அடையாறு தம்பதியால் கிடைத்த ஆனந்தம்

கா பெரியவாளின் அத்யந்த பக்தர் நாராயணசாமி. அவருடைய மனைவி லட்சுமி அம்மாள். இருவருக்கும் குருவருளும் தெய்வ அருளும் நிரம்பவே கூடி இருந்தது.

ஆனால், பொருளாதாரத்தில் அத்தனை கூடவில்லை. அதனால், இருவரும் எந்த ஒரு காலத்திலும் வருத்தப்பட்டதே இல்லை. ‘என்ன கிடைக்கிறதோ, அதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதில் இருவருமே ஒரே கருத்தோடு காணப்பட்டார்கள்.

லட்சுமி அம்மாளுக்கு ஒரு கலை அற்புதமாக வாய்த்திருந்தது. என்ன கலை தெரியுமா?

வண்ண வண்ணப் பொடிகளைக் கொண்டு இவர் வரையக் கூடிய கோலங்கள், காண்பவர்கள் மனதை அப்படியே கவர்ந்து விடும். பெரும்பாலும் இவர் போடுகிற கோலங்கள் அனைத்தும் தெய்வத் திருவுருவங்களாகவே இருக்கும்.

ஆதி சங்கரர், விநாயகர் மற்றும் எண்ணற்ற தெய்வ உருவங்களை அப்படியே கண்களுக்கு முன்னால் தரையில் வண்ணத்துடன் கொண்டு வந்து விடுவார். பார்த்தவுடனே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று தோன்றும்.

ஏதேனும் விசேஷங்கள், திருவிழாக்கள் போன்றவை நடக்கின்ற இடங்களில் லட்சுமி அம்மாளின் கோலம் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.

மகா பெரியவாளைப் பல முறை நேரில் தரிசித்து, இது போன்ற கோலங்களை அவருக்கு முன்னாலேயே போட்டுக் காண்பிப்பார். தத்ரூபமாக இருக்கும் அந்தத் திருவுருவங்களைப் பார்த்து ரசித்துப் புன்னகையுடன் ஆசிர்வதிப்பார் மகான்.

ஆன்மிக யாத்திரை செல்வதற்கு சந்தர்ப்பம் அமைவது என்பது எல்லோருக்கும் அவ்வளவு சுலபத்தில் வாய்த்து விடாது பணம் இருக்கும்; வசதிகள் இருக்கும். ஆனால் காசி, ராமேஸ்வரம் பக்கம் எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு ஆன்மிக யாத்திரை செல்லக் கூடிய வாய்ப்பு நாராயணசாமிலட்சுமி அம்மாள் தம்பதிக்கு வாய்த்தது. இவர்களுடைய உறவினர்கள் ஒன்று சேர்ந்து காசி, ராமேஸ்வரம் செல்வதற்கு ஒரு திட்டம் தீட்டி இருந்தார்கள்.

அந்த உறவினர்கள் லட்சுமி அம்மாளிடம் கேட்டார்கள் – ‘நீங்களும் வருகிறீர்களா? என்று.

கணவருடன் செல்ல வேண்டும் என்று லட்சுமி அம்மாளுக்கு ஆசை. ஆனால், பணம் வேண்டுமேரயில் டிக்கெட், தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, மேலும் மற்ற தேவைகளுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

ஒரு ஆன்மிக யாத்திரை நல்லபடியாக அமைய வேண்டுமானால், அதற்கு குருவருள் கூடி வர வேண்டும். அத்தகைய அருள் லட்சுமி அம்மாளுக்குக் கூடி வந்தது. அருள் வந்து என்ன பண்ணபொருள் இல்லையே?!

யாத்திரைக்குப் புறப்பட குருவருள் கிடைக்குமா என்று காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்கப் புறப்பட்டார்கள் இருவரும்.

கோலம் போடற மாமியா? என்று மகான் குறிப்பாக அடையாளம் கண்டு கொண்டு விசாரித்தார்.

காசி, ராமேஸ்வரம் யாத்திரைக்கான வாய்ப்பு பற்றி லட்சுமி அம்மாள் சொன்னார்.

பெரியவா என்ன அனுக்ரஹம் பண்ணுவார் என்று தெரிந்து கொள்வதற்காக அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் லட்சுமி அம்மாள்.

தம்பதி சமேதரா நன்னா போயிட்டு வாங்கோ என்று வாய் நிறைய சொல்லி, இரு திருக்கரங்களையும் உயர்த்தி ஆசி வழங்கினார் பெரியவா.

காஞ்சி மகான் அப்படி ஆசி வழங்கியதே, காசிராமேஸ்வரத்தைத் தரிசித்த ஒரு திருப்தி கிடைத்து விட்டது போல் இருவரும் உணர்ந்தார்கள்.

பெரியவாளிடம் விடை பெற்றுக் கொண்டு கணவனும் மனைவியும் ஊருக்கு வந்தார்கள்.

மகானுடைய அருள் பரிபூரணமாகக் கிடைத்தும், எதிர்பார்த்தபடி பொருள் வரவில்லை.

அதாவது, யாத்திரை செல்வதற்குத் தேவைப்படும் பணம் கிடைக்கவில்லை.

காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்வதற்கு உண்டான வாய்ப்பு தனக்கும் தன் கணவர் நாராயணசாமிக்கும் அமையாமல் போய் விடுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தார் லட்சுமி அம்மாள்.

மகா பெரியவாளின் ஆசி கிடைத்தபோது ஏகத்துக்கும் மகிழ்ந்து போனார். யாத்திரை கூடி விடும் என்று நெகிழ்ந்தார்.

ஆனால், யாத்திரை செல்வதற்கு உண்டான பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரவில்லையே என்று விரக்தியானார்.

ஆனால், காசி யாத்திரைக்குத் தன் ஆசியை வழங்கிய மகான், லட்சுமி அம்மாளை அப்படியே தவிக்க விட்டு விடுவாரா என்ன?

யாத்திரையில் கலந்து கொள்கிறேனா, இல்லையா என்பது பற்றி உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாளும் நெருங்கியது.

யாத்திரைக்கு நீங்கள் இருவரும் வரவில்லையா? என்று கேட்டால், என்ன பதில் சொல்வது? போக வேண்டும் என்று மனம் முழுக்க ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு உண்டான பணம் கிடைக்கவில்லை.

ஏதேனும் ஒரு விதத்தில் மகா பெரியவாளே இந்தப் பண விஷயத்திலும் தனக்கு அருள மாட்டாரா என்கிற ஆசையும் லட்சுமி அம்மாள் மனதில் இருந்தது.

அன்றைய தினம் பகல் வேளையில் லட்சுமி அம்மாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்ததுசென்னை அடையாறில் வசிக்கக் கூடிய ஒருவரிடம் இருந்து.

யாராக இருக்கும்? என்று கடிதத்தைப் பிரித்துப் படித்தால்ஆச்சரியத்திலும் பிரமிப்பிலும் கண்கள் குளமாகின. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளைப் படித்து விட்டு, மீண்டும் மீண்டும் படித்து உறுதி செய்து கொண்டார்.

கடிதத்தில் இருந்த விஷயத்தின் சாரம் இதுதான்

தாங்களும் தங்கள் கணவரும் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்வதற்கு உண்டான பொருளுதவிகளை நாங்கள் செய்கிறோம். பயணத்துக்கு, தங்குவதற்கு மற்றும் அனைத்து செலவினங்களுக்கும் என்ன தொகை என்று கணக்கிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு வரவும். வருகிறபோது மறக்காமல் இந்தக் கடிதத்தையும் கொண்டு வரவும். தொகையைப் பெற்றுச் செல்லவும் என்று மிகவும் தன்மையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எப்படி? இது எப்படி சாத்தியம்? முன் பின் தெரியாத ஒருவர், நமக்குக் கடிதம் எழுதி, உங்கள் யாத்திரைக்குத் தேவையான மொத்த பணத்தையும் கொடுக்கிறேன்வந்து பெற்றுக் கொள்ளவும் என்று எப்படி எழுதுவார்கள்? – இப்படி சிந்தித்து ஏகத்துக்கும் நெகிழ்ந்து போய் விட்டார் லட்சுமி அம்மாள்.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு கடிதம் தன் முகவரி தேடி வருவதற்குக் காரணம்காஞ்சி மகா பெரியவாதான் என்பது அடையாறில் இருக்கிற அந்த இல்லத்துக்குப் போன பின்தான் லட்சுமி அம்மாளுக்குத் தெரிந்தது.

லட்சுமி அம்மாள் குறிப்பிட்ட முழுப் பணத்தையும் இவர்களிடம் கொடுத்த பின் அடையாற்றில் இருக்கக் கூடிய தம்பதியர் சொன்னார்கள்: ‘நாங்கள் மகா பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சிக்குப் போயிருந்தோம். அப்போது அவர்தான் உங்களைப் பற்றிச் சொல்லி இந்த வாய்ப்பையும் எங்களுக்கு வழங்கி இருந்தார். இத்தகைய நல்ல சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும், இதற்குக் காரணமாக அமைந்த மகா பெரியவாளுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். தங்களது காசி, ராமேஸ்வரம் யாத்திரை மகா பெரியவா கிருபையால் சிறப்பாக அமையும். நல்லபடியாகப் போய் வாருங்கள்.

அடையாறு தம்பதியர் இப்படிப் பரவசத்துடன் சொன்னபோது அவர்களை வாழ்த்துவதா, வணங்குவதா என்பது லட்சுமி அம்மாளுக்கும், அவரது கணவர் நாராயணசாமிக்கும் புரியவில்லை.

ஒரு மஞ்சள் பையில் போட்டு அவர்கள் தந்த பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இரு கரங்களையும் கூப்பி கண்ணீருடன் விடை பெற்றனர். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

எல்லோரிடமும் பொருள் இருப்பதில்லை. அதே சமயம் பொருள் வைத்திருக்கின்ற எல்லோருக்கும்கொடுக்க வேண்டும் என்கிற மனம் இருப்பதில்லை.

ஆனால், பொருளும் மனமும் சேர்ந்து இருக்கின்ற அடையாறு தம்பதியர் போன்ற நல்ல உள்ளங்களுக்கு மகா பெரியவா ஒரு வாய்ப்பு வழங்கி, அதை இல்லாதவர்களுக்கு அவர்களின் கையாலே சேர்க்க வைத்திருக்கிறார்.

அத்தகைய அனுபவங்களில் இது ஒரு சாம்பிள்தான்!