கிணற்றில் விழுந்தது கிடைத்த அதிசயம்

ஜாதியும் மதங்களும் பிரிவுகளும் பேதங்களும் மனிதர்களுக்கு மட்டும்தான்!

இவற்றை முன்னிலைப்படுத்தி எத்தனை சண்டை சச்சரவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவற்றுக் காரணம்மனிதர்களுக்கு சகிப்பு உணர்வு குறைவு. எல்லாவற்றையும் எளிதில் எடுத்துக் கொள்ள மனம் மறுக்கிறது. மற்றவர்களின் முன்னேற்றத்தை பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனால், மகான்கள் முற்றும் துறந்தவர்கள். அவர்களுக்கு எந்த விதமான வேறுபாடும் கிடையாது; பாகுபாடும் இல்லை.

அருள் வேண்டித் தன் சந்நிதிக்கு வருகிற அனைவரும் அங்கே சமம்.

உள்ளார்ந்த பக்தியோடு மகா பெரியவாளின் திருச்சந்நிதி செல்லும் அனைவருக்கும் அவரது அருள் உண்டு.

எத்தனையோ இஸ்லாமியகிறிஸ்தவ அன்பர்கள் மகா பெரியவரின் பரிபூரண அருளைப் பெற்றிருக்கிறார்கள்.

மகா பெரியவாளின் சாதுர்மாஸ்ய விரதத்துக்கு ஒரு முறை தன் தோப்பையே தந்து உதவியவர் ஒரு இஸ்லாமியர் அன்பர், தெரியுமா?

காரைக்குடிக்கு அருகே இருக்கிறது இளையாத்தங்குடி என்கிற இளையாற்றங்குடி.

ஒரு முறை மகா பெரியவா இந்த ஊரில் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டிருக்கிறார். சாதுர்மாஸ்ய விரதம் என்பது சந்நியாசிகள் கடைப்பிடிக்கிற ஒரு விரதம்.

இத்தகைய விரதத்தைக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் மேற்கொள்வார்கள். ஒரே ஊரில் ஒரே இடத்தில் தங்கி இருக்க வேண்டும். பலரும் வந்து காணிக்கைகளை வழங்கி, தரிசித்துச் செல்வார்கள்.

ஒரு முறை காரைக்குடி நகரத்தார் அன்பர்கள் வசிக்கும் பகுதி வழியே மகா பெரியவர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது சாதுர்மாஸ்ய காலம் நெருங்கியது.

காஞ்சி ஸ்ரீமடத்தில் அப்போதெல்லாம் அவ்வளவாக வசதிகள் கிடையாது. எந்தெந்த ஊரில் எந்தெந்த தனவந்தர்கள் தங்குவதற்கு இடம் தருவார்கள் என்று விசாரித்தபடியே மடத்தின் மேனேஜர் செல்வார். தனவந்தர்கள் தரும் இடத்தில் பெரியவா தங்கி, பூஜை போன்ற வழிபாடுகளை நடத்துவார். பலரும் திரண்டு வந்து பூஜையைக் கண்டு தரிசித்து மகானையும் வணங்கிச் செல்வர்.

அதுபோல் நகரத்தார் பகுதியில் யாத்திரை சென்று கொண்டிருக்கும்போது சாதுர்மாஸ்ய விரத காலம் நெருங்கியது. எனவே, விரதத்தை நகரத்தார்கள் வசிக்கும் இந்தப் பகுதியிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று மகா பெரியவா தீர்மானித்தார். ஸ்ரீமடத்தின் மேனேஜரை அழைத்து, “ஸ்ரீமடம் ரெண்டு மாத காலத்துக்குத் தங்கி முகாம் போடுவதற்கு ஏற்றாற் போன்ற இடம் ஏதாவது இருக்காதங்கி அனுமதிக்கக் கூடிய தனவந்தர்கள் இருக்கிறார்களா, விசாரி என உத்தரவிட்டார் மேனேஜருக்கு.

அதன்படி மகா பெரியவாளை தோதான ஓரிடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, விசாரிப்பதற்காக நடந்து சென்றார் மேனேஜர்.

சில கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்திருப்பார். நேரில் பார்க்கின்றவர்களிடம்இதற்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று ஒவ்வொருவராகத் தவிர்த்து விட்டு நடந்தார்.

ஒரு வாய்க்கால் அருகே மதகில் மூன்று அன்பர்கள் அமர்ந்திருந்தார்கள்.

பெரியவா உத்தரவை நிறைவேற்ற வேண்டுமே என்கிற எண்ணத்துடன் அவர்களைக் கடந்து செல்கிறபோது மூவரில் ஒருவர் எழுந்து, “சார் என்று மேனேஜரை அழைத்தார்.

எழுந்து அழைத்தவர்வைணவ அன்பர். நெற்றியில் நாமம் அணிந்திருந்தார்.

திரும்பிப் பார்த்த மேனேஜர், வைணவ அன்பரை நெருங்கினார்.

நெற்றியில் திருநீறும் பஞ்சக்கச்சமும் அணிந்திருந்த மேனேஜரைப் பார்த்த வைணவ அன்பர், நமஸ்காரம் தெரிவித்தார். பிறகு, “என்ன விஷயமா நீங்க இந்தப் பக்கம் போயிண்டிருக்கேள்? நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டார்.

இவர் உள்ளூர்க்காரர் போலிருக்கிறது. இவரிடம் விவரத்தைச் சொன்னால், நாம் வந்த வேலை முடிந்து விடும் என்று மகா பெரியவாளின் சாதுர்மாஸ்ய விரதம் பற்றியும், அதற்கு இடம் தேடிச் சென்று கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

காஞ்சி மகா பெரியவாளாஇங்கே யாத்திரை வந்திருக்காரா..? இந்த பூமியே புண்ணியம் பண்ணி இருக்கு. அதான் மகா பெரியவா பாதம் இங்கே பதியறது என்றவர், “நான் மதுரைல உத்தியோகம் பண்றேன். இங்கே இளையாத்தங்குடிலேர்ந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தொலைவுல என்னோட அண்ணா இருக்கார். பெரிய வீடு. லீவுன்னா இங்கே வந்துடுவேன். அவர் வீட்டுல தங்கிக்கலாம். அண்ணாகிட்ட கேட்டு நான் ஏற்பாடு பண்றேன் என்றார் உற்சாகமாக.

இவரைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு நம்பிக்கையும் பிறந்தது மேனேஜருக்கு. அடுத்து ஏதோ பேச முற்படுவதற்கு முன், வைணவ அன்பர், “வாங்கோமகா பெரியவா இப்ப எங்கே இருக்காரோ, அங்கே என்னைக் கூட்டிண்டு போங்கோ. அவர்கிட்ட நானே விவரமா பேசறேன் என்றார்.

மகா பெரியவா எங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறாரோ, அந்த இடத்தை நோக்கி மேனேஜர் நடக்கவைணவ அன்பர் பின்தொடர்ந்தார்.

அரை மணி நேர வேகமான நடையில் மகான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இடத்தை மேனேஜரும் வைணவ அன்பரும் அடைந்தார்கள்.

மகா பெரியவாளை நமஸ்கரித்து, விவரங்களைச் சொன்னார் வைணவ அன்பர்.

இப்பவே எங்க அண்ணாகிட்ட போய் அவரோட சம்மதம் கேட்டுண்டு வரேன் பெரியவா. நீங்கல்லாம் அங்கே தங்கறதுக்கு அவன் பாக்கியம் பண்ணி இருக்கணும் என்று சொல்லி விட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

தன் அண்ணன் வசிக்கும் ஊரை அடைந்தார் வைணவ அன்பர். கூடம், தாழ்வாரம், கொல்லைப்புறம், மாட்டுத் தொழுவம், கிணறு, பிரமாண்ட கோட்டை அடுப்பு என்று ஸ்ரீமடத்தின் கேம்ப்புக்குக் கச்சிதமான மிகப் பெரிய வீடு.

அண்ணனிடம் விஷயத்தைச் சொன்னார் தம்பி.

ஆனால், அப்போது ஒரு சில காரணங்களைச் சுட்டிக் காட்டி, அண்ணன் இதை ஏற்கவில்லை.

உடனே அங்கிருந்து திரும்பிய வைணவ அன்பர், கிட்டத்தட்ட பெரியவாளுக்கு நாம் வாக்குக் கொடுத்து விட்டோமேஅவருக்கு எப்படியாவது ஒரு இடத்தைத் தயார் செய்து கொடுக்க வேண்டுமே என்று யோசித்தவர் ஊரில் இருக்கிற தன் நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போய் விசாரித்துப் பார்த்தார்.

எல்லோருக்கும் மனசில் ஆசை இருக்கிறது. ஆனால், தவிர்க்க இயலாத சில காரணங்களால் அது அமையாமல் போனது.

அடுத்து எவரிடம் கேட்கலாம் என்று வைணவ அன்பர் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தபோது அவரது உள்ளூர் நண்பர் ஒருவர் வந்தார்.

வந்தவர்இஸ்லாமியர்!

என்னப்பா, உன்னோட முகம் ரொம்ப சோகமா இருக்கு? என்ன விஷயம்? என்று கேட்டார் இஸ்லாமிய நண்பர்.

எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

அட பாவமேஅந்தத் துறவிக்கு இடம் வேணுமா? என்னோட வீடு பெருசு. ஆனா, அங்கெல்லாம் இவங்க தங்க மாட்டாங்க என்று இழுத்தபடிவேணும்னா ஒண்ணு பண்ணலாம் என்று முகம் பிரகாசமானார் இஸ்லாமிய அன்பர்.

வைணவ அன்பருக்கு ஒரு சந்தோஷம்.

என்ன, சீக்கிரம் சொல்லு என்று பரபரத்தார் வைணவ அன்பர்.

இஸ்லாமிய அன்பர் சொன்னார்: “எனக்குச் சொந்தமா ஒண்ணரை ஏக்கர் நிலம் இருக்கு. அங்கே கிணறும் உண்டு. அந்த சந்நியாசி சம்மதம்னு சொன்னா, நானே தேவைப்படுகிற இடத்துல பிரமாண்ட கொட்டகை போட்டுத் தரேன். தவிர, வேற என்னென்ன அங்கே தேவைப்படுமோ, எல்லாவற்றையும் நானே செய்து தரத் தயாராக இருக்கிறேன்.

இஸ்லாமிய நண்பரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், வைணவ அன்பர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தன் அண்ணனால் வழங்க முடியாத ஒரு இடத்தைஇந்த இஸ்லாமிய நண்பன் மனமுவந்து வழங்கத் தயாராக இருக்கிறானேவேறு என்னென்ன வசதிகள் அவர்களுக்குத் தேவைப்படுமோ எல்லாவற்றையும் செய்து தரத் தயார் என்கிறானே என்று பூரித்தார்.

தன் இரு கரங்களையும் குவித்து அவருக்குத் தன் நன்றிகளை ஆனந்தக் கண்ணீராலும் வார்த்தைகளாலும் தெரிவித்தார் வைணவ அன்பர்.

என்கிட்ட வசதியும் இருக்கு; செய்யணும்ங்கிற மனசும் இருக்கு. அதனால, தரத் தயாராக இருக்கேன்னு சொல்றேன். நன்றிங்கிற பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்திடாதே என்று இயல்பாகவும் நட்புடனும் சொன்னார் இஸ்லாமிய நண்பர்.

அதற்கு மேல் அங்கு இருப்பாரா வைணவ அன்பர்? ‘சாதுர்மாஸ்ய கால விரதத்துக்கு இடத்தைப் பார்த்து ஏற்பாடு செய்கிறேன் என்று மகா பெரியவரிடம் ஒரு வாக்குக் கொடுத்து விட்டு அல்லவா வந்திருக்கிறார்..?!

இஸ்லாமிய நண்பரிடம், “உன்னோட இந்த வார்த்தைகளை மகானிடம் சொல்லி விட்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டு, மகா பெரியவாளிடம் இந்த விவரங்களைத் தெரிவிப்பதற்காக ஓடினார் வைணவ அன்பர்.

பரப்பிரம்ம சொரூபம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது. அவருக்குத் தெரியாதா, யாருக்கு இந்த பாக்கியம் அமையப் போகிறது என்று!

ஸ்ரீமடத்து மேனேஜரை வைணவ அன்பருடன் அனுப்பி இஸ்லாமிய நண்பரின் இடத்தைப் பார்த்து வருமாறு அனுப்பினார்.

ஸ்ரீமடத்தின் நடைமுறைகளையும், சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கியத்துவத்தையும், மகானின் எதிர்பார்ப்பையும் நன்கறிந்த மேனேஜர், ஒண்ணரை ஏக்கர் நிலத்தை சுற்றிச் சுற்றி வந்து பல கோணங்களில் ஆராய்ந்தார்.

வானம் பார்த்த பூமி. சுவையான நீர் ஊறும் கிணறு. ஏராளமான வண்ண வண்ணப் பூச்செடிகள். பூசணி, பரங்கி என்று ஆங்காங்கே சில காய்கறிச் செடிகளும் காணப்பட்டன. தவிர, அந்த மண்ணுக்கே ஒரு வாசம் இருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு அந்த மண்ணை இப்படியும் அப்படியும் அளந்த மேனேஜர் முகத்தில் ஒரு திருப்தி.

வைணவ அன்பருடன் மகா பெரியவாளிடம் திரும்பி வந்தார் மேனேஜர்.

எல்லாவற்றையும் மகா பெரியவாளிடம் விளக்கிச் சொன்னார். “மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார் என்று மகானும் பச்சைக் கொடி காட்டினார்.

அடுத்த ஒரு சில தினங்களில் மளமளவென வேலைகள் நடந்தேறின.

சாதுர்மாஸ்ய காலம் முழுக்க மகா பெரியவா அங்கே தங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்லாமிய அன்பர் உற்சாகத்துடன் செய்து கொடுத்தார்.

சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்கு, மகான் தங்குவதற்கு, கோசாலைக்கு, சிப்பந்திகள் தங்குவதற்கு, அன்னதானம் நடப்பதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே கொட்டகை போட்டு ஏற்பாடு செய்தார் இஸ்லாமியர்.

மகா பெரியவா இங்கு சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம் முழுக்க வைணவ அன்பர் தினமும் காலை வேளையில் அவருக்குக் கைங்கர்யம் செய்தார். சாதுர்மாஸ்ய காலத்தில் ஒரே ஒரு முறை மகானின் தரிசனம் கிடைத்தாலும் புண்ணியம். ஆனால், நித்தமும் மகா பெரியவாளை நமஸ்கரித்து அவரது ஆசிகளைப் பெற்றார்.

வைணவ அன்பர் அப்போது பணி புரிந்து வந்தது மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில். தினமும் காலை வேளையில் இளையாத்தங்குடியில் கைங்கர்யம். அதன் பின் மகானிடம் இருந்து உத்தரவு பெற்றுக் கொண்டு மதுரை அலுவலகத்துக்குப் புறப்பட்டு விடுவார்.

அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து நீராடி தன் அனுஷ்டானங்களை முடித்து விட்டு, வழிபாட்டுக்கும் இன்ன பிறவற்றுக்கும் தேவையான நீரை கிணற்றில் இருந்து குடம் குடமாக இரைத்துத் தருவார்.

பூஜைக்குத் தேவையான புஷ்பங்கள், பக்தர்களின் அன்னதானத்துக்குத் தேவையான பொருட்கள் என்று தன்னால் எந்த அளவு உதவ முடியுமோ, அனைத்தையும் செய்தார்.

ஒரு நாள் அப்படிக் கிணற்றில் நீர் இரைத்துக் கொண்டிருக்கும்போது இடுப்பில் செருகி வைக்கப்பட்டிருந்த பர்ஸ் பொசுக்கென தவறி உள்ளே விழுந்து விட்டது. பர்ஸுக்குள் சில ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அப்போதெல்லாம் ஆயிரம் என்பது மிகப் பெரிய தொகை. தவிர, அலுவலகம் தொடர்பான ஒரு சில முக்கியமான காகிதங்களும்.

அதிர்ந்து போனார். குனிந்து பார்த்தால், கண்களுக்கு எட்டிய தொலைவில் கிணற்றில் ஜலம் காணப்பட்டாலும், அதன் ஆழமோ பல அடிகள். தண்ணீரின் அடி ஆழத்துக்குப் போய் விட்டது பர்ஸ்.

குனிந்து பார்த்தால் கண்களுக்குத் தென்படவே இல்லை. பதறிப் போனார் வைணவ அன்பர்.

அதிகாலை நேரம்ஸ்ரீமடத்து முகாமில் எல்லோரும் அவரவர் பணிகளில் மும்முரமாக இருந்தார்கள்.

யாரிடம் போய்ச் சொல்வது? கிணற்றுக்குள் இறங்கினாலும், பர்ஸ் மிகச் சிறியது ஆயிற்றே! தேடினால் கிடைக்குமா? ஒருவேளை மண்ணுக்குள் சிக்கிக் கொண்டால், தெரியாமல் போய் விடுமே!

ஒரு குடம் தவறி விழுந்து விட்டது, பாத்திரம் விழுந்து விட்டது என்றாலும், யாரேனும் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கிக் கஷ்டப்பட்டுத் தேடி எடுத்து விடலாம்.

பர்ஸ், அளவில் சிறியது. அதை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தார் வைணவ அன்பர்.

அடுத்த அரை மணி நேரத்துக்கு அவருக்கு வேலை ஓடவில்லை. சிறிது நேரம் கவலையோடு இருந்தவர், பிறகுஎன்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். பர்ஸ் போக வேண்டும் என்பது விதி போலிருக்கிறது. கிடைக்க வேண்டும் என்று தீர்ப்பு இருந்தால் கிடைக்கும் என்று தெளிந்து அடுத்து தன் வேலைகளில் இறங்கினார்.

எத்தனை குடம் நீர் இரைக்க வேண்டுமோ இழுத்து முடித்தார். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டார்.

மதுரை அலுவலகம் செல்வதற்கு அவரிடம் சல்லிக் காசுகூடக் கிடையாது. அங்கிருந்த ஒரு சிலரிடம் கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார். கிளம்புவதற்குள் அத்தனை கஷ்டப்பட்டு விட்டார்.

அலுவலகத்தில் வேலையில் மூழ்கினாலும், பர்ஸ் சிந்தனை அவ்வப்போது வந்தது. அதில் இருக்கக் கூடிய அலுவலகம் தொடர்பான காகிதங்களும் முக்கியமானவை.

வழக்கம்போல் அன்றைய தினம் நள்ளிரவு இளையாத்தங்குடி முகாமுக்கு வந்தார்.

அதிகாலை கண்விழித்தெழுந்து ஜிலீரென்ற நீரில் நீராடினார். கிணற்றில் இருந்து குடம் குடமாக நீர் இரைக்க ஆரம்பித்தார்.

இழுத்து முடித்து மகா பெரியவாளின் தரிசனத்துக்காக மகான் வீற்றிருக்கக் கூடிய இடத்துக்குச் சென்றார்.

காலை வேளையிலேயே மகானை சூழ்ந்து கொண்டு எண்ணற்ற நகரத்தார் அன்பர்கள் காணப்பட்டனர்.

அன்றைய தினம் தேவக்கோட்டை, காரைக்குடி, இளையாத்தங்குடி போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த நகரத்தார்கள் அன்பர்கள் திரளானோர் மகா பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தார்கள்.

பொதுவாக நகரத்தார் அன்பர்களுக்கு சிவ பக்தி அதிகம். தமிழகத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களுக்கு அவர்கள் அந்தக் காலத்தில் திருப்பணி மேற்கொண்டிருக்கிறார்கள். பல கோயில்களைப் பராமரித்தும் வந்திருக்கிறார்கள்.

சர்வேஸ்வர சொரூபமாக விளங்குகிற மகா பெரியவா மீது அவர்களுக்கு அளவு கடந்த பக்தி.

மகானைச் சுற்றிலும் நகரத்தார் அன்பர்கள் காணப்பட்டனர். அப்போதுதான் தயங்கித் தயங்கிப் போய் நின்றார் வைணவ அன்பர். வணங்கி விட்டு, வழக்கம்போல் மதுரை அலுவலகத்துக்குப் புறப்பட வேண்டும்.

சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வைணவரைப் பார்த்து விட்டார் மகா பெரியவா. உடனே ஜாடை காண்பித்துத் தன் அருகே அழைத்தார் மகான்.

கீழே அமர்ந்திருந்த பக்தர்கள், வைணவர் நடந்து செல்வதற்குத் தோதாக வழி விட்டனர்.

பெரியவாளை நெருங்கி அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

வைணவ அன்பரின் முகத்தை ஏறிட்ட மகா பெரியவா, “என்ன, கிணத்துலேர்ந்து ஜலம் இழுத்து முடிச்சிட்டியா? என்று கேட்டார்.

ஆமா பெரியவாஆபீஸுக்குக் கிளம்பணும். அதான் உங்ககிட்ட உத்தரவு வாங்கிண்டு போகலாம்னு என்று இழுத்தார்.

நேத்திக்கு ரொம்ப கஷ்டப்பட்டு ஆபீஸுக்குப் போனே போலிருக்கு என்று பணத்தைக் குறிக்கும் விதமாகத் தன் வலது கட்டைவிரல் நுனியையும், நடுவிரலின் நுனியையும் இணைத்தும் பிரித்தும் ஜாடை காண்பித்தார் பெரியவா.

வைணவ அன்பருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

காரணம், கிணற்றில் பர்ஸ் விழுந்த விஷயம் அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

வைணவ அன்பர் முகத்தில் திகைப்பு, பிரமிப்பு என எல்லாம் ஒரே நேரத்தில் தென்பட்டன.

பின்னேதன் பர்ஸ் கிணற்றில் விழுந்த விஷயம் இவருக்கும் கிணற்றுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

கிணறு பேசாது. அது எவரிடமும் சொல்லி இருப்பதற்கு வாய்ப்பில்லை.

இவரும் வாயைத் திறந்து எவரிடமும் சொல்லவில்லை. ஒருவேளை பர்ஸ் கிணற்றுக்குள் விழுந்த காலை நேரத்தில் இதை எவரிடமாவது சொன்னால், பரபரப்பு கூடி இருக்கும். ஸ்ரீமடத்தில் இருக்கிற பலரது பணிகளும் பாதிக்கப்பட்டு விடும். இது போன்ற பல பின்விளைவுகளை யோசித்து, தனக்குள் மட்டும் இந்த விஷயத்தை வைத்துப் பூட்டி விட்டார்.

ஆனால், இப்போது மகா பெரியவா சூசகமாக இதைப் பற்றிக் கேட்கிறாரே? எப்படி என்று விழித்தார் வைணவ அன்பர்.

நேத்திக்கு ரொம்ப கஷ்டப்பட்டு ஆபீஸுக்குப் போனே போலிருக்கு என்று மகான் கேட்டார் அல்லவா?

மகான்களிடம் எந்த ஒரு பொழுதிலும் பொய் சொல்லக் கூடாது. எனவே, அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

ஆமா பெரியவாநேத்திக்கு கஷ்டப்பட்டுத்தான் ஆபீஸுக்குப் போனேன்.

புன்னகைத்தார் மகான். பிறகு, “மேனேஜரைப் போய்ப் பாரு என்றார், என்ன ஏது என்கிற விவரம் சொல்லாமல்.

எதற்கு மேனேஜரைப் பார்க்கச் சொல்கிறார் என்பது புரியாமல் மகானுக்கு மீண்டும் நமஸ்காரம் செய்து விட்டு மேனேஜர் இருக்கிற இடத்தை நோக்கி நடந்தார்.

முகாம் அலுவலகத்தில் மேனேஜர் அமர்ந்திருந்தார்.

நகரத்தார் அன்பர்கள் ஒரு சிலர் மேனேஜருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வைணவ அன்பர் தன் அருகே வருவதைப் பார்த்ததும், முகம் மலர்ந்தார் மேனேஜர். “வாங்கோவாங்கோபெரியவா உங்களை என்கிட்ட அனுச்சாளா? என்று கேட்டார்.

ஆமாம் என்று இழுத்தார், என்னவென்று புரியாமல்.

உங்ககிட்ட ஒரு பொருளைச் சேர்க்கச் சொல்லி பெரியவா எனக்கு உத்தரவிட்டார்இருங்கோ என்றவர், தான் அமர்ந்திருந்த இடத்தில் எதையோ தேடினார்.

பிறகு, கையில் எடுத்து நீட்டினார்.

அதுமுந்தின தினம் கிணற்றுக்குள் விழுந்த பர்ஸ்.

வைணவ அன்பரால் நம்ப முடியவில்லை.

கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார். ஆம்! அதே பர்ஸ்தான். பளிச்சென்று இருந்தது. பிரமிப்பில் இருந்து விலகவில்லை.

வாங்கிக்குங்கோஇது உங்களோட பர்ஸ்தானே?

அதை வாங்கும் விதமாக ஓரிரு அடிகள் மேனேஜரை நோக்கி முன்னால் வந்த வைணவ அன்பர், “இது எப்படிஉங்ககிட்ட…? என்று குரல் பிசிறவார்த்தைகளை இழுத்தார்.

பெரியவாதான் என்கிட்ட சேர்த்தார். ‘இது அவனோடது. மதுரை ஆபீஸ்லேர்ந்து வந்தவுடனே சேர்த்துடு அனுச்சார். அதான் பத்திரமா வெச்சிண்டிருக்கேன். வாங்கிக்குங்கோ

வாங்கினார். பிரித்துப் பார்த்தார்.

ஆச்சரியம் அதிகமானது.

தண்ணீருக்குள் விழுந்து எத்தனை மணி நேரம் ஊறியதோஇது மகா பெரியவா திருக்கரங்களுக்கு எப்படி வந்ததோஇப்படி சரமாரியாகக் கேள்விகள் வைணவ அன்பரின் மனதில் தோன்றினாலும், அதற்கான விடை தேடுவதற்கு முற்படவில்லை.

பரமேஸ்வரன் நிகழ்த்துகின்ற லீலைகளுக்கு விளக்கம் காண முற்படக் கூடாது.

மகானது ஞான திருஷ்டி கண்டு அவரது கண்கள் கலங்கின.

அலுவலகம் தொடர்பான காகிதங்கள் அனைத்தும் எழுத்துக்கள் அழியாமல் அப்படியே பொலிவு குறையாமல் இருந்தன. ரூபாய் நோட்டுக்களும் ஈரப்பதம் இல்லாமல் இயல்பாக இருப்பது போல் காணப்பட்டன.

மேனேஜரைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டு, மகா பெரியவாளிடம் ஓடினார் வைணவ அன்பர். அவர் மனதில் என்னவோ ஒன்று தோன்றி விட்டது. யோசிக்காமல் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று ஓடி வந்தார்.

மூச்சிரைக்க மகானுக்கு முன்னால் வந்து நின்றார். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

மகான் ஆசிர்வதித்தார்.

திடீரென்று தன் பர்ஸைத் திறந்தார். உள்ளே இருக்கிற நோட்டுக்கள், சில்லறைகள் அனைத்தையும் ஒரு மூங்கில்தட்டில் கொட்டினார். காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுமாறு கண்கள் பனிக்க வேண்டினார் வைணவ அன்பர்.

புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட மகான், “ஆபீஸ் போறதுக்கு கொஞ்சம் சில்லறை வெச்சுக்கோ என்று எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

மகானின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுப் பேருந்து செலவுக்குத் தேவையான சில்லறைகளை எடுத்துக் கொண்டார்.

கிணற்றுக்குள் விழுந்த பர்ஸ் மீண்டும் நம்மிடம் கிடைக்காது என்று அதில் இருந்த ஆயிரக்கணக்கான ரூபாயை மறந்தே விட்டார் வைணவ அன்பர். ஆனால், மகா பெரியவா அருளால் அது கிடைத்து விட்டது. அவர் அருளால் கிடைத்ததை அவருக்கே காணிக்கை ஆக்க வேண்டும் என்கிற எண்ணம் திடீரென்று மனதுள் எழுந்ததால், இந்த அர்ப்பணிப்பு, நெகிழ்வு எல்லாம்!

மகா பெரியவாளுடைய அருளைப் பெறுவதற்கே பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதில் இந்த வைணவ அன்பரோ, ரொம்பவும் கொடுத்து வைத்தவர்.