“அறுபதாம் கல்யாணம் அவஸ்யம் பண்ணிக்கோ…”

காஞ்சி ஸ்ரீமடத்து பக்தரும் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள வசந்த கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவருமான ஜெயராமன் என்பவரது இல்லத்தில் மகா பெரியவா சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட அனுபவத்தை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

அதே ஜெயராமன் தொடர்பான இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம் இப்போது படிக்கப் போவது.

ஜெயராமனுக்கு சஷ்டியப்த பூர்த்தி என்று சொல்லப்படும் அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டிய நேரம் வந்தது. குடும்பத்தில் இருக்கின்ற அனைவரும் இந்த வைபவத்தை நன்றாக நடத்த வேண்டும் என்று பிரியப்பட்டார்கள். இதை அவரிடம் தெரிவித்தார்கள். ஆனால், இதற்கு ஜெயராமன் மறுத்து விட்டார். ”அதெல்லாம் வேண்டாம். அன்னிக்கு பக்கத்துல ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறோம் என்றார். இந்த பதில், அவரது மனைவி ஜெயலட்சுமி உட்பட பலருக்கும் திருப்தியாக இல்லை.

பொதுவாக, இன்றைக்குப் பலரும் சஷ்டியப்த பூர்த்தி (60), பீமரத ஸாந்தி (70), சதாபிஷேகம் (80) இவற்றையெல்லாம் செய்து கொள்ள யோசிக்கிறார்கள். காரணம்இத்தனை வயசான பின் மணமக்கள் போல் மண மேடையில் அமர்வதற்கு ஒரு தயக்கம் மற்றும் யோசனைதான்!

ஆனால், இது போன்ற வைபவங்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

காரணம்அறுபது வயது ஆகி விட்டால், நாம் அடுத்த சுற்றுக்குத் தயாராகிறோம் (தமிழ் வருடங்கள் அறுபது).

குறிப்பிட்ட காலம் ஆகி விட்டால், ஒரு பழைய வீட்டுக்குக்கூட வெள்ளையடித்து சுத்தம் செய்கிறோம். காரணம்அதற்கு மேல் அந்த வீட்டுக்கு வெள்ளை அடிக்காவிட்டால், தன் பொலிவை இழந்து பல்லிளிக்க ஆரம்பித்து விடும். அது போல், மனிதனும் தன் பொலிவை இழக்காமல் இருக்க, சில பரிகாரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. அதற்குத்தான் இந்த வைபவம். எனவே, எந்த ஒரு காரணத்தைச் சொல்லியும் இவற்றை எவரும் தவிர்க்கக் கூடாது.

இதைத்தான் ஜெயராமன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கெஞ்சியும் கொஞ்சியும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர் மசியவில்லை.

பலரும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, இறுதியாக ஒரு விஷயத்தைச் சொன்னார்: ”அறுபதாம் கல்யாணத்தை நான் பண்ணிக்கட்டும்னு மகா பெரியவா சொல்லட்டும். அதன் பிறகு பண்ணிக்கிறேன்.

அவ்வளவுதான்! குடும்பத்தில் அனைவருக்கும் சந்தோஷம்மகா பெரியவா நல்லதுதான் சொல்வார் என்று.

மகா பெரியவா என்ன சொல்லப் போகிறார் என்பதையும்தான் தெரிந்து கொண்டு விடுவோமே என்று குடும்பத்தில் இருக்கிற அனைவரும் ஒரு நாள் காஞ்சிக்குப் புறப்பட்டார்கள்.

புறப்படுகிறபோது ஜெயராமன் போட்ட ஒரே கண்டிஷன் – ‘மகா பெரியவாகிட்ட நாமளா எதுவும் சொல்லக் கூடாது. அதாவது, அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நான் சம்மதிக்கலேனு அவர்கிட்ட சொல்லக்கூடாது. அவரா நமக்கு உத்தரவு கொடுக்கணும். அப்படி அவர் சொல்லிட்டார்னா தாராளமா பண்ணிக்கிறேன்.

மனைவி ஜெயலட்சுமி உட்பட அனைவரும் இதற்கு சம்மதித்து வந்தார்கள்.

காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் நுழைந்தாயிற்று.

வசந்த கிருஷ்ணாபுரம் ஜெயராமன் குடும்பத்துக்கு மகா பெரியவாதான் எல்லாமும். அந்த நடமாடும் தெய்வத்துக்குத் தெரியாதாஜெயராமனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று!

கண் கண்ட தெய்வம் அல்லவா மகா பெரியவா!

மகா பெரியவா தரிசனத்துக்கு ஜெயராமன் குடும்பத்தினர் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. திரளான பக்தர்கள் கருணைக் கடலைக் கண்டு ஆசி பெறுவதற்குக் காத்திருந்தனர்.

அன்றைக்கென்று பார்த்து மகா பெரியவா மவுனம் வேறு.

மகா பெரியவா மவுனமாக இருப்பதைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டார் ஜெயராமன். ஜெயலட்சுமிக்குக் கொஞ்சம் ஏமாற்றம். ‘பெரியவா நல்ல பதில் சொல்லணும் என்று அந்தப் பரம்பொருளை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்.

வரிசை மெள்ள மெள்ள நகர்ந்து, மகா பெரியவாளை அடைந்தனர் ஜெயராமன் குடும்பத்தினர்.

தாங்கள் கொண்டு வந்திருந்த காணிக்கைகளை அர்ப்பணித்து விட்டு, தம்பதி சமேதராக மகா பெரியவாளை வணங்கினர் ஜெயராமனும், ஜெயலட்சுமியும். அவர்களோடு வந்திருந்த அனைவரும் பெரியவாளை வணங்கினார்கள்.

ஜெயராமனை அண்ணாந்து பார்த்தார் பெரியவா. முகத்தில் ஒரு பூரிப்பு. ‘நன்னா இருக்கியா? என்று சைகையில் விசாரித்தார்.

உங்க அனுக்ரஹத்துல அமோகமா இருக்கேன் பெரியவா. எனக்கென்ன குறை இருக்க முடியும்?! – இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பியபடி சொன்னார் ஜெயராமன்.

அதன் பின் ஜெயராமனைப் பார்த்து மகா பெரியவா சைகையில் கேட்டதுதான் இவர்கள் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியது.

மகா பெரியவா தன் வலக்கை ஆட்காட்டி விரலால் 6 என்ற எண்ணைக் காற்றில் எழுதினார். அதன் பின், பக்கத்தில் 0 என்ற எண்ணை எழுதினார். எழுதி முடித்த பின்எப்போ வருது? என்று ஜாடையில் கேட்டார்.

ஜெயராமனும் ஜெயலட்சுமியும் கிட்டத்தட்ட அழுதே விட்டனர்.

உன்னோட அறுபதாம் கல்யாணம் எப்ப வருது? என்று பெரியவா ஜாடையில் கேட்டிருக்கிறார் ஜெயராமனைப் பார்த்து. அதைப் புரிந்து கொண்டவர் கண்கள் பனிக்க அந்தத் தேதியைச் சொன்னார்.

தலையசைத்துக் கேட்ட மகா பெரியவா, ‘நன்னா பண்ணிக்கோ. வைதீக விஷயத்துல குறை வைக்காதே என்று ஜாடையில் சொன்னது புரியாமல் பெரியவாளையே பார்த்தார் ஜெயராமன்.

அருகில் இருந்த சிப்பந்தி, இந்த விஷயத்தைத் தெளிவாக எடுத்துரைத்தார். அருகில் இருந்த மகா பெரியவாளும் இதை ஆமோதித்தார்.

அறுபதாம் கல்யாணம் நன்னா பண்ணிக்கோ என்று மகா பெரியவா அருளியதும், தம்பதி சமேதராக மீண்டும் நமஸ்காரம் செய்தனர் ஜெயராமனும் ஜெயலட்சுமியும்.

பிறகென்னஉரிய தேதியில் மகா பெரியவா அனுக்ரஹத்தோடு வைதீக விஷயத்தில் குறை வைக்காமல், விமரிசையாக நடத்தி முடித்தார் தன் சஷ்டியப்த பூர்த்தியை.

குடும்பத்தில் இருக்கிற அனைவரும், ”மகா பெரியவாதான் இந்த விழாவை முடிச்சு வெச்சிருக்கார் என்று அவரது திருவுருவப் படத்துக்கு நமஸ்கரித்து நன்றி சொன்னார்கள்.