மகா பெரியவாளின் பரிபூரண அன்பைப் பெற்ற கோடானு கோடி பக்தர்களுள் குறிப்பிடப்பட வேண்டியவர் பிரதோஷம் வேங்கடராமய்யர் என்கிற பிரதோஷம் மாமா.
மகானைத் தன் மனதில் வைத்து நித்தமும் மானசீக பூஜை நிகழ்த்தியவர் பிரதோஷம் மாமா.
இந்த உடலிலேயே மிகவும் சுத்தமான பகுதி என்று சொல்லப்படுவது மனம்தான். ஆனாலும், அதற்குள் எண்ணற்ற குறைகளையும், குழப்பங்களையும் உள்ளடக்கி வைத்து மானுட வாழ்வின் மகத்துவம் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். ஒருவரின் மனம் மாசு பட்டுவிட்டால், வாழ்க்கை பிரகாசிக்காது.
மனம் சுத்தமாக வேண்டும் என்றால் நேர்மை, உண்மை, நியாயம், ஒழுக்கம், பரோபகாரம் போன்ற நற்குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எங்கே நற்குணங்கள் காணப்படுகின்றனவோ, அங்கு கடவுள் குடி இருப்பார். மகான்கள் நித்ய வாசம் செய்வர்.
அதன்படி எப்போதும் மகா பெரியவா… மகா பெரியவா என்று அவரது சிந்தனையுடனே வாழ்ந்து வருகிற பிரதோஷம் மாமா, நித்தமும் அவருக்கு மானசீக பூஜை செய்வார் (பூசலார் நாயனார் மனசுக்குள் கோயில் கட்டியதும் இதுபோன்ற பக்திதான்).
‘மனசு ஒரு இடத்துல நிலையா இருக்க மாட்டேங்கிறது‘ என்று எப்போதும் குழம்பிய நிலையிலேயே வாழ்ந்து வருபவர்களுக்கும் மானசீக பூஜைக்கும் வெகு தொலைவு.
மனம் ஒன்றிச் செய்யும் மானசீக பூஜையை இறைவனோ, மகானோ ஏற்றுக் கொண்டு விடுவார். அது சத்தியம்!
அந்த வகையில் பிரதோஷம் மாமா மிகவும் லயித்து நடத்தும் மானசீக பூஜையை தினமும் பெரியவா ஏற்றுக் கொண்டு அவருக்கு அருள் பாலிப்பார். இந்த பூஜையை வெளியே எவரும் பார்க்க முடியாது. பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிற பூஜை அல்ல இது!
ஆனால், ஒரு காலகட்டத்தில் இந்த மானசீக பூஜையை பிரதோஷம் மாமாவால் தொடர முடியாமல் போனது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
மனம் ஒரு நிலையில் இல்லை என்றால், இந்த பூஜையை நடத்த முடியாது. இதற்குக் குடும்பம், பணி என்று பல காரணங்கள் சொல்லலாம்.
என்றாலும், தனக்கு உண்டான மானசீக பூஜை நின்று போனால், பரமேஸ்வர சொரூபமாக விளங்கும் மகா பெரியவா பார்த்துக் கொண்டிருப்பாரா?
மகா பெரியவாளுக்கு மிகவும் பிடித்ததே தன் அத்யந்த பக்தர்களின் மனம்தான்!
தன் பக்தனான பிரதோஷம் மாமாவுக்கு அதை உணர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார். அந்த மானசீக பூஜையைத் தொடரச் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
‘மகா பெரியவா… மகா பெரியவா…‘ என்று அந்த மகானையே சதா உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், உள்ளம் ஏனோ சண்டித்தனம் பண்ணியது. மானசீக பூஜையைத் தொடர முடியாதபடிக்கு என்னென்னவோ காரணங்கள்.
ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை விட்டு விட்டால், தெய்வங்களும் மகான்களும் சந்தோஷப்படுவார்கள். ஆனால், ஒருவர் தான் கொண்டிருக்கிற நற்குணங்களை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விட வேண்டி நேர்ந்தால், தெய்வங்களும் மகான்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
நற்குணங்களைக் கொண்டிருப்பது மட்டுமே உத்தமமான ஒரு பக்தனின் அடையாளம்! எனவே, நாம் கொண்டிருக்கிற நற்குணங்களை என்றும் விட்டு விடக் கூடாது.
ஒருவேளை விட்டு விட்டாலும், ஏதேனும் ஒரு குறிப்பு காட்டி அதைத் தொடருமாறு தன் பக்தனுக்கு அறிவுறுத்துவார்கள் தெய்வங்களும் மகான்களும்.
அது போன்ற ஒரு சம்பவம்தான் மகா பெரியவா திருச்சந்நிதியில் பிரதோஷம் மாமாவுக்கு ஏற்பட்டது. மானசீக பூஜையை மீண்டும் தொடருமாறு மகானே உத்தரவு பிறப்பித்தார்.
ஆம்! அன்றைய தினம் பெரியவா தரிசனம் வேண்டி, காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் போயிருந்தார் மாமா.
மகான் ஒரு மர நிழலில் அமர்ந்திருந்தார். சொற்பமான பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்திருந்தார்கள்.
பெரியவாளுக்கு முன்னால் வயோதிகப் பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த அம்மையாரின் கண்களில் ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் தென்பட்டது. விழியோரம் நீர் கசிய மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பாவம், அவருக்கு என்ன மனக் குறையோ?!
அருகில் இருந்த ஸ்ரீமடத்தின் மேனேஜருக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்து முடித்த மகா பெரியவா, அந்த மாதுவை உற்று நோக்கினார்.
“பெரியவா… பெரியவா…” என்று இரண்டு கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டு நமஸ்கரித்தார் பெண்மணி.
பிறகு பெரியவா கேட்டார்: “இப்பல்லாம் மானசீக பூஜை செய்யறதை விட்டுட்டியோ?”
பெண்மணியின் மன நிலை என்ன ஆனதோ தெரியவில்லை. ஆனால், பிரதோஷம் மாமாவுக்கு உடல் விலுக்கென்று தூக்கிப் போட்டது.
‘இந்தக் கேள்வி யாருக்கு?
ஒருவேளை மானசீக பூஜை செய்வதைத் தான் விட்டு விட்ட காரணத்தால், அதை நினைவூட்டுகிறாரோ?‘
எது எப்படி இருந்தாலும், அது மீண்டும் தொடர வேண்டும் என்பதை மாதுவுக்கு அறிவுறுத்துவது போல் தனக்குப் பெரியவா உணர்த்துகிறார் என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டார்.
மானசீக பூஜை மீண்டும் தொடர்வதற்குப் பெரியவாளே உத்தரவிட்ட பிறகு, இன்னும் என்ன தடை? ‘ஆரம்பித்து விட வேண்டியதுதான்‘ என்று இருந்த இடத்தில் இருந்தபடியே தீர்மானித்தார் பிரதோஷம் மாமா.
பிரசாதம் வாங்கிக் கொண்டு மாது விடை பெற்றார்.
பரப்பிரம்ம சொரூபத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பிரதோஷம் மாமா.
அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு, திருவாய் மலர்ந்தார்.
“என் தியானமாவே இரு. உன் லௌகீகங்களை நான் பாத்துக்கறேன்.”
– இதுதான் அவருக்குக் கிடைத்த அனுக்ரஹம்.
இது பிரதோஷம் மாமாவுக்கு மட்டுமல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற அனைவருக்கும் மகான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘நீன் என் சிந்தனையாக இருந்து, என்னையே துதித்துக் கொண்டிருந்தால், உன் தேவைகள் அனைத்தையும் நான் பூர்த்தி செய்கிறேன்.‘
– எப்பேர்ப்பட்ட வாக்குமூலம்.
அதுவும் ஒரு மகானிடம் இருந்து, பக்தனைப் பார்த்துச் சொல்லப்பட்டது.
இப்பேர்ப்பட்ட அனுக்ரஹம் கிடைத்த பின்தான், பிரதோஷம் மாமாவின் மானசீக பூஜை மீண்டும் துவங்கியது.
‘நீ என் ஸ்மரணையாக இரு‘ என்று அருளிய பின், பிரதோஷம் மாமாவுக்கு எல்லாமே மகா பெரியவாதான்! அவர் தரிசிக்கிற தெய்வத் திருமேனிகளில் மகா பெரியவா தெரிந்தார். இருபத்துநான்கு மணி நேரம் ‘மகா பெரியவா‘ தவிர வேறு சிந்தனை இல்லை அவருக்கு.
ஒரு கட்டத்தில் நித்தமும் பெரியவாளைத் தரிசிப்பதைத் தன் பாக்கியமாகக் கொண்டிருந்தார்.
அப்படித் தினமும் செல்கிறபோது வில்வ இலைகளால் தானே மாலை கட்டி எடுத்துச் செல்வார். மகானின் திருச்சந்நிதியில் சமர்ப்பித்து மகிழ்வார்.
உண்மையான பக்தியோடும், அன்போடும் சமர்ப்பிக்கப்படுகிற எந்த ஒரு வஸ்துவையும் பகவான் விரும்பி ஏற்றுக் கொள்வார். அந்த வஸ்துவைத் தன் பக்தன் கொண்டு வர மாட்டானா என்று தெய்வமே ஏங்கி ஆலயத்தின் திருவாசலையே பார்த்துக் கொண்டிருக்குமாம்.
பூர்வ ஜன்ம நற்பலன் காரணமாகவும், இந்தப் பிறவியில் கொண்டிருக்கிற குரு பக்தி காரணமாகவும் பிரதோஷம் மாமா சமர்ப்பிக்கிற வஸ்துவை ஆசையோடு சுவீகரித்துக் கொள்வார் மகான்.
ஒரு காலகட்டத்தில் நித்தமும் மகா பெரியவா அணிந்து கொள்வதற்காக வில்வ மாலையைக் கட்டி சிரத்தையாகக் கொண்டு செல்வது பிரதோஷம் மாமாவின் வழக்கமாயிற்று.
சர்வேஸ்வரனுக்குப் பிடித்தமான இந்த வில்வம், சங்கர சொரூபத்துக்கும் பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை.
பிரதோஷம் மாமா சமர்ப்பிக்கிற இந்த வில்வத்தை ஆர்வத்துடன் எடுத்துத் தானே அணிந்து, பக்தர்களுக்குத் திருக்காட்சி தருவது வழக்கம்!
வழக்கம்போல் அன்றைய தினமும் பிரதோஷம் மாமா மகா பெரியவா திருச்சந்நிதிக்குச் சென்றார்.
நேரமோ அதிகாலை நான்கு மணி.
ஏனோ, அன்றைக்கு வில்வ மாலை எடுத்துச் செல்லவில்லை. மகா பெரியவாளுக்கு உண்டான பணிவிடைகளையே மறக்கடிக்கச் செய்கிற மாதிரியான ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டது. எனவே, கிளம்புகிறபோது வில்வ மாலையை மறந்து போனார்.
காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் மகா பெரியவாளின் தரிசனத்துக்கு நிற்கிற வேளையில்தான், தான் வில்வ மாலை கட்டி எடுத்து வராதது நினைவுக்கு வந்தது.
‘அடடா… இதென்ன சோதனை… எப்படி மறந்தோம்?‘ என்று தன்னையே நொந்து, கை விரல்களைப் பிசைந்து கொண்டிருந்த வேளையில், அந்த சர்வேஸ்வர சொரூபம் தன் அறைக்குள் இருந்து வெளிப்பட்டது.
‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் மிதமான சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது.
வெளியே வந்தார் மகா பெரியவா.
விஸ்வரூப தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தர்கள் சங்கர சொரூபத்தை இத்தனை அருகே பார்த்து உடல் சிலிர்த்தார்கள். பரவசப்பட்டார்கள்.
இரு கைகளையும் இணைத்து நெஞ்சுக்கு நேரே வைத்துக் கூப்பினார்கள். அப்படியே தலைக்கு மேல் கைகளை உயர்த்தினார்கள். “சங்கரா… சங்கரா… ஈஸ்வரா… ஈஸ்வரா…” என்று கண்களில் நீர் மல்க வணங்கினார்கள். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டார்கள்.
தண்டம் சுமந்த பரப்பிரம்மம் அப்படியே அனைவரையும் ஆசிர்வதித்தபடி வெளியே வந்தது.
‘உங்களது அடிமை நான்‘ என்பது போல் பணிவுடனும் பக்தியுடனும் உடல் வளைந்து நிற்கிற பிரதோஷம் மாமாவைப் பார்த்ததும் அப்படியே நின்றார் பெரியவா.
தன்னைத் தேடி வந்த பக்தனின் உள்ளக் கிடக்கையை தெய்வங்களும் மகான்களும் நன்றாகவே அறிவார்கள்.
குழந்தையின் பசியை உணர்ந்து கொள்ளாதவள் தாய் அல்ல.
பக்தனின் ஆன்மிகப் பசியை உணர்ந்து கொள்ளாதவர் மகான் அல்ல.
கோயிலுக்குச் செல்பவர்கள் எல்லோருமே முழுமையான இறை உணர்வுடன்தான் செல்கிறார்களா?
வெகு சிலர் மட்டுமே அந்த உணர்வுடன் செல்கிறார்கள். அவர்களின் முகத்தையும் உள்ளத்தையும் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அருள்கின்றன.
அதுபோல்தான் மகான்களும்!
மகான்களின் திருச்சந்நிதி தேடி வருகிற பலரும் பல விதமான பிரார்த்தனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துதான் வருகிறார்கள்.
பிரார்த்தனையே இல்லாதவனைத்தான் மகான் விரும்புவார்.
மகானைப் பரிபூரணமாக நம்பியவனுக்குத் தேவை என்று ஏதேனும் இருக்க முடியுமா?
சரணாகதி அடைந்தவனுக்கு என்ன பிரார்த்தனை இருக்க முடியும்?
மகா பெரியவாளைப் பரிபூரணமாக நம்பியவர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் பிரார்த்தனை என்பது இருக்காது. கோரிக்கைகளும் கிடையாது.
எது கிடைக்கிறதோ, எது அருளப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள்.
கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள்.
கொடுக்காததை விரும்பியதில்லை; வேண்டியதில்லை.
இதுபோல் சிலர் மட்டுமே மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்களாக இருக்கின்றார்கள்.
அவர்களில் இதோ, பிரதோஷம் மாமாவும் ஒருவர்.
அதிகாலை எழுந்து வெளியே வந்த மகா பெரியவா, பலரையும் கடந்து நடந்தார்.
பிரதோஷம் மாமாவைக் கண்டதும் நின்றார்.
கண் கண்ட தெய்வத்தைக் கண்கள் கலங்க வணங்கிக் கொண்டிருந்தார் பிரதோஷம் மாமா.
பெரியவாளுக்கு அருகே பிரம்மஸ்ரீ வேதபுரி காணப்பட்டார். அன்றைக்கு அவர்தான் கைங்கர்யம்.
வேதபுரியின் பக்கம் திரும்பிய பெரியவா, “இவர் வில்வம் கொண்டு வந்தாரா, கேளு…” என்றார்.
தொடுத்த வில்வ மாலையைக் கொண்டு வர அன்று தன் பக்தன் தவறி விட்டான் என்பது நடமாடும் தெய்வத்துக்குத் தெரிந்திருந்தது.
அருகில் எத்தனையோ பேர் தொடுத்த பூச்சரங்களுடனும், மாலைகளுடனும் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வில்வத்துக்கு ஏங்குகிறது அந்த சங்கர சொரூபம். அதுவும் தன் அத்யந்தமான பக்தன் அவன் கைப்படத் தொடுத்துத் தர வேண்டும்… அதைத் தன் தலையில் சூடிக் கொண்டு தரிசனம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறது.
வேதபுரியைப் பார்த்து ‘வில்வம் கொண்டு வரவில்லை‘ என்பது போல் உதட்டைப் பிதுக்குகிறார் பிரதோஷம் மாமா.
அதே வேளையில் நித்தமும் தான் கொண்டு வரும் வில்வ மாலையை இந்த மகான் எத்தனை சந்தோஷத்துடன் விரும்பி ஏற்றுக் கொள்கிறார் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தார் பிரதோஷம் மாமா. எவருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியத்தைத் தனக்குத் தந்திருக்கிறாரே என்று உளம் பூரித்தார்.
“வில்வம் இன்னிக்குக் கொண்டு வரலை பெரியவா…” என்று சர்வேஸ்வரன் திருமுகம் பார்த்துக் கைகூப்பிச் சொன்னார்.
‘அப்படியா‘ என்று அதோடு விட்டு விடவில்லை மகா பெரியவா. தன் பக்தனின் ஏக்கத்தைப் போக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
வேதபுரியைப் பார்த்தார். “நீ இவருக்கு வில்வ இலைகளைப் பறிச்சுக் கொண்டு வந்து குடுக்க ஏற்பாடு பண்ணு. இவர் அதை வெச்சு மாலையா தொடுத்துக் குடுப்பார்.”
‘நீ கொண்டு வரலியா? அதற்கும் நானே ஏற்பாடு பண்றேன்‘ என்பதுபோல் உத்தரவிட்டார் மகான்.
உடனே அங்கு இருக்கிற ஒரு சிப்பந்தியிடம் வில்வ இலைகளைப் பறித்துக் கொண்டு வருமாறு சொன்னார் வேதபுரி.
அடுத்த அரை மணி நேரத்தில் பறித்த வில்வ இலைகள் வேதபுரிக்கு வர… அவை பிரதோஷம் மாமாவிடம் சேர்ப்பிக்கப்பட்டன.
நித்தமும் செய்கிற வில்வ இலை கைங்கர்யம் அன்றைக்கும் விட்டுப் போகாமல் ஈஸ்வர சொரூபமான மகா பெரியவாளே பிரதோஷம் மாமாவுக்கு அனுக்ரஹம் செய்தார்.
இந்த மாலையை மகானுக்குச் சமர்ப்பிக்கின்றபோது தேம்பித் தேம்பி அழுதே விட்டார் பிரதோஷம் மாமா.
இதே போல் இன்னொரு நாள்… இரவு ஒன்பது மணி.
காஞ்சி ஸ்ரீமடத்தில் தரிசனம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவா.
முக்கியமான பிரமுகர்கள் அன்று தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள். கூட்டமான கூட்டம்.
மகான் அருகே பிரதோஷம் மாமாவால் நெருங்க முடியவில்லை.
பல அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தார். ‘அருகே செல்ல முடியுமா? இந்த வில்வ மாலையை சங்கர சொரூபத்திடம் சமர்ப்பிக்க முடியுமா?‘ என்று மனதில் நினைத்தார்.
தன் பக்தன் மனதில் தோன்றுவதை அறியாதவரா மகான்?
“பிரதோஷம் வந்திருக்கார்… அதோ நின்னுண்டு இருக்கார். வில்வம் கொண்டு வந்திருக்காரா, கேளு” என்று தன் தொண்டரிடம் கேட்டிருக்கிறார்.
தொண்டர் எட்டடி பாய்ச்சலில் பிரதோஷம் மாமாவிடம் ஓடி வந்து விஷயம் சொல்ல… சந்தோஷத்துடன் மகானின் திருச்சந்நிதியை அடைந்தார்.
தன் கையில் வைத்திருந்த வில்வ மாலையை சமர்ப்பித்தார். லாகவமாக அதைத் தன் திருக்கரங்களால் எடுத்து, தலையில் சூடிக் கொண்டார்.
ஸ்ரீசந்திரசேகர சொரூபமாக இந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை அன்றைக்குக் கூடி இருந்தோர் அனைவரும் நேருக்கு நேராகத் தரிசித்து இன்புற்றனர்.
பிரதோஷம் மாமாவின் விழிகளில் பெருகிய நீர் அடங்குவதற்கு நேரமாயிற்று!