காஞ்சி மகா பெரியவாளைப் பற்றி இன்று இருக்கிற அத்தனை மீடியாக்களும் அற்புதம், அதிசயம் என்று செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் இது போல் வந்ததில்லை. அப்படி வருவதையும் மகா பெரியவா அனுமதிக்க மாட்டார்; விரும்ப மாட்டார்.
என்றாலும், அந்தக் காலத்தில் ஒரு சில பத்திரிகையாளர்கள் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்களாக இருந்தார்கள். அடிக்கடி காஞ்சி ஸ்ரீமடம் சென்று மகா பெரியவாளைத் தரிசிப்பதையும், அவரது யாத்திரை பற்றிய குறிப்புகளையும் பிரசுரிப்பதுமாக இருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஒருவர் – ஒரு பத்திரிகை ஆசிரியர். சென்னையில் உத்தியோகம். மகா பெரியவா மீது அதீதமான பக்தி. எப்போதெல்லாம் தனக்கு சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மகா பெரியவாளுக்கும் இந்தப் பத்திரிகை ஆசிரியர் மீது அன்பு உண்டு. சில மாத காலம் தொடர்ந்து அந்த ஆசிரியர் தன் கண்களில் படாவிட்டால், ‘எங்கேடா… அவரை ரொம்ப நாளாவே காணோம்?‘ என்று கரிசனத்துடன் விசாரிப்பார்.
ஒரு நாள் அந்தப் பத்திரிகை ஆசிரியர் காஞ்சிக்குப் புறப்பட்டார், மகா பெரியவா தரிசனத்துக்காக.
இந்த முறை தரிசனம் மட்டுமல்ல. மகானை புகைப்படங்களும் எடுக்க வேண்டும் என்றுதான் பயணப்பட்டார்.
தான் பணி புரிகின்ற பத்திரிகையில் மகா பெரியவா பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும்போது புத்தம் புது படங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். மகானது விதம் விதமான படங்கள் தன் அலுவலக போட்டோ லைப்ரரியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே, போட்டோ எடுப்பதற்காக இரண்டு புகைப்படக்காரர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு காஞ்சிக்குச் சென்றார்.
அன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க திரளான பக்தர்களும், பிரபலங்களும் காஞ்சி ஸ்ரீமடத்தில் கூடி இருந்தார்கள். என்றாலும், பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீமடத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த காரணத்தால், கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஊழியர்கள், இவர்கள் மூவரும் நுழைந்த உடனே பார்த்து விட்டார்கள். அருகே சென்று மூவரையும் மெள்ள அழைத்துப் போய் மகா பெரியவா சந்நிதானத்தில் அமர வைத்தார்கள்.
ஒரு பக்தர் குடும்பத்துடன் சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்த பெரியவா, அவர்களுக்குப் பிரசாதம் தந்து அனுப்பிய பின்னர் பத்திரிகை ஆசிரியர் பக்கம் திரும்பினார்.
அவர் எழுந்து மகா பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். உடன் வந்த இரு புகைப்படக்காரர்களும் விழுந்து வணங்கினார்கள்.
மகானுடன் சற்று நேரம் உரையாடினார் பத்திரிகை ஆசிரியர். பல விஷயங்களைப் பேசி முடித்த பிறகு, ‘பெரியவாளைப் புகைப்படம் எடுக்கறதுக்காக இன்னிக்கு போட்டோகிராபர்களைக் கூட்டிண்டு வந்திருக்கேன். பெரியவா அனுமதி வேணும்‘ என்ற தகவலை மிகப் பணிவுடன் தெரிவித்தார்.
‘ஓகே… தாராளமா எடுத்துக்கலாம்‘ என்றால், புன்னகைத்து சைகையும் காட்டி விடுவார் பெரியவா. ஆனால், இன்று எதுவும் பேசவில்லை. பத்திரிகை ஆசிரியர் சொன்ன விஷயத்தைக் காதுகளில் வாங்கியும், பதிலில்லை.
காஞ்சி மகானின் இந்த ரியாக்ஷனைப் பார்த்து விட்டுத் தன் அருகே இருந்த இரு புகைப்படக்காரர்களிடமும் மிக சன்னமான குரலில், “அவசரப்படக் கூடாது… கேமராவை வெளில எடுத்துடாதீங்கோ. மகானோட அனுமதி கிடைச்ச பிறகுதான் அவரைப் புகைப்படம் எடுக்கணும். அனுமதி கிடைக்கலேன்னா அமைதியா இருந்துடணும்” என்று கறாராகச் சொன்னார். அவர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வது போல் தங்கள் தலையை அசைத்தனர்.
நடமாடும் தெய்வமாகத் திகழும் மகா பெரியவாளின் திருமுகத்தையே பார்த்தவாறு மூவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
பத்திரிகை ஆசிரியர் பரவசத்துடன் கண்களில் நீர் கசிய தரிசித்துக் கொண்டிருந்தார். ‘இதுவே தனக்கு இன்றைக்குக் கிடைத்த பாக்கியம்‘ என்று புளகாங்கிதம் அடைந்தார்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில் பெரியவா எழுந்தார். தொண்டர்கள் பின்தொடர்ந்தனர். ஸ்ரீமடத்தினுள் எங்கோ சென்று விட்டு அடுத்த பத்து நிமிடத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பக்தர்கள் கூட்டம் மொத்தமும் திரும்பிப் பார்க்க… தேஜோமயமாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார் மகா பெரியவா. பத்திரிகை ஆசிரியருடன் அமர்ந்திருந்த இரு புகைப்படக்காரர்களும் ‘என்னடாது… உத்தரவு கிடைக்கவில்லையே‘ என்று சலிப்புடன் காணப்பட்டார்கள். இந்த வேளையில் தண்டம் சுமந்து திரும்பிக் கொண்டிருக்கும் மகா பெரியவாளைப் பார்த்தார்கள்.
‘இதுதான் சமயம்… அனுமதி கிடைக்கும்வரை காத்திருந்தால், நேரம் வீணாகி விடும்‘ என்று தீர்மானித்து எழுந்தார்கள். ஃப்ளாஷ் போட்டார்கள். புகைப்படங்கள் எடுக்கத் தயாரானார்கள். ஒரு ஓரமாக நின்று சகட்டுமேனிக்கு ‘க்ளிக்‘கித் தள்ளினார்கள்.
‘இது கூடாது… அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பது தவறு. சற்று நேரம் காத்திருக்க வேண்டும்‘ என்று சொல்வதற்காக பத்திரிகை ஆசிரியர் எத்தனையோ முறை இருவரின் அருகே சென்றும் பார்த்தார். ஆனால், அவர்கள் இருவரும் பத்திரிகை ஆசிரியரையே கண்டுகொள்ளாமல் கிடைத்த சந்தர்ப்பத்தில் அடுத்தடுத்து போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தனர்.
மகா பெரியவா அருகே இருந்து அவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஸ்ரீமடத்து ஊழியர் ஒருவர், இந்த இரு புகைப்படக்காரர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தார். அடுத்தடுத்து ஃப்ளாஷ் உபயோகித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார். பத்திரிகை ஆசிரியருடன் வந்தவர்கள் என்பதையும் அந்த ஊழியர் அறிந்திருந்தார். இருந்தாலும், பெரியவாளிடம் இருந்து சற்றே நகர்ந்து அவர்களின் அருகே சென்றார். “இங்கே போட்டோ எடுத்துண்டு இருக்கேளே… பெரியவாகிட்ட அனுமதி வாங்கியாச்சா?” என்று இயல்பாகக் கேட்டார்.
அதற்கு, “ம்ம்ம்… அனுமதி வாங்கியாச்சு” என்று ஒரு பொய்யை அவர்களுக்குப் பதிலாகச் சொல்லி, ஊழியரிடம் இருந்து தப்பினார்கள் இரு புகைப்படக்காரர்களும்.
தன் முகத்தில் ஏதோ வெளிச்சம் (ஃப்ளாஷ்) அடுத்தடுத்து பட்டுக் கொண்டே இருப்பதை உணர்ந்த மகா பெரியவா தன் அருகே இருந்த ஊழியரிடம் கேட்டார்: “அதென்ன வெளிச்சம்… அப்பப்ப என் மேல விழுந்துண்டே இருக்கு?”
ஊழியர், “பெரியவா… அவா உங்களை போட்டோ எடுத்துண்டு இருக்கா… ‘பெரியவாகிட்ட அனுமதி வாங்கியாச்சா?‘னு கேட்டேன். நீங்க அனுமதி குடுத்துட்டதா சொன்னா” என்றார் மிக பவ்யமாக.
மகா பெரியவா முகத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
‘அவர்கள் போட்டோ எடுக்க வேண்டாம்‘ என்பது போன்ற எந்த ஒரு வார்த்தைகளையும் ஊழியரிடம் சொல்லவில்லை மகா பெரியவா. இயல்பாக இருக்கக் கூடிய அந்த தெய்வத்தின் திருமுகத்தில் எந்த ஒரு மாற்றமும் தென்படவில்லை.
‘போட்டோ எடுக்கணும்னு அந்தப் பத்திரிகை ஆசிரியர் என்கிட்ட கேட்டார். ஆனா, போட்டோ எடுக்க நான் இன்னும் அனுமதி குடுக்கவில்லையே…‘ என்றெல்லாம் ஊழியரிடம் மகா பெரியவா சொல்லவில்லை. ஒருவேளை கண்டிப்புடன் பெரியவா அப்படிச் சொல்லி இருந்தால் அந்த இடத்தில் பிரளயமே வெடித்திருக்கும். ஊழியர் பட்டாளம் அவ்வளவு சுலபத்தில் சும்மா விட்டு விடாது.
தன் வழக்கமான புன்னகையோடு அந்த பரப்பிரம்ம சொரூபம் அப்படியே நடந்து, தான் அமர்ந்த இடத்துக்கு வந்தது. அமர்ந்தது.
எழுந்து நின்றிருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷத்தை எழுப்பி, நடமாடும் தெய்வத்தை இரு கரம் உயர்த்தி வணங்கி, அதன் பின் தரையில் அமர்ந்தார்கள்.
இதற்குள், ‘ஃப்ளாஷ்‘ விஷயம் பற்றி ஸ்ரீமடத்து ஊழியரிடம் மகா பெரியவா கேட்ட விஷயம் பத்திரிகை ஆசிரியரின் காதுகளுக்கும் வந்து சேர்ந்து விட்டது.
தன்னுடன் வந்த இரண்டு புகைப்படக்காரர்களிடமும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அனுமதி இல்லாமலேயே சரமாரியாகப் படங்களை எடுத்துத் தள்ளி விட்டார்கள் என்பதில் பத்திரிகை ஆசிரியருக்கு வேதனைதான்.
அடுத்த சில நிமிடங்களில் மகா பெரியவா தரிசனத்துக்காக அவரது திருச்சந்நிதி முன்னால் கூனிக் குறுகி நின்றிருந்தார் பத்திரிகை ஆசிரியர்.
எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகான் தன் வழக்கமான புன்னகையுடன் பத்திரிகை ஆசிரியருடன் பல விஷயங்களைப் பேசினார். தவறியும்கூட புகைப்படம் எடுத்தது பற்றி வாயைத் திறக்கவே இல்லை பெரியவா.
பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீமடத்தில் இருந்து புறப்படுகிறபோது மகா பெரியவாளிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். “தங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் அலுவலக புகைப்படக்காரர்கள் உணர்ச்சி மிகுதியால் போட்டோ எடுத்து விட்டார்கள். மன்னிக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு, கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
ஒரு புன்னகையை வீசி விட்டுப் பிரசாதம் தந்து பத்திரிகை ஆசிரியருக்கு உத்தரவு கொடுத்தார் காஞ்சி சுவாமிகள். கனத்த இதயத்துடன்தான் பத்திரிகை ஆசிரியர் வெளியே வந்தார்.
இவர்கள் மூவரும் வந்த கார் சென்னையை நோக்கிப் புறப்பட்டது.
கார் கிளம்பிய ஒரு கால் மணி நேரத்துக்கு ஆசிரியரும் எதுவும் பேசவில்லை. புகைப்படக்காரர்களும் பேசவில்லை.
அதன் பிறகுதான் பத்திரிகை ஆசிரியர் ஆரம்பித்தார்: “இன்னிக்கு என்னன்னு தெரியலை… தன்னை போட்டோ எடுக்கறதுக்கு மகா பெரியவா நமக்கு உத்தரவு குடுக்கலை.”
புகைப்படக்காரர்கள் இருவரும் எதுவும் பேசாமல் ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பிறகு, “மகான்களோட மன நிலையை அறியாமல், அவர்களை நாம் புகைப்படம் எடுக்கக் கூடாது. அவர்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால், அனுமதியை வாங்க வேண்டும். அனுமதி கிடைக்காமலே காஞ்சி பெரியவாளை நீங்க ரெண்டு பேரும் போட்டோ எடுத்தது தவறு. இது போன்ற இடங்களில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கடினமான குரலில் பேசினார் பத்திரிகை ஆசிரியர்.
புகைப்படக்காரர்கள் இருவரும் தலை குனிந்தபடி காணப்பட்டார்களே தவிர, வேறு ஏதும் பேசவில்லை. ஆனாலும், தங்களது தவறை உணர்ந்தவர்களாகக் காணப்பட்டனர்.
‘அலுவலகத்துக்குப் போனவுடன் நெகட்டிவ்களைக் கழுவி, புகைப்பட பிரிண்ட் கொடுத்தால், ஆசிரியர் சமாதானம் ஆகி விடுவார்‘ என்று இருவரும் நினைத்தனர்.
சென்னை அலுவலகம் வந்தாயிற்று.
பத்திரிகை ஆசிரியர் இறங்கி, தன் அறையை நோக்கி நடந்தார். சற்று நேரம் அமர்ந்து, ஒரு சில பணிகளை முடித்து விட்டு இல்லம் திரும்பலாம் என்று தீர்மானித்தார்.
இதற்குள் புகைப்படக்காரர்கள் இருவரும் தாங்கள் எடுத்த கேமராவோடு டார்க் ரூம் சென்றார்கள். அங்கு அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு, நெகட்டிவ்களை எடுத்துக் கழுவினார்கள். அதன் பின் அவற்றைப் பார்த்தார்கள் – பெரியவா திருவுருவம் எப்படி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள.
ஃபிலிமை தூக்கிப் பிடித்த இரு புகைப்படக்காரர்களும் அதிர்ந்தார்கள்.
காரணம் – பெரியவா இமேஜே அதில் காணப்படவில்லை. எல்லாவற்றிலும் கரும் புகையே விதம் விதமான டிஸைனில் மண்டி இருந்தது.
திகைப்புடன் இந்த ஃபிலிம் சுருளை எடுத்துக் கொண்டு பத்திரிகை ஆசிரியர் அறைக்கு ஓடினார்கள் இருவரும்.
ஆசிரியரின் உள்ளே நுழைந்தவர்கள் இந்த விஷயத்தைச் சுரத்து இல்லாமல் தெரிவித்தார்கள்.
பத்திரிகை ஆசிரியர் ‘இப்படியும் நடக்கலாம்‘ என்று எதிர்பார்த்திருந்தார் போலிருக்கிறது. எனவே, இவர்கள் சொன்ன தகவல் அவருக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை.
“இப்ப புரியுதா – பெரியவாளோட அனுமதி இல்லாமல் அவரை நாம் புகைப்படம் எடுத்தா என்ன ஆகும்னு… தெய்வ சக்தி கூடி இருக்கிற இடத்துல நம்மளோட சாமர்த்தியத்தைக் காட்டுவோம்னு நீங்க ரெண்டு பேரும் நினைச்சது தப்புன்னு இப்ப தெரியுதா? இது உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்” என்றார் ஆசிரியர் கடுமையாக.
தன் அறைச் சுவரில் மாட்டி இருக்கும் மகா பெரியவா படத்தைப் பார்த்து மானசீகமாக மீண்டும் மன்னிப்புக் கேட்டார் பத்திரிகை ஆசிரியர்.