போர்க் களத்தில் அர்ஜுனனுக்கு ‘கீதை‘யை உபதேசித்தார் கிருஷ்ண பரமாத்மா. அந்த ‘பகவத் கீதை‘ சொன்ன நெறிப்படி ஒருவர் வாழ்ந்தால், மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்பது கண்கூடானது.
இ ன் ¬ ற க் கு உ ல கி « ல « ய அ தி க பாஷைகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களுள் ‘பகவத் கீதை‘யும் ஒன்று. ‘பகவத் கீதை‘யைப் போல் கலியுகவாசிகளான நம் அனைவருக்கும் அறநெறிக் கருத்துக்களை ‘தெய்வத்தின் குரல்‘ தொகுப்பின் மூலம் அள்ளித் தந்திருக்கிறார் மானுட தெய்வமான காஞ்சி மகா பெரியவர்.
நாம் வாழ்ந்து வருகிற இந்தக் காலத்தில் மிகச் சமீபத்தில் ஸித்தி ஆனவர். இவரது காலம் 1894- 1994. நூறு ஆண்டுகளுக்கு ஒரு சில மாதங்கள் குறைவாக வாழ்ந்தவர். துறவு இலக்கணம் என்ன சொல்கிறதோ… அதன்படி இம்மியும் பிசகாமல், எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் கடும் தவ வாழ்க்கை வாழ்ந்த அவரை நாத்திகர்களும் ஏற்றுக்கொள்வதுதான் சிறப்பு.
தனது ‘தெய்வத்தின் குரல்‘ தொகுப்பில் மகா பெரியவா தொடாத ‘சப்ஜெக்ட்‘ இல்லை. ஆன்மிகம், பக்தி, வேதம், குடும்பம், பெண், சிறுவர்கள், வியாபாரம், சனாதன தர்மம் என்று இதில் வராத விஷயங்களே இல்லை. பெறற்கரிய தத்துவங்களையும், கருத்துகளையும் கொண்டிருப்பதால் மகா பெரியவரின் இந்த உபதேச முத்துகளை ‘ஐந்தாம் வேதம்‘ என்று அவரது பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
சுமார் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு நங்கைக்குத் திருமணம் செய்து வைப்பது என்பது, எத்தனை சிரமமான காரியம் என்று அந்தத் தலைமுறையினர் நன்றாகவே அறிந்திருந்தார்கள். சிரமத்துக்கு ஒரே காரணம் வரதட்சணை. அதாவது… பணப் பிரச்சினை!
மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாரிடம் ‘இத்தனை பவுன் போட்டு உங்கள் மகளை எங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இத்தனை ரூபாய் ரொக்கமாகக் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு இன்னன்ன செய்து தர வேண்டும்‘ என்றெல்லாம் நிர்ப்பந்திப்பதுதான் வரதட்சணை. இதனால் பெண்ணைப் பெற்றவர்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளானார்கள். பரிதாப இறப்புகளும் நேரிட்டன.
வரதட்சணையை எதிர்த்து அதிக குரல் கொடுத்தவர் காஞ்சி மகா பெரியவர். வசதி இருக்கிற பெண் வீட்டார் ‘தங்கள் மகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமே!‘ என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் சொல்கிற வரதட்சணைக்கு சம்மதித்துவிடுவதுண்டு. வசதி இல்லாத பெண் வீட்டார், ‘நல்ல சம்பந்தம் கைநழுவிப் போய்விடுமே?‘ என்கிற கவலையில் அந்த வேளையில் சம்மதித்துத் தலையாட்டிவிடுவார்கள்… எப்படியாவது பணத்தைப் புரட்டிச் சமாளித்துவிடலாம் என்று!
திருமண நாள் நெருங்குகிற தருணத்தில் உருண்டு புரண்டு பணத்தைப் புரட்டி வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றிவிடுகிற பெண் வீட்டாரும் உண்டு. அதே நேரம்… சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டு, ‘நீங்க கேட்டதை இப்ப எங்களால செய்ய முடியல. எங்க பொண்ணு கழுத்துல தாலி ஏறட்டும். நீங்க கேட்டதை கூடிய சீக்கிரமே குந்துமணி குறைவில்லாம செஞ்சு போட்டுடுறேன். கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதீங்க…‘ என்று சபையிலேயே மணமகனின் பெற்றோர் காலில் விழுகிறவர்களும் உண்டு.
மகா பெரியவர் சொல்வார்: “திருமணம் ஆகப் போகிற பெண்ணின் குணம் எப்படி இருக்கிறது? அவள் சார்ந்த குலம் எப்படி இருக்கிறது? ‘நம்முடைய இல்லத்தை ஒளிரச் செய்யப் போகிற கிரகலட்சுமியாக இவள் அமைய வேண்டும்‘ என்று சந்தோஷமாக நினைத்து , எந்த ‘கண்டிஷனும் ‘ போடாமல் – அதாவது , வரதட்சணையே வாங்காமல் – பணம் காசைப் பற்றி நினைக்காமல் கல்யாணம் செய்துகொள்கிற நல்ல மனம் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரவேண்டும்” என்று வலியுறுத்துவார்.
அதோடு, அகிம்சாவாதியான அவர் இன்னொன்றையும் சொல்வார்: “வைர ஆபரணத்திலும், பட்டுத் துணியிலும் நம் பெண்களுக்கு இருக்கிற மோகம் எப்படியாவது போய்விட்டால் போதும். குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை மட்டுமல்லாமல்… பெண் தர்மமே பிழைத்துவிடும். ‘லட்சக் கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதில் இருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு அலங்காரம் தேவையா?‘ என்று பெண்கள் யோசிக்க வேண்டும். ‘சாப்பாட்டில் நாம் சைவம் என்று சொல்லிக்கொண்டால் போதுமா? இத்தனை பட்டுப்பூச்சிகளைக் கொலை செய்த பாவத்துக்கு ஆளாகிறோமே?‘ என்கிற எண்ணம் பெண் களுக்கு வர வேண்டும்.
இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது… வைரத்துக்கும், பட்டுக்கும் இவர்கள் ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல்… வசதி இல்லாதவர்களுக்கும் இந்த ஆசையைத் தூண்டிவிடுகிறார்கள். ‘இத்தனை பட்டுப் புடவை வேண்டும். வைரத்தோடு போட வேண்டும்‘ என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தினால்…
ஏழைப் பெண்களுக்கு எப்படி திருமணமாகும்? இப்படிப் பல பெண்களுக்குத் திருமணம் ஆகாமல் நிறுத்தி வைக்கும்படி வரதட்சணை ‘டிமாண்ட்‘ செய்வது பாவம்” என்று சாடுகிறார் மகா பெரியவர்.
இந்த உபதேசத்தையொட்டி பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போமா?
அவர் ஒரு ஜமீன்தார். நஞ்சை, புஞ்சை என்று விளைச்சலுக்கும், வாழ்வாதாரத்துக்கும் எந்த விதமான குறைவும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர். எப்போதெல்லாம் மகா பெரியவர் நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் சென்று மகானை வணங்கி ஆசி பெற்று வரக் கூடியவர்.
திருமண வயதை நெருங்கிவிட்ட தனது மகனுக்கு மணப்பெண் தேடினார். நற்குணம் நிரம்பிய ஒரு பெண்ணும் அமைந்தாள். ஆனால், மணப்பெண்ணின் குடும்பம், ஜமீன்தார் குடும்பம் போல் அத்தனை வசதி இல்லை. என்றாலும், தன் சக்தியையும் மீறி கல்யாணத்தைச் செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டனர்.
திருமண நாள் நெருங்க நெருங்க… மணப்பெண்ணின் தந்தைக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. வேறென்ன… பணப் பிரச்னைதான்!
‘இத்தனை பவுன் நகைகளைத் திருமணத்தின்போது போடுகிறேன்‘ என்று மணமகனின் பெற்றோரிடம் வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், சொன்ன வார்த்தைகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. தங்க நகை வாங்குவதற்குப் பணத்தைப் புரட்ட இயலாமல் திக்குமுக்காடிப் போனார்.
என்றாலும்… திருமணம் நடந்தாக வேண்டுமே! என்ன செய்தார் தெரியுமா? தான் வாங்கிப்போடுவதாகச் சொன்ன தங்க நகைகளுக்கு மாற்றாக ‘கவரிங்‘ நகைகளை வாங்கிப் போட்டு சரிக்கட்டிவிட்டார். தான் வணங்குகிற தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு இதைச் செய்தார்.
அவருக்கு என்ன எண்ணம் என்றால், பணம் கிடைத்தவுடன் தங்க நகை வாங்கிக் கொடுத்து மகளிடம் மட்டும் விவரம் சொல்லி, ‘கவரிங்‘ நகைகளை திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என்று!
அதோடு, இந்த விஷயம் அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன்… தன் மனைவிக்குக்கூட அதைச் சொல்லவில்லை.
திருமணமும் ஜாம் ஜாமென்று நடந்து முடிந்தது. மணமகள் அணிந்திருந்த நகைகளின் பளபளப்பையும் மினுமினுப்பையும் பார்த்து எவருக்கும் சந்தேகம் வரவில்லை. போலிக்கு எப்போதுமே மரியாதை கிடைப்பது போல் இருக்கும். ஆனால், அது நிரந்தரம் அல்ல!
நாலைந்து மாதங்கள் ஓடின. வாழ்க்கைச் சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காதே! ஏற்றமும் இறக்கமும் வரும். அதுபோல் பையனின் தகப்பனாரான ஜமீன்தாருக்கு –எந்த கிரகம் எங்கே இடம் பெயர்ந்ததோ–திடீர் இறக்கம். மனிதர் ஆடிப் போய் விட்டார். புன்னகை முகத்துடன் வலம் வந்தவர், பொலிவிழந்து காணப்பட்டார். கடும் பண நெருக்கடி.
இந்தக் கஷ்டத்தில் இருந்து உடனடியாக எப்படி வெளியே வருவது என்று யோசித்தார். அப்போது வீட்டில் நடமாடிக்கொண்டிருந்த மருமகள் கண்களில் விழுந்தாள்.
நாலைந்து மாதங்களுக்கு முன் திருமணத்தின் போது அவரது பெற்றோர் போட்ட நகைகள் பார்வையில்பட்டன. ‘ஆகா… ஆத்திர அவசரத்துக்கு மருமகளிடம் இருந்து இவற்றை வாங்கி மார்வாடியிடம் அடகு வைத்துப் பணம் வாங்கலாமே! இவளுடைய கழுத்திலும், கைகளிலும் இருப்பனவற்றை நமக்கு கொடுத்தால், தற்போதைக்கு இருக்கும் பிரச்னை தீர்ந்துவிடுமே‘ என்கிற எண்ணம் அவர் மனதில் உதித்தது.
பிறகென்ன… சமையல்கட்டை நோக்கிச் சென்ற மருமகளை அன்புடன் அழைத்தார். அவள் ‘அப்பா‘ என்றுதான் மாமனாரை அழைப்பது வழக்கம். “என்னப்பா… என்ன வேணும். காபி கொண்டு வரட்டுமா?” என்று பாசத்துடன் கேட்டாள்.
“காபி இருக்கட்டும்மா. எனக்குக் கொஞ்சம் நெருக்கடி. அவசரத்துக்குப் பணம் தேவை…” என்று இழுத்தார்.
குத்துவிளக்காக வந்த மருமகள் கேட்டாள்.
“சொல்லுங்கப்பா… அதுக்கு நான் என்ன பண்ணணும்? நீங்க சொன்னா எது வேணாலும் செய்யறேன்” என்றாள்.
“யம்மாடீ… உன் வார்த்தைகளே எனக்கு ஆனந்தத்தைக் கொடுக்குது ” என் று அவளைப் பார்த்து இரு கரங்களையும் மகிழ்ச்சியோடு குவித்தவர், “உன் கழுத்துலேயும், கையிலேயும் கிடக்கிற தங்க ஆபரணங்களைக் கழற்றித் தர முடியுமா? அதை அடகு வெச்சு பணக் கஷ்டத்தை இப்போதைக்குச் சமாளிச்சிடுவேன்… ” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தனது கழுத்து ச ங் கிலி களையு ம், கை வளையல்களையும் கழற்றி மாமனாரிடம் கொடுத்தாள், மலர்ந்த முகத்துடன்.
அவரே இதை எதிர்பார்க்கவில்லை!
“யம்மாடீ… தப்பா நினைக்காதே! இது ஒரு அவசரத்துக்குத்தான். பணம் வந்த உடனே இந்த நகைகளை எல்லாம் அடகு கடையிலேருந்து மீட்டுக் கொடுத்துடுறேன்” என்று வாங்கி, தன் மேல்துண்டில் பத்திரப்படுத்திக் கொண்டார்.
மருமகள் புன்னகையுடன் அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
அடுத்த கணம் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு தன் ஊரில் இருக்கிற மார்வாடியிடம் சென்றார் ஜமீன்தார். இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும்போது அதன் நற்பலனை நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.
துன்பம் வந்தால் மட்டும் அதன் பலனை நாம் மட்டும் அன்பவிக்க மறுக்கிறோம். மற்றவர்களையும் துணைக்கு அழைக்கிறோம். ஆறுதல் வார்த்தைகளைத் தேடுகிறோம். எவர் தோளிலாவது சாய்ந்து கொள்ள முடியுமா என்று ஏங்குகிறோம். நம் உதவிக்குப் பிறர் வர மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறோம்.
தனக்கு ஒரு கஷ்டம், சிரம தசை வந்தவுடன் ஜமீன்தார் என்ன நினைத்தார்? தன் மருமகள் அணிந்திருக்கிற ஆபரணங்களை அவளிடம் இருந்து கேட்டு வாங்கி அடகு வைத்து அப்போதைய நிலையை சமாளித்து விடலாம் என்று கணக்குப் போட்டார்.
‘மருமகள் இந்த வீட்டில் வாழ வந்தவள் ஆயிற்றே… அவளுக்கு நாம் அல்லவா கொடுக்க வேண்டும்… அவளிடம் இருந்து வாங்குவது தவறல்லவா?‘ என்றெல்லாம் அந்த சிரம காலத்தில் ஜமீன்தார் யோசிக்கவில்லை.
இதுதான் மனித சுபாவம். தன் தேவை பூர்த்தி ஆவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வான்.
தன் மருமகள் கொடுத்த நகைகளை எடுத்துக் கொண்டு உள்ளூர் மார்வாடி கடைக்கு ஜமீன்தார் போனார். அதை அடகாக வைத்துக் கொண்டு ஒரு பெரிய தொகை கொடுக்குமாறு கேட்டார். ஜமீன்தார் கேட்ட தொகை அவரது பிரச்னையில் இருந்து வெளிவரத் தேவைப்படக் கூடிய தொகை!
தங்கம் எது… ‘கவரிங்‘ எது என்கிற வித்தியாசம் இந்த மாமனாருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மார்வாடிக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்குப் பிழைப்பே இதுதானே!
நகைகளைக் கையில் வாங்கிப் பார்த்த மாத்திரத்திலேயே மார்வாடி தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி முன்னால் இருக்கும் சிறு மர டெஸ்க்கில் வைத்து விட்டு, ஜமீன்தாரைப் பார்த்தார்.
மார்வாடியின் பார்வையில் தெரியும் அலட்சிய மனோபாவம், ஜமீன்தாரைத் தடுமாற வைத்தது.
“இன்னா ஜமீன்தார்… இதெல்லாம் எங்கு வாங்கினே?”
“வாங்கலை சேட்டு… என் மருமகளுக்கு வரதட்சணையா அவ பொறந்த வீட்டுலேர்ந்து போட்டு அனுப்பினாங்க.”
“சம்பந்தி இடம் நல்ல கவுரவமான குடும்பம்தானா? விசாரிச்சியா?”
“என்ன கேக்கறே சேட்டு… என்னை மாதிரி பக்தி, மரியாதை, பணிவு எல்லாம் அந்தக் குடும்பத்துல அதிகமா இருக்கு. என்னோட குரு மகா பெரியவா மேல அந்தக் குடும்பத்துக்கும் பக்தி அதிகம்.”
“இல்லை ஜமீன்… இந்த நகை எல்லாம் டூப்ளிகேட். அதாவது, கவரிங்…” – வரதட்சணையாக வந்த நகைகளின் ரகசியத்தைப் போட்டு உடைத்தார் சேட்டு.
யோசித்துப் பாருங்கள், ஊரிலேயே ஜமீன் என்ற அடைமொழியுடன் ஓரளவு கவுரவமாக வாழ்ந்து வருபவர். எப்போது பார்த்தாலும் வெள்ளை வேஷ்டி. வெள்ளை சட்டை. ஏதோ, போதாத வேளை… அவருக்கு ஒரு சிரமம். அதில் இருந்து வெளியே வருவதற்கு உண்டான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். அந்த வேளையில் இப்படி ஒரு அவமானம்.
மார்வாடி சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், அவமானமும் கோபமும் ஜமீன்தார் முகத்தில் பொங்கிப் பிரவாகித்தன!
தன் முகத்தில் தென்பட்ட கசப்பு உணர்வுகளை மெள்ள மாற்றிக் கொண்டு மார்வாடியைப் பார்த்தார். ஓர் அசட்டுப் புன்னகை புரிந்து விட்டு, “மன்னிச்சுக்கோ சேட்டு… எங்கயோ தப்பு நடந்திருக்கு” என்று நகைகளை வாங்கிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தார் ஜமீன்தார்.
வீட்டுக்குள் நுழைகிறபோது கொஞ்சநஞ்சம் உள்ளுக்குள் இருந்த அவமானம் ஒட்டுமொத்த கோபமாக மாறியது.
சம்பந்தி மட்டும் எதிரில் இருந்தால், சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்திருப்பார். நல்லவேளை… அவர் அவரது ஊரில் இருக்கிறார்.
மருமகள் வழக்கம்போல் புன்னகைத்த முகத்துடன் எதிரில் வந்தாள். “என்னப்பா… போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று கரிசனத்துடன் கேட்டாள். பாவம், மார்வாடி கடையில் நடந்தவை அவளுக்குத் தெரியாது.
எதுவும் பேசாமல், அவளையும் பார்க்கப் பிடிக்காமல் உள்ளே போனார்.
ஒரு பையில் மருமகளின் துணிமணிகள் சிலவற்றை அள்ளிப் போட்டார். “நீ உன் வீட்டுக்குப் போயிடு… என்கிட்ட ஒரு வார்த்தைகூடப் பேசாத…” என்றார், மருமகளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் கோபம் கொப்பளிக்க. கழுத்தில் மூன்று முடிச்சுகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்காக வந்த வீடும் தாய் வீடு மாதிரிதான்!
ஆனால், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அவளை வெளியேற்றினார் ஜமீன்தார்.
மாமனார் பேச்சை அப்படியே வார்த்தை தவறாமல் பின்பற்றக் கூடியவள் ஆயிற்றே அவள்! அப்படியே பையை வாங்கிக் கொண்டாள். உத்தமியாக வெளியேறினாள்.
பணத்தை விட பண்புதான் பெரியது! இதை உணர்ந்து வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவள் ஆயிற்றே!
மருமகள் போன பின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தேம்பினார் ஜமீன்தார்.
மனதில் இருக்கக் கூடிய பாரம் இறங்கிய பின், ஜமீன்தாரின் நினைவுக்கு மகா பெரியவா வந்தார்.
‘ஆகா… சோகத்தில் தத்தளிக்கிறோமே… திடீர் பணப் பற்றாக்குறையால் தவிக்கிறோமே… இந்த வேளையில் குருநாதரைப் பார்த்து விட்டு வரலாமே‘ என்று தோன்றியது. மனதளவில் மகா பெரியவாளை நினைத்தவுடன், அவருக்குள் ஒரு மலர்ச்சி.
வெயிலில் நடந்து செல்பவனுக்கு எப்படி நிழலைத் தந்து மரம் ஆதரிக்கிறதோ, அதுபோல்தான் குருநாதரும். நிழலும் தருவார்; கனிகளும் தருவார். எல்லாமும் கொடுப்பார்.
உள்ளூரில் ஜமீன்தாருக்கு ஒரு சில நல்ல நண்பர்கள் உண்டு. மகா பெரியவாளைத் தரிசிக்க எப்போது காஞ்சிபுரம் சென்றாலும், தன் நண்பர்களையும் அழைத்துச் செல்வது அவரது வழக்கம்.
அடுத்த நாளே காஞ்சிக்குக் கிளம்பினார், கருணா சமுத்திரத்தின் தரிசனத்தைக் காண!
நண்பர்களுடன் ஜமீன்தார் காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைகிறபோது, அவ்வளவாக பக்தர்கள் கூட்டம் இல்லை.
நடமாடும் தெய்வமான மகான் வழக்கம்போல் தான் அமர்ந்திருக்கும் இடத்தில் சர்வேஸ்வர சொரூபமாக அமர்ந்து திருக்காட்சி தந்து கொண்டிருந்தார்.
மகானுக்கு எதிரில் போய் நின்றார்கள் ஜமீனும், அவரது நண்பர்களும்.
ஜமீனுடன் வந்த நண்பர்களை வாத்சல்யமாகப் பார்த்து அவர்களின் க்ஷேம லாபம் விசாரித்தார் மகா பெரியவா. அவர்களின் தொழில் மற்றும் விவசாயம் பற்றிப் பல விஷயங்களை உருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசினார்.
னால், பாருங்கள்… ஜமீன்தார் இருக்கும் பக்கம்கூட மகான் திரும்பவில்லை.
ஒருவேளை தான் வந்திருப்பது தெரியவில்லை போலிருக்கிறது என்று ஜமீன், மகானின் பார்வை செல்லும் இடமெல்லாம் இப்படி அப்படி நகர்ந்தும் பார்த்தார். ஆனால், அதற்கு ஏற்றாற் போல் மகானின் பார்வையும் ஜமீன் இல்லாத இடம் நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது.
இது தற்செயலாக நடக்கவில்லை என்பதை மட்டும் ஜமீன்தார் புரிந்து கொண்டு விட்டார். அதே வேளையில் தன் மனதுள் இருக்கக் கூடிய குமுறலை வெளிப்படுத்தவும் அவர் விரும்பவில்லை.
இரண்டு மூன்று முறை ஜமீன்தார், மகா பெரியவாளின் திருமுகத்தைப் பார்த்து, “பெரியவா… பெரியவா…” என்று அழைத்தும் பார்த்தார்.
ஊஹும்… காதில் வாங்கியும் வாங்காதது போல் இருந்தார் கலியுக தெய்வம்.
ஒரு கட்டத்தில் ஏகத்துக்கும் தவித்துப் போனார் ஜமீன்தார். ‘என்னடாது… நிம்மதி தேடி இவரின் சந்நிதிக்கு வந்தால், இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் காணாமல் போய் விடும் போலிருக்கிறதே‘ என்று மருகினார்.
மகானிடம் அவமானப்படுவதை ஒரு குறையாக நினைக்கவில்லை ஜமீன்தார். விடாமல் இப்படியும் அப்படியும் போய் அவரது கவனத்தைத் தன் பக்கம் எப்படியாவது திருப்ப யத்தனித்தார். பலன் பூஜ்யம்தான்!
ஒரு கட்டத்தில் மகான் தன் இருக்கையில் இருந்து எழுந்தார். ஜமீனின் நண்பர்களைப் பார்த்து மீண்டும் புன்னகைத்து விட்டுத் தன் அறைக்குள் சென்றார், ஒரு சர்ப்பம் போல்.
பார்த்தார் ஜமீன். இதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. மகா பெரியவாளுக்குத் தொண்டு செய்யக் கூடிய ஒரு சிப்பந்தி அவரது அறைக்கு வெளியே நின்றிருந்தார். ஜமீன்தாருக்கும் இந்த சிப்பந்தி நல்ல பரிச்சயம்!
மெள்ள அவரை நெருங்கினார் ஜமீன்தார். கண்கள் அவரை அறியாமல் கலங்க ஆரம்பித்து விட்டன. சிப்பந்தி அதிர்ச்சியுடன் பார்த்தார் ஜமீனை.
“என்ன ஆச்சு? ஏன் அழறேள்?” – சிப்பந்தி கேட்டார்.
“என்ன கிரகம் இடம் பெயர்ந்ததோ, தெரியலை. பெரிய சோகம் என்னை சூழ்ந்திண்டிருக்கு. மகானைப் பார்த்து தரிசனம் பண்ணா, மனம் லேசாகுமேனு வந்தேன். எப்பவும் பேசறது மாதிரி என்கிட்ட பேசலை. என் முகத்தைக்கூடப் பார்க்கலை. ஆனா, என்கூட வந்த நண்பர்கள்கிட்ட சிரிச்சுச் சிரிச்சுப் பேசறார்… அவாளோட நலனைப் பத்தி ரொம்ப அக்கறையா விசாரிக்கிறார். ஆனா, என்னை மட்டும்…” – ஜமீனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. மேல்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
சிப்பந்திக்கே ரொம்ப பாவமாகி விட்டது. “அடடா… கவலைப்படாதேள்… இப்ப உள்ளே போகப் போறேன். நானே பெரியவாகிட்ட கேக்கறேன். ஒரு ஓரமா உக்காந்துக்குங்கோ. உங்க கூட வந்தவாள்லாம் தப்பா நினைக்கப் போறா…”
ஜமீன்தார் நகர்ந்தார். முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு நண்பர்களுடன் கலந்தார்.
சிப்பந்தி உள்ளே போனார்.
விச்ராந்தியாக ஒரு தவத்தில் சில விநாடிகள் இருந்த மகான் அப்போதுதான் கண்களைத் திறந்தார். ஞான சூரியனாக ஒளிர்ந்தார்.
மகானை நமஸ்கரித்தார் சிப்பந்தி.
பிறகு, ஜமீன்தாரைப் பற்றி மெள்ள ஆரம்பித்தார். “பெரியவா… அவர் முகம் ரொம்ப வாடி இருக்கு. ஏதோ கஷ்ட காலத்துல இருக்காராம். உங்களை தரிசனம் பண்ணா, ஒரு அமைதி கிடைக்கும்னு இங்கே வந்திருக்காராம். அவர் முகத்தைப் பார்க்கறதைக்கூட நீங்க தவிர்க்கிறேளாம். வெளில அழுதுண்டு உக்காந்திண்டிருக்கார்.”
கயிலைவாசன் ஒரு சில விநாடிகளுக்குப் பின் திருவாய் மலர்ந்தார். “ஓ… உங்கிட்ட தூது விட்டு அனுப்பினானா? வெளில அழுதுண்டு இருக்கானா? அழட்டும். நன்னா அழட்டும். அவன் பண்ண காரியம் உனக்குத் தெரியுமா?” என்று சத்தமான குரலில் மகான் கேட்க… சிப்பந்தியே விதிர்விதிர்த்துப் போனார். காரணம், மகான் அப்படிப் பேசி அவர் பார்த்ததில்லை.
“இல்லை பெரியவா… அவர் பண்ண காரியம் எதையும் என்கிட்ட சொல்லலை…”
“பண்ற தப்பையும் பண்ணிட்டு, என்கிட்ட அமைதி தேடி வந்தா, கிடைச்சுடுமா? அவன் பண்ண காரியத்தைச் சொல்றேன், கேளு” என்று அந்தப் பரப்பிரம்மம் ஆரம்பிக்க… சிப்பந்தி கைகளைக் கட்டிக் கொண்டு கேட்பதற்குத் தயாரானார்.
இந்தப் பிரபஞ்சம் முழுதும் நடக்கின்ற விஷயங்களைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஞான திருஷ்டியின் மூலம் கண்காணித்துத் தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிற அந்த நடமாடும் தெய்வம் திருவாய் மலர்ந்தது.
இது இயல்பான குரல் வெளிப்பாடு அல்ல. சற்றுக் கோபமும் கலந்து வந்த தொனி.
“கேளு, அவன் பண்ண காரியத்தை. வீட்டுக்கு வாழ வந்த மருமகளை அவளோட துணிமணி எல்லாம் ஒரு பையில போட்டு ‘பேக்‘ பண்ணிக் கொடுத்துப் பொறந்த வீட்டுக்குத் துரத்தி விட்டுட்டான்…”
பெரியவா சொன்னதைக் கேட்டு சிப்பந்தி அதிர்ந்தார். காரணம் – அது நாள் காஞ்சி ஸ்ரீமடத்தில் அந்த ஜமீன்தாருக்கு ஒரு நற்பெயர் உண்டு. அவரைப் பற்றி இப்படி ஒரு தகவலை – அதுவும் மகா பெரியவா சொன்னதும் சிப்பந்தி அதிர்ந்து போகாமல் இருப்பாரா, என்ன?
சிப்பந்தியைப் பார்த்து மகான் தொடர்ந்தார்:
“காரணம் என்ன தெரியுமா? கழுத்துலயும், கையிலயும் மருமகள் போட்டுருந்த நகைங்களை இவன் ஒரு அவசரப் பணத் தேவைக்கு வாங்கி இருக்கான். எடுத்துண்டு அடகு கடைக்குப் போனான். அதெல்லாம் சொக்கத் தங்கம் இல்லேனு தெரிஞ்சு போச்சு.
மருமகள்கிட்ட இருக்கிற நகைங்களைக் கேட்டு வாங்கி அடகு கடையில கொண்டு போய் வைக்கறதுக்கு இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அவளுக்குப் புதுசா இவன் கையால நகைங்களை வாங்கிப் போட முடியலேன்னாலும், அவகிட்ட இருக்கிறதையாவது கேக்காம இருக்கணுமோல்லியோ… வரதட்சணை ஆசை யாரை விட்டது…”
ஜமீன்தாருக்கு ஏன் ஆசி வழங்காமல், பாரா முகமாக மகான் இருந்தார் என்பதற்கான காரணம் சிப்பந்திக்கு இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது.
நடமாடும் தெய்வமான மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்தார். சிப்பந்தியின் கண்களே கலங்கி விட்டன.
“புரியறது பெரியவா… அவர் பண்ண காரியம் யாராலும் மன்னிக்க முடியாது…” என்று இழுத்தவர் ஒரு சில விநாடி இடைவெளிக்குப் பிறகு, “ஆனாலும், ரொம்ப நல்ல மனுஷர்தான். என்ன காரணமோ… என்ன கஷ்ட காலமோ… சரி பெரியவா… அவரைப் பாத்துட்டுக் கொஞ்சம் சாந்தப்படுத்திட்டு வரேன்… பாவம், அவர் மொகத்தைப் பாக்கறதுக்கே நன்னால்லை” என்று பரிதாப்பட்ட சிப்பந்தி கதவைத் திறந்து கொண்டு வெளியே போனார்.
மகானின் தரிசனம் கிடைக்க வேண்டும்… அவரது பரிபூரண ஆசிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பக்தகோடிகள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
ஏற்கெனவே அமர்ந்திருந்த பக்தர்களோடு புதிதாக வந்தவர்களும் காணப்பட்டனர்.
நண்பர்களுடன் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார் ஜமீன்தார். அவர்கள் அனைவரிடத்திலும் ஓர் அமைதி குடி கொண்டிருந்தது.
‘மகா பெரியவாளின் கனிவான தரிசனம் கிடைத்த பிறகுதான் ஊருக்குப் போக வேண்டும்‘ என்பதில் உறுதியாக இருந்தார் ஜமீன்தார்.
மகா பெரியவா அறையில் இருந்து வெளியே வந்த சிப்பந்தி தன்னை நோக்கித்தான் வருகிறார் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார்
ஜமீன்தார். மெள்ள எழுந்தார். நண்பர்கள் கூட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சிப்பந்தியை நோக்கி நடந்தார்.
ஜமீன்தார் தனியே தன்னை நோக்கி வருவதைக் கண்ட சிப்பந்தி, அவருக்குக் கண் ஜாடை காண்பித்து ஒரு மூலைக்கு வருமாறு சொன்னார். அந்த இடத்தில் யாருமே இல்லை.
ஜமீன்தார் கண்களில் இருந்து நீர் திரண்டு உருண்டு விழுந்தது. சிப்பந்தி சொன்னார்: “பெரியவாகிட்ட பேசினேன்… உங்களோட மருமகளை நீங்க….”
– அவ்வளவுதான்!
அதற்கு மேல் ஜமீன்தாரால் அமைதியாக இருக்க முடியவில்லை. சிப்பந்தியைப் பார்த்து, “என்னை மன்னிச்சுக்கோங்கோ… ஒரு பெரிய தவறை என்கிட்ட வெச்சிண்டு, ஒண்ணுமே தெரியாதது மாதிரி மகானை தரிசனம் பண்றதுக்காக நாங்க இங்கே வந்தது மன்னிக்க முடியாத குத்தம்.
மகானுக்குத் தெரியாத விஷயம் இல்லை. அவரை மீறி எந்த ஒரு காரியமும் இந்த லோகத்துல நடக்க முடியாது. இதெல்லாம் மகா பெரியவாளுக்கு எங்கே தெரியப் போறதுன்னு மறைக்க நினைச்சேன் பார்த்தேளா… அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு. இப்ப மகானே எல்லாவற்றையும் ஞான திருஷ்டில உணர்ந்துண்டு, பேசாமலே – என் பக்கம் பார்வையைத் திருப்பாமலே என்னைத் தண்டிச்சிட்டார். இதற்கு மேலும் பெரியவா என்னை ஒதுக்கினா என்னால தாங்கிக்க முடியாது.
நான் இங்கயே காத்துக் கிடக்கேன். எத்தனை நேரமானாலும் பரவால்லை. நாள் ஆனாலும் பரவால்லை… அவரோட திருமுகத்தை ஒரு தடவை பார்த்துட்டுக் கதறி அழுதுட்டு ஓடிடறேன்… எனக்கு அப்பதான் ஜன்ம சாபல்யம் கிடைக்கும்” என்று இரு கைகளையும் கூப்பியவாறு தேம்பினார்.
சிப்பந்திக்கு ரொம்ப தர்மசங்கடமாகி விட்டது. “அழாதீங்கோ… இங்கே இருக்கிறவாள்லாம் பாத்துண்டு இருக்கா. கண்ணைத் துடைச்சுக்குங்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல பெரியவா வெளில வருவா தரிசனத்துக்கு. அந்தக் கருணா சமுத்திரத்துக்கிட்ட சரண் ஆகுங்கோ. அனுக்ரஹம் பண்ணுவார், உங்களுக்கு கொடுப்பினை இருந்தா” என்றார் சிப்பந்தி.
ஜமீன்தார் கண்களைத் துடைத்துக் கொண்டார். முகத்தையும் அழுந்தத் துடைத்தார்.
“நீங்க அங்கே உக்காந்துக்குங்கோ…” என்று ஓரமான ஓர் இடத்தைக் காண்பித்து விட்டு மகான் இருந்த அறையை நோக்கிச் சென்றார் சிப்பந்தி.
அடுத்த ஒரு ஐந்து நிமிடத்தில் சிவ சொரூபமாக மகா பெரியவா வெளியே வந்தார்.
தண்டம் சுமந்து வந்த சந்நியாசி, வழக்கமான தன் இடத்தில் அமர்ந்தார். கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்தி, மகானின் அருகே நின்றார். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் பக்தர்களைத் தன் பார்வையால் அனுக்ரஹித்தார் மகான்.
பக்தர்கள் தரிசனம் ஆரம்பமானது.
பரமேஸ்வர சொரூபத்தின் நெகிழ்வான தரிசனத்தில் புதிதாக வந்தவர்கள் தங்களை மறந்தனர்.
பதினைந்து நிமிடம் போயிருக்கும்.
ஜமீன்தார் அழுதழுது வீங்கின முகத்தோடு மகா பெரியவாளின் அருகே வந்தார்.
மகான் ஏதும் பேசவில்லை. ஆனால், தன் பார்வையை ஜமீன்தாரிடத்தில் திருப்பத் தவறவில்லை.
‘ஓ‘வென்று மீண்டும் அழத் துவங்கி, மகானுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தார்.
சுமார் பத்துக்கும் மேல் நமஸ்காரம் செய்திருப்பார். அதன் பின் எழுந்தவர், கைகளைக் கூப்பிய வண்ணம், பெரியவாளைப் பார்த்து, “என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ பெரியவா…” என்று அவரது திருமுகம் பார்த்துத் தழுதழுத்தார்.
பெரியவா பேசவில்லை. வலக் கையை மேலே உயர்த்தினார்.
“ஏதோ போதாத வேளை… தப்பு பண்ணிட்டேன். இப்ப எல்லாத்தையும் உணர்ந்துட்டேன். இங்கிருந்து கௌம்பினவுடன் மொத வேலையா என் சம்பந்தி வீட்டுக்குப் போய் அவர் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டு, என் மருமகளை வீட்டுக்குக் கூட்டிண்டு வந்துடறேன்” என்றார்.
இதைத்தானே மகா பெரியவா எதிர்பார்த்தார்!
தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்து, திருத்திக் கொண்டு விட்டான் என்றால், அவனை பெரியவா மன்னித்து விடுவார்! தன் அன்பை அபரிமிதமாகப் பொழிந்து விடுவார்.
ஜமீன்தாரைப் பார்த்துப் புன்னகைத்தார் பெரியவா. அவருக்குப் பிரசாதம் கொடுத்து, “க்ஷேமமா இருப்பே” என்று விடை கொடுத்து அனுப்பினார்.
பிறகென்ன… அங்கிருந்து கிளம்பியவர் நேராக சம்பந்தியின் இல்லத்துக்குச் சென்று மன்னிப்புக் கேட்டு, மருமகளை அழைத்துக் கொண்டுதான் தன் இல்லம் திரும்பினார்.
மருமகளையும் ஒரு மகளாகவே பாவிக்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்!