‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு‘ என்பது ஆன்றோர்கள் அருளிய இறை வாக்கு.
இதற்கு என்ன பொருள்?
சமூகத்தில் கஷ்டப்படுகிற மக்களுக்கு நம்மால் இயன்ற அளவில் ஏதேனும் தொண்டு செய்தால், அது இறைவனுக்கே செய்வது போல் ஆகும்.
அப்படிப்பட்ட தொண்டினால் பலன் பெற்ற கஷ்டப்படுகிற மக்களின் முகத்தில் – அதாவது ஏழையின் முகத்தில் ஒரு புன்னகையைக் காணலாம். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்‘ என்கிறோமே, அது இதுதான்!
ஆம்! உணவுக்கும், இன்ன பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஏங்குகிற ஏழைகளுக்கு உதவுவதும் உண்மையான ஒரு பக்தி. இறைவனுக்குச் செய்யும் சேவை.
இதனால்தான் ஆலயங்கள் போன்ற வழிபாட்டு இடங்களில் அன்னதானங்களை மேற்கொள்கிறோம்.
முதாயத்தில் வசதி வாய்ப்புகள் நிறைந்த தனவந்தர்கள் தங்கள் பிறந்த நாள், மண நாள், முன்னோர்களின் நினைவு நாள் போன்றவற்றின்போது இயலாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்குவதும் இப்படிப்பட்ட ஒரு தொண்டுதான்!
இப்படிப்பட்ட தானங்கள்தான் ஒருவருக்குப் புண்ணியத்தைத் தேடித் தரும். அவரது கடைசி காலத்தில் ஒரு நற்கதியையும் – அதாவது மீண்டும் பிறப்பில்லா பெருநிலையைப் பெற்றுத் தரும்.
இயல்பாகவே மனிதர்களுக்கு இத்தகைய நல்ல குணம் வாய்க்க வேண்டும். இது இறையருளால் மட்டுமே கை கூடும். நற்சிந்தனைகள், முன்னோர்கள் செய்த புண்ணியம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் இத்தகைய குணங்களை ஒருவர் பெற முடியும்!
கும்பகோணத்தில் ஒரு டாக்டர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் – எம்.கே. சுப்ரமண்யன். ரொம்பவும் கைராசிக்காரர். தொழிலுக்கு வந்த புதிதிலேயே பலராலும் பாராட்டப் பெற்றார். தனது நேர்மையான குணத்தால் நாற்பது வயதுக்குள் ‘நல்ல டாக்டர்‘ என்கிற பெயரைப் பெற்றார். அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அது தங்களுக்குப் பரிபூரண தேக ஆரோக்கியத்தை வழங்கும் என்பது உள்ளூர்வாசிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
தனக்குக் கிடைத்த நற்பெயரைக் கொண்டு கும்பகோணத்தில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நிறுவினார். நேர்மையுடனும், தரத்துடனும் மருத்துவமனையை நடத்தி வந்தார்.
டாக்டர் சுப்ரமண்யனின் முன்னோர்கள், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். அந்த வகையில் மகா பெரியவாளைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தார் டாக்டர்.
1945-ஆம் ஆண்டு முதல் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் ஆனார் டாக்டர். மகானது கனிவான பார்வை, அன்பான உபசரிப்பு இவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர், அவரையே கண் கண்ட தெய்வமாகக் கொண்டு வாழத் தொடங்கினார்.
மகா பெரியவா தமிழகத்தில் எங்கு யாத்திரை செய்து கொண்டிருந்தாலும், அங்கே சென்று மகானைத் தரிசிப்பதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். டாக்டர் என்ற முறையில் காஞ்சி ஸ்ரீமடத்தில் உள்ள பலருக்கும் பரிச்சயமானார்.
மகா பெரியவாளை சில ஊர்களில் தரிசிக்கிறபோது அவரது உடல்நிலையைப் பரிசோதிக்கிற பாக்கியத்தையும் டாக்டர் சுப்ரமண்யன் பெற்றார். மகா பெரியவாளின் உத்தரவின் பேரிலும், ஸ்ரீமடத்தில் உள்ள சில மூத்த நிர்வாகஸ்தர்களின் வேண்டுகோள் பேரிலும் இத்தகைய சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வார்.
மருத்துவர் என்ற முறையில் தனது சோதனை முடிவுகளையும், ‘இப்படி இப்படி மகான் இருந்தால் நல்லது‘ என்கிற மாதிரி சில ஆலோசனைகளையும் மகா பெரியவாளுக்கு வழங்குவது டாக்டர் சுப்ரமண்யனின் வழக்கம்.
1961-1962-ஆம் ஆண்டுகளில் காரைக்குடிக்கு அருகே உள்ள இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார் மகா பெரியவா. பல மாதங்கள் அங்கே தொடர்ந்து தங்கி இருந்தார் மகான். எனவே, மாதா மாதம் இரு முறை கும்பகோணத்தில் இருந்து இளையாத்தங்குடிக்குச் சென்று மகானைத் தரிசித்து அருளாசிகள் பெற்று வந்தார் டாக்டர்.
மருத்துவமனை தொழிலுக்குப் பாதிப்பு இல்லாத ஞாயிற்றுக்கிழமையாகப் பார்த்து மகா பெரியவா தரிசனத்துக்கு இளையாத்தங்குடி செல்வார்.
பெரும்பாலும் ஒரு ஞாயிறு விட்டு அடுத்த ஞாயிறு என்று இளையாத்தங்குடி பயணிப்பதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார், அந்தக் காலகட்டத்தில்! மகானுக்குக் காணிக்கையாக வழங்குவதற்கு எண்ணற்ற பழங்களை வாங்கிச் செல்வார்.
சந்நியாசிகளையோ, துறவிகளையோ தரிசிக்கச் செல்கிறபோது வெறுங்கையுடன் செல்லக் கூடாது. காணிக்கையாக நம்மால் முடிந்தவற்றை கொண்டு சென்று அர்ப்பணிக்க வேண்டும்.
இளையாத்தங்குடியில் முகாமிட்டிருக்கிற மகானைத் தரிசிக்கக் கும்பகோணத்தில் இருந்து அதிகாலைப் பொழுதில் காரில் கிளம்பி விடுவார் டாக்டர்.
குடும்பத்துடனோ அல்லது தனது நண்பர்களுடனோ செல்வார். மாலை 4.30 மணிவரை மகானது திருப்பார்வையில் இருப்பார். அதன் பின் அவரிடம் உத்தரவு பெற்று மாலை புறப்பட்டு இரவுக்குள் கும்பகோணம் வந்து விடுவார்.
டாக்டர் சுப்ரமண்யனைப் பார்த்து விட்டாலே, மகா பெரியவாளுக்கு ஒரு பாசம் தொற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு அவர் மீது கரிசனம். தன் அருகே அவரை அமர வைத்துக் கொண்டு பல விஷயங்கள் குறித்து விவாதிப்பார்.
‘மகானுக்கு அருகே அமர்ந்து கொண்டு பல மணி நேரம் அவருடன் பேசுவதற்கு நமக்கு ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறதே‘ என்று மிகவும் பூரித்துப் போவார் டாக்டர்.
1962-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மகா பெரியவா தரிசனத்துக்காகத் தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு போனார் டாக்டர்.
வழக்கம்போல் பழங்களையும் பெருமளவில் சுமந்து சென்றார். பெரிய பெரிய கூடைகளில் ஆப்பிள், ஆரஞ்சு, மலை வாழைப்பழம், திராட்சை போன்றவற்றைத் தாராளமாக எடுத்துச் சென்றார்.
இளையாத்தங்குடியில் பழைமையான பெரிய விடுதிக் கட்டடம் ஒன்றில் மகா பெரியவா தங்கி இருந்தார்.
அவர் இருந்த அறைக்கே சென்று, தான் கொண்டு வந்திருந்த பழங்களை சிரத்தையுடன் சமர்ப்பித்தார் டாக்டர். நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்து மகானுக்கு நமஸ்காரம் செய்தார்.
அவருடன் வந்திருந்த நண்பர்களும் மகானை நமஸ்கரித்து, கைகளைக் கூப்பிய வண்ணம் காணப்பட்டனர்.
எல்லோரையும் பார்த்து விட்டுப் புன்னகையுடன் ஆசிர்வதித்தார்.
பிறகு டாக்டரை ஏறிட்டு, “வழக்கம்போல சாயங்காலம்தானே கும்மோணத்துக்குப் பொறப்பட்டுப் போறதா இருக்கே?” என்று கேட்டார் மகான்.
“ஆமா பெரியவா” என்று மகானது கருத்தை ஆமோதித்தார்.
“கொஞ்சம் டயர்டா இருப்பே… சித்த நேரம் ஆசுவாசப்படுத்திக்கோ. நான் ஸ்நானம் முடிச்சுட்டு வந்து பூஜையை ஆரம்பிக்கணும். உன் சவுகரியம் போல் பூஜைக்கு வந்து உக்காரு” என்று டாக்டரிடம் சொன்னார் பெரியவா. பிறகு, தான் தங்கி இருந்த கட்டடத்தின் பின்பக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் மகான்.
தன் அறையில் இருந்து நீராடுவதற்கு மகா பெரியவா சென்ற பின், அங்கிருந்து வெளியே வந்தார் டாக்டர் சுப்ரமண்யன்.
அங்கே மேலூர் ராமச்சந்திர ஐயர் என்பவர் நின்று கொண்டிருந்தார். மகானுக்கு அத்யந்த கைங்கர்யம் செய்து வருபவர் இவர்.
பெரியவாளின் முகக் குறிப்பையும், கண்பார்வையையும், விரலசைவையும் வைத்து அவருக்குக் கைங்கர்யம் செய்த குறிப்பிட்ட சில தொண்டர்களுள் மேலூர் ராமச்சந்திர ஐயரும் ஒருவர். பெரியவாளைக் கண் கண்ட தெய்வமாகத் தரிசித்து வந்தவர் இவர்.
ராமச்சந்திர ஐயரைப் பார்த்ததும், இரு கைகளையும் குவித்து அவரை பவ்யமாக வணங்கினார் டாக்டர்.
பிறகு ராமச்சந்திர ஐயரின் அருகில் சென்று, மகானின் அறைக்குள்ளே தான் வைத்த பழக் கூடைகளை விரல்களால் சுட்டிக் காட்டினார். “இந்தப் பழங்களை எல்லாம் ஜாக்கிரதையா உள்ளே எடுத்து வெச்சுக்குங்கோ. எல்லாம் பெரியவாளோட உபயோகத்துக்குப் பயன்படணும். மடத்துல இருக்கிறவா, மடத்துக்கு வர்றவா எல்லாம் ஆளுக்கு ஒண்ணு, ரெண்டு எடுத்துண்டு போயிடப் போறா” என்று சொன்னார் உரத்த குரலில்.
தான் அர்ப்பணிக்கின்ற பொருட்களை மகான் சாப்பிட வேண்டும்… தன் உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஸ்ரீமடத்துக்கு வரும் எல்லா பக்தருக்குமே உண்டு. பக்தனுக்கு இருக்கின்ற இந்த ஆசையில் தப்பில்லைதான்! என்றாலும், ‘பலரும் அர்ப்பணிக்கின்ற பழங்களையும், இன்ன பிற ஆகாரங்களையும் ஒரு மகான் சாப்பிட்டால் என்னத்துக்கு ஆவது?‘ என்கிற சிந்தனையும் பக்தனுக்கு இருக்க வேண்டும்.
கும்பகோணம் டாக்டர் சுப்ரமண்யனைப் பற்றி ராமச்சந்திர ஐயருக்கு நன்றாகவே தெரியும். மகா பெரியவா மீது தனக்குள்ள பக்தியின் காரணமாக இப்படிச் சொல்கிறார் என்று சந்தோஷத்துடன் புன்னகைத்து, ‘அப்படியே ஆகட்டும்‘ என்பது போல் தன் தலையை அசைத்துப் பதில் சொன்னார்.
இங்கே குரல் உயர்த்தி டாக்டர் சொன்ன இந்த விஷயம், பின் பக்கமாக நீராடச் சென்ற மகா பெரியவாளுக்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.
கேட்கக் கூடிய தொலைவு இல்லை என்றாலும், கேட்கக் கூடிய உச்சபட்ச குரலில் சொன்னார் டாக்டர்.
அதன் பின் மேலூர் ராமச்சந்திர ஐயரிடம் விடை பெற்று, மகா பெரியவா நடத்தப் போகிற சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தரிசிப்பதற்காக வந்து அமர்ந்தார் டாக்டர். பக்தி சிரத்தையோடு முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.
சற்று நேரத்தில் மகா பெரியவா வந்தார்.
மகா பெரியவா நடத்துகிற சந்திரமௌளீஸ்வரர் பூஜையைத் தரிசிக்கக் காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள். அந்த அளவுக்கு அமைந்திருக்கும் மகானது அர்ப்பணிப்பு.
ஒரு சில மணி நேரம் கழித்து பூஜை முடிந்தது. வந்திருந்த பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் தந்தார் பெரியவா.
பிறகு, சாப்பிடச் சென்றார்கள் பக்தர்கள். கூட்டத்தோடு கலந்து உணவுக்கூடத்துக்குச் சென்றார் டாக்டர்.
‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு‘ என்பார்கள். டாக்டருக்கும் இருக்காதா?!
தான் தங்கி இருக்கிற இடத்துக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தார். சிறிது நேரம்தான் உறங்கி இருப்பார். பொசுக்கென்று கண் விழித்தார்.
நேரத்தைப் பார்த்தார். மதியம் கரைந்து மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. மணி 3.45.
சட்டென்று எழுந்தார். ‘மாலை 5.30 மணிக்குள்ளாவது இங்கிருந்து கிளம்பினால்தானே கும்பகோணம் போய்ச் சேர முடியும்‘ என்று தீர்மானித்தவர், மகா பெரியவா தரிசனத்துக்கு ஆயத்தமாகத் துவங்கினார். ஓய்வில் இருந்த நண்பர்களையும் கிளப்பினார்.
மகான் வீற்றிருக்கும் அந்த அறைக்குச் சென்றார், நண்பர்களையும் அழைத்துக் கொண்டு.
பெரியவா இருந்த அறையில் ஒரு ஜன்னல் உண்டு.
ஜன்னலுக்கு அருகே தன் உடலைக் குறுக்கியபடி அமர்ந்திருந்தார் பெரியவா.
இல்லத்தின் கதவு – பாதுகாப்புக்கு.
ஜன்னல் – வேடிக்கைக்கு!
கிராமங்களில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு வெளியே வீதியில் செல்கிறவரை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். பெரும்பாலான வீடுகளில் அந்த ஜன்னல், தரைத் தளத்தை ஒட்டியே அமைந்திருக்கும்.
தரையிலேயே கால்களைக் குறுக்கிய வண்ணம் அமர்ந்து வீதியை வேடிக்கை பார்க்க வசதியாக இருக்கும்.
கிட்டத்தட்ட மகா பெரியவாளும் அப்படித்தான் அமர்ந்திருந்தார்.
மகானின் பார்வை வெளியே நிலை குத்திக் காணப்பட்டது.
மகான் ஏகாந்தமாக வீற்றிருக்கும் அறையின் வாயில் அருகே நின்றார் டாக்டர். ஜன்னல் அருகே பரப்பிரம்ம சொரூபம் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், அருகே செல்லலாமா… அவருக்குத் தொந்தரவாக இருக்குமா என்கிற யோசனையில் வெளியிலேயே நின்றிருந்தார்.
அறைக்கு வெளியே டாக்டர் சுப்ரமண்யனைப் பார்த்ததும் ஜாடை காட்டி அவரை உள்ளே வருமாறு அழைத்தார் பெரியவா. தன் அருகே அமருமாறு சொன்னார். உடன் வந்த நண்பர்களும் டாக்டர் அருகே அமர்ந்து கொண்டார்கள்.
மகானுக்குக் கைங்கர்யம் செய்யும் பணியில் இரண்டு தொண்டர்கள் மட்டுமே அந்த அறையில் காணப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவரை மகா பெரியவா சொடக்குப் போட்டு அழைத்தார். தொண்டர் ஓடி வந்தார். வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.
“மேலூர் மாமா தன்னோட இருப்பிடத்துல ஓய்வு எடுத்துண்டு இருப்பார். அவர்கிட்ட போ. அசந்து தூங்கிண்டு இருந்தா அவரைத் தொந்தரவு பண்ணாதே. அப்படியே திரும்பி வந்துடு. ஒருவேளை முழிச்சிண்டு இருந்தா, இன்னிக்குக் கார்த்தால கும்மோணம் டாக்டர் கொண்டு வந்து குடுத்த பழக் கூடையை நான் கேட்டேன்னு சொல்லி எல்லாக் கூடைகளையும் இங்கே எடுத்துண்டு வந்துடு” என்று உத்தரவிட்டார்.
தொண்டரிடம் மகா பெரியவா சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட டாக்டர் சுப்ரமண்யனுக்குப் பரம சந்தோஷம். ‘மகா பெரியவாளே எல்லா பழக் கூடைகளையும் கொண்டு வரச் சொல்லி உத்தரவிடுகிறார்… அப்படி என்றால், தன் முன்னிலையில் இதில் இருந்து ஒரு சில பழங்களை மகானே சாப்பிடப் போகிறார் போலிருக்கிறது‘ என்று டாக்டர் முகத்தில் பிரகாசம். விழிகளில் நீர் பெருக, மகானைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் காணப்பட்டார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் பழக் கூடைகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து அடுக்கினார் தொண்டர்.
ஆரஞ்சு, ஆப்பிள், மலை வாழைப்பழங்கள் அடங்கிய கூடைகள் மகானுக்கு முன்னால் காணப்பட்டன.
ஒவ்வொரு கூடையையும் தன் பார்வையால் ஆராய்ந்தார் மகான்.
பெரியவாளின் தீர்க்க தரிசனப் பார்வை பழக் கூடைகளின் மீது விழுந்ததே டாக்டருக்குத் திருப்தியாக இருந்தது.
முதலில் ஆரஞ்சுப் பழக் கூடைக்குள் கை விட்டு, இரண்டு பழங்களை எடுத்தார் பெரியவா. தனக்கு முன்னால் இருந்த ஒரு மூங்கில் தட்டில் அதை வைத்தார். அதே போல் ஆப்பிள் கூடைக்குள் கை விட்டு இரண்டு ஆப்பிள் பழங்களை எடுத்து வைத்தார். மலை வாழைப்பழங்கள் அடங்கிய கூடையில் இருந்து ஒரு சீப்பு பழங்களை எடுத்து வைத்தார்.
குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பழங்களை மகா பெரியவா எடுத்து வைத்ததற்கு என்ன காரணம் என்பது ஓரளவு புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர்.
‘உலகத்தைக் காத்து அருள்கிற இந்த மகானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்… அவரே கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்‘ என்கிற ஆசையில் – நல்ல எண்ணத்தில்தான் இவற்றைக் கொண்டு வந்திருந்தார் டாக்டர்.
‘சரி, பெரியவா அடுத்து என்ன பண்ணப் போகிறார் என்று பார்ப்போம்‘ எனக் கண்ணும் கருத்துமானார் டாக்டர்.
ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன.
தான் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
டாக்டர் சுப்ரமண்யன், அவருடன் வந்த நண்பர்கள், கைங்கர்யம் செய்வதற்கு இரண்டு தொண்டர்கள் தவிர அங்கு வேறு யாருமே இல்லை.
கடிகாரத்தில் சரியாக மணி 4 அடித்தது.
மகா பெரியவா ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தார்.
டாக்டருக்குக் குழப்பம். ‘கடந்த ஒரு சில நிமிடங்களாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் மகா பெரியவா. சுவர்க் கடிகாரத்தையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். மணி சரியாக நாலு அடித்ததும் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறார். யாரை எதிர்பார்க்கிறார்? எவரேனும் ஸ்ரீமடத்தின் முகாமுக்கு வரப் போகிறார்களா? வரப் போவதாகப் பெரியவாளுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார்களா?‘
ன்னலுக்கு வெளியே உள்ள சாலையை விட்டு மகா பெரியவா பார்வை வேறு எங்கும் திரும்பவில்லை.
திடீரென்று பெரியவா முகத்தில் ஒரு திருப்தி. பரவசம்.
தொண்டர் கொண்டு வந்து வைத்த பழக் கூடைகளில் ஆப்பிள்கள் நிரம்பிய கூடையைத் தன் பக்கம் சற்றே இழுத்துக் கொண்டார். அத்தனையும் மகானுக்குக் காணிக்கையாக டாக்டர் கொண்டு வந்தவை.
ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்தார். தன் கையில் வைத்துக் கொண்டார். அதை இப்படியும் அப்படியும் உருட்டிக் கொண்டே ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். தப்பித் தவறிக்கூடத் தன் கவனத்தையும் பார்வையையும் அந்த சாலையை விட்டு எடுக்கவில்லை.
ஒரு சில விநாடிகளுக்குப் பின் ஜன்னல் பக்கமாகத் தென்பட்ட ஓர் ஒற்றையடிப் பாதை வழியே சில குறவர்கள் நடந்து செல்வதைக் கண்டார் பெரியவா. மகானின் முகம் பிரகாசமானது.
ஜன்னல் இருக்கின்ற இடத்தில் இருந்து சற்றே விலகிச் செல்கிற மாதிரியான அமைப்பு அந்த ஒற்றையடிப் பாதை. அந்தப் பாதையில் நடந்து செல்பவர்கள், இந்த ஜன்னலைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், ஜன்னலுக்குள் அமர்ந்திருக்கிறவர், ஒற்றையடிப் பாதையைக் கவனிக்க முடியும்.
ஜன்னலில் இருந்து விலகிக் காணப்படுகிற அந்த ஒற்றையடிப் பாதை வழியே சில குறவர்கள் ஏதோ தங்கள் பாஷையில் உற்சாகமாகப் பேசியபடி சென்று கொண்டிருப்பதை மகா பெரியவா கவனித்தார்.
அவ்வளவுதான்… அடுத்த கணம் தன் கையில் அதுவரை வைத்திருந்த ஆப்பிள் பழத்தை ஜன்னல் வழியே ஏதோ ஒரு இலக்கைக் குறிவைத்து வீசி எறிந்தார்.
வீசப்பட்ட ஆப்பிள் மண் தரையில் விழுந்து உருண்டு ஓடியது. ஏதோ ஒன்று தடதடவென்று சாலையில் ஓடுவதைக் கவனித்த ஒரு குறவர் பாய்ந்து சென்று அதை எடுத்தார். ‘ஐ… ஆப்பிள்‘ என வியந்தார். பழத்தை முன்னும் பின்னும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
ஏதோ காணக் கிடைக்காத – பெறுவதற்கு அரிய ஒரு பொருள் தனக்குக் கிடைத்தது போல் அந்தக் குறவர் மகிழ்ந்தார். அவரது முகத்தில் அந்த சந்தோஷம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
தங்களுடன் வந்த ஒரு குறவர் கையில் திடீரென ஆப்பிள் பழம் இருப்பதைப் பார்த்த மற்ற குறவர்கள் முகத்தில் ஒரு ஏக்கமும் ஏமாற்றமும் தென்பட்டன.
பழம் கிடைக்காத மற்ற குறவர்கள் எங்கிருந்து இந்த ஆப்பிள் வீசப்பட்டது… இதுபோல் தங்களுக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் விதமாகச் சுற்றும்முற்றும் பார்வையைத் திருப்பினார்கள். சாலையின் பல பக்கங்களிலும் தேடினார்கள்.
ஏக்கத்துடன் இங்குமங்கும் பார்வையைச் சுழற்றித் தேடும் குறவர்களைப் பார்த்த மகான் தன் பிஞ்சுக் கையை வெளியே நீட்டி, ‘நான் இங்கே இருக்கிறேன்… இங்கிருந்துதான் ஆப்பிள் வீசப்பட்டது‘ என்பது போல் ஜாடை காண்பித்தார்.
அவ்வளவுதான்… அடுத்த கணம் மற்ற குறவர்கள் அனைவரும் ஜன்னல் அருகே கூடி, “சாமீயோவ்… சாமீயோவ்… எங்களுக்கும் குடுங்க சாமீயோவ்” என்று கூடி விட்டார்கள்.
அவர்களைப் பார்த்து ஜன்னலுக்கு உள்ளிருந்தவாறு கையை மேலே தூக்கி ஆசி வழங்கினார் பெரியவா.
பிறகு, தன் அருகே இருந்த தொண்டர் ஒருவரைக் கூப்பிட்டார். ஓடி வந்தார்.
வெளியே நின்று கொண்டிருக்கிற குறவர்கள் அனைவரும், பழங்கள் தங்களுக்குக் கிடைக்கப் போகின்றன என்று ஆவலுடன் காத்திருந்தனர்.
தொண்டரிடம், “இந்தப் பழங்கள் எல்லாம் எடுத்து வெளியே நிக்கற இவாகிட்ட ஒவ்வொண்ணா குடு” என்று உத்தரவிட்டார்.
இந்த வார்த்தைகளை மகா பெரியவா திருவாயில் இருந்து கேட்டதும், வெளியே நிற்கிற குறவர்கள் மத்தியில் சந்தோஷமும் உற்சாகமும் தலைதூக்கின.
அவ்வளவு ஏன்… டாக்டருக்கும் ஒரு வித சந்தோஷம் தொற்றிக் கொண்டது. அவரும் நண்பர்களும் அடுத்து நடக்கப் போகிற காட்சிகளைப் பார்க்க வேண்டி ஆவலானார்கள்.
கூடையில் இருக்கிற ஒவ்வொரு பழத்தையும் எடுத்து ஜன்னல் வழியே கொடுக்க ஆரம்பித்தார் தொண்டர்.
மனிதர்களைப் போல் அங்கே போட்டா போட்டி இல்லை. ‘நான் முந்தி… நீ முந்தி‘ என்கிற ஆப்பிளைகளைப் பெறுவதற்கு அடிதடி இல்லை. ஒவ்வொரு குறவரும் சண்டை போடாமல் வரிசையில் வந்து பெற்றுக் கொண்டார்கள். கிடைக்காதவர்களுக்கு மற்றவர்களே வாங்கி வாங்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆப்பிள் முடிந்து, ஆரஞ்சுக் கூடை எடுக்கப்பட்டது, மகா பெரியவா உத்தரவின் பேரில். அடுத்து மலை வாழைப்பழமும்!
குறவர்கள் முகத்தில் தென்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
பழங்களைப் பெற்ற ஒவ்வொரு குறவரும் மகா பெரியவாளை நன்றியுடன் பார்த்துக் கும்பிட்டு விட்டு, சந்தோஷத்துடன் அங்கிருந்து நகர்ந்தனர்.
மகா பெரியவாளுக்கு அருகே அமர்ந்து இந்தக் காட்சிகள் அனைத்தையும் வைத்த கண் வாங்காமல் அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்
டாக்டர் சுப்ரமண்யனும், அவரது நண்பர்களும்.
மகா பெரியவா ஆசிர்வாதத்துடன் பிரசாதமாகப் பழங்களைப் பெற்றுக் கொண்ட குறவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சாலையில் நடந்து செல்வதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர். தான் கொண்டு வந்து சேர்த்த பழங்களால் இப்படியும் ஒரு ஆனந்தத்தைத் தனக்குத் தர முடியுமா என்று வியந்தார்.
தரமான பழங்களைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு குறவர் முகத்திலும் கோடி ரூபாயைப் பெற்றது போல் ஓர் ஆனந்தம். மகா பெரியவா கொடுத்த அந்தப் பழத்தைப் பற்றித் தங்கள் பாஷையில் உற்சாகமாகப் பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.
‘மகா பெரியவாளே இத்தனை பழங்களையும் சாப்பிட வேண்டும்‘ என்கிற ஆசையுடனும் வேண்டுகோளுடனும் கொண்டு வந்து சேர்த்த டாக்டரின் முகத்தில் இப்போது நெகிழ்ச்சி. கண்களில் நீர் கோர்த்தது. இத்தனைக்கும் இந்தப் பழங்களில் எதையும் மகா பெரியவா இன்னும் சாப்பிடவே இல்லை.
தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பவன் மனிதன்.
மற்றவர்கள் வயிறு நிறைந்தாலே, அது தன் வயிறும் நிறைந்தது போலத்தான் என்று நினைப்பவர்கள் மகான்கள். எனவே, மகான்களும் பசியும் பட்டினியும் ஒரு பொருட்டல்ல. பல வேளைகளில் அவர்கள் உபவாசம்தான்!
மனிதர்களுக்கு வருகிற வியாதிகளில் மிகவும் கொடியது – பசி.
ஆம்! பசியும் ஒரு விதமான வியாதியே! ஆனால், இந்த வியாதி மோசமானது. இந்த வியாதிக்கு மருந்தகங்களில் தீர்வு கிடைக்காது.
பசி என்கிற வியாதியைப் போக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே மருந்து – உணவு.
பசியோடு இருப்பவனுக்கு உடனடியாக உணவு தர வேண்டும். அதுவே மருந்து.
ஆனால், பசிக்கின்ற வேளையில் அந்த உணவு கிடைக்காமல் எத்தனையோ ஏழைகள் உலகின் பல பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் எல்லோருக்குமே படி அளக்கிறான் என்றாலும், சிலருக்கு சிரமத்தையும் கொடுத்து விட்டு, அதன் பிறகே படியையும் அளக்கிறான்.
அந்த வகையில் சமூகத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலுக்கும் செல்லாமல், பாசி மணி – ஊசி மணி விற்பதையே முழு நேரப் பணியாகக் கொண்ட இந்தக் குறவர்களுக்கு சர்வேஸ்வரன் சொரூபத்தில் படி அளக்கிறார் மகா பெரியவா. அதை வாங்கிச் செல்கிற குறவர்களின் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம்!
எல்லோருக்கும் பழங்களை வழங்கிக் கடைசியில் கூடையில் பார்த்தால், எப்படியோ மூன்றே மூன்று ஆப்பிள்கள் மட்டும் எஞ்சி இருந்தன. இத்தனைக்கும் ஆப்பிள்கள் பூர்த்தியான பிறகே ஆரஞ்சும், மலை வாழைப்பழமும் அடுத்தடுத்து விநியோகிக்கப்பட்டன. ஆனால், இந்த மூன்று ஆப்பிள்கள் மட்டும் எப்படிக் கூடையில் தங்கின?!
இங்கே நடக்கிற ஒவ்வொரு சம்பவத்தையும் – திறந்த விழிகளை மூடாமல் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார் டாக்டர்.
குறவர்கள் அனைவரும் ஜன்னலுக்கு வெளியே இருந்து புறப்பட்டுப் போய் விட்டனர். ஜன்னல் வழியே சாலையை சில விநாடிகள் உற்றுப் பார்த்த மகா பெரியவா அதன் பின் டாக்டரைப் பார்த்தார். பிறகு, “கார்த்தால கும்மோணத்துலேர்ந்து நீ இங்கே (இளையாத்தங்குடி) வந்தவுடனே, வாங்கிண்டு வந்த பழக் கூடைகளை எல்லாம் கொண்டு வந்து வெச்சே… அப்புறம் மேலூர் ராமச்சந்திர ஐயரைப் பார்த்து நீ சொன்ன சமாசாரம் என் காதிலும் விழுந்தது.
ஆசையோடு கூடை கூடையா நீ வாங்கிண்டு வந்த பழங்கள் எல்லாவற்றையும் நானே சாப்பிடணும்னு நீ ஆசைப்பட்டே… எல்லாப் பழத்தையும் ஒரு நாள், ரெண்டு நாள்ல சாப்பிட்டுத் தீர்க்க முடியுமா? சாதாரண மனுஷனுக்குக்கூட அது சாத்தியமில்லை. இந்த நிலைல எனக்கு சாத்தியமா?
இது உனக்கே தெரிஞ்சாலும், மனசுக்குள்ள ஒரு ஆசை. நாம கொண்டு போற எல்லா பழத்தையும் பெரியவாளே சுவீகரிச்சுண்டா நன்னாருக்கும்னு நினைச்சே… உன் ஆசையையும் தப்பு சொல்லக் கூடாது. சரி, கொஞ்ச நாள் வெச்சிருந்து தெனமும் சாப்பிடலாம்னு சொல்றதுக்கு உண்டான பொருளும் இது இல்லே. அத்தனையும் பழங்கள். நாலு நாள் போச்சுன்னாலே தானா அழுகத் தொடங்கிடும். அப்புறம் யாருக்கும் பயன்படாது. குப்பைல தூக்கிக் கொட்ட வேண்டியதுதான்.
அதனாலதான் இப்படிப் பண்ணேன். இப்ப நடந்ததைத்தான் நீ பார்த்தியே… அந்த நரிக் குறவாள்லாம் எத்தனை ஆசை ஆசையா இந்தப் பழங்களை வாங்கிண்டு போனா… அவா வாழ்க்கையிலே இதுவரைக்கும் இது மாதிரி ஆப்பிள், ஆரஞ்சு, மலை வாழைப்பழம் – இவற்றை எல்லாம் சாப்பிட்டு இருக்கவே மாட்டா. பக்தியோட நீ எனக்குக் கொண்டு வந்த பழங்கள் இப்ப எத்தனை பேரை சந்தோஷப்படுத்தி இருக்குன்னு பார்த்தியா… இந்தப் பழங்களைக் கையில வாங்கிண்ட உடனே அவா முகத்தில் தென்படற சந்தோஷத்தைதான் பார்த்தியா… அதுக்கு எத்தனை ரூவா கொடுத்தாலும் ஈடாகாது.
இதோ, ஆரம்பத்துல நான் எடுத்து வெச்சுண்ட பழங்கள் இன்னிக்கு சந்திரமௌளீஸ்வரருக்கு நிவேதனம் ஆகப் போறது. அதன் பிறகு அந்தப் பிரசாதத்தை நான் எடுத்துண்டுடுவேன்.
இந்தக் கூடையிலே மூணு ஆப்பிள் மிச்சம் இருக்கே… இதுல ஒண்ணு உனக்கும், மத்த ரெண்டும் உன் சிநேகிதாளுக்கும். வா, பிரசாதம்
வாங்கிக்கோ” என்று மகா பெரியவா ஒரு தாயின் பரிவோடு டாக்டர் சுப்ரமண்யனை அழைத்தார்.
மகா பெரியவாளின் மிக நீண்டமான – உருக்கமான பேச்சைக் கேட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தார் டாக்டர். உணர்ச்சிவசப்பட்டவர் மகானின் திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார்.
பரப்பிரம்ம சொரூபமாக வீற்றிருக்கும் கலியுக தெய்வமான அந்த மகானைப் பார்த்த மாத்திரத்தில் டாக்டரின் விழிகள் குளமாயின.
பக்தியோடு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு தான் கொண்டு வந்திருந்த அந்தப் பழங்களை மகானே எடுத்து விநியோகம் செய்த விதம், அவரது மனதை ரொம்பவே பரவசத்துக்கு உள்ளாக்கி இருந்தது. அந்தக் காட்சிகளை இப்போது நினைத்தாலும், மனம் பூரித்துப் போகிறது.
ஒரு மகானுக்கோ தெய்வத்துக்கோ ஏதேனும் ஒரு பொருளை அந்தத் திருச்சந்நிதியில் ஒப்படைத்து விட்டாலே, நம் காரியம் பூர்த்தி ஆயிற்று என்று பொருள். அதன் பின் அந்தப் பொருள் அங்கே எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று கண்காணிப்பதும் தொடர்வதும் நம் வேலை அல்ல.
ஆலய நடை அடைக்கின்ற வேளையில் அன்பர் ஒருவர் மலர் மாலையை அவசரம் அவசரமாக வாங்கிச் சென்று ஆலயத்திலோ மகானின் திருச்சந்நிதியிலோ அர்ப்பணித்திருப்பார். தான் கொண்டு போய்ச் சேர்ப்பித்தவுடன் அந்த மலர் மாலை சம்பந்தப்பட்ட தெய்வத்துக்கோ மகானின் திருமேனிக்கோ அணிவிப்பார்களா என்றே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பார்.
ஆனால், சந்நிதியில் இருக்கின்றவர்கள், ‘இன்று பொழுது கடந்து விட்டது… நடை அடைக்கின்ற நேரம்… இந்த மலர் மாலையை இப்போது சார்த்தினால் இரவு முழுக்கத்தான் இருக்கும். ஆனால், நாளை காலை சார்த்தினால் பகல் முழுக்க பகவானை அலங்கரித்துக் கொண்டிருக்கும். வந்திருக்கக் கூடிய பக்தர்களும் அற்புதமான இந்த மலர்மாலையைப் பார்த்து ஆனந்தப்படுவார்கள்‘ என்று நினைக்கலாம் அல்லவா? தவிர, இதுவே யதார்த்தம்.
எனவே, வழிபாட்டு நிலையங்களில் சமர்ப்பிக்கப்படுகிற எந்த ஒரு பொருளும் – சேர்த்தாகி விட்டது என்றால், நம் வேலை பூர்த்தி ஆயிற்று. அதன் பின் அதைப் பற்றிய எண்ணம் தப்பித் தவறியும் மனதில் எழும்பி விடக் கூடாது.
அதைப் போல் டாக்டர் சுப்ரமண்யம் கொண்டு வந்து சமர்ப்பித்த பழங்களைத் தான் ஒருவன் மட்டுமே சாப்பிட முடியாது என்கிற காரணத்தால், பொருளாதாரத்தில் பின்தங்கிய குறவர்கள் பலருக்கும் விநியோகித்து சந்தோஷப்பட்டார் மகா பெரியவா.
டாக்டருக்கும் அவரது நண்பர்களுக்கும் பிரசாதம் தந்த பின், உத்தரவு அளித்து விடை கொடுத்தார் மகா பெரியவா.
மிகப் பெரிய பாடத்தை இன்றைக்கு நமக்கு மகான் புகட்டி இருக்கிறார் என்கிற திருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டார் டாக்டர் சுப்ரமண்யன்.
அதன் பின் இளையாத்தங்குடியில் மகா பெரியவா தங்கி இருக்கிற வரை ஒரு சிறு கூடையில் மகா பெரியவாளுக்கும் சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்கும் சொற்பமான பழங்களைக் கொண்டு வந்தார் டாக்டர்.
அதோடு நிற்கவில்லை. பெரிய பெரிய கூடைகளில் ஏராளமான பழங்களையும் சுமந்து வந்தார். எல்லாவற்றையும் மகா பெரியவா திருச்சந்நிதியில் சமர்ப்பித்து விட்டு, மாலை வேளையில் அங்கு வரும் குறவர்களுக்கு மகானின் உத்தரவு பேரில் தானே விநியோகிப்பார். அதில் மனம் மகிழ்வார்.
இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறபோது அவர்களின் முகத்தில் தென்படுகிற சந்தோஷத்தில் இறைவனையே காணலாம் என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கிய மகா பெரியவா, மிகப் பெரிய கருணைக் கடல்!