“மாசம் இருவது ரூபா அனுப்பு…”

து 1988-ஆம் வருடம்எம்.கே. வெங்கட்ராமய்யர் என்கிற பக்தர் மகானைத் தரிசிக்கக் காஞ்சி ஸ்ரீமடம் வந்தார்

அதிகம் படித்தவர். உயரிய பணிகளில் இருந்தவர். ஜோதிடக் கணக்கில் நிபுணர். மகா பெரியவாளுக்கு இவரைக் கண்டாலே குஷி.

வெங்கட்ராமய்யரிடம் பல விஷயங்களை அன்றைய தினம் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அப்போது சுப்பராயன் என்பவர் தரிசனத்துக்காக வந்தார்.

அவர் ஸ்ரீமடத்தில் முன்னாட்களில் பணி புரிந்த யானைப் பாகன். சர்வேஸ்வர சொரூபமாகத் திகழ்கிற பெரியவாளைப் பரவசத்துடன் தரிசித்து, அவரை நமஸ்கரித்தார் சுப்பராயன்.

அவரை ஆசிர்வதித்த மகான், தன் அருகே வரவழைத்து க்ஷேம லாபம் பற்றி விசாரித்தார்.

கண்கள் பனிக்க மகானது கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் சுப்பராயன்.

அப்போது தன் அருகே அமர்ந்து கொண்டிருந்த எம்.கே.வெங்கட்ராமய்யர் பக்கம் மகானது பார்வை திரும்பியது.

இவன் யார் தெரியுமா? என்று வெங்கட்ராமய்யரைப் பார்த்துக் கனிவுடன் கேட்டார்.

தெரியல பெரியவா என்றவர், மகானைப் பார்த்துக் கைகளைக் கூப்பினார்.

நான் மடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, ஸ்ரீமடத்தில் யானைப் பாகனாக இருந்தவன். அப்பல்லாம் யானை மேலே ஏறுவதற்கு எனக்குப் பயம். இவன்தான்தைரியமா ஏறுங்க சாமீஒண்ணும் பண்ணாதுனு சொல்லிட்டு யானையை வாகாக இருக்கச் சொல்லுவான். அதன் பிறகு யானை மேல ஏறுவேன். ஆனா, புதுப் பெரியவா யானை மேலே ரொம்ப சாதாரணமா ஏறிடுவார். இவன் இப்ப தன்னோட ஊர்ல இருக்கான். பாவம், வயசாயிடுத்து. இவனோட அட்ரஸை வாங்கிக்கோ. மாசா மாசம் இவனுக்கு இருபது ரூபாய் மணியார்டரில் அனுப்பு என்றார். அதன்படி சுப்பராயனின் விலாசத்தை வாங்கிக் கொண்டார் வெங்கட்ராமய்யர்.

வசதிக் குறைவும், வறுமையும் இருந்து மகா பெரியவா சந்நிதானத்துக்கு ஆத்மார்த்தமான பக்தியுடன் எவர் ஒருவர் வந்தாலும், அவருக்கு உரிய நிவாரணத்தை சர்வேஸ்வரன் அருளி விடுவார்.