வேத பண்டிதரை ஏன் திருப்பி அனுப்பினார்?

றைவனை ஆராதிப்பதற்கு வழிமுறைகள் பல உள்ளன. அதில் அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், மலர் கைங்கர்யம், பக்திப் பாடல்கள் பாடுதல், வாத்தியங்கள் இசைத்தல், கைங்கர்யம் செய்தல் என்று நிறைய உண்டு.

அதே இறைவனை வழிபடுவதற்கு யாகம் செய்தலும் ஒரு ஆராதனை முறை. ஆனால், இந்த யாகங்களை யார் வேண்டுமானாலும் செய்து விட முடியாது. வேதம் கற்ற அந்தணர்கள்தான் இது போன்ற யாகங்களை வழிநடத்திச் செல்ல முடியும். மந்திரங்கள் மூலமாகவும், அக்னிக்கு ஆஹுதிகள் அளித்தும் இந்த யாகங்களை வேத பண்டிதர்கள் நடத்துவார்கள்.

மகா பெரியவா வேதம் வளர்வதற்கும், வேத பண்டிதர்களுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் தந்தாரோ, அந்த அளவு யாகங்களுக்கும் கொடுத்தார். விசேஷமான யாகங்கள் நடத்துகிற பண்டிதர்களை எப்பவும் கவுரவம் செய்து அனுப்புவார் மகா பெரியவா.

வீடுகளில் நடத்தப்படுகிற யாகங்கள் அனைத்தும் அவரவர்கள் தனிப்பட்ட வேண்டுதல் சம்பந்தப்பட்டவை. அதே வேளையில் ஆலயங்கள், மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்படுகிற யாகங்கள் பொது நலன் கருதி நடத்தப்படுபவை.

எத்தனையோ யாகங்கள் உண்டு. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம்இப்படிப் பல நூற்றுக்கணக்கான யாகங்கள் உண்டு.

அதில் அஸ்வமேத யாகம் ஒன்று. இப்போது இந்த யாகம் அவ்வளவாக நடத்தப்படுவதில்லை. காரணம், அந்தக் காலத்தில் தன்னை ஏகபோக சக்ரவர்த்தியாகப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு மன்னர்கள் மேற்கொண்ட யாகம்தான் இது. இதை நடத்துவது சாதாரணமான விஷயம் இல்லை.

வாஜபேய யாகம் என்பதும் ஒன்று. இந்த யாகம் முழுக்க முழுக்கப் பொது நலன் கருதிச் செய்யப்படுவது. இந்த யாகம் நடத்துவதற்குப் பிரத்தியேகமான வேத பண்டிதர்கள் உண்டு. இவர்களைவாஜபேயீ அல்லதுவாஜபேயர்கள் என்று அழைப்பர். அவர்கள் குடும்பமே வாஜபாய் என்று அழைக்கப்படும் (நமது பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜபாய் அவர்களும் இத்தகைய பரம்பரையில் வந்தவர்).

அத்தகைய ஒரு வாஜபேயர்தான்ஸ்ரீ ஜே. பத்மநாபாச்சார்யர். தமிழகத்தில் வாழ்ந்தவர். மகா பெரியவா மீது அதீத பக்தி கொண்டவர். ஐயர், ஐயங்கார் என்பது போல்மாத்வர்கள் பிரிவைச் சேர்ந்தவர். வேதங்களில் கரை கண்டவர்.

அப்போது ஈரோட்டில் பலரது வேண்டுகோளுக்கு இணங்க பிரமாண்டமான ஒரு வாஜபேய யாகத்தைச் செய்து முடித்தார் பத்மநாபாச்சார்யர். எண்ணற்ற வேத பண்டிதர்கள் கலந்து கொண்ட இந்த யாகத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி முடித்தார் பத்மநாபாச்சார்யர். ஊர்க்காரர்கள் அனைவரும் புகழாரம் சூட்டினர்.

பொதுவாக மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் எவரேனும் எங்காவது யாகம் செய்தால், அதன் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு மகான் இருக்கிற இடம் போய் தருவது வழக்கம். அதன்படி பிரமாண்டமாக முடிந்த இந்த வாஜபேய யாகத்தின் பிரசாதத்தை மகா பெரியவாளுக்குச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பத்மநாபாச்சார்யர். அப்போது மகா பெரியவா மகாராஷ்டிர மாநிலத்தில் சதாராவுக்கு அருகே உள்ள மஹாகாவ் என்ற கிராமத்தில் முகாம் இருந்தார்.

இவ்வளவு தொலைவில் மகா பெரியவா இருக்கிறாரே என்று பத்மநாபாச்சார்யர் யோசிக்கவில்லை. பிரசாத்தை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தாருடன்அதாவது மனைவி மற்றும் மகன்களுடன் மஹாகாவ் புறப்பட்டார். இந்த யாகத்துக்குப் பெரும் உதவியாக இருந்த உள்ளூர் அன்பர்கள் சிலரும் இந்தப் பயணத்தில் சேர்ந்து கொண்டனர்.

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து, அங்கிருந்து மஹாகாவ் பயணித்தனர்.

மஹாகாவ் கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருக்கிற இடத்தை நீண்ட பயணத்துக்குப் பின் அடைந்தார் பத்மநாபாச்சார்யர்.

பெரியவா தங்கி இருந்த மண்டபத்தில் வாசலில் இருந்த சிப்பந்திகளிடம் விஷயத்தைச் சொன்னார் பத்மநாபாச்சார்யர்.

இவரை ஏற்கெனவே அறிந்திருந்த காரணத்தால், விஷயத்தைக் கேட்டுக் கொண்டு மகா பெரியவாளிடம் சொல்வதற்கு சிப்பந்திகள் கேம்ப்பின் உள்ளே போனார்கள். ‘இன்னார் வந்திருக்கிறார் என்று மகானிடம் தெரிவித்து விட்டு, மகானுடைய உத்தரவின்பேரில் தரிசனத்துக்குச் செல்வது ஒரு வழக்கம்.

இன்னும் ஒரு சில விநாடிகளில் மகானைத் தரிசிக்கப் போகும் ஆவலில் பத்மநாபாச்சார்யர் முகம் நிறைய சந்தோஷத்துடன் வெளியே காத்திருந்தார்.

உள்ளே போன சிப்பந்திகள் ஒரு சில நிமிடங்களில் வெளியே வந்தார்கள்.

அவர்களை ஆவலுடன் ஏறிட்டார் பத்மநாபாச்சார்யர். ஆனால், சிப்பந்திகளின் முகம் சுரத்திழந்து காணப்பட்டது.

பத்மநாபாச்சார்யர் கேட்டார்: “நாங்க உள்ளே வருவதற்குப் பெரியவா உத்தரவு கொடுத்தாளா?

இல்லே… ‘அவாளை இங்கேர்ந்து போகச் சொல்லுனு சொல்லிட்டார். – சிப்பந்தி ஒருவர் கூறினார்.

பத்மநாபாச்சார்யருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘மிகப் பெரிய யாகத்தைச் செய்து முடித்து விட்டு வந்த நம்மைத் திரும்பிப் போக சொல்கிறாராஅப்படியானால் இத்தனை தொலைவு பயணித்து வந்து, மகானின் தரிசனம் இல்லாமல் வெறுமனே ஊருக்குத் திரும்ப வேண்டுமாஒருவேளை வாஜபேய யாகத்தில் ஏதேனும் தவறு செய்து விட்டோமோஅதன் காரணமாகத்தான் மகா பெரியவா நமக்குத் தரிசனம் தராமல் திருப்பி அனுப்புகிறாரோ? என்று இதுவாக இருக்குமோஅதுவாக இருக்குமோ என்று ஏகத்துக்கும் தவித்துப் போனார் பத்மநாபாச்சார்யர். இதன் காரணமாக அவரது விழிகளில் இருந்து நீர்த் துளிகள் உருண்டன.

தரிசனத்துக்கு மகான் மறுத்தமையால், குடும்பத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.

இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு சிப்பந்திகளுக்கே பரிதாபமாக இருந்தது.

வந்த வழியே நடந்தார் பத்மநாபாச்சார்யர். அடுத்து, அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுவோ புது ஊர். புரியாத பாஷை. பெரியவா தரிசனமும் கிடைக்கவில்லை. பேசாமல் ஊருக்கே திரும்பி விடலாமா என்கிற யோசனையுடன் சில தப்படிகள் நடந்தவருக்கு அந்த சாலையில் இருந்த ஒரு சத்திரம் கண்களுக்குப் பட்டது.

இப்போதைக்கு இந்த சத்திரத்தில் அனைவரும் தங்கி சற்று ஓய்வெடுக்கலாம்அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம் என்று உள்ளே நுழைந்தார். தொடர்ந்து அனைவரும் நுழைந்தார்கள்.

வேத பண்டிதர் ஒருவர் வந்திருக்கிறாரே என்று அந்த சத்திரத்தில் பொறுப்பில் இருந்தவர் ஓடி வந்து அனைவரையும் உபசரித்தார்.

ரொம்ப சந்தோஷம்கொஞ்ச நேரம் இங்கே ஓய்வெடுத்துட்டு நாங்க ஊருக்குப் புறப்பட்டுப் போறோம் என்று அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டார்.

தாராளமாநீங்கல்லாம் இங்கே தங்கறது எங்களோட பாக்கியம் என்றார் சத்திரத்துக்காரர்.

குடும்பத்தினருடனும், தன்னுடன் வந்த ஈரோட்டுக்காரர்களுடனும் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்தார் பத்மநாபாச்சார்யர்.

மகா பெரியவா தரிசனம் கிடைக்காமல் இந்த ஊரில் தங்கி இருப்பது வீண் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், அடுத்து ஏதேனும் ஒரு ரயிலைப் பிடித்து ஊருக்கே புறப்பட்டு விடலாம் என்று தீர்மானித்தனர். அதன்படி ரயில் புறப்படுகிற நேரத்தை விசாரித்து வருவதற்கு ஒருவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஒரு மணி நேரத்துக்குப் பின் எவரும் எதிர்பாராத அதிசயம் அங்கே நடந்தது.

பத்மநாபாச்சார்யர் தங்கி இருந்த சத்திரத்தின் வாசலில் திடீரென்று ஒரு பரபரப்பு.

வாத்திய ஒலி; வேத கோஷம்; ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர முழக்கம்.

வாத்திய முழக்கம் கேட்கிறதேமகா பெரியவா எங்கோ வெளியே செல்கிறார் போலிருக்கிறதுநம்மை அழைத்து தரிசனம் தரவில்லை என்றாலும், எட்டக்க இருந்தாவது அந்த மகானின் திருமுகத்தைத் தரிசிக்கலாம் என்கிற எண்ணத்துடன் பத்மநாபாச்சார்யர் எழுந்து சத்திரத்தின் வாசலுக்கு வந்தார். அவரோடு ஒரு சிலரும் உடன் வந்தனர்.

வந்து நின்றவர்கள் பிரமிப்பின் உச்சிக்குப் போனார்கள்.

காரணம்இத்தனை கோஷமும் இந்த சத்திரத்தைக் கடந்து செல்லவில்லை. சத்திரத்தின் வாசலில் நின்றபடியேதான்! ஆனால், கூட்டத்தில் மகா பெரியவா இல்லை.

பத்மநாபாச்சார்யர் வெளியே வந்தவுடன், அவரைப் பார்த்து வேத பண்டிதர்களும், ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள்நமஸ்காரம் சொல்லி வணங்கினார்கள்.

பத்மநாபாச்சார்யருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரும் வேத பண்டிதர்களைப் பார்த்து பதில் நமஸ்காரம் தெரிவித்தார். அவர் மனதுக்குள் குழப்பம் நீடித்தது.

வயது முதிர்ந்த ஒரு வேத பண்டிதர், பத்மநாபாச்சார்யரை மெள்ள நெருங்கி, “பெரியவா எங்களை அனுச்சு வெச்சாதமிழகத்துல ஒரு வாஜபேய யாகம் பண்ணிட்டு, யாரோ இங்கே வந்து தங்கி இருக்காளாமேஅவாதான் நீங்களா? என்று கேட்டார் பூரிப்புடன்.

பத்மநாபாச்சார்யர் முகத்தில் பரவசம். “ஆமாநாங்கதான் ஈரோட்டுல பண்ணிட்டு பெரியவா தரிசனத்துக்காக வந்தோம்ஆனா, பெரியவா எங்களை…. என்று ஆரம்பித்து முடிப்பதற்குள் அந்த வேத பண்டிதரே குறுக்கிட்டார். “உங்களையும், உங்க குடும்பத்தையும், உங்களோட வந்தவாளையும் வாத்திய முழக்கதோட, வேத கோஷத்தோட அழைச்சிண்டு வரச் சொன்னா. ஒங்களுக்கு வெண்கொற்றக் குடை பிடிச்சுண்டு வர்றதுக்கு ஸாண்டூர் மகாராஜாவையும் அனுப்பி வெச்சிருக்கார். அவரும் வந்து உங்க வருகைக்காகக் காத்துண்டிருக்கார் என்றார் நிதானமாக.

பத்மநாபாச்சார்யர் வாசல் பக்கம் பார்த்தார். திரளான கூட்டம். யானை, குதிரை, வெண்கொற்றக் குடை என்று மகா பெரியவா யாத்திரை செல்லும்போது வரிசை கட்டுகிற பரிவாரங்கள் அத்தனையும் காத்திருந்தன.

நீங்க புறப்படத் தயாரா இருக்கேளா? வாத்தியத்தை வாசிக்கச் சொல்லவா? – அந்த வேத பண்டிதர் கேட்டார்.

பத்மநாபாச்சார்யருக்குக் கண்களில் நீர் முத்துக்கள் கோர்க்க ஆரம்பித்தன. உள்ளே போனார். உள்ளே இருந்த இன்ன பிறரையும் அழைத்தார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைவரும் வாசலுக்கு வந்தனர்.

வாத்திய கோஷம், வேத கோஷம் முழங்க மகா பெரியவா கேம்ப் இருக்கிற முகாம் நோக்கி யாத்திரை துவங்கியது.

வெண்கொற்றக் குடையை ஸாண்டூர் ராஜா பிடிக்கஅருகே இருவர் சாமரம் வீசமிக உயர்ந்த மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டார் பத்மநாபாச்சார்யர்.

கல்கத்தா சங்கரநாராயண ஸ்ரௌதிகள் முன்னிலை வகித்து இந்த யாத்திரை நடந்தது.

மகா பெரியவா முகாமை அடைந்தவுடன், பத்மநாபாச்சார்யரை மிகுந்த கவுரவத்துடன் உள்ளே அழைத்துச் சென்றார் சங்கரநாராயண ஸ்ரௌதிகள்.

திரளான பக்தர்கள் கூடி இருக்கதன் யதாஸ்தானத்தில் அமர்ந்தபடி திருக்காட்சி தந்து கொண்டிருந்தார் மகா பெரியவா.

மகானை நேருக்கு நேராகப் பார்த்தவுடன் பத்மநாபாச்சார்யர் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தாரை தாரையாக அவர் விழிகளில் இருந்து நீர்த்துளிகள் உருண்டன.

அவாளைத் திரும்பிப் போகச் சொல்லு என்று அனுமதி மறுத்து பெரியவா நம்மை அனுப்பி விட்டு, இப்போது இப்படிப்பட்ட ஒரு வரவேற்புடன் அழைக்கிறாரேபெரியவாளின் கருணையும் வாத்சல்யத்தையும் எப்படிச் சொல்வது என்று மனதுக்குள் தேம்பிக் கொண்டிருந்தார்.

மகா பெரியவாளைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

என்னது கண் கலங்கறேதுடைச்சுக்கோ. உன்னைத் திருப்பி அனுப்பிட்டேன்னு கவலைப்பட்டியேஒரு வாஜபேய யாகம் பண்ணிட்டு பிரசாதம் கொண்டு வர்றவனைப் பார்க்காம திருப்பி அனுச்சா, பாவம்தான் மிஞ்சும்.

வாஜபேயம் யாகம் பண்ணிட்டு வர்றவாளை எப்படி வரவேற்கணும் தெரியுமா? சாஸ்திரம் சொல்றதுஅவாளை ராஜ மரியாதையோட வரவேற்கணும்நாட்டை ஆள்கிற மகாராஜா யாராவது ஒருத்தர் அந்த வேத பண்டிதருக்கு வெண் கொற்றக்குடை புடிச்சுக் கூட்டிண்டு வரணும். மேள தாளம், வாத்திய கோஷம், வேத கோஷமெல்லாம் வேணும்.

நீ என்னடான்னா பொசுக்குன்னு வாசல்ல வந்து நின்னுட்டேஉன் மனசுல என்னைப் பார்க்கணும்; பிரசாதம் கொடுக்கணும்னு ஆசை. ஆனா, நான் பண்ண வேண்டியதை பண்ணணும் இல்லியா? அதுக்குத்தான் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது என்று மகா பெரியவா பேசிக் கொண்டே செல்வதைப் பார்த்தவுடன் ஈரோட்டில் இருந்த வந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போய் விட்டார்கள்.

எதற்கு முதலில் திருப்பி அனுப்பி விட்டு, பின் விமரிசையாக அழைத்து வரப்பட்டார் என்பதை பத்மநாபாச்சார்யருக்கு அழகாக விளக்கினார் பெரியவா.

வேதம் கற்ற ஒரு பண்டிதருக்கு முன்னால் எல்லாமே துச்சம்தான் என்கிற வாக்கு அன்று நடமாடும் தெய்வத்தின் திருவாயால் வெளிப்படுத்தப்பட்டது.

வாஜபேய யாகம் செய்து முடித்த ஒரு பண்டிதருக்கு நாட்டை ஆள்கிற ராஜா வெண்கொற்றக் குடை பிடித்து அவரை மரியாதையுடன் அழைத்து வர வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லி இருக்கிறது என்றால், வேதத்தின் முக்கியத்துவத்தை எந்த அளவுக்கு நாம் போற்ற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வெண்கொற்றக் குடையை வேத பண்டிதருக்குப் பிடிச்சுண்டு ராஜா பக்கத்துல வரணும். அந்தக் குடையோட நிழல்ல வாஜபேய யாகம் பண்ண பண்டிதர் வரணும். அப்படி உன்னை வரவேற்கறதுதான் முறை. நீ பாட்டுக்கும் குடும்பத்தோட, ஊர்க்காராளோட பொசுக்குன்னு வந்து வந்துட்டே. அப்படிப்பட்ட சூழ்நிலைல உன்னை நான் வரவேற்கக் கூடாது. வேத கோஷத்துக்கு ஸ்ரீமடத்து கேம்ப்புல பண்டிதாளைத் திடீர்னு தேடிண்டு நான் எங்கே போவேன்? வாத்திய கோஷத்துக்கு சட்டுன்னு வித்வான்களை எங்கே தேடுவேன்? ராஜாவுக்கும் வெண்கொற்றக் குடைக்கும் எங்கே போவேன்?

வேதம் சொல்றவாகூட எம் பக்கத்துல இருக்கானு சொல்லலாம்கொஞ்சம் குரல் கொடுத்துக் கூப்பிட்டா வந்துடப் போறா. வாத்திய கோஷக்காராளும் இருக்கா. நாம கூப்பிட்டா ராஜா ஒடனே வந்துடுவாரா? அவருக்கு எத்தனை ஜோலி இருக்கும். அதான் மனசைக் கஷ்டப்பட்டு அடக்கிண்டு ஒன்னைஉள்ளே வரக் கூடாதுனு போகச் சொன்னேன்.

நீ கௌம்பின அடுத்த நிமிஷம் ஸாண்டூர் மகாராஜா தற்செயலா வந்தார். எல்லாத்தையும் சட்டுபுட்டுன்னு ஏற்பாடு பண்ணிட்டு உன்னை வரவழைச்சேன் என்று சொன்ன மகா பெரியவா, வாஜபேய யாக பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார்.

பத்மநாபாச்சார்யர் விழிகளில் இருந்து பிரவாகமாக நீர் பெருக்கெடுத்தது.

ஈரோட்டில் இருந்து வந்திருக்கக் கூடியவர் இத்தனை பெரிய வேத வித்வானா? என்று கூடி இருந்த கூட்டம் மொத்தமும் பத்மநாபாச்சார்யரைப் பார்த்து வியந்தது. தரிசித்தது.

கேம்ப்பில் இருந்த சமையற் கலைஞரை அழைத்து, “இவாள்லாம் ஸ்வயம்பாகம். அவாளே சமைச்சுப்பாசமையலுக்கு என்னென்ன பொருள் கேக்கறாளோ, எல்லாத்தையும் கொடுத்து உதவுங்கோ என்று உத்தரவிட்டார்.

அன்றைக்கு இரண்டு மணி நேரம் பத்மநாபாச்சார்யரிடம் பேசிக் கொண்டிருந்தார் மகா பெரியவா. வந்தவர்கள் அனைவரும் உணவு உட்கொண்ட பின்தான், அவர்களுக்குப் பிரசாதம் தந்து உத்தரவு கொடுத்தார் பெரியவா.

பத்மநாபாச்சார்யர் குடும்பத்தின் மீது மகா பெரியவா கொண்டிருந்த பாசம் அதீதமானது.

இவர்கள் குடும்பத்துக்கு மகா பெரியவா அனுக்ரஹம் ஏராளம் உண்டு. அடுத்த அத்தியாயத்திலும் படிக்கப் போகிறீர்கள்.