“நீ டெல்லிக்கு போகாததும் நல்லது…”

ப்போது சொல்லப் போவதும் ஒரு உபன்யாசகர் சம்பந்தப்பட்ட நிகழ்வு

அந்த உபன்யாசகர் வெகு பிரபலமானவர். தமிழ் மொழி தவிர சமஸ்க்ருதம், இந்தி என்று பல மொழிகள் தெரியும். பாரத தேசத்தின் பல ஊர்களுக்கும் சென்று உபன்யாசம் செய்வார்.

தனக்கு சம்பாவணையாக என்ன கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர். அவரது பெரும்பாலான பிரவசனங்கள் தர்மப் பிரசாரத்துக்கென்றே அமைந்திருக்கும்.

மொத்தத்தில், தனக்கென எதையும் எதிர்பார்க்காமல் உலக நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தவர்.

இப்படிப்பட்டவர்களை மகா பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

எவர் ஒருவர் தொண்டு உள்ளத்தோடும், தர்மத்தைக் காப்பாதற்காகவும் வாழ்கிறாரோ அவரை அந்த இறைவனே காப்பாற்றுவான். இது அந்த உபன்யாசகர் வாழ்வில் அப்படியே பொருந்தி இருந்தது. பெரிய வசதி என்று எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்தில் எதற்கும் கஷ்டம் இல்லை.

ஒரு நாள் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக அந்த உபன்யாசகர் சென்றிருந்தார்.

கற்றறிந்த பண்டிதர்கள் தன் சந்நிதிக்கு வந்தால், அவரை அருகே அழைத்து ஆதுரத்துடன் உரையாடுவது மகா பெரியவாளின் வழக்கம். அதுபோல் உபன்யாசகரைத் தன் அருகே வரவழைத்து அமர வைத்துக் கொண்டார். அவரிடம் உரையாட ஆரம்பித்தார் பெரியவா.

தன் பேச்சினூடே ஒரு விஷயம் திடீரென்று நினைவுக்கு வந்தவர் போல்ஆங் என்ற பெரியவா, ”சில தினங்களுக்கு முன்னாடி ஒன்னோட நினைப்பு வந்ததுஆனா, ஏதோ தட்டிப் போச்சுநீ இருந்திருந்தா நன்னா இருக்கும் என்றார்.

பெரியவா சொல்ல வருகிற விஷயம் என்னவென்று புரியாமல் குழம்பினார் உபன்யாசகர்.

இதை அடுத்து மகா பெரியவாளே, ”கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி புதுடெல்லில ஜி.டி. பிர்லா ஒரு வேத சதஸுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தார். அதுக்கு நம்மூர்லேர்ந்து நிறைய பண்டிதாள்லாம் போயிருந்தா. சதஸ் ரொம்ப நன்னா நடந்து முடிஞ்சுதுன்னு கலந்துண்டவா எல்லாரும் வந்து சொன்னா.

எனக்கு அப்ப என்ன தோணித்துன்னா, உன்னை மாதிரி நிறைய படிச்ச ஒரு ஆசாமி அந்த வேத சதஸ்ல கலந்துண்டிருந்தா நன்னா இருந்திருக்கும்னு தோணித்துஏன்னா, இந்தியும் உனக்கு நன்னா பேச வரும். பிர்லா மாதிரி பெரிய தனவந்தர்கிட்ட வேத சாஸ்திரங்களோட அருமை பெருமைகளை உன்னை மாதிரி ஆசாமிங்க எடுத்துச் சொல்லி இருந்தா, அவருக்கு இதனோட ஆழம், முக்கியத்துவம் எல்லாமே நன்னா புரிஞ்சிருக்கும் என்றார்.

அடடேபெரியவா ஆக்ஞாபித்திருந்தால் அடியேனும் கலந்துண்டிருப்பேனே என்றார் உபன்யாசகர்.

அதான், எப்படியோ மிஸ் ஆயிடுத்து என்ற பெரியவா அடுத்து, ”பரவால்லைஒரு விதத்துல நீ போகாததும் நல்லதாகி விட்டது என்றார்.

உபன்யாசகர் குழம்பினார். ‘என்னதுநீயும் போயிருந்தா நன்னா இருந்திருக்கும்னு சித்த முன்னாடி சொன்னார். இப்ப என்னடான்னா போகாததும் நல்லதாகி விட்டதுனு சொல்றாரே

ஒரு சில விநாடி அமைதிக்குப் பிறகு மகா பெரியவா பேச ஆரம்பித்தார்.

மகான் என்ன அர்த்தத்தில் இதைச் சொன்னார் என்று தெரிந்து கொள்ளும் விதமாக அவரது திருமுகத்தையே பார்க்க ஆரம்பித்தார் உபன்யாசகர்.

தன் எதிரே அமர்ந்திருந்த உபன்யாசகரைப் பார்த்து விட்டு மகா பெரியவா பேச ஆரம்பித்தார்:

என்னடாதுஜி.டி. பிர்லா நடத்தின வேத சதஸில் கலந்துக்கறதுக்காக நீயும் டெல்லிக்குப் போயிருந்தா நன்னா இருந்திருக்கும்னு சித்த முன்னாடி சொன்னார்இப்ப என்னடான்னா நீ டெல்லிக்குப் போகாததும் ஒரு விதத்துல நல்லதுக்குத்தான்னு சொல்றாரேனு குழப்பமா இருக்கா?

ஒரு புன்னகையுடன் மகா பெரியவா கேட்டதற்குப் பதிலாக, ”அப்படி இல்லே பெரியவாநீங்க எது சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும் என்று உணர்வுபூர்வமாகச் சொன்னார் உபன்யாசகர்.

பிறகு பெரியவா, ”நீ டெல்லிக்குப் போயி அந்த வேத சதஸில் கலந்துண்டு இருந்தா ஜி.டி. பிர்லாவைத் தனியே பாத்துப் பேசும்படியா ஒனக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கும். அப்ப உன்னோட இந்தி பாஷை புலமையையும், வேத ஞானத்தையும் பாத்துண்டு பிர்லா ஆச்சரியப்பட்டிருப்பார். ‘இவ்வளவு திறமையான ஆசாமி வெளீல இருக்க வேண்டாம்நம்மகிட்டயே இருக்கட்டும்னு அவர் தீர்மானம் பண்ணிடுவார். அப்புறம் என்ன, ஆயிரமோரெண்டாயிரமோ மாச ஊதியம் ஒனக்கு ஃபிக்ஸ் பண்ணி உன்னைத் தன் கூடவே டெல்லிலயே வெச்சிண்டுடுவார்.

அப்படி உன்னை டெல்லில வெச்சிண்டா பிர்லாவுக்கு லாபம்தான். ஆனால், பாரத தேசத்துக்கு நஷ்டம். நல்லவேளையா அப்படி ஆகலை. எனவே, எப்பவும் போல் நீ பாரத தேசம் முழுக்க நிறைய இடங்களுக்குப் பயணம் பண்ணு. அந்தந்த மாநிலத்துல இருக்கிறவாளுக்குத் தெரிஞ்ச மொழில தர்மத்தைப் பத்திப் பேசி பிரவசனம் பண்ணிட்டு வா. லோக க்ஷேமம் பெருகட்டும் என்றார்.

மகா பெரியவாளின் திருவாய் வாக்கு கேட்டுப் பூரித்துப் போன அந்த உபன்யாசகர், சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ”பெரியவாஉங்க சொற்படியே ஆகட்டும் என்று கண் கலங்கினார்.

மகான் சொல்கிற வாக்கை வேத வாக்காக எண்ணி, அதன்படி வாழ்ந்தவர்கள் அந்த நாளில் இருந்தவர்கள். பணமும் பொருளும் மகா பெரியவாளின் ஆசியின் முன்னால் துச்சம் என்று உணர்ந்தவர்கள்.

அந்தப் பன்மொழி உபன்யாசகருக்கு ஸ்ரீமடத்தின் சார்பில் உயர்ந்த சால்வை அணிவித்து, கவுரவம் செய்து பிரசாதம் தந்து அனுப்பினார் மகா பெரியவா.