அழியாப் புகழ் பெற்ற அன்னதான சிவன்

ன்னை தரிசிக்க வருகின்றவர்களுக்குத் தேவையானவற்றை அருளி அனுப்புவது மகான்களின் குணம்!

அதனால்தான், நித்தமும் மூன்று வேளையும் குறைவில்லாமல் அன்னதானம் நடக்கும்.

மகா பெரியவாளுக்கு ரொம்பவும் பிடித்தது அன்னதானம்!

காஞ்சி ஸ்ரீமடத்துக்கோ அல்லது தான் முகாம் இருக்கும் இடங்களுக்கோ வரும் பக்தரை எந்த ஒரு நாளிலும் பசியோடு அனுப்ப மாட்டார் மகா பெரியவா.

அதுவும் அன்றைக்கு அங்கே தயாராக வேண்டிய சமையல் மெனுவை மகானே தீர்மானிப்பார். ‘என்னதுஎப்பவும் பரங்கிக்காய் சாம்பாரே போடறேள்வேற காயை மாத்துங்கோ என்பார்.

மகா பெரியவா காலத்தில் அன்னதானத்தின்போது பயன்படுத்தப்பட்ட பிரமாண்டமான பாத்திரங்கள் இன்றைக்கும் வேடல் (பூந்தமல்லிகாஞ்சிபுரம் பிரதான சாலையிலேயே அமைந்திருக்கிறது இந்த ஊர்) என்ற ஊரில் இருக்கின்றன. காஞ்சி ஸ்ரீமடத்தின் சார்பாக அருங்காட்சியகம் போல் பிரமாண்டமான இந்தப் பாத்திரங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன. பக்தர்கள் இங்கு சென்றால், இவற்றை எல்லாம் பார்க்கலாம்.

ஐந்தடி ஆறடி உயரத்தில் அண்டாக்கள், சாதம் வடிக்கப் பயன்படும் பாத்திரங்கள், கரண்டிகள் என்று எல்லாமே பிரமாண்டமானவை.

ஒரு அண்டாவை ஒருவர் நகர்த்துவது என்பது சாத்தியமில்லை. மூன்று அல்லது நான்கு பேர் சேர்ந்துதான் இந்தப் பாத்திரங்களைத் தூக்கி அடுப்பில் வைக்க முடியும்.

இத்தகைய அன்னதானப் பணிகள் தங்குதடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக, பொறுப்பைத் தகுதியானவர்களிடம் ஒப்படைத்து விடுவார் மகா பெரியவா.

மகான் மூலமாக அன்னதான கைங்கர்யம் செய்கிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று அவர்களும் மனமுவந்து இதை நடத்துவார்கள்

இருக்கிற தானங்களிலேயே மிக உயர்ந்த தானம் அன்னதானம்!

ஒருவரை உடனடியாக திருப்திப்படுத்த வேண்டும் என்றால், அது அன்னதானத்தின் மூலம் மட்டுமே சாத்தியம்!

போதும் என்கிற திருப்தியையும்முக மலர்ச்சி என்கிற சந்தோஷத்தையும் அன்னதானத்தை ஏற்றவர்களிடம் இருந்து உடனடியாகக் கேட்டும் கண்டும் பூரிக்கலாம். வேறு எந்த ஒரு தானத்துக்கும் இல்லாத சிறப்பு இது.

அன்னதானம் நடக்கிற இடத்திலேயேசாப்பிட்டு முடித்து வருகிற ஒவ்வொருவரிடம் இருந்தும் கிடைக்கிற வாய் மொழி வார்த்தைகளே மனதுக்கு சுகமாக இருக்கும். ‘அன்னதாதா சுஹி பவ என்பார்கள் சாப்பிட்டு முடித்தவர்கள். அதாவது இந்த அன்னத்தை வழங்கியவர்கள் சுகமாக வாழ்வார்கள் என்பது இதன் பொருள்.

அன்னதானம் என்பது இந்த தானம் செய்தவரை மட்டும் அல்லாமல், அவரது சந்ததியினரையும் தொடர்ந்து காத்து ரட்சிக்கும் மகிமை கொண்டது. அன்னதானம் செய்தால் அடுத்தடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலை காக்கப்படும். சந்ததிகள் வளமாக வாழ்வர். எல்லா பலன்களும் கிடைக்கும். வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

அதனால்தான் மகா பெரியவா காலத்தில் அவர் நடத்துகிற அன்னதானத்தில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து குவிப்பார்கள்.

வருகின்றவரை அமர வைத்து, இலை போட்டு அறுசுவையுடன் உணவு பரிமாறப்படுவதுதான் நிறைவான அன்னதானம்!

பசியோடு வருகின்றவர்களுக்கு இலை போட்டுத்தான் அன்னதானம் நடக்கணும் என்பார் மகா பெரியவா

மகா பெரியவா காலத்தில் காஞ்சி ஸ்ரீமடம் எங்கு முகாமிட்டிருந்தாலும், அங்கு தன் குழுவினரோடு போய் இலை போட்டு வடைபாயசம் வைத்து அன்னதானம் போட்ட ஒரு உத்தமர் சில காலத்துக்கு முன் நம்மிடையே வாழ்ந்து வந்திருக்கிறார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அவர் பெயரே அன்னதான சிவன்.

எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அன்னதானம் இவரது பணி. இந்த இரண்டையும் இணைத்து இப்படி ஒரு பெயரை இவருக்கு வைத்தவரே மகா பெரியவாதான்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன் மகா பெரியவா உத்தரவின்பேரில் எண்ணற்ற இடங்களில் அன்னதானம் செய்துள்ளார்.

காரணம்பிரமாண்டம்தான்!

சிவன் நடத்தும் அன்னதானத்தின் பிரமாண்டத்தைப் பற்றி முதலில் காஞ்சி மகா பெரியவா சொல்வதைக் கேளுங்கள்

“1933-ஆம் வருஷ மாமாங்கத்துல (கும்பகோணம்) ஏற்பாடான அன்னதானம் முழுக்க அன்னதான சிவனோட கைங்கர்யம்தான். மாமாங்கத்துக்கு வர்ற பக்தாளுக்கு மூணு வேளையும் சாப்பாடு போடறதுக்காக வெறகே நூறு வண்டி வந்துது.

ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டில வந்து சேர்ந்துதுன்னா பாத்துக்கோங்கோ (ஒரு பாட்டில் ஊறுகாயையே ஒரு சில மாதங்கள் வைத்துச் சாப்பிடுகிறோம். சிவனுடைய அன்னதானம் பார்த்தீர்களா? ஊறுகாய் போடுவதற்கு வண்டி வண்டியாக நெல்லிக்காய் வருமாம்!)

எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டை அடுப்பு வெட்டினாலும் அவரோட அன்னதானத்துக்கு சாதம் வடிச்சு மாளவே மாளாது. அந்த அளவுக்கு அவரோட அன்னதானத்துக்குக் கூட்டம் எங்கேர்ந்துதான் வந்து சேருமோ, தெரியாது.

கூட்டத்தை சமாளிக்கறதுக்காக அவர் ஒரு ஐடியா பண்ணுவார். என்ன தெரியுமா?

பத்து இருபது மூட்டை அரிசிய வடிச்சு அதை அப்படியே நீள நீளமான பாய்கள்ல பரத்திக் கொட்டுவார். கொதிக்கக் கொதிக்க இருக்கற அந்த அன்னத்தின் மேலேயே மெல்லிசா ஒரு துணியைப் போட்டு மூடுவார். கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து இருபது மூட்டை பச்சரியைஆமா, நன்னா கேட்டுக்கோங்கோபச்சையா இருக்கற அரிசியைப் பரத்திக் கொட்டிட்டு, அதுக்கு மேலே கெட்டிக் கோணியைப் போட்டு மூடுவார். தரையில இருக்கற பாய்க்கு அடி வரையில் கோணியை இழுத்துண்டு போய்இறுக்கமா சொருகி மூடிப்டுவாராம்.

கால்மணியோ, அரைமணியோ கழிச்சுமேலே போர்த்தி இருக்கற கோணியை எடுத்துப் பார்த்தாசித்த முன்னாடி போட்ட பச்சரிசி அத்தனையும் புஷ்பமாசாதமா ஜொலிக்கும். இதெல்லாம் அவரோட டெக்னிக்.

அன்னதான சிவன் மீது மகா பெரியவாளுக்கு அத்தனை ஈடுபாடு உண்டு. அவருடைய கைங்கர்யத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு.

இன்றும் பிரமாண்டமான ஒரு சாப்பாட்டுப் பந்தியைக் குறிப்பிடும்போது தஞ்சாவூர்ப் பக்கங்களில்சிவன் சமாராதனை மாதிரி களை கட்டிடுத்து என்று பேசுவது வாடிக்கையான ஒன்று.

மகா பெரியவா உத்தரவின் பேரில் எண்ணற்ற இடங்களில் அன்னதானங்களை மேற்கொண்டார் அன்னதான சிவன். இவர் மீது மகா பெரியவாளுக்கு அத்தனை ஈடுபாடு உண்டு.

இந்த நேரத்தில் அன்னதான சிவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்கள் மகா பெரியவாளோடு பணி புரிந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால், மேனி சிலிர்க்கும்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் என்கிற கிராமத்தில் கி.பி. 1852-ஆம் ஆண்டு பிறந்தார் அன்னதான சிவன். அவரது தந்தையார் பெயர் அசுவத நாராயண சாஸ்திரிகள். தாயார் பெயர்லட்சுமி அம்மாள்.

சிவனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. வசதி வாய்ப்புகள் இல்லாத குடும்பம். ஏழ்மை நிலை என்பதால் பள்ளிக்குப் போனதாகத் தெரியவில்லை. அதே சமயம் வேதம் கற்றுக் கொண்டார் அன்னதான சிவன்.

அன்னதான சிவன் பிற்காலங்களில் பிரமாண்டமாக நடத்திய அன்னதானங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகமுன்னோடியாக இருந்தவர் கயத்தூர் மிராசுதாரான சீனிவாச ஐயர் என்பவர். தஞ்சாவூக்காரர்.

தஞ்சைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் பெரிய அளவில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், அங்கே அன்னதானம் செய்வதற்கு கயத்தூர் சீனிவாச ஐயர் தன் குழுவினருடன் ஆஜராகி விடுவார். அப்போது அவருக்கு உதவியாளாக இருந்தவர் அன்னதான சிவன்.

ஒரு முறை ஆலயம் ஒன்றில் பிரமாண்டமான அன்னதானத்துக்குப் பின் உணவருந்தியவர்கள் சீனிவாச ஐயரை மனமார வாழ்த்தி விட்டுச் செல்வதைக் கண்டு நெகிழ்ந்து போனார் அன்னதான சிவன்.

வஞ்சனையின் கலப்பு இல்லாத வாழ்த்து உணவருந்தியவர்களின் உள்ளங்களில் இருந்து வருவது கண்டு பிரமித்தார் அன்னதான சிவன். இதுபோன்ற உத்தமமான செயல்களில் தானும் ஈடுபட வேண்டும் என்கிற ஈர்ப்பு அப்போது அவருக்குள் எழுந்தது.

பின்னாளில் பெற்றோர் மறைந்த பிறகு தனக்கு இருக்கும் வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் அனைத்தையும் விற்று, அதையே மூலதனமாகக் கொண்டு ஊரெங்கும் அன்னதானத்தைத் தொடங்கினார் அன்னதான சிவன்.

அறுசுவையோடு தலைவாழை இலை போட்டு உணவு படைப்பதையே தன் கொள்கையாகக் கொண்டார். அன்னதானம் முடிகிற வரை வருகின்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாதவாறு பரிமாறினார்.

அன்னதானத்துக்குக் கைவசம் பணம் இல்லாதபோது திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் கோயிலில் பரிசாரகர் வேலை பார்த்து சம்பாதித்தார். ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலும் அன்னதானத்தை இவர் கைவிட்டதில்லை.

காஞ்சி ஆச்சார்யார்களின் ஆக்ஞைப்படி கும்பகோணம் ஸ்ரீமடத்திலேயே இருந்தபடி தன் அன்னதானப் பணிகளைத் தொடர்ந்தார் சிவன். மடத்துக்கு வரும் அன்பர்களிடம் யாசித்து பொருள் பெற்று அன்னதானத்தை தொடர்ந்தார்.

சிவன் நடத்துகிற அன்னதானங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. மிகவும் ஆத்மார்த்தமாகவிளம்பரத்துக்கென்று இல்லாமல் அவர் நடத்துகிற இந்த புனிதப் பணியில் பலரும் பங்கு கொண்டார்கள். பின்னாளில் மகா பெரியவாதான் இவருக்குஅன்னதான சிவன் என்று நாமகரணம் சூட்டினார். அதுவே நிலைத்தும் விட்டது.

ஆரம்ப காலத்தில் கடை கடையாய் ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி அரிசி, பருப்பு, மளிகைச் சான்கள் மற்றும் காய்கறி வாங்கி வருவது சிவனின் வழக்கம். ஆனால், போகப் போக சிவனது அன்னதானத்துக்கு வியாபாரிகளே இவரது இடத்தைத் தேடி வந்து பொருட்களைக் குவித்து விட்டுப் போனார்கள்.

சிவன் நடத்தும் அன்னதானங்களில் தங்களது பொருள் சேர்ந்தால் பெருமை என்கிற அளவுக்கு ஆகி விட்டது. எனவே, ‘போதும் போதும் என்று சொல்லிப் பல உபயதாரர்களைக் கெஞ்சிக் கூத்தாடித் திருப்பிய அனுப்பிய நிகழ்வுகளும் சிவனுக்கு நடந்துள்ளது.

ஒரு முறை வசதி நிறைந்த பெண்மணி சிவன் நடத்தும் அன்னதானத்துக்கு உதவ விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தாள். அந்தப் பெண்மணியிடம், ‘அம்மாஎல்லாப் பொருட்களுக்கும் ஏற்பாடு செய்து விட்டேன். எல்லாமே தாராளமாகக் கிடைத்து விட்டன. எனவே, உன் உதவி இப்போது வேண்டாமம்மா. அன்புக்கு நன்றி என்று கூறினார்.

அந்தப் பெண்மணி வருத்தமடைந்ததோடு, தான் தரும் காணிக்கையை ஏற்குமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். இதன் பின் யோசித்த சிவன், ‘உணவு பரிமாறுவதற்கு வேண்டிய மூங்கில் தட்டுகள், பரிமாறுவதற்கு அகப்பை கரண்டிகள், சமையல் வேலைகளுக்குத் தேவைப்படும் தகரப் பாத்திரங்கள், சட்டிகள் ஆகியவற்றுக்கான செலவை இதுவரை யாரும் ஏற்கவில்லை. விரும்பினால் அந்தச் செலவை ஏற்றுக் கொள் என்று கூறினார்.

அந்தப் பெண்மணி ஏதோ ஒப்புக் கொண்டாளே தவிர, தனக்குத் தெரிந்தவர்களிடம், ‘சிவன் என்னை மதிக்காமல் தட்டுமுட்டுச் சாமான்களுக்கு உண்டான தொகையைத் தரச் சொல்லி அவமதித்து விட்டார் என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தாள். காரணம்தன் தகுதிக்கு இந்தத் தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்குகிற தொகை வெறும் சொற்பமான இருக்கும் என்பது அந்தப் பெண்மணியின் எண்ணம்.

ஆனால், இரண்டு நாள் கழித்து அகப்பை மற்றும் இதர சாமான்கள் வாங்குவதற்குத் தேவைப்படும் தொகை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று சிவன் சொன்னவுடன், பிரமித்துப் போய் நின்றாள்.

அடுத்த கணமே சிவனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து நமஸ்கரித்தாள். அப்போதுதான் யோசித்தாள் – ‘மரத்தாலான தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்குவதற்கே இத்தனை தொகை ஆகும் என்றால், இந்த அன்னதானத்தில் எத்தனை லட்சம் பேருக்கு சாப்பாடு தயாராக வேண்டும் என்று.

உணவுக்கூடத்தில் இருந்து வருகிற ஆவி வாசனையைக் கொண்டே இந்தப் பண்டத்துக்கு இன்னின்னது சேர்க்க வேண்டும் என்று துல்லியமாகச் சொல்லி விடுவாராம் அன்னதான சிவன். கொதித்துக் கொண்டிருக்கிற ரசத்தைப் பார்த்து அதற்கு இன்னும் எத்தனை கொத்தமல்லி அரைத்து விட்டால், வாசனையும் மணமும் தூக்கும் என்று சொல்லி விடுவார். கொத்தமல்லி என்றால், ஒரு கைப்பிடி இல்லை. எல்லாம் முறம் கணக்குதான். ‘ரசத்துல ரெண்டு மொறம் கொத்தமல்லியை அரைச்சு விடுடா என்று ஒரு உத்தரவு போடுவாராம்.

பிரமிப்பாக இருக்கிறது அல்லவா?

ஆயிரம், இரண்டாயிரம் பேருக்கு சமைப்பது வேறுலட்சக்கணக்கானவர்களுக்கு சமைப்பது என்பது வேறு. சாதாரணமாக ஒரு வீட்டில் சாப்பிடுகிற சாப்பாட்டுக்கே உப்பு போதவில்லைஉறைப்பு போதவில்லை என்று குற்றம் குறை கண்டுபிடிப்பவர்கள் உண்டு.

ஆனால், சிவன் நடத்தும் அன்னதானங்களில் பரிமாறப்படுகிற ஒவ்வொரு அயிட்டத்திலும் மணம் வீசும். எந்த ஒரு பதார்த்தத்திலும் எவரும் குறை சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு சுவை பிரமாதமாக இருக்கும்.

சிவன் நடத்தும் அன்னதானங்களில் லட்சக்கணக்கானோர் சாப்பிட வருவார்கள் என்பதால், ஒவ்வொரு பந்தியும் தங்கு தடை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கும். அதே வேளையில் சமையலும் இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கும்.

சமையற்கூடத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்குத் தயாராகி வரும் ஒரு பதார்த்தத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சிவன் எப்படி சோதித்துப் பார்ப்பார் என்று பார்த்தோம்.

பிரமாண்டமான ஒரு அண்டாவில் கொதித்துக் கொண்டிருக்கும் பதார்த்தத்தில் முறத்தில் வைத்து ஒரு ஊழியரை உப்பை மெள்ளக் கொட்டிக் கொண்டே இருக்கச் சொல்வாராம். உப்பானது அந்தப் பதார்த்தத்தில் சேரச் சேரஅப்போது எழும் வாசனையை வைத்து, ‘போதும் போதும். நிறுத்து. ஒண்ணரை மூட்டை உப்பு போட்டாகி விட்டது என்று சமையல் பணியாளருக்கு உத்தரவிடுவாராம் சிவன்.

ஒரு அன்னதான நிகழ்வுக்குத் தேவையான ஊறுகாயைத் தயார் செய்வதற்காகப் பத்து வண்டி நெல்லிக்காய் வந்து இறங்கியது. அது ஒரு தொடர் அன்னதான நிகழ்வு. இரண்டே நாளில் அத்தனையும் தீர்ந்து விடமேலும் பத்து வண்டி நெல்லிக்காய்களை அடுத்த அரை மணி நேரத்தில் வரவழைத்தாராம் அன்னதான சிவன்.

சிவன் நடத்தும் அன்னதானத்தின் எந்த ஒரு பந்தியிலும் சூடான சாதம்தான் பரிமாறப்படும். ஆறிப் போன பொருட்களைப் பார்க்கவே முடியாது.

அன்னதானம் செய்யும்போது துளி கர்வம்கூட இவரிடம் இருக்காது. ஏழை எளியவர்களை மிகவும் கனிவுடன் உபசரித்து, அவர்களைத் திக்குமுக்காடச் செய்து விடுவார். ‘இது நான் நடத்துகிற அன்னதானம் இல்லைநாம் அனைவரும் சேர்ந்து நடத்துகிற அன்னதானம் என்று பொதுப்படையாகப் பேசி, சாப்பிட வரும் ஏழைகளுக்கு இருக்கும் தாழ்வு உணர்ச்சியைப் போக்கி விடுவார். இதனாலேயே சிவன் நடத்துகிற அன்னதானம் என்றால், அங்கே பல்லாயிரக்கணக்கானோர் திரள்வது வாடிக்கை ஆகிப் போனது. அவருடைய அன்னதானப் பணிகளுக்குத் தங்களால் இயன்ற சேவையைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.

சமையலுக்குத் தேவையான விறகு மட்டுமே நூற்றுக்கணக்கான வண்டிகளில் வந்து இறங்குமாம். சாப்பாடு முடிந்த பிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்வதற்கு இரண்டு வண்டி துடைப்பம் தேவைப்படும் என்றால், இந்த மாபெரும் அன்னதான விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டவர்கள் எத்தனை லட்சம் என்று யோசித்துப் பாருங்கள்.

எதுவுமே கிலோ கணக்கில் கிடையாது. ஆயிரக்கணக்கில் அரிசிபருப்பு மூட்டைகள், மளிகை சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைகட்டுகள் என்று நீளும். சாம்பார், ரசம், பாயசம் வைப்பதற்குப் பயன்படும் அண்டாக்கள் அனைத்தும் ஆளுயரத்துக்கு இருக்கும். வந்து சேரும் இந்தப் பொருட்களைப் பார்வையிடுகிற கிராமத்து ஆசாமிகள் வாய்க்குள் நுழைவது தெரியாமல் வியந்து பார்ப்பார்களாம்.

சரிகுழம்பு, ரசம் எத்தனை வேண்டுமானாலும் தயார் செய்து விடலாம். தயிர்..? இதை முன்கூட்டியே வாங்கிச் சேகரிக்க முடியாது அல்லவா? இதற்காக அன்னதான சிவன் என்ன செய்வார் தெரியுமா?

எந்த ஊரில் அன்னதானம் நடக்க இருக்கிறதோ, அந்த ஊரை ஒட்டிய பகுதிகளில் முன்னதாகவே தயிரை வாங்கிச் சேகரித்து, அதைப் பெரிய பெரிய மர பீப்பாய்களில் ஊற்றி நிரப்பி விடுவாராம். பிறகு அதை மெழுகால் சீல் வைத்து மூடி சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள பொதுக் குளத்தில் உருட்டிப் போட்டு விடுவாராம். எத்தனை நாள் ஆனாலும் தயிர் கெடாது. அன்னதானம் நடக்கின்ற தினத்தில் பீப்பாயை எடுத்து சீலைத் திறந்தால், அப்போதுதான் தோய்த்த தயிர் போல் வாசனையுடன் இருக்கும். புளிப்பு என்கிற வாசனையே இருக்காது.

அன்னதானம் நடக்க இருக்கின்ற முதல் நாள் மாலை வரை சிவனது அன்னதானத்துக்கான அயிட்டங்கள் எங்கே தயாரிக்கப்பட இருக்கின்றனஎங்கே சமையல்கூடம் என்பது எவருக்குமே தெரியாத ரகசியம்தான். பொசுக்கென்று ஒரு இடத்தைத் தீர்மானித்துப் பெரும் படையே மையம் கட்டி இறங்கும். இரவு நேரத்தில் வண்டி வண்டியாகப் பொருட்கள் வந்திறங்கும். எல்லாவற்றையும் பங்கிடு செய்து விட்டு, யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை அறிவித்து விட்டு அதிகாலை வேளையில் ஆண்டவனை வேண்டிக் கொண்டு அடுப்பைப் பற்ற வைத்தார் என்றால், அந்த அன்னதானம் நாள் முழுக்கஇல்லை என்றே சொல்லாமல் போய்க் கொண்டிருக்குமாம்.

மகா பெரியவா மூன்று வயசுக் குழந்தையாக இருந்த 1897-லேயே சிவனின் (கும்பகோணம்) மகாமக அன்னதானம் துவங்கி விட்டது. மகா பெரியவாளுக்கு முன் இருந்த காஞ்சி ஆச்சார்யரின் ஆசியுடன் ஸ்ரீமடத்தின் சார்பில் இந்த மகாமக அன்னதானம் துவங்கி விட்டது. தனது பெரும்பாலான விசேஷ அன்னதானங்களை காஞ்சி ஸ்ரீமடத்தின் சார்பாக இவர் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த அளவுக்கு ஸ்ரீமடத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அத்யந்த பக்தராகவும் விளங்கி இருக்கிறார்.

1909-ல் பதினைந்து வயது இளம் துறவியாக மகா பெரியவா இருந்தபோது நிகழ்ந்த மகாமகத்திலும் ஸ்ரீமடத்தின் சார்பாக அன்னதானம் செய்துள்ளார் சிவன்.

அதன் பின்னர் வந்த 1921 மற்றும் 1933 ஆகிய மகாமகங்களிலும் ஸ்ரீமடத்தின் சார்பாக அன்னதானம் செய்துள்ளார். இத்தகைய காலங்களில் மகா பெரியவாளின் அன்புக்கு மிகவும் பாத்திரமாகி உள்ளார் இவர்.

1933-ல் நடந்த மகாமகத்தில் பெரிய குழப்பம் நடந்து விட்டது.

பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிடும் வகையில் மகாமகக் குளத்தின் அருகிலேயே பிரமாண்டமான ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சமையல் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டு உணவுக்கூடத்துக்கு உண்டான வேலைகள் துவங்கி விட்டன. பந்தல் போட்டு அந்த இடத்தையே அழகுபடுத்தி விட்டார்கள்.

ஆனால், முதல் நாள் இரவு வரைஅதாவது நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டிய பிறகும் மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைச் சுமந்து வரும் வண்டிகள், விறகு வண்டிகள் எதுவும் அன்னதானம் நடக்கிற இடத்துக்கு வந்து சேரவில்லை.

இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. விடிந்தால் அன்னதானம். அடுத்த நாள் அதிகாலையில் இருந்தே அன்னதானத்துக்கு ஆட்கள் நிரம்பி வழிய ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், எந்த ஒரு வண்டியும் வந்து சேரவில்லை. இனியும் சாமான்கள் வந்தால் அவற்றை இறக்கி, ஒழுங்குபடுத்தவே அதிகாலை வரை ஆகி விடும். என்ன செய்வது என்று தவித்தார் சிவன்.

அப்போது கும்பகோணத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார். புனிதமான மகாமகக் குளத்தில் நீராடி, வருகிற பக்தர்களுக்கு ஆசிகள் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரை திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது.

மகா பெரியவா முகாம் இருந்த கும்பகோணம் ஸ்ரீமடத்துக்கு நள்ளிரவில் விஷயம் போயிற்று. அதே வேளையில் கும்பகோணத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவருக்கும் இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது.

பிறகுதான் புரிந்ததுமளிகைப் பொருட்கள், காய்கறி, அரிசி, பருப்பு, விறகு சுமந்த பல நூற்றுக்கணக்கான வண்டிகள் எல்லாம் ஊருக்கு வெளியேபோலீஸாரின் அனுமதி கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்று.

விஷயம் என்னவென்றால், சிவன் நடத்தும் அன்னதானத்துக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளுக்கு போலீஸார் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. ஊருக்குள் எந்த ஒரு திருவிழா என்றாலும், இவரது வண்டிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் பர்மிஷன் உண்டு. ஆனால், இந்த மகாமகத்தின்போது வெளியூர் போலீஸ்காரர்கள் பலர் பணியில் இருந்ததால், அவர்கள் விவரம் தெரியாமல் சாதாரண வண்டிகளை நிறுத்தி வைப்பது போல் அன்னதான சிவனின் பணிகளுக்குச் செல்லும் வண்டிகளையும் நிறுத்தி வைத்து விட்டனர். இந்த விஷயம் பிற்பாடுதான் தெரிந்தது.

பிறகென்னசிவனின் வண்டிகள் எல்லாவற்றுக்குமே போலீஸாரிடம் இருந்துக்ரீன் சிக்ன்ல கிடைக்கசாரி சாரியாக வண்டிகள் புறப்பட்டு அன்னதானம் நடைபெறும் இடத்தை வந்தடைந்தன.

வந்து சேர்ந்த உடனே கோட்டை அடுப்பை மூட்டி, சமையல் பணிகளைத் துவங்கி விட்டார் சிவன். அடுத்த இரண்டு மணி நேரத்தில்அதிகாலை துவங்கி பந்தி களை கட்ட ஆரம்பித்தது.

திருவானைக்கோவிலில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கப் பிரதிஷ்டை மகா பெரியவா முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கூடினர். அன்னதான சிவன்தான் ஹீரோ. தினமும் அறுசுவை உணவுடன் பலவகை பட்சணங்களும் பரிமாறப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேர் உண்டு திருப்தியாகச் சென்றனர் என்றால், சிவனுடைய அன்னதான சிறப்பையும் நிர்வாகத்தையும் எப்படிப் பாராட்டுவது?

சாப்பிடுகிற இடமும் சமையல் செய்கிற இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் சிவனுக்கு. அப்படி இல்லை என்றால் பணியாட்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார். தானமாகக் கொடுப்பதுதானே என்கிற அலட்சியம் இம்மியும் சிவனிடம் இருக்காது. தெய்வ சங்கல்பமாக இதை நிறைவேற்றி வந்திருக்கிறார்.

அன்னதானம் மட்டும்தான் என்றில்லை. கும்பகோணத்தில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீமடத்தின் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அன்னதான சிவன்.

கும்பகோணத்தில் காவிரிக் கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசங்கர மடத்தில் 1923-ஆம் ஆண்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருவானைக்கோவில் சங்கர மடத்தின் திருப்பணிகள் முடிந்த சூட்டோடு, கும்பகோணம் சங்கர மடத்தின் திருப்பணிகளையும் துவங்க வேண்டும் என்று விரும்பினார் மகா பெரியவா.

அப்போது மடத்தின் அதிகாரியாக இருந்த வக்கீல் கி. குப்புஸ்வாமி ஐயர் கும்பகோணம் மடத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தார். இந்தத் தொண்டில் அன்னதான சிவனும் பங்காற்றினார். புதுக்கோட்டை ராஜ்யத்தைச் சேர்ந்த கடியாப்பட்டி திவான் பகதூர் தர்மபூஷணம் தீ.நா. முத்தையா செட்டியார் இந்தத் திருப்பணிக்கென ரூ.25,000 நன்கொடை அளித்தார். மடத்தின் வருமானத்தில் இருந்து ரூ. 75,000-க்கு மேல் இந்தத் திருப்பணியில் செலவிடப்பட்டது. சிவனின் மேற்பார்வையிலும் மடத்து நிர்வாகிகளின் பராமரிப்பிலும் அந்தத் திருப்பணி 1933-ஆம் ஆண்டு பூர்த்தி ஆனது.

தன் வாழ்நாளில் எத்தனை லட்சம் பேருக்குச் சிவன் அன்னதானம் செய்தார் என்கிற கணக்கு இன்று இல்லை. இவற்றை எல்லாம் பதிவு செய்து, புகழ் பெற வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல. அன்னதான சிவனது தெளிவான புகைப்படம்கூட நமக்குக் கிடைக்கவில்லை. தனக்கு வரும் பணத்தைக் கொண்டு தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன்தான் அன்னதான சிவன் அன்றைய தேதியில் செயல்பட்டு வந்திருக்கிறார்.

அவர் அன்றைக்குப் பயன்படுத்திய வண்டி வண்டியான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதற்கு இன்றைக்கு ஒரு ஆசாமியிடம் பொறுப்பைக் கொடுத்தால் கமிஷன் வாங்கியே அடுத்த மாதத்தில் அந்த ஆசாமி பிரமாண்ட பங்களா கட்டி விடுவார். ஆனால், அன்றைக்கு நேர்மையை மட்டுமே கொண்ட ஊழியர்கள் உடன் இருந்து சிவனைப் பெருமைப்படுத்தினார்கள். அன்னதானம் என்பது இறைவனுக்குச் செய்யும் ஒரு தொண்டு என்பதாக மகிழ்ந்து இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு பழிச்சொல்லுக்கும் அவமானத்துக்கும் சிவனை ஆளாக்கவில்லை அந்த ஊழியர்கள்.

அது 1939-ஆம் ஆண்டுஒரு நாள் அன்னதான சிவனுக்குள் திடீர் எண்ணம்

என்ன எண்ணம்?

இனி அதிக நாள் தான் உயிருடன் இருக்க மாட்டோம் என்று பட்டது அவருக்கு. ஏனோ அந்த சிந்தனை அவருக்குள் விஸ்வரூபம் எடுத்தது.

இறுதி நிமிடங்களை மட்டும் இறைவன் எப்படியோ சிலருக்கு உணர்த்தி விடுவான். அது அன்னதான சிவனுக்கும் வாய்த்தது.

கடைசி காலத்தில் இறைவனது சிந்தனையுடன் இருக்க வேண்டும்அதைத் தவிர வேறு எதுவும் தன்னை ஆட்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

உடனே தனக்கு நெருங்கியவர்களை அழைத்தார். தன் மனதில் ஓடுகின்ற எண்ணங்களை அப்படியே சொன்னார். பிறகு, “திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆலயத்துக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். அந்த ஈசனை தரிசிக்க வேண்டும். அங்கேயே இருக்க வேண்டும் என்றார் தழுதழுத்த குரலில்.

ஊர் உலகத்துக்கெல்லாம் உணவு போட்டு உபசரித்த உத்தமரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அடுத்த கணகே ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்தார்கள். அதில் அவரை அமர்த்தி வைத்து ஆலயத்துக்குக் கூட்டிச் சென்றனர்.

ஆலயத்தினுள் சென்றார். உடலும் உள்ளமும் குளிர ஸ்ரீகம்பஹரேஸ்வரரை வணங்கினார். ஆலயத்திலேயே சில நிமிடங்கள் தன்னை மறந்து காணப்பட்டார். அதன் பின், வெளியே வந்தவர், கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசையில் தங்கினார். இளைப்பாறினார்.

திருபுவனம் ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்தபடியே, ‘நமசிவாயநமசிவாய என்று சிவ நாமத்தை இடைவிடாமல் ஜபித்தார். சர்வேஸ்வரனையும் காஞ்சி மகா பெரியவாளையும் தன் மனதுள் நிறுத்தினார்.

உடல் தளர்ந்தது. தான் பிரிய வேண்டிய வேளை நெருங்கி விட்டதை உணர்ந்தார். ‘அன்னதான சிவன் என்று அனைவரும் போற்றும் வண்ணம் தன்னை உயர்த்திய காஞ்சி மகா பெரியவாளை இறுதி முறையாக மனதுக்குள் நினைந்துஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர சொன்னார். திடீரென்று அவரது உடலில் மாற்றங்கள். அடுத்த விநாடியே இறைவனின் திருவடியில் கலந்தார். உடல் இயக்கம் அடங்கியது.

காஞ்சி மகா பெரியவா தன் காசி யாத்திரையை முடித்து அப்போதுதான் திரும்பி இருந்தார். விஷயம் அறிந்தார். ‘அன்னதான சிவனுக்கு இனி மறுபிறவியே இல்லை. அவர் செய்தது போன்ற புண்ணியச் செயலை வேறு எவரேனும் செய்ய முடியுமா என்று தோன்றவில்லை. அவர் மோட்சத்தை அடைவார். எனவே ஆலயங்களில் அவருக்காக மோட்ச தீபம் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.

லட்சக்கணக்கான பேருக்கு சுவையாகப் பரிமாறுகிறாரே இந்த அன்னதான சிவன்இவர் அந்த அன்னதானத்தின்போது என்ன சாப்பிடுவார் என்பதை ஆர்வத்துடன் அறிய முற்பட்ட பல அன்பர்கள் அதிர்ச்சி ஆகிப் போன சம்பவம் அடிக்கடி நடந்ததுண்டு.

அன்னதானம் நடக்கின்ற இடத்தில் ஒரு டம்ளர் பச்சைத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். ஒரு பருக்கையைக்கூட எடுத்து ருசி பார்க்க மாட்டார். ‘இவை எல்லாம் யாருக்காகவோ யாரோ கொடுத்த பணத்தில் இருந்து தயாரானது. இவற்றை நல்லபடியாகக் கையாள்வது மட்டுமே என் வேலை என்று சொல்லி அன்னதானம் நடக்கின்ற இடத்தில் உண்பதைத் தவிர்த்து விடுவார்.

பின், எங்கே இவர் சாப்பிடுவார் தெரியுமா? அன்னதான வைபவம் பூர்த்தி ஆனவுடன் தனக்கு மிகவும் பழக்கமான உள்ளூர் அன்பர் ஒருவர் வீட்டுக்குச் செல்வார். அவரது இல்லத்தில் தரையில் அமர்ந்து உரிமையுடன் ஒரு இலையைப் போட்டுக் கொள்வார். அதில் மிகவும் குறைவான அளவில் போடச் சொல்லிச் சாப்பிடுவார். பிறகு, அங்கேயே சற்று ஓய்வெடுப்பார்.

அன்னதான சிவனுக்கு மிகவும் பிடித்தவிரும்பிச் சாப்பிடுகிற அயிட்டம் எது தெரியுமா?

முதல் நாள் இரவு மீதம் வைத்தபழைய சோறு!

மகா பெரியவா என்கிற மாபெரும் சக்திதான் அன்னதான சிவனை இயக்கியது!

காஞ்சி மகானின் குருவருள் எத்தனையோ அன்பர்களுக்குக் கிடைத்து, வாழ்வில் உயரிய இடத்தை அவர்கள் அடைந்தார்கள். எல்லோரது நலனிலும் தனி அக்கறை செலுத்தியவர் காஞ்சி மாமுனிவர்.