முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கும் முகாம்களுக்கும் வருவார்கள். அவர்களை முறையாக வரவேற்று, பெரியவா தரிசனம் செய்து வைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
பெரியவாளின் நித்யப்படி பூஜைக்கும், அனுஷ்டானத்துக்கும் தேவையானவற்றை சரிவர எடுத்து வைக்க வேண்டும்.
யாத்திரையின்போது தேவையானவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்துச் செய்ய வேண்டும்.
– இப்படி நிறைய பணிகள் ஸ்ரீமடத்தில் உண்டு.
ஒரு சமஸ்தானம் போலவே ஸ்ரீகாஞ்சி மடத்தினர் இயந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட தொண்டர்களுள் வேங்கடராமய்யர் என்பவரும் ஒருவர்.
தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசத்துக்கு அருகே இருக்கிற உத்தமதானபுரம் இவரது சொந்த ஊர்.
மகா பெரியவா 68-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்பிருந்தே காஞ்சி ஸ்ரீமடத்தில் அவருக்கு முந்தைய ஆச்சார்யர்களிடம் தொண்டாற்றி வந்தவர்.
அப்போது இருந்த 66-வது ஆச்சார்யர் காலத்திலேயே ஸ்ரீமடத்தின் ‘கார்வார்‘ என்கிற பொறுப்பில் இருந்தார்.
கார்வார் என்பது ரொம்பவும் பொறுப்பான உத்தியோகம். ஸ்ரீமடத்தில் பணி புரிகிறவர்களைக் கண்காணிக்கிற வேலை. இன்றைய பாஷையில் சொல்ல வேண்டுமானால், மேனேஜர் எனலாம்.
ஸ்ரீமடத்தில் இருக்கும்போதும் சரி… யாத்திரைகளின்போதும் சர்… கார்வார் எப்போதுமே பிஸியாக இருப்பார். பலவற்றையும் கையாள வேண்டும்.
காஞ்சி ஸ்ரீமடத்துக்கென்று ஒட்டகம், யானை, குதிரை எல்லாமே உண்டு. யாத்திரைகளின்போது இவற்றை எல்லாம் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
வாயுள்ள ஜீவன்கள் பசி எடுக்கும்போது கேட்டுச் சாப்பிட்டு விடலாம். இவை போன்ற வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்?
எனவே, ஸ்ரீமடத்தின் கார்வாருக்கு, “வாயில்லா ஜீவன்களை நன்னா பாத்துக்கணும். அதுகளுக்குத் தண்ணி வேணுமா, தீனி வேணுமா… இதையெல்லாம் நாமதான் பாத்துப் பாத்துப் பண்ணணும்” என்று வலியுறுத்துவார்.
ஸ்ரீமடத்தின் யாத்திரைகளின்போது தட்டுமுட்டு சாமான்கள், பாத்திரங்கள், சுவாமி வைக்கும் ரதம், அலுவலகப் பெட்டிகள் போன்றவற்றை ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊருக்குக் கொண்டு செல்வதற்குப் பெரிய மாட்டு வண்டிகள் உண்டு. இந்த வண்டிகளில் அனைத்து சாமான்களும் ஏற்றப்படும்.
காஞ்சி ஆச்சார்ய சுவாமிகள் யாத்திரை செல்வதற்குப் பல்லக்கு உண்டு. பல்லக்கைச் சுமந்து செல்வதற்கு போகிகள் எனப்படும் ஆட்கள் ஸ்ரீமடத்தில் உண்டு.
தவிர ஒட்டகம், யானை, குதிரை, பசுக்கள் போன்றவற்றை கவனமாகக் கூட்டிச் செல்வதற்கும், அவை ஓய்வெடுக்கின்ற வேளைகளில் பராமரிப்பதற்கும் சிப்பந்திகளும் இருந்தனர்.
மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் ஒரே ஆளாக இருந்து திறம்பட நிர்வகித்து வந்தவர் உத்தமதானபுரம் வேங்கடராமய்யர். பல ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்தார்.
மகா பெரியவாளுக்கு முன்பு பீடத்தை அலங்கரித்தவர்கள் காலத்தில் இருந்து மகா பெரியவா காலத்திலும் ஸ்ரீமடத்தில் கார்வாராக இருந்த பெருமைக்குரியவர்.
1943-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கார்வாராகவே பணி புரிந்தார்.
நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்ததன் பலனாக தன் முதுமைக் காலத்தில் இந்த பூவுலகைத் துறந்தார். கயிலை சர்வேஸ்வரனின் திருப்பாதங்களில் நிரந்தரமாக சரண் புகுந்தார்.
மகா பெரியவா பீடாதிபதி ஆவதற்கு முன் சிறுவனாக இருந்தபோது கார்வார் வேங்கடராமய்யருக்கும் பெரியவாளுக்கும் சுவையான ஓர் அனுபவம் ஏற்பட்டது.
1907-ஆம் ஆண்டு கலவையில் மகா ஸித்தி ஆனார் காஞ்சி மடத்தின் 66-வது ஆச்சார்ய சுவாமிகள். இவருடைய தீட்சா திருநாமமும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்தான். கலவை பெரியவா என்றும் இவரை அழைப்பார்கள்.
கலவை பெரியவா தன் காலத்தில் நிறைய யாத்திரைகள் செல்வார். தான் முகாமிடும் இடங்களில் அழகாக உபன்யாசம் செய்வார். அவரது திருவாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லோரையும் ஈர்க்கும். திரளான பக்தர்கள் கூடி இவரது உபன்யாசத்தை செவிமடுத்துக் கேட்பார்கள்.
தான் யாத்திரை செல்லும் காலத்தில் அடிக்கடி திண்டிவனம் பக்கம் உள்ள கிராமங்களில் முகாமிடுவது வழக்கம். அதுபோல் ஒரு முறை திண்டிவனம் அருகிலுள்ள ஒரு ஊரில் கலவை பெரியவா முகாமிட்டிருந்தார்.
கலவை பெரியவா எப்போது திண்டிவனம் பக்கம் வரும்போதும் சிறுவனான சுவாமிநாதனையும் (மகா பெரியவா) அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் தரிசிப்பது வழக்கம்.
1906-ஆம் ஆண்டில் அப்படி ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார் கலவை பெரியவா. சுவாமிநாதனின் பெற்றோர் ஆச்சார்யரை தரிசித்து பிரசாதம் பெற்றுக் கொண்டார்கள்.
அதன் பின் கலவை பெரியவா அடுத்த கிராமத்துக்குப் பல்லக்கில் புறப்பட்டுச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து எண்ணற்ற பக்தர்களும் நடந்தார்கள்.
சிறுவனான மகா பெரியவாளும், அவரது பெற்றோரும் உடன் நடந்தார்கள்.
“கொஞ்ச தூரம் ஆச்சார்யாள் பின்னாடியே போயிட்டு வரேனே…” என்று சிறுவனான மகா பெரியவா, தன் பெற்றோரின் முகத்தை ஆர்வத்துடன் ஏறிட்டார்.
‘பழக்கப்பட்ட கிராமம்தானே… குழந்தை ஆசைப்படுகிறான். போகட்டும்… நாமும்தான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோமே…‘ என்று மகனுக்கு இருக்கிற குரு பக்தியையும் கண்டு வியந்து அனுமதி வழங்கினார் தந்தை.
அனுமதி கிடைத்ததும், கலவை பெரியவாளைப் பார்த்துக் கைகூப்பி வணங்கியபடியே சிறுவனான மகா பெரியவா உற்சாகமாக நடந்தார்.
கலவை பெரியவா பயணித்த பல்லக்கைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மாட்டுவண்டியில் கார்வார் வேங்கடராமய்யர் அமர்ந்திருந்தார். எல்லாமும் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறதா என்று முன்னும் பின்னும் தன் பார்வையைச் சுழற்றியபடி காணப்பட்டார்.
கார்வார் வேங்கடராமய்யர் பயணித்த மாட்டுவண்டியின் பின்னால்தான் மகா பெரியவா தொடர்ந்து நடந்து வந்தார்.
ஒரு கட்டத்தில் சிறுவனான மகா பெரியவாளுக்குக் கால்கள் வலித்தன. எத்தனை நேரம்தான் ஒரு சிறுவன் தொடர்ந்து ஓடி வர முடியும்… கால்கள் கெஞ்ச ஆரம்பித்தன. கார்வார் வேங்கடராமய்யர் பயணித்து வந்த வண்டியில் ஒருவர் உட்காரக் கூடிய அளவு இடம் இருந்தது.
உடனே தனக்கு முன்னால் மாட்டுவண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் கார்வார் வேங்கடராமய்யரைப் பார்த்து, “மாமா… எனக்குக் கால்கள் வலிக்கறது… இந்த வண்டியிலேயே வர்றேனே… ஏறிக்கலாமா?” என்று கெஞ்சும் பாவனையில் கேட்டார் மகா பெரியவா.
கார்வார் வேங்கடராமய்யர் ரொம்ப கறாரானவர். யார் யாருக்கு என்னென்ன அதிகார வரம்பு உண்டோ, அதை மீறுவதற்கு அனுமதிக்க மாட்டார். “ஊஹும்… நீயெல்லாம் ஏறக் கூடாது” என்று சிறுவனின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
அதன் பின் சிறுவனான மகா பெரியவா சிறிது தொலைவு நடந்தே வந்து விட்டு, பெற்றோருடன் ஊருக்குத் திரும்பி விட்டார்.
பிற்காலத்தில் நடக்கப் போவதை யார் அறிவார்?!
இதே சிறுவனான சுவாமிநாதன் 1907-ஆம் ஆண்டு சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடத்தின் 68-வது ஆச்சார்யராக ஆனார்.
அதன் பின்னரும் பல ஆண்டுகள் காஞ்சி ஸ்ரீமடத்தின் கார்வாராக இருந்தார் வேங்கடராமய்யர்.
பீடத்துக்கு வந்த புதிதில் 1909 மற்றும் 1910-ஆம் ஆண்டுகளில் மகா பெரியவா கும்பகோணம் ஸ்ரீசங்கர மடத்தில் தங்கி வித்யாப்பியாசம் செய்து வந்தார். புதிதாக வந்த ஆச்சார்யாளைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக திரளான பக்தர்கள் கும்பகோணத்துக்கு வந்தார்கள். அப்போது கார்வார் வேங்கடராமய்யரின் பணிகளும் கூடின. என்றாலும், மகா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்வதைத் தான் பெற்ற பேறாக எண்ணிப் பூரித்தவர் இவர்.
ஸ்ரீமடத்தில் எல்லாப் பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படும். பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, மகா சிவராத்திரி என்று எல்லா விசேஷங்களின்போதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
கும்பகோணத்தில் மகா பெரியவா தங்கி, வித்யாப்பியாசம் செய்து கொண்டிருந்தபோது பொங்கல் திருவிழா வந்தது.
அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், ஸ்ரீமடத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
ஸ்ரீமடத்து முகாமில் இருக்கிற பசுமாடுகள், வண்டி மாடுகள், யானை, குதிரை ஆகிய அனைத்தையும் ஓரிடத்தில் கட்டி வைத்து, விசேஷமான அலங்காரம் செய்வார்கள்.
மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசுவார்கள். அழகான மாலைகளை அணிவிப்பார்கள்.
வண்டி மாடுகளையும், பசுக்களையும் பராமரித்து பராமரித்து வருகிறவர்கள் திறந்தவெளியில் பானையில் பொங்கல் வைப்பார்கள்.
அந்தப் பொங்கல் பொங்கி வருகிறபோது, ‘பொங்கலோ பொங்கல்‘ என்று உற்சாகமாகக் குரல் கொடுத்து விட்டு, மாடுகளுக்கும் யானை குதிரை போன்றவற்றுக்கும் பொங்கல் வழங்குவார்கள்.
ஸ்ரீமடத்து முக்கியஸ்தர்கள், சிப்பந்திகள், பக்தர்கள் என பலரும் அங்கே கூடுவர்.
மகா பெரியவாளும் பிரதானமான ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த வைபவங்களைக் கண்டு சந்தோஷிப்பார்.
கார்வாரும் உடன் இருப்பது வழக்கம்.
அப்போது மகா பெரியவாளுக்குப் பழைய நினைவு வந்தது.
என்ன நினைவு?
காஞ்சி ஸ்ரீமடத்தின் 66-வது பீடாதிபதியான கலவை பெரியவா 1906-ஆம் ஆண்டில் திண்டிவனத்துக்கு அருகே முகாமிட்டிருந்தார் அல்லவா?
அப்போது சிறுவனான மகா பெரியவா இந்த யாத்திரையில் கலந்து கொண்டு உடன் நடந்து வந்தார் என்று பார்த்தோம் அல்லவா? கார்வார் வேங்கடராமய்யர் பயணித்து வந்த மாட்டு வண்டியில் ‘கால்கள் வலிக்கறது… ஏறிக்கட்டுமா?‘ என்று சிறுவனான மகா பெரியவா கேட்டார். அதற்கு ‘ஏறக் கூடாது‘ என்று கறாராக கார்வார் வேங்கடராமய்யர் சிறுவனான சுவாமிநாதனுக்கு உத்தரவிட்டார் அல்லவா?
மாட்டுப் பொங்கல் தினத்தின்போது அங்கு கட்டப்பட்டிருந்த மாடுகளையும், ஓரமாக அலங்காரம் செய்து நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டிகளையும் பார்த்தபோது இதுதான் மகா பெரியவாளின் நினைவுக்கு வந்தது.
தனக்குள் புன்னகைத்துக் கொண்டவர், ‘இந்த கார்வாருடன் ஒரு சின்ன விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டும்‘ என்று குறும்புடன் தீர்மானித்தார். கயிலைவாசன் என்றால், திருவிளையாடல்களுக்குப் பஞ்சமா?
சற்றுத் தள்ளி நின்றிருந்த கார்வார் வேங்கடராமய்யரை சைகையால் அழைத்தார்.
ஓடி வந்தார் கார்வார். பெரியவாளை வணங்கி, நமஸ்கரித்தார். ‘என்ன…‘ என்பதுபோல் வாய் பொத்தி பணிவாக நின்று கொண்டிருந்தார்.
“இங்கே இருக்கிற மாடுகள், வண்டிகள்லாம் யாருடையது?” என்று கேட்டார்.
எதற்காக இப்படி ஒரு கேள்வியை மகான் கேட்கிறார் என்பது புரியாமல், “பெரியவா… எல்லாம் மடத்தைச் சேர்ந்தது… பெரியவாளுடையது” என்றார்.
“அப்படின்னா இந்த வண்டிகள்ல எதுல வேணாலும் நான் ஏறிப் போகலாம்தானே?” என்று கேட்டார் பெரியவா குசும்புடன்.
இன்னமும் வேங்கடராமய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஆமாம் பெரியவா… இவை எல்லாமே உங்களுடையவை. எந்த வண்டில வேணாலும் நீங்க ஏறிப் போகலாம்” என்றார் தலையை இரு புறமும் அசைத்து.
கார்வாரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்து, “முன்னொரு தடவை என்னை வண்டியில் ஏறக் கூடாதுன்னு நீங்க விரட்டினேளே… திண்டிவனம் பக்கம்… ஞாபகம் இருக்கா?” என்றார் புன்னகையுடன்.
அப்போதுதான் கார்வாருக்குப் பழைய சம்பவம் அப்படியே ஒரு நிழல் போல் நினைவுக்கு வந்து போனது.
அதை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு மகா பெரியவா தன்னோடு உரிமையுடன் விளையாடிப் பார்க்கிறார் என்பது புரிந்து வேங்கடராமய்யரும் தலை குனிந்து சிரித்து விட்டார்.
“திடீர்னு ஞாபகத்துக்கு வந்தது…” என்ற பெரியவா, அன்றைக்கு அத்தனை கறாராக இருந்த கார்வாரை இப்போது பாராட்டினார்.
“கார்வார்னா இப்படித்தான் இருக்கணும்… தன்னோட வேலை எதுவோ அதுல கரெக்டா இருக்கணும். நீங்க அன்னிக்கும் அதைத்தான் செஞ்சேள்… இன்னிக்கும் அப்படித்தான் இருக்கேள்” என்று பாராட்டினார்.
இரு கைகளையும் கூப்பி வணங்கி, தரையில் விழுந்து நமஸ்கரித்தார் கார்வார் வெங்கடராமய்யர்.