தீபாவளிக்கு காரணம் பூமாதேவியின் பொறுமை

தீபாவளி தினத்தன்று அதிகாலை எண்ணெய் தேய்த்துக் குளித்து (அமாவாசை தினத்திலும் தீபாவளி வருவதுண்டு. பொதுவாக, பித்ருக்கள் தினமான அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. ஆனால், தீபாவளி வரும் அமாவாசை வரும் தினத்தில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். இதற்கு எந்த வித தோஷமும் இல்லை!), புத்தாடை அணிந்து, இனிப்புப் பண்டம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்துஎல்லாமே கோலாகலம்தான்!

ஆனால், இந்தக் கோலாகலத்தின் பின்னால் இருப்பது ஒரு மரணம். ஆம்! ஓர் அசுரனின் மரணத்தைக் கொண்டாடுவதுதான் தீபாவளி! தன் பிள்ளை நரகாசுரனின் மரணத்தைக் கொண்டாடும்படி கணவரான மகாவிஷ்ணுவிடம் வரம் வாங்கியவள் பிள்ளையின் தாயான பூமாதேவிதான் (சத்தியபாமா)!

இரண்யாட்சனை வதம் செய்ய வராக அவதாரம் எடுத்துப் பாதாள லோகத்துக்குள் புகுந்தார் மகாவிஷ்ணு. அசுரனை வதம் செய்தார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசம் காரணமாக ஒரு சிசு ஜனித்தது. அசுரனைக் கொன்றபோது அவதரித்த பிள்ளை என்பதாலோ என்னவோ, இந்த அருமை புத்திரனான நரகாசுரனும் ஓர் அரக்கனாகவே இருந்தான். புத்திரன் வளர வளரஅரக்கத்தனமும் அதிகமானது.

அவனை சம்ஹாரம் செய்வதற்கு சத்யபாமாவையும் (பூமாதேவி) உடன் அழைத்துச் சென்றார்.

முதலில், நரகாசுரனின் சேனாதிபதியான முரனை சம்ஹாரம் பண்ணினார். தந்தை பலியான சோகத்தைப் பார்த்து வீறு கொண்ட, முரனுடைய ஏழு பிள்ளைகளையும் ஆத்திரத்துடன் கிருஷ்ண பகவானுடன் போருக்கு வந்தனர். தந்தை எவ்வழியோ, மகன்களும் அவ்வழியே! மகன்கள் ஏழு பேரின் கதையும் முடிந்தது. தன் படை வீரர்கள் மூலம் இந்தச் சோகச் செய்தியைக் கேட்டறிந்த நரகாசுரன், வலிமையான ஒரு யானையின் மீதேறி கிருஷ்ண பகவானுடன் போருக்கு வந்தான். யுத்தம் துவங்கியது.

பகல் வேளையில் ஆரம்பித்த இந்த யுத்தம் நள்ளிரவு வரை நீடித்தது. எந்த வேளையில் நரகாசுரன் சம்ஹாரம் ஆக வேண்டும் என்று அந்தப் பரந்தாமனுக்குத்தானே தெரியும்?

நள்ளிரவு யுத்தமும் நீண்டு அதிகாலை புலர்ந்தது. சூர்யோதயத்துக்குச் சில நாழிகைகள் முன்பு தன் சக்ராயுதத்தால் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் பகவான். அன்று விடிந்த பொழுது ஊருக்கும் உலகுக்கும் நல்ல பொழுதாக விடிந்தது. இது நடந்த தினம் ஐப்பசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினத்தில்.

தான் சாகப் போகிற சில நிமிடங்களுக்கு முன், ‘நான் அழியப் போகும் இந்தத் தினத்தை நாட்டு மக்கள் எல்லோரும் திவ்யமாக ஸ்நானம் செய்து, பண்டிகையாக உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டு அழிந்தான் நரகாசுரன். இந்த வரத்தை அவனது தாயான சத்யபாமா கேட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. தீபாவளி தினத்தில் நாம் தலையில் தேய்த்துக் கொள்ளும் எண்ணெயில் லட்சுமி தேவியும், குளிக்கிற நீரில் கங்கையும் இருப்பதாக ஐதீகம்.

தீபாவளி பற்றியும் இந்த சம்ஹாரம் பற்றியும் மகா பெரியவா சொல்கிறார்:

நம் ஆச்சார்யாள் ஆதிசங்கர பகவத்பாதாள்

பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜலலவ கணிகா பீதா

ஸக்ருதபி ஏன முராரி ஸமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா

என்று பஜ கோவிந்தத்தில் சொல்கிறார்.

எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தை பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ, அவனுக்கு யமனிடம் பயமில்லை. அதாவது யமலோகம் போகாமல் புண்ணிய லோகத்துக்குப் போகிறான் என்று அர்த்தம்.

இந்த ஸ்லோகத்தில் ஒரு ஆச்சரியம்இதில் சொல்லி இருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருப்பதுதான்.

பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புத்தகங்களில் கீதை உசத்தியாக இருக்கிறது. தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரேதான் கொடுத்திருக்கிறார்.

அடுத்து, முராரியை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். பகவானுடைய பெயர்கள் எத்தனையோ இருக்க, ‘முராரி ஸமர்ச்சா என்றே சொல்கிறார். நரகாசுரனின் சகாவான முரனைக் கொன்றபோதுதான் பகவான் முராரி ஆனார்.

கடைசியில் ஆச்சார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகாசுரன் என்றவுடனே நரகத்தின் ஞாபகமும், யமதர்மராஜா ஞாபகமும்தான் வருகின்றன. தீபாவளி அன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

தீபாவளிப் பண்டிகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கும் மகா பெரியவா ஒரு விளக்கம் தருகிறார்.

எனக்கென்னவோ நரகாசுரனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி ஒரு வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விசேஷமாக மனசில் படுகிறது.

பகவான் ஹஸ்தத்தால் மரணம் அடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஒரு பெற்ற தாய் புத்திர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான சமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகலோகத்தில் சகல ஜனங்களும் சந்தோஷமாக விழா கொன்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் என்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது.

பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணம் ஆகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்கும் இல்லாத முதன்மை தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்பிராயம் என்கிறார் மகா பெரியவா.