“அச்சுவெல்ல ஆபத்து அகன்று போனதா..?”

பாரத தேசம் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது.

சரியாக அப்போது மகா பெரியவா விழுப்புரத்தை அடுத்த திருக்கோவிலூர் அருகே வசந்த கிருஷ்ணாபுரத்தில் சாதுர்மாஸ்யம் மேற்கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே சுதந்திர தினத்தை ஒட்டி தேச மக்களுக்கு வாழ்த்துச் செய்தியும் வழங்கி இருந்தார்.

கிருஷ்ணாபுரத்தில் ஜெயராமன் என்கிற அந்தண நிலச் சுவான்தார் இல்லத்தில் இந்த சாதுர்மாஸ்ய விரதத்தை மகா பெரியவா சில மாதங்களுக்குக் கடைப்பிடித்தார்.

சாதாரணமாக மகா பெரியவா ஒரு இடத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கேம்ப் போடுகிறார் என்றாலே, அதற்கு இன்னின்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று ஸ்ரீமடத்தில் கட்டுப்பாடுகள் சொல்லுவார்கள்.

கட்டுப்பாடு என்றால், டாம்பீகமோ, படாடோபமோ அல்ல. எல்லாம் மகா பெரியவா ஆச்சார அனுஷ்டானங்கள் தொடர்பானவை.

கிணறு அவசியம் இருக்க வேண்டும்; சந்திரமௌளீஸ்வரர் பூஜை நித்தமும் நடத்துவதற்கு வசதி தேவை; பூஜைக்கு புஷ்பங்கள் வேண்டும். கைங்கர்ய அன்பர்கள், வருகின்ற பக்தர்கள் சாப்பிடுவதற்கு தனித் தனி சமையல் வேண்டும்; யானை, குதிரை, ஒட்டகம் இவை தங்குவதற்கு இடம் தேவை. இவற்றுக்குத் தேவையான ஆகாரமும் வேண்டும்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மகா பெரியவா ஓரிடத்தில் கேம்ப் போடுவதற்கு முன் ஸ்ரீமடத்துக் காரியதரிசிகள் சம்பந்தப்பட்ட ஊருக்கே நேரில் போய் எந்த இல்லத்தில் தங்கப் போகிறாரோ, அந்த இடத்துக்கே போய் ஆராய்வார்கள். எல்லாம் அவர்களுக்குத் திருப்தி என்கிற பட்சத்தில் மகா பெரியவாளிடம் தெரிவித்து விட்டு, அவருடைய சம்மதத்தைப் பெறுவார்கள். அதன் பிறகே, மகா பெரியவா யாத்திரை சம்பந்தப்பட்ட விவரம் வெளியே அறிவிக்கப்படும்.

அதன்படி அந்த வருட சாதுர்மாஸ்ய விரதத்துக்கு (வசந்த) கிருஷ்ணாபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு ஜெயராமன் இல்லம் தேர்வானது.

1947-ஆம் ஆண்டு மகா சிவராத்திரியை காஞ்சிபுரத்திலேயே நடத்தி விட்டு, அதன் பின் உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் போன்ற தலங்களை தரிசித்து விட்டு, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்வதற்காக கிருஷ்ணாபுரம் வந்தார் மகா பெரியவா.

அதற்கு முன்னால், கிருஷ்ணாபுரத்தில் இருக்கிற நிலச் சுவான்தார் ஜெயராமன் இல்லத்துக்கு ஸ்ரீமடத்தின் பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டனர். தங்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் உள்ளனவா என்று கேட்டும் பார்த்தும் அறிந்தனர்.

மகா பெரியவா இந்த இல்லத்தில் முகாமிடப் போகிறார் என்பதை அறிந்ததும், ஜெயராமனுக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்னேநடமாடும் தெய்வமான பெரியவாளின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று பலரும் ஏங்கி இருந்த அந்தக் காலத்தில் பெரியவாளே சில மாதங்களுக்கு முகாமிடப் போகிறார் என்றால், சாதாரணமா?

கிருஷ்ணாபுரத்துக்கு மகா பெரியவா வரப் போகிற நாள் நெருங்க நெருங்கஒரு வித சந்தோஷம் ஜெயராமன் குடும்பத்தை ஆட்கொண்டாலும், ஒரே ஒரு தவிப்பு.

உள்ளம் மகிழ்ச்சியுடன் காணப்படுகிற இந்த நேரத்தில் என்ன தவிப்பு?

சில நாட்களுக்கு முன்தான் தனது வயல்களில் விளைந்த கரும்புகளை வெட்டி, அதை சாறு பிழிந்து, அச்சு வெல்லம் ஆக்கி இருந்தார் ஜெயராமன். அந்த வருடம் நல்ல மகசூல்.

மூட்டைக் கணக்கில் சேர்ந்த அச்சு வெல்லங்களை விற்றால் நல்ல தொகை கிடைக்கும். ஆனால், அந்த நேரத்தில் அச்சு வெல்ல மூட்டைகள் ஜெயராமன் எதிர்பார்த்த விலைக்குப் போகவில்லை. நல்ல விலையுடன் எவரேனும் வியாபாரி வருவார் என்று நித்தமும் காத்திருந்தார். வந்தவர்கள் அனைவரும் ஜெயராமன் எதிர்பார்த்த தொகையைத் தருவதற்குத் தயாரில்லை. ரொம்பவும் விலை குறைத்துக் கேட்டார்கள். தருவது இல்லை என மறுத்து விட்டார்.

நாட்கள் ஓடின.

மகா பெரியவா வருகிற நாளும் நெருங்கி விட்டதேஅச்சு வெல்ல மூட்டைகள் வீட்டில் ஒரு பெரிய அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருக்கிறதேபூட்டப்பட்டிருக்கிற அறைக்கு முன்தான் சந்திரமௌளீஸ்வரர் பூஜை நடத்த வேண்டும். எனவே, மகா பெரியவா இல்லத்துள் நுழைந்து விட்டால், மூட்டைகளை வெளியே எடுக்கவே முடியாது. அந்த மகான் இந்த இல்லத்தில் திருப்பாதம் பதிப்பதற்கு முன் ஓரளவு விலை கிடைத்தாலாவது பரவாயில்லை என்று தன்னை ஓரளவு தேற்றிக் கொண்டு தவிப்புடன் காணப்பட்டார் ஜெயராமன்.

ஆனால், சோதனை பாருங்கள்மூட்டைகளை வாங்குவதற்கு வியாபாரிகள் எவருமே எட்டிப் பார்க்கவில்லை.

ஜெயராமனும் அவரது மனைவி ஜெயலட்சுமியும் பேசிக் கொண்டனர். ”என்னங்கபெரியவா சாதுர்மாஸ்ய விரதம்னா மாசக்கணக்குல இங்கே தங்கி இருப்பார். இந்த நேரம் பார்த்து மூட்டைங்க விலைக்குப் போக மாட்டேங்குது. அறைக்குள்ளயே பூட்டி வெச்சா, பெரியவா வந்த பிறகு வெளியே எடுக்க முடியாது. எத்தனை நாட்களுக்கு அச்சு வெல்லம் அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்? தண்ணி கோத்துக்காதா? அப்படி தண்ணி கோத்துண்டா இதை விலைக்கு வாங்க ஆசாமிங்க கிடைக்க மாட்டேங்களே என்றார் ஜெயலட்சுமி கவலையுடன்.

மனைவி சொன்னதை ஆமோதித்தார் ஜெயராமன். ”ஆமாம்ம்மாநீ சொல்றது வாஸ்தவம்தான். இந்த அவசரத்துல வந்த விலைக்குக்கூட இதை வித்துடலாம்னு பார்த்தா முடியலை. என்ன பண்றதுஇனிமே பெரியவா இங்கிருந்து புறப்பட்ட பிறகுதான் விக்கிறதைப் பத்தி யோசிக்க முடியும். எல்லாம் பெரியவா விட்ட வழின்னு பூஜையை தரிசனம் பண்ணிண்டு இருக்க வேண்டியதுதான் என்றார்.

வசந்த கிருஷ்ணாபுரத்தில் மகா பெரியவா திருப்பாதம் பதித்தார்.

ஊர் எல்லையில் திருக்கோவிலூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அன்பர்கள் திரளாக இணைந்து மேளதாளத்துடன் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து மகா பெரியவாளை வரவேற்றனர்.

ஜெயராமன் குடும்பத்தினரை புன்னகையுடன் ஆசிர்வதித்து விட்டு, அந்த பிரமாண்டமான இல்லத்துக்குள் திருவடிகளை எடுத்து வைத்தார் பெரியவா.

ஒரு மகானது திருவடிகள் எங்கே படுகிறதோ, அந்த இடம் புனிதம் பெற்றதாகி விடும்.

ஆண்டாண்டு காலமாக மழை இல்லையா?

மகானின் திருவடிகள் அந்த ஊரில் பட்டதும், வருண பகவான் வள்ளல் ஆகி விடுவான். மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.

பயிர் விளைச்சல் சரியாக இல்லையா? காய்ந்து போனகருகிப் போன பயிர்கள் புத்துயிர் பெற்று விடும்.

அதுவும் அந்த நாளில் காஞ்சி மகா பெரியவாளின் திருப்பாதங்கள் தங்கள் ஊரில் படாதா என்று ஏங்கிக் காத்திருப்பார்கள் கிராம மக்கள்.

இதே வசந்த கிருஷ்ணாபுரத்தில் இன்னொரு முறை மகா பெரியவா திருப்பாதம் பதித்தபோது எத்தனையோ வருடங்களாக மழை இல்லாமல் வறண்டு போயிருந்த ஊர், வசந்தத்தை மீண்டும் பெற்றது. ஆம்! மழை பொழிந்து ஊரே செழித்தது.

தங்கள் ஊருக்குள் நுழைகிற காஞ்சி கருணை வள்ளலின் திருமுகம் பார்த்தும், திருவடிகள் பார்த்தும் வணங்கினார்கள் ஊர்மக்கள்.

மகானுக்குப் பூர்ணகும்ப வரவேற்பு கொடுத்துத் தன் இல்லத்துள் அழைத்துச் சென்றார்கள் ஜெயராமன்ஜெயலட்சுமி தம்பதியர்.

ஒட்டுமொத்த வசந்த கிருஷ்ணாபுரமே ஜெயராமன் இல்லத்தில்தான் இருந்தது. ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ஊர் ஜனங்கள் அனைவருக்கும் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஜெயராமன்.

தனது இல்லத்துக்கு மகா பெரியவா வந்து தங்கி இருப்பதைப் பெரும் பாக்கியமாக எண்ணி பூரித்துப் போனார் ஜெயராமன்.

இருக்காதா பின்னேமகானுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கொடுத்து தங்களது இல்லத்துக்கு அழைப்பதற்கு எத்தனையோ பேர் தயாராக இருந்தாலும், அவர் தேர்ந்தெடுப்பது யாரோ ஒருவரைத்தானே!

அந்தயாரோ ஒருவர் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

இதை நினைத்து நினைத்துதான் ஆனந்தப்பட்டார் ஜெயராமன்.

நித்தமும் மகா பெரியவா நடத்துகிற சந்திரமௌளீஸ்வரர் பூஜை, தீர்த்த பிரசாதம், ஆன்மிக உரை, அன்னதானம் என்று அமர்க்களமாகப் போனது.

கிராம மக்கள் தினமும் மகான் இருக்கிற இடம் தேடி வந்து தங்களால் இயன்ற அரிசி, காய்கறிகள், தான்யங்கள் போன்றவற்றை காணிக்கையாக வழங்கினார்கள்.

சாதுர்மாஸ்ய காலத்தில் மகான்களுக்கு இதுபோல் பொருட்களை வழங்குவதுபிக்ஷாவந்தனம் என்று அழைக்கப்படும். இது எண்ணற்ற நற்பலன்களைத் தரும்.

பிக்ஷை எடுத்து உண்பது, ‘நான் என்னும் அகங்காரத்தை அழித்து விடும். தவிர, தேகத்தையும் ஆத்மாவையும் சுத்தம் செய்து விடும் என்பார் பகவான் ரமணர்.

பகவான் ரமணர் திருவண்ணாமலையில், இங்கும் அங்கும் நகராமல் கடும் தவம் புரிந்தபோது அவருடைய சீடர் ஒருவரே ஊருக்குள் சென்று பிக்ஷை பெற்று வருவார். அந்த சீடர் என்ன சேகரித்துக் கொண்டு வருகிறாரோ அந்த உணவு வகைகளை ஒரு கலயத்தில் மொத்தமாகப் போட்டுக் கலந்து பகவான் ரமணரும் இன்ன பிற சீடர்களும் ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பிடுவார்களாம்.

சந்நியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிக்ஷை எடுத்து உண்ண வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். அதாவது, அடுத்த வேளைக்கும் முன்கூட்டியே உணவை சேர்க்கக் கூடாது.

சாதுர்மாஸ்ய விரதம் என்பது நான்கு மாத கால விரதம். ‘சதுர் என்றால் நான்கு.

நான்கு மாத கால சாதுர்மாஸ்ய விரதத்தில் முதல் மாதம் காய் மற்றும் கிழங்கு தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாம் மாதம் தயிர் தவிர்க்கப்பட வேண்டும். மூன்றாம் மாதம் பால் தவிர்க்கப்பட வேண்டும். நான்காவது மாதம் பருப்பு வகைகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் விதிகள் உண்டு.

சந்நியாசி ஒருவருக்கு ஒரு வேளை பிக்ஷாவந்தனம் செய்வதால், இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ஒரு நாள் முழுதும் உணவிட்ட பலன் கிடைக்கும்.

வருடம் முழுக்க க்ஷேத்ராடனம் போய்க் கொண்டிருக்கும் சந்நியாசிகள், மழைக் காலங்களில்இரண்டில் இருந்து நான்கு மாத காலத்துக்கு ஒரே இடத்தில்ஒரே ஊரில் தங்கி இருக்க வேண்டும் (நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம்). ஏனென்றால், இவர்களது சஞ்சாரத்தால் புழு, பூச்சி உட்பட எந்த ஒரு ஜீவ ராசிக்கும் துன்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதுதான். இப்படி சந்நியாசிகள் ஓர் இடத்தில் தங்கி குறிப்பிட்ட காலத்துக்கு மேற்கொள்ளும் விரதத்தையே சாதுர்மாஸ்ய விரதம் என்கிறோம்.

தினசரி பூஜை, வேத பாராயணம், வேதாந்த வகுப்புகள், பாத பூஜை, அருளுரை வழங்குதல், பிரசாத விநியோகம் என்று இந்த சாதுர்மாஸ்ய விரத காலம் இறை சிந்தனையோடு அமையும்.

சாதுர்மாஸ்ய காலத்தில் சந்நியாசிகளுக்கு பிக்ஷாவந்தனம் செய்ய எண்ணற்ற பக்தர்கள் குவிவது வழக்கம்.

ஆடிமாத பௌர்ணமி தினத்தன்று வியாச மகரிஷி திருஅவதாரம் செய்தமையால் அன்றைய தினம் குரு பூர்ணிமா தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது குருவுக்கு வந்தனம் செய்யும் தினம். எனவே, அந்தத் தினத்தில் சந்நியாசிகள் வியாச பூஜை செய்து சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவங்குகின்றனர்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த சாதுர்மாஸ்ய விரதத்துக்கு நித்தமும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

சாதுர்மாஸ்ய விரதம், பக்தர்களின் பிக்ஷை, சந்திரமௌளீஸ்வரர் பூஜை என்று தினமும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

நாள் ஆக ஆக ஜெயராமன் மனதை அந்த ஒரு விஷயம் மட்டும் நெருடத்தான் செய்தது.

என்ன விஷயம்?

சாதுர்மாஸ்யம் விரதம் மேற்கொண்டு மகா பெரியவா உங்கள் கிரஹத்தில் இத்தனை மாதங்கள் தங்குவார் என்று ஸ்ரீமடத்து அதிகாரிகள் சொன்ன காலக் கெடு தாண்டி விட்டதேஇன்னமும் ஸ்ரீமடம் கேம்ப் இங்கிருந்து நகராமல் இருக்கிறதே என்று ஜெயராமன் யோசிக்க ஆரம்பித்தார்.

மகா பெரியவா தன் கிரஹத்தில் தங்கி இருப்பதில் ஜெயராமனுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லைஅகிலமே கொண்டாடும் ஒரு மகான் தன் இல்லத்தில் தங்கி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார் என்பதில் சந்தோஷம்தான். ஆனாலும், மகா பெரியவா இங்கே தங்கி இருப்பதால், அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அச்சு வெல்ல மூட்டைகள் அப்படியே இருக்கின்றனவேஅந்த அறையைப் பூட்டி விட்டு அதற்கு முன்னால்தானே சந்திரமௌளீஸ்வரர் பூஜை நடந்து கொண்டிருக்கிறது. மகா பெரியவா இங்கிருந்து அடுத்த ஊருக்குக் கிளம்பினால்தானே இந்த அறையைத் திறக்க முடியும்திறந்தால்தானே உள்ளே இருக்கிற அச்சு வெல்ல மூட்டைகளை ஒரு வியாபாரியிடம் நல்ல விலைக்கு விற்க முடியும்?

இதுதான் ஜெயராமன் மற்றும் ஜெயலட்சுமியின் கவலை.

ஜெயராமன் ஏன் ரொம்ப கவலைப்பட்டார் என்றால், தயாரான அச்சு வெல்ல மூட்டைகளை ரொம்ப காலத்துக்கு அப்படியே வைத்திருக்க முடியாது. பருவ நிலை காரணமாக அச்சு வெல்லத்தில் நீர் கோர்க்க ஆரம்பித்து விடலாம். அப்படிப்பட்ட அச்சு வெல்லத்தை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியாது. இதை வாங்குவதற்கும் எவரும் முன்வர மாட்டார்கள். இத்தனை நாள் கஷ்டப்பட்டு கரும்பு பயிரிட்டு, அறுவடை செய்து, சாறு பிழிந்து, அச்சு வெல்லமாக்கி இருக்கிறோமேஅவை அத்தனையும் வீணாகிப் போய் விடுமே…? இதுதான் ஜெயராமனின் கவலை.

மனித மனம்தானே! இதை நினைத்தே ஏங்கினார். இதை மகா பெரியவாளிடமே போய்க் கேட்க முடியுமா? ‘பெரியவாநீங்க என்னிக்கு இங்கிருந்து புறப்படறதா உத்தேசம்? அப்படிக் கேட்பது எத்தனை அசிங்கம். குல குருவாக விளங்கக் கூடிய ஒரு சந்நியாசியிடம் இப்படிக் கேட்க முடியுமா? மனதில் அப்படி ஓர் எண்ணம் எழுவதே தவறு!

இரவு நேரத்தில் மகா பெரியவாளும் மற்றும் ஸ்ரீமடத்தைச் சார்ந்த அன்பர்களும் சயனத்துக்குப் போன பின்னர் ஜெயராமனும் ஜெயலட்சுமியும் இதைப் பற்றிக் குசுகுசுவெனப் பேசிக் கொள்வார்கள்.

ஒவ்வொரு நாளும் இப்படியே ஓடியது.

என்னதான் மகா பெரியவா தரிசனத்தில் ஜெயராமன் நித்தமும் திளைத்தாலும், உள்ளே பூட்டிய அறைக்குள் இருக்கும் அச்சு வெல்லம் அவரது நினைவுக்கு வராமல் இல்லை!

ஒரு நாள் அதிகாலை ஜெயராமன் கண் விழித்து எழுந்தார். கணவர் எழுந்த அரவம் கேட்டு மனைவி ஜெயலட்சுமியும் கண் விழித்தார்.

மகா பெரியவா இங்கே தங்கி இருக்கிற நாட்களில் தினமும் கண் விழித்து எழுந்ததும், அவர் இருக்கிற அறையை நோக்கிச் சென்று, அவரை நமஸ்கரித்து விட்டு அடுத்த வேலையைத் தொடங்குவது இருவரின் வழக்கம்.

அந்த வகையில் அன்றும் மகா பெரியவா தங்கி இருக்கும் அறையை நோக்கி நமஸ்கரிப்பதற்காக இருவரும் சென்றார்கள். நமஸ்கரிப்பதற்காகக் கீழே குனிந்தார்கள்.

அப்போது இவரது இல்லத்தின் வாசலில் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் ஓரிருவர் படபடப்பாக சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருப்பது ஜெயராமன் காதுகளில் விழுந்தது.

அப்போதுதான் கவனித்தார்மகா பெரியவா தங்கி இருக்கக் கூடிய அறையின் கதவுகள் திறந்தே கிடந்தன. கைகளைக் கூப்பிய வண்ணம் சற்று நகர்ந்து அறைக்குள் எட்டிப் பார்த்தார்.

மகா பெரியவாளை அங்கே காணவில்லை.

ஒருவேளை எழுந்து வெளியே சென்றிருப்பாரோ? அனுஷ்டானங்களை முடித்து விட்டு வாசல் திண்ணையில் விச்ராந்தியாக அமர்ந்திருக்கிறாரோமகா பெரியவா அப்படி அமர்ந்திருந்தால் வாசலில் சிப்பந்திகள் எப்படி சத்தம் போட்டுப் பேச முடியும் என்றெல்லாம் நினைத்தபடி நமஸ்கரித்தார். பிறகு, திரும்பி நடந்தார்.

ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் ஓரிருவர் படபடப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் அல்லவா? வாசலில் அந்த இடத்துக்கு வந்து விட்டார்.

இந்தக் காலை வேளையில் என்ன பரபரப்பான பேச்சு இவர்களுக்குள்? என்கிற எண்ணத்துடன் வாசலுக்கு வந்தார் ஜெயராமன்.

அதிகாலை வேளையில் ஜெயராமனைப் பார்த்ததும், சிப்பந்திகள் தங்கள் குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டார்கள்.

அவர்களை நெருங்கி, ”என்ன விஷயம்? கார்த்தால வேளைல இத்தனை பரபரப்பா பேசறேளே? என்று கேட்டார்.

பதில் வரவில்லை.                    

அடுத்து வாசல் திண்ணை, தெருவின் இந்தக் கோடி, இன்னொரு கோடி எல்லாவற்றையும் திரும்பிப் பார்த்துத் தேடி விட்டு ஜெயராமன் கேட்டார்: ”மகா பெரியவா எங்கே?

மகா பெரியவாளைக் காணவில்லைஅவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

தூக்கி வாரிப் போட்டது ஜெயராமனுக்கு.

இந்தக் கிராமத்தில் இருந்து எங்கே போயிருப்பார்? அதுவும் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளுக்குத் தகவல் கொடுக்காமல் எங்கும் செல்ல மாட்டாரேஇவர்களுக்கே தெரியவில்லை என்றால் – ஜெயராமன் பல விதமாக யோசித்தார். ஆனால், அவருக்கு விடை கிடைக்கவில்லை.

எங்கெல்லாம் போய்ப் பார்த்தேள்? என்று படபடப்புடன் கேட்டார் ஜெயராமன்.

பதில் சொன்னார்கள்.

இருங்கோஆத்தங்கரை பக்கம் ஒருவேளை போயிருக்காரானு நான் பாத்துட்டு வரேன் என்று தென்பெண்ணை ஆற்றின் கரையை நோக்கி விரைந்தார் ஜெயராமன்.

வசந்த கிருஷ்ணாபுரத்தின் வழியே தென்பெண்ணை ஆறு பாய்ந்து கொண்டிருந்தது.

ஜிலீர் காற்று சிலுசிலுக்கிற காலை வேளையில் ஓட்டமும் நடையுமாகப் புறப்பட்டார்.

காலை வேளை என்பதால், வயலுக்குச் செல்கின்ற ஒரு சில விவசாயிகளைத் தவிர அந்த சாலையில் எவரும் தென்படவில்லை.

மகா பெரியவா சரணம்மகா பெரியவா சரணம் என்கிற திருநாமத்தை இடைவிடாமல் ஜபித்தபடி, தென்பெண்ணை ஆற்றை அடைந்தார். ஆற்றின் கரையில் ஜெயராமனது பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது. முகத்தில் ஆனந்த அதிர்ச்சி!

தண்டத்தை உடலோடு இறுக அணைத்தபடிகைகளைக் கட்டியபடிசுழித்துக் கொண்டு ஓடும் நீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

மகானைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் பரவசம் பொங்க அவருக்கு முன்னால் சென்று நின்றார் ஜெயராமன். ”மகா பெரியவாமகா பெரியவா என்று கண்களில் நீர் பெருகக் கதறியவர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ஒன்றல்லஇரண்டல்லதொடர்ந்து நமஸ்கரித்துக் கொண்டே இருந்தார்.

ஜெயராமனைப் பார்த்து, ‘எழுந்துக்கோ என்பது மாதிரி சைகை காண்பித்தார் பெரியவா.

கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார் மகா பெரியவா முன்னால். ”பெரியவாஎல்லாரும் ஒங்களைத் தேடிண்டு இருக்கா. நீங்க என்னடான்னா இந்த ஆத்தங்கரை பக்கம் வந்து நிக்கறேள்ஒங்க மனசுல எம் மேல ஏதோ கோபம் போலிருக்குஎன் பக்கத்துல என்ன தப்புன்னாலும், என்னை மன்னிச்சு அருள் பண்ணுங்கோ பெரியவா. ஏதோ லௌகீகத்துக்கு ஆசைப்பட்டுட்டேன்என்னை மன்னிச்சிடுங்கோ என்று தேம்பிய குரலில் பேசினார்.

தன் திருக்கரம் உயர்த்தி ஜெயராமனை ஆசிர்வதித்து விட்டு, ”நீ என்னடா பண்ணுவே ஜெயராமாஒன்னோட கிரஹத்துல ரொம்ப மாசமா தொடர்ந்து டேரா போட்டுட்டேன். சாதுர்மாஸ்ய விரதமும் முடிஞ்சு போச்சு. ஆனா, இன்னும் இங்கிருந்து கௌம்ப முடியலை. அடுத்த இடத்துக்குப் போகணும். ஆனா, அழைப்பு ஒண்ணும் வரலடாவந்ததும் கௌம்பிடுவோம் என்று மகா பெரியவா சொல்லி முடித்தபோதுவென்று அழுதே விட்டார் ஜெயராமன்.

மகா பெரியவா தொடர்ந்தார்: ”பயப்படாத ஜெயராமாஒன்னோட அச்சு வெல்ல மூட்டைல்லாம் பத்திரமா இருக்கும்.

இந்த வார்த்தைகளை மகா பெரியவா திருவாயில் இருந்து கேட்டதும், அந்தத் தெய்வத்தைப் பார்த்துத் தொழுதார். ”பெரியவா என்னைத் தப்பா நினைக்காதீங்கோநானும் என் ஆத்துக்காரியும் அச்சுவெல்ல மூட்டைங்களைப் பத்திக் கவலையோட பேசிண்டிருந்தது உண்மைதான். ஆனா, நீங்க இங்கிருந்து கௌம்பணும்கறது எங்க ஆசை இல்லே பெரியவா. தெய்வமே எங்களைத் தேடிண்டு வந்ததா நாங்களும் இந்த ஊர்க்காராளும் சந்தோஷப்பட்டுண்டிருக்கோம் என்றவர், மகானைப் பார்த்து இரு கைகளையும் கூப்பிக் கதறினார்.

மகா பெரியவா அப்படியே திரும்பி கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாகத் தொடர்ந்தார் ஜெயராமன்.

அடுத்த ஒரு சில நாட்களிலேயே நடமாடும் தெய்வமான மகா பெரியவா அந்த ஊரில் இருந்து கிளம்பி விட்டார்.

யானை, குதிரை, ஒட்டகம் என்று பெரும் படையுடன் மகா பெரியவா வசந்த கிருஷ்ணாபுரத்தில் இருந்து கிளம்பும்போது ஊர்க்காரர்கள் அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்து அனுப்பினார்கள்.

பெரியவா தன் இல்லத்தில் இருந்து கிளம்பிய பின், எந்த இடத்தில் நித்தமும் சந்திரமௌளீஸ்வரர் பூஜை நடந்ததோ, அந்த இடத்தில் ஒரு மாக்கோலம் போட்டார் ஜெயலட்சுமி. திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் வந்து அருளிய அந்த இடத்தை தம்பதி சமேதராக ஜெயலட்சுமியும் ஜெயராமனும் நமஸ்கரித்தனர்.

அதன் பின் பல மாதங்களாகப் பூட்டப்பட்டிருக்கும் அறையைத் திறந்தார் ஜெயராமன். உள்ளே அச்சுவெல்ல மூட்டைகள்.

அச்சுவெல்லங்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலில் ஒரு மூட்டையைப் பிரித்தார். ஆச்சரியம்புத்தம் புதிதாக அன்றுதான் எடுத்தது போல் காணப்பட்டது. ஒரு பிசுபிசுப்பு இல்லை. நீர்க் கோர்ப்பு இல்லை. ஃப்ரெஷ்ஷாக இருந்தது.

இன்னொரு மூட்டையைப் பிரித்தார். அங்கும் அப்படியே!

அச்சுவெல்லத்துக்கு ஒண்ணும் ஆகாதுகவலைப்படாத என்று தென்பெண்ணை ஆற்றங்கரையில் மகா பெரியவா சொன்ன அருளாசி, காதுகளில் பாய்ந்து கொண்டே இருந்தது ஜெயராமனுக்கு.

பிறகென்னபெரியவா அனுக்ரஹத்துடன் அடுத்த ஒரு சில தினங்களிலேயே வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து அனைத்து அச்சுவெல்ல மூட்டைகளையும் நல்ல விலைக்கு அள்ளிக் கொண்டு சென்று விட்டனர்.

மகா பெரியவாளின் திருப்பார்வையும், ஆசிகளும் பெற்ற மூட்டைகள் ஆயிற்றே அவை! எப்படி நல்ல விலைக்குப் போகாமல் இருக்கும்?!