சந்நியாசிகள் எண்ணற்ற யாத்திரை செல்வார்கள். பலரையும் சந்தித்து அவர்களின் வாழ்வு வளம் பெற அருள்வார்கள்.
மகா பெரியவா சென்ற யாத்திரைகளைக் கணக்கெடுத்தால் அது மிகவும் நீண்டது. பாரத தேசத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்றிருக்கிறார்.
தன் யாத்திரையின்போது திருச்சிக்கும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் சென்றிருக்கிறார். எண்ணற்ற கிராமங்களுக்கும் சென்று அங்கு வசிக்கும் பக்தர்களுக்கு அருள் புரிந்துள்ளார்.
திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது லால்குடி. இந்த ஊரில் வசித்து வந்தார் ஒரு நிலச் சுவான்தார். அந்தணர். அவரது மகன்தான் பார்த்தசாரதி ஐயர்.
படித்து முடித்து வக்கீல் தொழில் புரிந்து வந்தார் பார்த்தசாரதி.
தொழிலில் நேர்மையாக விளங்கியவர். படிப்படியாக முன்னேறி ஜில்லா கோர்ட் நீதிபதியாக ஆனார்.
அந்தக் காலகட்டத்தில் பார்த்தசாரதிக்கு மகா பெரியவா மீது அதீதமான பக்தியும் மரியாதையும் இருந்தன. எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நேரில் சென்று மகானைத் தரிசிப்பார்.
அடிக்கடி தனியாகவும் சில வேளைகளில் தன் நண்பர்களுடனும் புறப்பட்டுப் போய் மகா பெரியவாளைத் தரிசித்துப் பரவசப்படுவார்.
நேரம் கிடைக்கிறபோது மகான் முகாமிட்டிருக்கிற இடங்களில் தங்கி சேவை புரிவார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் மகா பெரியவாளின் தொண்டுக்கென்றே தன்னைப் பெரிதும் அர்ப்பணித்துக் கொண்டார். இதைத் தான் பெற்ற பேறாகக் கருதினார். அடிக்கடி மகானைத் தரிசித்து அவர் அருளைப் பெற்றார். தவிர, மகான் இடும் பணிகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்.
மகா ஸ்வாமிகளால் நிறுவப்பட்ட ‘வேத தர்ம பரிபாலன சபை‘ என்ற ஸ்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் பார்த்தசாரதி.
வேதத்தையும் தர்மத்தையும் நிலை நாட்டுவதற்கென்றே துவக்கப்பட்ட இந்த ஸ்தாபனத்தில் சிரத்தையுடனும் பக்தியுடனும் இருந்து வந்தார். தன் இறுதிக் காலம் வரை நேர்மையாகவும் நியாயமாகவும் இருந்து மகா பெரியவாளுக்குத் தொண்டாற்றினார்.
‘திருச்சிராப்பள்ளி அத்வைத சபை‘யின் தலைவராகவும் பணி புரிந்துள்ளார் பார்த்தசாரதி ஐயர்.
மகானைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை திருச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தார் பார்த்தசாரதி.
அதோடு சென்னையில் இருந்து திருச்சிக்குத் திரும்புவதற்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதியோடு டிக்கெட்டும் ரிசர்வ் செய்திருந்தார்.
சென்னை வந்ததும், அங்கிருந்து ஒரு காரில் பயணித்து, மகா பெரியவா முகாம் இருந்த இடத்தை அடைந்தார்.
காலை வேளையில் மகா பெரியவாளின் தரிசனம் கிடைத்தது. மகானைக் கண்ட மாத்திரத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். முகத்தில் பரவசம் பொங்க தரிசித்தார். குடும்ப நலன் பற்றி அக்கறையுடன் விசாரித்தறிந்தார் பெரியவா.
பிறகு, பார்த்தசாரதியைத் தன் எதிரே அமர வைத்து வேதம் மற்றும் தர்மம் குறித்த பணிகள் எந்த அளவில் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா.
சர்வேஸ்வர சொரூபமான மகான் நடத்துகிற சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தரிசித்தார். அவரது திருக்கரங்களால் பிரசாதம் பெற்றுக் கொண்டார்.
மதிய உணவு நேரம் வந்தது. ஸ்ரீமடத்தின் முகாமிலேயே சாப்பிட்டார். கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டார்.
மாலைப் பொழுது வந்தது. மணி சுமார் 5 இருக்கும். அன்றைக்கு இரவு சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் செல்ல வேண்டும். இரவு சுமார் 9.50-க்கு ரயில். இதற்குத்தான் முன்பதிவும் செய்திருந்தார்.
உத்தரவு பெற்று ஊர் திரும்ப வேண்டும் என்பதற்காக மகா பெரியவா அமர்ந்து கொண்டிருக்கிற இடம் நோக்கிச் சென்றார். திரளான பக்தர்கள் மகானைச் சூழ்ந்த வண்ணம் காணப்பட்டனர்.
கைகளைக் கூப்பிய வண்ணம் மகானை நெருங்கினார். ஆனால், பார்த்தசாரதி தன்னை நோக்கி வருகிறார் என்பதைப் பார்த்ததும், விநாடி நேரத்தில் சட்டென்று மகான் எழுந்தார். தன்னுடன் அதுவரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பக்தர்களுக்கு உத்தரவு கொடுத்தார். “சரி, நீங்கள் எல்லாம் பொறப்படுங்கோ.”
பெரியவா தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்வதைப் பார்த்ததும், அவரை நோக்கி வேகமாக நடந்தார் பார்த்தசாரதி. ஆனால், மகானோ பார்த்தசாரதியைப் பார்த்தும் பார்க்காதவாறு விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டார்.
‘அடடா… உத்தரவு வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்படலாம் என்றால், பெரியவா சட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டாரே… ஏதேனும் முக்கிய காரியமாக இருக்கும் போலிருக்கு‘ என்று நினைத்தவர் அங்கேயே அமர்ந்தார். பெரியவா மீண்டும் வெளியே வருவார் என்று அவரது அறையையே தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, மகா பெரியவா வெளியே வருவதாகக் காணோம்.
இப்போது மணி மாலை 6.
இரவு 9.50 மணிக்கு அந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்படும். சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை செல்கிற வண்டி.
அதிகபட்சம் இன்னும் அரை மணி நேரத்துக்குள் புறப்பட்டால்தான் எழும்பூரை உரிய நேரத்தில் அடைய முடியும். தாமதமாகப் புறப்பட்டால், ரயிலைப் பிடிக்க முடியாது.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால், பெரியவா வெளியே வருவதாகக் காணோம்.
அவரிடம் உத்தரவு பெறாமல் எந்த ஒரு பக்தரும் புறப்பட மாட்டார்.
நேரம் ஆக ஆக தவிப்பு கூடியது பார்த்தசாரதிக்கு.
கைகளைப் பிசைந்து கொண்டு தவித்தார். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. இப்போது புறப்பட்டால்தான் விரைந்து பயணித்து ரயிலைப் பிடிக்க முடியும். ஒருவேளை இந்த ரயிலைப் பிடிக்க முடியாவிட்டால், ரிசர்வேஷனுக்குச் செலவழித்த பணம் வீணாகி விடும். அதோடு, அடுத்த நாள் திருச்சி செல்வதற்கு ரிசர்வேஷன் கிடைப்பதும் சிரமம்.
எனவே, மகானின் வருகையை எதிர்பார்த்து அவர் குடி கொண்டிருக்கிற தற்காலிக கீற்றுக் கொட்டகை அறையையே ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருந்தார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. ‘மகானிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு எழும்பூர் சென்று ரயிலைப் பிடித்து விடலாம்‘ என்று காத்திருந்த பார்த்தசாரதி ஐயருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பெரியவாளுக்குப் பணிவிடை செய்கிற ஒரு சிப்பந்தி அருகே காணப்பட்டார். ‘இவரிடம் விஷயத்தைச் சொல்லிப் பார்க்கலாமே…‘ என்று அவரை அழைத்து, விவரம் கூறினார் பார்த்தசாரதி ஐயர்.
எழும்பூர் சென்று ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே அதற்கு ரிசர்வ் செய்து விட்டமையால், காலதாமதம் செய்யாமல் செல்ல வேண்டும் என்றும் அந்தச் சிப்பந்தியிடம் சொல்லி அனுப்பினார்.
ஏதேனும் அவசரம் என்றால், இதுபோல் தொண்டர்களிடம் தகவல் சொல்லி, மகா பெரியவாளிடம் தெரிவிப்பது வழக்கம். அவசரம் கருதி, மகானும் அவற்றுக்கு உரிய முக்கியம் கொடுப்பார்.
அந்த வகையில் பார்த்தசாரதி ஐயர் சொன்ன தகவல்களை உள்வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார் சிப்பந்தி. ஒரு சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும். உள்ளே போன வேகத்திலேயே சுவரில் அடித்த பந்து போல் வெளியே வந்தார்.
மகா பெரியவா தங்கி இருக்கிற கீற்றுக் கொட்டகை அறையையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி ஐயர், சிப்பந்தி வெளியே வருவது கண்டு முகம் மலர்ந்தார்.
சிப்பந்தியை நோக்கி இரண்டடிகள் எடுத்து வைத்து, “பெரியவா வெளியே வர்றாரா? என்ன சொன்னார்?” என்று கேட்டார் ஆர்வத்தை அடக்க முடியாமல்.
“நீங்க சொன்னதை அப்படியே பெரியவாகிட்ட போய்ச் சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுண்டார். பிறகு, ‘இன்னிக்குப் புறப்பட வேண்டாம். திருச்சிக்கு நாளைக்குப் போயிக்கலாம்னு பார்த்தசாரதி ஐயர்கிட்ட சொல்லிடு‘ன்னார். நீங்க கேட்டு அனுப்பினதுக்கு பெரியவாளோட பதிலைச் சொல்லிட்டேன்” என்ற சிப்பந்தி, அடுத்த வேலைக்காக எங்கோ நகர முற்பட்டார்.
– சிப்பந்தி சொன்னதைக் கேட்ட பார்த்தசாரதி ஐயருக்கு லேசான திகைப்பு. நகர இருந்தவரை ஜாடையால் தடுத்து நிறுத்தி, “டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டேன்னு பெரியவாகிட்ட சொன்னேளா?” என்று மெள்ள இழுத்தார்.
“அதையும் மறக்காம சொல்லிட்டேன். ‘ரிசர்வேஷன் செய்த பணம் நஷ்டமானாலும் பரவாயில்லைனு நான் சொன்னதா பார்த்தசாரதிகிட்ட சொல்லிடு‘னு என்னை அனுப்பி வெச்சார்” என்றார் அந்த சிப்பந்தி.
மகா பெரியவா தீர்மானமாகச் சொன்ன பிறகு, இனியும் திருச்சிக்குச் செல்வது பற்றி பார்த்தசாரதி ஐயரால் யோசிக்க முடியவில்லை.
தன் பக்தர்களுக்கு மகான் ஒரு விஷயத்தைச் சொன்னார் என்றால், அது உத்தரவு. அதை மீறக் கூடாது.
ஏனோ இன்று இரவு இங்கு தங்கச் சொல்கிறார்… அதற்கு உண்டான காரணத்தைத் தேடக் கூடாது என்று மெள்ள இயல்பு நிலைக்குத் திருப்பினார் பார்த்தசாரதி ஐயர்.
சற்று நேரத்தில் பெரியவா வெளியே வந்தார்.
மாலை வேளையில் மகான் நடத்துகிற சந்திரமௌளீஸ்வரர் பூஜையை அருகே அமர்ந்து தரிசித்தார்.
பூஜை முடிந்தபோது இரவு ஒன்பது மணி ஆகி விட்டது. எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார் பெரியவா.
தொலைவில் அமர்ந்து கொண்டிருந்த பார்த்தசாரதி ஐயருக்கு ஜாடை காண்பித்துத் தன் அருகே வரவழைத்தார். தன் கைப்பட பிரசாதம் தந்தார்.
“ரிசர்வேஷன் பண்ண பணம் போனால் பரவாயில்லை. நாளைக்கு சவுகரியமா திருச்சிக்குப் போகலாம். கவலைப்படாதேள். இப்ப நிம்மதியா ஓய்வு எடுங்கோ” என்று அவரை ஆசிர்வதித்து அனுப்பினார்.
பெரியவாளின் அருள் கிடைத்த சந்தோஷத்தில் உறங்குவதற்குச் சென்றார்.
மறுநாள் காலை பொழுது விடிந்தது.
திருச்சிக்கு எப்போது புறப்பட வேண்டும் என்று தீர்மானிக்கவில்லை.
நீராடினார். ஸ்ரீமடத்தின் முகாமிலேயே காலை ஆகாரத்தை முடித்தார்.
புறப்படுவதற்கு முன் மகானை மீண்டும் ஒரு முறை தரிசிக்க வேண்டும் என்று காத்திருந்தார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.
அப்போதுதான் ஸ்ரீமடத்தின் முகாமுக்கு சென்னையில் இருந்து வந்த ஒரு பக்தர் மூலம் அதிர்ச்சிகரமான அந்த செய்தி தெரிந்தது.
செய்தியைக் கேட்டதும் பார்த்தசாரதி ஐயரின் முகம் இருண்டு போனது.
அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவரது கண்கள் திடீரென இருண்டன. கைகள் பதறின. உடல் பதறியது.
அப்படி என்ன செய்தியை சென்னையில் இருந்து வந்த பக்தர் கொண்டு வந்தார் என்கிறீர்களா?
‘எழும்பூரில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட ரயில் அரியலூர் அருகே கவிழ்ந்தது. பாலம் உடைந்த சோகம். பலரும் பலி.‘
நிமிடங்கள் செல்லச் செல்ல ரயில் விபத்து குறித்தான செய்திகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன பார்த்தசாரதி ஐயருக்கு.
எழும்பூரில் இருந்து நேற்று இரவு 9.50 மணிக்குப் புறப்பட்ட ரயிலுக்கு என்னவாயிற்று?
சோகமான அந்த விபத்து குறித்தான தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.
1956-ஆம் வருடம் நவம்பர் மாதம் 23-ஆம் தேதி அன்று ஏராளமான பயணிகளுடன் திருச்சி வழியே தூத்துக்குடி செல்லும் ரயில் எழும்பூர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில்.
மொத்தம் பதின்மூன்று பெட்டிகள். அதில் ஒரு பெட்டி விருத்தாசலத்தில் கழற்றி விடப்படும். அதில் சேலம் செல்கிற பயணிகள் காணப்படுவார்கள். சேலம் செல்கிற ரயிலுடன் இந்த ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு விடும்.
விருத்தாசலத்தில் இருந்து பன்னிரண்டு பெட்டிகளுடன் திருச்சியை நோக்கி ரயில் புறப்பட்டது.
அரியலூரை அடைந்தது. அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை.
அரியலூரில் இருந்து கிளம்புகிற இந்த ரயிலுக்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பது தெரியாதது, மிகப் பெரிய சோகம்.
அரியலூரில் இருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் கல்லகம் என்கிற ரயில் நிலையம். அரியலூர் தாண்டியதும் மருதையாறு என்கிற காட்டாறு குறுக்கிடும். அதைக் கடப்பதற்கு ஒரு பாலம் உண்டு.
நான்கு நாட்கள் அந்தப் பகுதியில் தொடர் மழை. முதல் நாள் இரவு பெருமழை பெய்ததால், மருதையாற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது. இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடிய நீருக்கு எல்லை என்பதே தெரியவில்லை.
இரவு நேரத்திலும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்த காரணத்தால், நீர்மட்டம் பாலத்தைத் தொட்டபடி உயர்ந்து காணப்பட்டது. தவிர, ரயில்வே பாலத்தையும் அரித்திருந்தது. ரயில் பாலத்தை ஒட்டி இருந்த கரை சுமார் இருபதடி நீளத்துக்கு வெள்ளத்தால் அரிக்கப்பட்டிருந்தது.
ஆக, ரயில் கடக்க வேண்டிய மருதையாற்றுப் பாலம், பெரு வெள்ளம் காரணமாகவும் உயர்ந்து வரும் நீர்மட்டம் காரணமாகவும் பலம் இழந்திருந்தது. ரயில் கடக்க வேண்டிய பாலத்துக்கு ஏற்பட்ட சோக கதி ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்குச் செல்லவில்லை.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் – இந்த ரயிலுக்கு முன்பு செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் கடந்து விட்டன. தூத்துக்குடி ரயிலுக்கென்றே இந்த சோகம் காத்துக் கொண்டிருந்தது.
விளைவு – அதிகாலை ஐந்தரை மணியளவில் பாலத்தை ரயில் கடக்கின்றபோது தனது பலத்தை முற்றிலும் இழந்து விட்ட அந்த பாலம் இடிந்து ரயில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக மருதையாற்றோடு கலந்தன. பன்னிரண்டு பெட்டிகளுள் எட்டுப் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் சரிய… எஞ்சிய நான்கு பெட்டிகள் மட்டும் தப்பிப் பிழைத்தன.
ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் இறந்தனர். 110 பேர் காயமடைந்தனர். சுமார் 200 பேர் கதி என்னவென்றே தெரியவில்லை.
உறக்கத்தில் இருந்தவர்கள் கண் விழித்தபோது அரங்கேறிய இந்த சோகத்தை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. இதில் தப்பிப் பிழைத்தவர்களும் உண்டு. மீட்பு ரயில் வந்து இவர்களை மீட்டது.
ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்.
இந்த விபத்து குறித்த செய்தி, நாளிதழ்களில் பின்னர் விரிவாக வந்திருந்தது.
விபத்து குறித்து அடுத்தடுத்துப் பல செய்தியைக் கேட்ட மறு கணம் “பெரியவா… பெரியவா…” என்று கதறிக் கொண்டு, மகான் இருக்கிற இடம் நோக்கி ஓடினார் பார்த்தசாரதி ஐயர்.
பரப்பிரம்ம சொரூபமாக வீற்றிருந்தார் மகான்.
கண்களில் பெருகும் நீருடன் அவரது திருச்சந்நிதியில் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார்.
முந்தைய தினம் இரவு இதே ரயிலில் புறப்படுவதற்கு உத்தரவு கொடுக்காமல் ‘ரிசர்வேஷன் பணம் போனாலும் போகிறது… நீ போகாமல் இருக்க வேண்டும்‘ என்பதைச் சொல்லாமல் சொல்லித் தன்னைக் காப்பாற்றிய மகானை கண்ணீர் பெருகக் கைகளைக் கூப்பியபடி ஏறெடுத்துப் பார்த்தார்.
தனது வலக் கரத்தை உயர்த்தி ஒரு ஆசிர்வதித்தார் மகான்.
பார்த்தசாரதி ஐயருக்கு ஏற்பட்ட படபடப்பு அன்றைய தினம் முழுக்க அடங்கவில்லை.
அன்றும் அங்கேயே தங்கி மகானது தரிசனத்தில் திளைத்து அடுத்த நாள்தான் திருச்சிக்குப் புறப்பட்டார்.
தன் ஆயுட்காலம் வரை மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்தார்.