அவர் ஒரு வழக்கறிஞர். பெயர் – ராஜகோபாலன்.
பக்தியிலும், வழிபாடுகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். எல்லாவற்றையும் தாண்டி காஞ்சி மகா பெரியவாளிடம் அதீத பக்தி.
நித்தமும் பூஜை செய்த பிறகுதான், நீதிமன்றத்துக்குப் புறப்படுவார். அதுவும் புறப்படுகிறபோது பிரத்யேகமாக பூஜையறைக்குச் சென்று மகா பெரியவா திருவுருவப் படத்தைத் தொட்டுப் பிரார்த்தித்த பின்தான் கிளம்புவார்.
ஒரு பவுர்ணமி தினத்தன்று இரவு தன் இல்லத்தில் அம்பாளை வணங்கும் விதமாக ‘பவுர்ணமி பூஜை‘ நடத்தினார் வக்கீல் ராஜகோபாலன்.
எந்த ஒரு பூஜை நடத்தினாலும், அதில் மகா பெரியவாளுக்கும் ஒரு பிரதான இடம் கொடுப்பது வக்கீலின் வழக்கம். அதன்படி அவரது உருவப் படமும் பூஜையில் காணப்படும். பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிப்பது போல், மகா பெரியவா திருவுருவப் படத்துக்கும் அர்ச்சிப்பார்.
அது போல் அன்றைய தினம் பவுர்ணமி வழிபாடுகளை முடித்தார். அன்றைக்கு ஏக மகிழ்ச்சி. மகா பெரியவாளின் குருவருள் பிரத்யேகமாகத் தனக்குக் கிடைத்தது போல் ஆனந்தப்பட்டார்.
மகா பெரியவாளுக்கு பூஜையறையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பின் பிரசாதம் சாப்பிட்டார். உறங்கச் சென்றார்.
எந்த சிந்தனையுடன் இரவு படுக்கச் செல்கிறோமோ, அத்தகைய சிந்தனைகளே நல்ல கனவுகளாக மாறும். எனவேதான் படுக்கப் போகும்போது நல்ல எண்ணங்களுடன் உறங்க வேண்டும். கவலைகளை அப்போது மனதில் சுமந்திருக்கக் கூடாது.
மகா பெரியவாளை மனதார நினைத்துக் கொண்டு அவருக்கு நமஸ்காரம் செய்து படுத்தார் அல்லவா, வக்கீல் ராஜகோபாலன்?
இதன் பலன் – இரவு கனவில் மகா பெரியவா வந்தார்.
சாதாரணமாக வரவில்லை.
சற்றே வித்தியாசமான தோற்றம்.
தோற்றம் மட்டுமல்ல… அந்த சூழ்நிலையும் வித்தியாசமாகக் காணப்பட்டது.
கனவில் கண்ட திருக்காட்சி ராஜகோபாலனின் மனதில் இருந்து அகலவே இல்லை. அந்தக் கனவில் – மகா பெரியவாளுடைய முகமும் தேகமும் ஒரு பூர்ண நிலவாக ஜொலித்தது. மகானிடமும் மகானைச் சுற்றிலும் அப்படி ஒரு ஒளி வெள்ளம்!
பவுர்ணமி தினம் அல்லவா? முழு நிலவில் காணப்படுகிற பிரகாசமும் ஜ்வலிப்பும் மகா பெரியவா திருமுகத்தில் தென்பட்டதோ, என்னவோ!
அந்தத் திருமுகத்தை ஆனந்தத்துடன் தரிசிக்கின்றபோது ராஜகோபாலனின் உடலும் உள்ளமும் பரவசத்தின் காரணமாக சிலிர்த்தது. தன்னை அறியாமல் இரு கரங்களையும் கூப்பி வணங்கினார்.
வக்கீல் வணங்கிக் கொண்டிருக்கிறபோது மகா பெரியவாளின் பூர்ண சந்திர திருமுகத்தில் இருந்து ஒரு புன்னகை பிறந்தது.
“மகா பெரியவா… மகா பெரியவா…” என்று ஆர்ப்பரித்து அவரது திருப்பாதங்களைப் பணிந்து நமஸ்கரித்தார்.
பூலோக ஜீவன்களின் பாவங்களைப் போக்கக் கூடிய அந்த மகானின் திருப்பாத தரிசனம் இத்தனை அருகில் கிடைத்த மறுகணம் வக்கீலின் உடலில் ஒரு மின்சாரம் ‘கிர்ர்‘ரென்று பாய்வது போல் உணர்ந்தார். புது உத்வேகம் அவரைத் தொற்றிக் கொண்டது. அவரையும் அறியாமல், கண்களில் இருந்து கசிந்த நீர்த் துளிகள் தரையில் விழுந்தன.
மகா பெரியவாளை நமஸ்கரித்த கோலத்தில் பரவசத்துடன் காணப்பட்டவர், தன் அருகே தென்படும் அந்த மகானின் திருப்பாதங்களை வெகு தீர்க்கமாக தரிசித்தார்.
எல்லோருக்கும் அவ்வளவு சுலபத்தில் இந்தத் தரிசனம் கிடைத்து விடுமா?
பஞ்சின் மென்மையுடன் காணப்படும் அந்த பிஞ்சு வெள்ளைப் பாதங்களை இரு கைகளாலும் பற்றிக் கொள்ள வேண்டும் என்று ராஜகோபாலனின் கைகளும் மனமும் பரபரத்தது. ஆனால், மகான்களின் திருப்பாதங்களை மானுடர்கள் தொடக் கூடாது என்கிற நியதியின் காரணமாக அந்த எண்ணத்தை அறவே துறந்தார்.
பெரியவாளின் திருப்பாத விரல்கள் துல்லியமாகத் தென்பட்டன. விரல்களில் காணப்படும் வெண்மையான நகங்களும் கண்களுக்குப் பட்டன.
சற்றே அண்ணாந்து பார்த்தார். மகானின் திருமுகத்தில் அதே பிரகாசம். அதோடு, இன்னொரு வித்தியாசமான காட்சி. பிரமித்துப் போனார் ராஜகோபாலன். நமஸ்கரித்திருக்கும் அதே கோலத்தில் ஒரு முறை கண்களை மூடி மீண்டும் திறந்து பார்த்தார்.
ஆம்! அதே பிரமிப்பு. மகா பெரியவா திருமுகத்தில் மூக்குக் கண்ணாடி காணப்பட்டது.
‘இதென்னது ஆச்சரியம்… மகா பெரியவா மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறாரே… இதுவரை இந்தத் திருமுகத்தில் பார்த்தது இல்லையே‘ என்று வியந்தார். மீண்டும் அண்ணாந்து அவரது திருமுகத்தைப் பார்த்தார்.
ஆம்! மூக்குக் கண்ணாடியேதான்!
காரணம் – மகா பெரியவா அதுவரை தன் துறவு வாழ்க்கையில் மூக்குக் கண்ணாடி அணிந்ததில்லை. இப்படி ஒரு காட்சியை எவருமே கற்பனைகூடச் செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
எனவேதான், இந்தத் தரிசனம் ராஜகோபாலனுக்கு அபூர்வமாகப் பட்டது.
நமஸ்கரித்த கோலத்தில் கால் நகங்களையும், திருமுகத்தையும் மீண்டும் மீண்டும் தரிசித்துக் கொண்டிருக்கிறபோதே கனவு கலைந்து விட்டது.
விருட்டென்று எழுந்து உட்கார்ந்தவர், கனவை நினைத்து வெகுவாக ஆனந்தப்பட்டார். பூஜையறை சென்றார். பெரியவா திருப்படத்துக்கு விழுந்து நமஸ்கரித்தார்.
‘கால் நகங்களைத் தரிசிக்கும் பேறு பெற்றேன். மூக்குக் கண்ணாடியுடன் உங்கள் தரிசனம் ஆச்சரியமாக இருந்தது‘ என்று பெரியவா திருப்படத்துக்கு முன்னால் நின்று கொண்டு சொன்னார்.
அடுத்த நாள் ராஜகோபாலனைப் பார்க்க அவரது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரும் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர். எனவே, முந்தின தினம் இரவு தான் கண்ட கனவு பற்றி நண்பரிடம் உருக்கமாக – விலாவாரியாகச் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்ட நண்பர், “நீ கனவில் தரிசித்தது மகா பெரியவாளாக இருக்க முடியாது. வேறு யாராகவோ இருக்கும்” என்றார்.
ராஜகோபாலனுக்கு அதிர்ச்சி. “என்னப்பா சொல்கிறாய்? அது மகா பெரியவாதான்” என்றார் விழிகள் விரிய.
“இல்லே ராஜகோபால்… கனவில் நீ தரிசித்தது மகா பெரியவாளாக இருந்தால், அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்க மாட்டார். மகா பெரியவா எப்போது மூக்குக் கண்ணாடி போட்டிருக்கிறார்..? நானும் பல முறை தரிசித்துள்ளேன். நீயும் தரிசித்திருக்கிறாய். அதனால்தான் சொல்கிறேன் – மூக்குக் கண்ணாடி அணிந்துள்ள காரணத்தால், அது மகா பெரியவாளாக இருக்க முடியாது.”
மிகவும் ஆணித்தரமாக நண்பர் பேசுகிறபோது, வக்கீலான ராஜகோபாலனால் எதிர்வாதம் செய்ய முடியவில்லை.
அதற்குக் காரணமும் உண்டு. என்னவென்றால், மகா பெரியவா மூக்குக் கண்ணாடி அணிந்து வக்கீல் ராஜகோபாலனும் பார்த்ததில்லை. ஒருவேளை தான் ஏதேனும் குழப்பத்தில் உளறுகிறோமோ என்றுகூடத் தோன்றியது வக்கீலுக்கு.
மூக்குக் கண்ணாடியே பயன்படுத்தாத ஒருவரை ‘அவர் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு இருந்தபோது நான் பார்த்தேன்‘ என்று சொன்னால், எப்படி இருக்கும்? சம்பந்தப்பட்டவரை அறிந்தவரும் இதை மறுப்பார் அல்லவா? அதுபோல்தான் வக்கீல் ராஜகோபாலனின் நண்பர் மறுத்துப் பேசினார்.
அந்த நண்பர் அடுத்த ஒரு சில நிமிடங்களில் ராஜகோபாலன் இல்லத்தில் இருந்து கிளம்பிப் போய் விட்டார்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் ராஜகோபாலன் தன் வக்கீல் பணிகளில் மூழ்கி விட்ட காரணத்தால், நண்பர் தன் இல்லத்துக்கு வந்து போனதையும், மூக்குக் கண்ணாடி விஷயத்தையும் கிட்டத்தட்ட மறந்தே போனார்.
ஆனால், அடுத்த வாரத்திலேயே நடந்தது அந்த ஆச்சரியம்!
ஆம்! ராஜகோபாலனின் இல்லத்துக்கு அதே நண்பர் மீண்டும் வந்தார் – எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல்.
நண்பர் வந்தது ஆச்சரியமல்ல…
அவர் சொன்ன செய்திதான் மிகப் பெரிய ஆச்சரியம்.
வீட்டுக்குள் நுழைந்தவர் வேக வேகமாக ராஜகோபாலன் அருகே வந்தார். உணர்ச்சிப்பெருக்குடன் அவரைக் கட்டித் தழுவித் தன் அன்பையும் நட்பையும் அபரிமிதமாக வெளிப்படுத்தினார். நண்பரது திடீர் நடவடிக்கையில் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தார் ராஜகோபாலன்.
ஆனால், என்றைக்கும் இல்லாத அளவில் இன்றைக்கு ஏன் இத்தனை உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் நண்பர் காணப்படுகிறார் என்று ராஜகோபாலனுக்குப் புரியவில்லை.
அதற்கான விளக்கத்தைத் தெரியப்படுத்தும் விதமாக நண்பரே பேச ஆரம்பித்தார்.
“என்னை மன்னிச்சிடுப்பா… மகா பெரியவா மேல நீ வெச்சிருக்கிற ஆத்மார்த்தமான பக்தியை இப்பதான் நான் புரிஞ்சிண்டிக்கேன். உன்னைப் பத்தி தப்பா ஏதாவது பேசி இருந்தா மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்று ராஜகோபாலனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரது முகத்தைப் பார்த்துக் கெஞ்சுகிற பாவனையில் பேசினார் நண்பர்.
வக்கீலுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னப்பா சொல்ல வர்றே நீ… நான் எதுக்கு உன்னை மன்னிக்கணும்? ரொம்ப பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டிருக்கியே…” என்று வெகு இயல்பாகக் கேட்டார்.
“ஆமாம்ப்பா… என்னை நீ மன்னிச்சுதான் ஆகணும். என்னோட புது வியாபாரம் சம்பந்தமா மகா பெரியவா சந்நிதிக்குப் போய் அவரோட ஆசிகளை வாங்கிண்டு வரலாம்னு காஞ்சிபுரம் போயிருந்தேன். பெரியவாளை அங்கே பார்த்ததும் நான் பிரமித்துப் போய் விட்டேன். கனவில் பெரியவாளை நீ தரிசித்ததாகச் சொன்னாய் அல்லவா? ‘மூக்குக் கண்ணாடிகூட அணிந்திருந்தார்‘ என்று சொன்னாயே… அதே திருக்கோலத்தில்தான் நான் அவரைத் தரிசித்தேன்” என்று தொடர்ந்து பேச முடியாமல் தேம்பினார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வக்கீல் ராஜகோபாலனின் கண்கள் நீரைச் சொரிந்தன. “என்னப்பா சொல்றே நீ? மகா பெரியவா மூக்குக் கண்ணாடி போட்டிருந்தாரா?”
“ஆமாம் ராஜகோபால். அவருக்கு சமீபத்தில்தான் கண் ஆபரேஷன் ஆகி, மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கிறாராம். சிப்பந்திகள் சொன்னார்கள். அந்தத் திருக்கோலத்தில்தான் அவரை நான் தரிசித்தேன். ஆனால், அவரது அத்யந்த பக்தனான உனக்கு மூக்குக் கண்ணாடியுடன் முன்னரே தரிசனம் கொடுத்து விட்டார். அதுதான் உன் பக்தியின் சிறப்பு. நீ மகா பாக்கியசாலி… நீதான் மகா பெரியவாளின் உண்மையான பக்தன். அவரது குரு கடாட்சம் உனக்குப் பரிபூரணமாக இருக்கிறது” என்று நண்பர் சொல்லச் சொல்ல… மகா பெரியவா இருக்கிற திசை நோக்கி கைகளை உயர்த்திக் கும்பிட்டார் ராஜகோபாலன்.
மகா பெரியவாளுக்குக் கண் ஆபரேஷன் நடக்கும் முன்னரே, தன் பக்தனான ராஜகோபாலனுக்கு மூக்குக் கண்ணாடியுடன் தரிசனம் தந்திருக்கிறார் அந்த மகான்!