது கலந்து கொண்டான். அந்த ராஜகோபுர கலசத்துக்கு நீர் ஊற்றும்போது, ‘இவ்வளவு பெரிய ராஜகோபுரத்தை நானா கட்டினேன்‘ என்று தற்பெருமை கொண்டு விட்டானாம். தற்பெருமை எங்கே இருக்கோ, அங்கே ஸ்வாமி எழுந்தருள மாட்டார். அதனால, இந்தப் பெரிய ராஜகோபுர வாசல் வழியே பெருமாள் வருவதில்லை.
அதுபோல் நீங்கள் பார்த்துப் பார்த்துக் கட்டிய பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்துக்கு நீர் ஊற்றுகிற வேளையில் ரெண்டு பேரும் கோயில்ல இருந்தால், உங்களுக்கும் இந்த அரசனுக்கு வந்ததுபோல் தற்பெருமை எண்ணம் வரவும் நேரிடலாம். அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வந்து விட்டால், கோயில்ல அதன் பின் அஷ்டலட்சுமி இருக்க மாட்டாள். நீங்க மட்டும்தான் இருக்க முடியும். அதனால்தான் அப்படிச் சொன்னேன்” என்று மகா பெரியவா முடிக்க…
முக்கூர் சீனிவாச வரதாச்சார்யரும், கோவை தேவராஜுலு நாயுடுவும் கண்கள் பனிக்க மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.தன் பக்தர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் அகந்தை, தற்பெருமை, மமதை போன்றவை வரவே