நெஞ்சை அள்ளிய கிள்ளுக்குடி சம்பவம்

கா பெரியவா தனது யாத்திரையின்போது பெயர் தெரியாத குக்கிராமங்களில் எல்லாம் கேம்ப் போடுவார். பெரும்பாலும், அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஊர்களாக அவை காணப்படும். ஆனால், அங்கு தங்குவதும், அந்தக் கிராமத்து ஜனங்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் பெரியவாளுக்கு ஏகாந்தமாக இருக்கும்.

மகானைத் தரிசிக்க இத்தகைய குக்கிராமங்களைத் தேடி வரும் வெளியூர் அன்பர்கள் பலருக்கு இப்படி ஒரு இடம் இருப்பதே பிறகுதான் தெரிய வருமாம்.

தேசத்தின் வளர்ச்சிக்குக் கிராமங்கள்தான் உயிர்நாடி என்கிற உண்மையின் அடிப்படையில் தனது யாத்திரையின்போது பேர் தெரிந்த நகரத்தில் தங்குவதை விட, பேர் தெரியாத கிராமத்தில் தங்குவதையே சந்தோஷமாக உணர்வார் மகா பெரியவா.

அப்படித்தான் ஒரு முறை கிள்ளுக்குடி என்ற குக்கிராமத்தில் முகாமிட்டிருந்தார். எந்த ஒரு வசதியும் இல்லாத ஊர் என்றாலும், ஊர்மக்கள் அனைவரும் பக்தி உணர்வும் கருணை உள்ளமும் கொண்டு காணப்பட்டனர். ‘இந்த ஊரில் நான்கு நாட்களுக்கு தங்கி அதன் பின் புறப்படலாம் என்று மகா பெரியவா சொன்னார்.

அவ்வளவுதான்கிள்ளுக்குடி குக்கிராமத்தைத் தேடி கார்களும் பைக்குகளும் வரத் துவங்கின. புதிது புதிதாக வரும் வாகனங்களை ஆர்வத்துடன் பார்த்தனர் ஊர்மக்கள்.

ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரளம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கிள்ளுக்குடி. இன்றைக்கு இந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிறது.

நான்கு நாட்கள் இங்கு முகாம். மகா பெரியவா நித்தமும் மேற்கொள்ளும் சந்திரமௌளீஸ்வரர் பூஜையைக் கண்ணும் கருத்துமாகக் கண்டு தரிசித்தார்கள் ஊர்மக்கள். நித்தமும் மூன்று வேளையும் வருகிற அனைவருக்கும் போஜனம் தாராளமாக வழங்கப்பட்டது.

அருகே உள்ள கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து தரிசித்துச் சென்றனர். இன்னும் சில பக்தர்கள், மகான் தங்கி இருக்கிற நான்கு நாட்களிலும் கிள்ளுக்குடியிலேயே டேரா போட்டனர். ஊரில் தங்குபவர்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை எல்லாம் ஆர்வத்துடன் செய்தனர் உள்ளூர் அன்பர்கள்.

அப்போது ஒரு நாள் மாலை வேளை. ஒரு மாட்டு வண்டியில் குடும்பம் ஒன்று வந்திறங்கியது. அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி, அவர்களின் மகன் என மூன்று பேர். மகனைப் பார்த்தால், உத்தியோகத்தில் இருப்பவனாகத் தெரிந்தான்.

இவர்கள் மூவரும் மகா பெரியவா தரிசனம் வேண்டி பம்பாயில் இருந்து வந்திருக்கிறார்கள்.

பம்பாயில் இருந்து சென்னைக்கு ஒரு ரயிலிலும், சென்னையில் இருந்து மாயவரத்துக்கு மற்றொரு ரயிலிலுமாகப் பயணித்து வந்திருக்கிறார்கள். மாயவரத்தில் இருந்து ஒரு மாட்டு வண்டி பிடித்து கிள்ளுக்குடியை அடைந்திருக்கிறார்கள்.

அன்றைக்குக் கூட்டம் அவ்வளவாக இல்லை. பம்பாய்க்காரர்கள் மூவரும் முகாமுக்குள் நுழைந்ததும் முகம், கை கால்களைக் கழுவிக் கொண்டார்கள். நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு மகா பெரியவா பூஜை நடத்துகிற இடம் அருகே வந்து அமர்ந்தார்கள். அப்போதுதான் மாலை வேளை பூஜையை பெரியவா தொடங்கி இருந்தார்.

சுமார் ஒண்ணரை மணி நேரம் பூஜை நடந்தது. அதன் பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார் பெரியவா. பம்பாய்க்காரர்கள் முறை வருகிறபோது உணர்ச்சிப் பெருக்குடன் அவர்கள் பிரசாதம் பெற்றுக் கொண்டார்கள்.

முகாமுக்குப் புதியவர்களான இவர்களின் குடும்ப நலனை விசாரித்து அறிந்தார் பெரியவா. பிறகு, சொந்த ஊர் எது என்பதில் துவங்கி, மகா பெரியவா கேட்ட கேள்விகள் அனைத்தும் பவ்யமாக பதிலளித்தனர். இறுதியில், உத்தியோக நிமித்தமாகத் தற்போது பம்பாயில் வசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தம்பதிகளுடன் வந்திருக்கிற இளைஞனைப் பார்த்து விட்டு அவனைப் பற்றி விசாரித்தார் பெரியவா. திருமணம் ஆகி விட்டதாகச் சொன்னார்கள்.

எங்கே வேலை பார்க்கிறான்? என்று கேட்டார்.

பதில் சொன்னார்கள்.

அதன் பின், ”பெரியவாஇன்னிக்கு ராத்திரியே மாயவரம் போயாகணும். தங்கள் உத்தரவு கிடைத்தால் கிளம்பி விடுவோம். மாயவரத்தில் இருந்து நாங்கள் வந்த மாட்டு வண்டியும் இங்கதான் இருக்கு என்றனர் தம்பதியர்.

அந்தக் காலத்தில் மகானைத் தரிசிக்க யார் வந்தாலும், கிளம்புகிறபோதுபுறப்படலாமா? என்று உத்தரவு கேட்பார்கள். பெரியவா உத்தரவு கொடுத்த பிறகுதான் நகர்வார்கள். ஒருவேளை உத்தரவு கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்கிற வரை அங்கேயேதான் தங்கி இருப்பார்கள்.

பம்பாய்க்காரர் கேட்டதும், அவர்கள் மூவருக்கும் பெரியவா உடனே உத்தரவு கொடுக்கவில்லை. ”இன்னிக்குப் போக வேண்டாம். இங்கயே தங்கிடுங்கோநாளைக்குப் போய்க்கலாம் என்றார் மகா பெரியவா.

அதோடு, அவர்கள் மூவரும் அந்தக் கிராமத்தில் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு ஸ்ரீமடத்தின் கார்யதரிசி ஒருவரை அழைத்து உத்தரவிட்டார்.

பெரியவா உத்தரவின்படி மூவரும் அன்றைய தினம் இரவை கிள்ளுக்குடியில் கழித்தனர்.

ஊருக்குக் கிளம்ப வேண்டியது அவசியம் என்றாலும், மேலும் ஒரு நாள் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்கு நமக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ந்தது பம்பாய்க் குடும்பம். அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வீட்டில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தனர்.

மறுநாள் பொழுது விடிந்தது.

காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, மூவரும் மகா பெரியவா தரிசனத்துக்காக மீண்டும் சென்றனர். அன்றைக்குக் காலை ஏராளமான பக்தர்களும் வந்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து கொண்டு மகான் நடத்துகிற பூஜையைத் தரிசிக்க, சவுகரியமான ஓர் இடம் பார்த்து அமர்ந்தனர்.

அன்றைக்கு வயதான ஒரு மூதாட்டி தன் மகளுடன் வந்திருந்தார். ஏனோ அந்த மூதாட்டியின் முகத்தில் ஒரு சோகம் அப்பி இருந்தது.

வந்ததில் இருந்தே இயல்பான நிலையில் இல்லை அந்த மூதாட்டி. தனது பிரச்னைக்கு இந்தத் திருச்சந்நிதியில் ஒரு தீர்வு கிடைக்குமா என்கிற கேள்வி மூதாட்டியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவாளுக்கு, இந்த மூதாட்டியின் பிரார்த்தனை தெரியாமல் இருக்குமா? தாயையும் மகளையும் பரிவுடன் தன் அருகே அழைத்து நலம் விசாரித்தார். அதன் பின் இவர்கள் இருவரையும் அருகே அமர்ந்து பூஜையைத் தரிசிக்குமாறு உத்தரவிட்டார்.

இன்னும் சில மணி நேரத்தில் தன் பிரச்னைக்கு இங்கே தீர்வு கிடைக்கப் போகிறது என்பதை அறிவாரா அந்த மூதாட்டி?

அன்றைய தினம் கிள்ளுக்குடி குக்கிராமத்தில் நீண்ட நேரம் நடந்தது பூஜை. முடிகிறபோது மதியம் கடந்து விட்டது.

வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் தன் கைப்பட தீர்த்தப் பிரசாதம் வழங்கினார் மகா பெரியவா.

பம்பாயில் இருந்து வந்த தம்பதியரும் அவர்களது மகனும் மகா பெரியவாளிடம் தீர்த்தம் வாங்குவதற்கு வரிசையில் வந்தார்கள்.

பம்பாய் தம்பதியரான கணவனும் மனைவியும் ஏதோ பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு கண்ணீருடன் நமஸ்காரம் செய்தனர். தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொண்டு முன்னால் நகர்ந்தனர்.

அடுத்து, தீர்த்தம் வாங்குவதற்கு தன் வலது உள்ளங்கையைக் குழித்து வைத்துக் கொண்டு பெரியவா முன்னால் நின்றான் பம்பாய் மகன்.

தனக்கு முன்னால் பம்பாய் இளைஞன் வந்து நின்றபோது, பெரியவா அவனை நிமிர்ந்து பார்த்தார். பிறகு, ”நீ மாத்திரமா வந்திருக்கே? உன் மனைவி எங்கே? என்று கேட்டார்.

பையன் துணுக்குற்றுப் போனான். பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை.

என்னதுஇவனும், இவனைப் பெற்றெடுத்த அம்மாஅப்பா ஆகிய மூவரும்தானே பம்பாயில் இருந்து வந்திருக்கிறார்கள்அதுவும் நேற்று மாலைதானே வந்தார்கள்? வந்ததும் மகானைத் தரிசித்தார்களேஅதற்குள் பெரியவா மறந்து விட்டாரா? என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

ஆனால், அந்த பம்பாய் இளைஞன் முதலில் துணுக்குற்றுக் கொஞ்சம் தடுமாறினாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.

தனக்கு எதிரே தரையைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டிருக்கும் அந்த இளம் யுவதியைப் பார்த்தான். அடுத்த விநாடி அவளிடம் வேகமாகச் சென்றான்.

பக்கத்தில் அவளது அம்மா!

சோகத்துடன் ஒரு மூதாட்டி வந்தார், தனது பெண்ணுடன் என்று பார்த்தோம் அல்லவா? அவர்கள்தான் இவர்கள்!

தாயிடமும் மகளிடமும் ஒரு சில வார்த்தைகள்தான் பேசினான்.

தாயாகப்பட்டவள் மகளைப் பார்த்துக் கண்ணீருடன், ”மாப்பிள்ளையே கூப்பிடறாருஇது பெரியவா திருச்சந்நிதிஇங்கேதான் உனக்கு மறுவாழ்வு கிடைக்கணும்னு எழுதி இருக்கு. போரெண்டு பேருமா சேர்ந்து பெரியவா கால்ல தம்பதி சமேதரா விழுந்து ஆசி வாங்குங்கோ என்று சொல்லி, கண்களில் வழியும் நீரைத் தனது புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

அடுத்த கணம் அந்தப் பெண்ணும் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். பம்பாய் இளைஞனான கணவரின் கரம் பற்றினாள்.

இருவரும் மகா பெரியவா எதிரே வந்தார்கள். அந்த த்ரிகால ஞானிக்கு உணர்ச்சிப்ரவாகமாக நமஸ்காரம் செய்தார்கள்.

புன்னகையுடன் இருவரையும் பார்த்து ஆசி வழங்கினார். இருவருமாகச் சேர்ந்து பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி நீட்டினார். பெற்றுக் கொண்டார்கள்.

பெண்ணுடன் வந்த மூதாட்டிக்கும், இளைஞனுடன் பம்பாயில் இருந்து வந்த பெற்றோருக்கும் ஏற்பட்ட சந்தோஷத்தை அங்கு கூடி இருந்த பக்தர்கள்

கண்டனர். அவர்களுக்கும் கண்கள் பனித்தன.

இளைஞனும் அவனது மனைவியும் மூதாட்டியிடமும், பெற்றோரிடமும் அடுத்தடுத்து ஆசி பெற்றனர்.

என்னே இது ஆச்சரியம் என்று நமக்கே கண்கள் பனிக்கின்றன அல்லவா? விஷயம் இதுதான்

பம்பாய் பெற்றோர் கிள்ளுக்குடிக்கு வந்ததன் நோக்கமேதிருமணம் ஆகி ஏதோ மனஸ்தாபம் காரணமாக மூன்று வருடங்களாகப் பிரிந்திருக்கும் மகன், மருமகளுடன் இணைய வேண்டும் என்பது.

அன்றைய தினம் காலை மகளுடன் இங்கே வந்த மூதாட்டியின் பிரார்த்தனையும் அதுதான்!

ஆனால், பம்பாய் இளைஞனின் மனைவி இவள்தான் என்று மகா பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

முதல் நாளே தரிசனம் முடித்து விட்டு, ‘கிளம்புகிறோம் என்று உத்தரவு கேட்ட பம்பாய் தம்பதியரை, ‘இன்று இரவு இங்கு தங்குங்கள்நாளை புறப்படலாம் என்று மகா பெரியவா கிராமத்திலேயே தங்க வைத்தது எப்படி?

மறுநாள் காலை அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் வருவார்கள் என்பது எப்படித் தெரியும்?

மகா பெரியவா, ஈஸ்வர அவதாரம் இல்லாமல் இவை எல்லாம் சாத்தியமில்லை.

தன்னை நம்பி சரண் புகுகிற பக்தர்களை காஞ்சி மகான் எந்த ஒரு நாளிலும் கைவிட்டது கிடையாது.

எத்தனையோ சோகத்துடன் வந்தாலும், கண்ணீரைத் துடைத்து சந்தோஷமாக நம்மை அனுப்புவார் நடமாடும் தெய்வமான மகா பெரியவா.

அதுதான் கிள்ளுக்குடி கிராமத்திலும் நிகழ்ந்திருக்கிறது.