தேடி வந்து தரிசனம்

ரு முறை மகா பெரியவா காஞ்சிபுரத்தில் உள்ள சாந்தாலீஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்தார். ‘சார்ந்தாசய ஆலயம் என்று சொல்வார்கள். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியை வியாச மகரிஷி பிரதிஷ்டை செய்துள்ளார். காஞ்சிப் புராணத்தில் சொல்லப்பட்ட மிகப் புராதனமான ஆலயம். அன்றைக்குக் காஞ்சிபுரத்தில் பலத்த மழை. விடுவதாகத் தெரியவில்லை. கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

மகா பெரியவா தங்கி இருந்த சாந்தாலீஸ்வரர் ஆலயம் பிரதான சாலையில் இருந்து சற்றே விலகிக் காணப்பட்டது. மகானைத் தரிசிக்க வேண்டும் என்றால், பிரதான சாலையில் இருந்து விலகி, உள்ளுக்குள் நடக்க வேண்டும்.

அடாது பெய்த மழையால், மகா பெரியவா தங்கி இருந்த ஆலயத்தின் வாசலும், பிரதான சாலைக்குச் செல்லும் வழியும் சொதசொதப்பாகக் காணப்பட்டது. சேறும் சகதியும் நிரம்பி இருந்தது. எனவே, அந்தப் பாதையைப் பயன்படுத்துவதே லாயக்கற்றதாக இருந்தது. அதற்கு ஏற்றாற் போல் வெளியூர் பக்தர்கள் எவரும் மகானைத் தரிசிக்க சாந்தாலீஸ்வரர் ஆலயத்துக்கு வரவில்லை.

ஆனாலும், அடித்துப் பெய்கிற அந்த மழையிலும் மகா பெரியவாளைத் தரிசிக்க ஒரு வட இந்தியக் குடும்பம் காரில் புறப்பட்டு வந்திருந்தது.

மகான் தரிசனம் தந்து கொண்டிருக்கிற இடத்தை விசாரித்து அறிந்து கொண்ட வட இந்தியக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் சாந்தாலீஸ்வரர் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். காரில் பயணித்து வந்த குடும்பத் தலைவி மட்டும், மோசமான உடல்நிலை காரணமாக கீழே இறங்கவில்லை. அவர் நடந்து செல்லும் நிலையில் இல்லை. எனவே, அவர் வண்டியிலேயே இருந்தார்.

மற்ற அனைவரும் சேறும் சகதியுமாக சொதசொதப்பாக இருந்த இடத்தில் சர்வ ஜாக்கிரதையாக நடந்து சாந்தாலீஸ்வரர் ஆலயத்தை அடைந்தார்கள்.

சங்கர சொரூபமாக ஆலயத்தினுள் வீற்றிருக்கிற பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றார்கள்.

குடும்பத்தினரைப் பார்த்து க்ஷேம லாபம் விசாரித்தார் மகான். பிரசாதம் தந்தார்.

உற்சாகமாகப் பேசிய அவர்கள், தங்களுடன் வந்த குடும்பத் தலைவி பற்றி எடுத்துச் சொல்லி, உடல்நிலை காரணமாக அவர் வண்டியிலேயே இருக்கிறார். சேறும் சகதியும் நிரம்பிய இந்த சாலையில் அவரை நடத்தி அழைத்து வருவது உகந்ததல்ல என்றனர். பிறகு, தாங்கள் இங்கு இருந்தவாறே அவளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

பொழுது சாய்ந்து கொண்டிருந்த மாலை வேளைகன மழை பெய்த காரணமாக ஊரே இருண்டு காணப்பட்டது.

எவரும் எதிர்பாராத அந்த வேளையில் மகா பெரியவா தன் இருக்கையில் இருந்து எழுந்தார். சேறும் சகதியும் அப்பிக் காணப்பட்ட சாலையில் தன் திருப்பாதம் பதித்து நடந்தார். வட இந்தியர்கள் வந்த வாகனம் அருகே சென்றார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்தக் குடும்பத் தலைவி, மகானே தன்னை நோக்கி வருவதை உணர்ந்து எழ முற்பட்டார். கைகளைக் கூப்பினார்.

அந்த அம்மாளை வண்டியிலேயே இருக்குமாறு சைகை செய்து விட்டு, கார் கதவு அருகே வந்தார் பெரியவா.

லேசான இருள் சூழ்ந்த அந்த இடத்தில் தன் முகத்தில் டார்ச் லைட் வெளிச்சம் அடித்துக் காண்பித்தார். “என்னை நன்னா தரிசனம் பண்ணிக்கோ என்றார்.

அந்தப் பெண்மணியும், “சங்கராசர்வேஸ்வரா என்று பெரியவாளைப் பார்த்துக் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு தரிசனம் செய்தார்.

தன்னை நாடி வந்த ஒரு பக்தையை அவர் இருக்கிற இடம் தேடிச் சென்று தரிசனம் தந்த மகானைப் பார்த்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் பரவசப்பட்டுக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

அதன் பிறகே அங்கிருந்து சந்தோஷத்துடன் புறப்பட்டனர்.