எங்கே கற்றுக் கொண்டார் புகைப்படக் கலையை?

ப்போதெல்லாம் ஒரு ஆன்மிகக் கட்டுரையோ, கோயிலைப் பற்றிய தல வரலாறோ எழுத வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் போய்ப் பார்த்து விசாரித்துத்தான் எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

காரணம்இன்றைக்கு இருக்கிற விஞ்ஞான வசதிகள். படிக்கின்றவர்கள் நேரில் பார்த்த பரவசத்தைக் கொடுக்கும் விதத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே எழுதி விட முடியும். எழுத்தாளருக்கு உதவுவதற்கு கூகுளில் ஆரம்பித்து ஏராளமான தளங்கள் இருக்கின்றன. என்ன ஒன்றுஎழுதுகிற எழுத்தாளருக்குக் கொஞ்சம் எழுத்தாற்றல் இருக்க வேண்டும். எழுத்தாளனின் வார்த்தைப் பிரவாகம்தான் பக்தர்களை ஒரு ஆலயத்துக்கு அனுப்புகிறது என்றால், அதில் மிகையில்லை.

ஆனால், ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது? யோசித்துப் பாருங்கள்

எழுதுகின்ற எழுத்தாளர் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு நேரில் போய் விசாரித்து விசாரித்துத் தகவல்கள் திரட்ட வேண்டும். தொடர்புடையவர்களைப் பார்த்து விஷயங்களை விசாரித்து அறிய வேண்டும். தொடர்புடைய பழைய புத்தகங்கள் ஏதோ கொஞ்சம் உதவும். அவ்வளவே!

அப்படிப்பட்ட காலத்தில் காஞ்சி மகா பெரியவா பற்றியும், ‘புண்ணிய யாத்திரை என்ற பெயரில் ஆலயங்களைப் பற்றியும் ஆன்மிகக் கட்டுரைகளை எழுதிப் பிரபலமானவர் எழுத்தாளர் பரணீதரன் அவர்கள். ‘விகடன் குழுமத்தில் பணியாற்றியவர். சமீபத்தில்தான் மறைந்தார். காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அன்பைப் பெற்றவர். பல இடங்களுக்கும் நேரில் சென்று மகானைத் தரிசித்தவர். அப்போது தன் பக்தர்களிடையே மகான் வழங்கும் உபதேசங்களையும், அறிவுரைகளையும் தொகுத்துக் கட்டுரைகளாக எழுதியவர்.

விகடன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசன் உத்தரவின் பேரில் மகா பெரியவா பற்றிக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் மகா பெரியவாளிடம் அதிகம் நெருங்கிப் பழகினவர் இல்லை பரணீதரன். எனவே, அவர் பேசும்போது குறிப்பெடுப்பது, உபதேசங்களில் இருந்து எடுத்துக் கையாளவதுஇப்படித்தான் மகா பெரியவா பற்றி எழுத ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் மகா பெரியவாளே இவரது கட்டுரைகளை வாசித்து விட்டு விசாரித்தார். அதன் பின் மகானிடம் மிகுந்த பவ்யத்துடன் சென்றார்.

பெரியவா அருகே சென்று ஏதேனும் பேச வேண்டும், அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்றால், மேல் சட்டை அணிந்திருக்கக் கூடாது. வேஷ்டியும் மேல்துண்டும்தான் உடுத்தி இருக்க வேண்டும். பத்திரிகையாளரான பரணீதரன் இதற்காகவே கொஞ்சம் சங்கடப்பட்டு எட்டக்க இருந்து தரிசித்து விட்டுப் போய் விடுவார் பரணீதரன்.

பரணீதரனைப் பொறுத்தவரை மகானது ஆசி தனக்கு மட்டும் கிடைப்பதை விடமகானைப் பற்றிப் படித்து விட்டுப் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், மகானுக்குத் தெரியாததா? தொலைவில் இருந்தபடியே தனது உபதேசங்களைக் குறிப்பெடுக்கும் பரணீதரனை நோக்கி ஒரு புன்னகையை வீசுவார். தன்னைப் பார்த்துதான் மகான் புன்னகைக்கிறார் என்பதையே பெரிய ஆசியாக எடுத்துக் கொண்டு அந்தத் திருச்சந்நிதியில் ஒரு நமஸ்காரத்தை செய்து விட்டு அகன்று விடுவார்.

அருகில் சென்று தரிசிக்க பரணீதரனுக்கு ஆசைதான். ஆனால், அருகில் சென்று அவரைத் தரிசிக்கும் அளவுக்குத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று யோசித்தார். பயந்தார். இதனாலேயே அருகே செல்ல மாட்டார்.

ஒரு முறை சென்னை கோபாலபுரத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார். ஒரு மாலை வேளையில் கலியுக தெய்வத்தின் கருணை ததும்பும் உரையைக் கேட்கத் திரளான பக்தர்கள் கூடி இருந்தனர். வழக்கம்போல் பரணீதரனும் ஒரு மூலையில் நோட்டும் பேனாவுமாக அமர்ந்திருந்தார்.

மகான் பேசுகிற விஷயங்களை நன்றாகவே செவி மடுத்துக் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார். திருப்தியுடன் திரும்பினார்.

ஆனால், அடுத்து வருகிற நாளில் அதை ஒரு கட்டுரையாக எழுதுகிறபோது பரணீதரனுக்குச் சிற்சில சந்தேகங்கள். என்னதான் சுருக்கெழுத்துத் திறன் (ஷார்ட்ஹேண்ட்) கொண்டவராக இருந்தாலும், எடுத்து வைத்த குறிப்புகளை கோர்வையாக எழுதுகிறபோது சம்பந்தப்பட்டவருக்கு சந்தேகங்கள் வரத்தான் செய்யும். அதுபோல், தான் எழுதி வைத்திருக்கிற குறிப்புகளைக் கட்டுரை ஆக்கும்போது பரணீதரனுக்கும் வந்தது. ‘இந்த இடம் சரிதானா? மகானது வார்த்தைகளை சரியாகச் சொல்லி இருக்கிறேனா? என்றெல்லாம் அவருக்குள் சந்தேகங்கள் எழுந்தன.

ஒரு சாதாரண கட்டுரை என்றால், ஓரளவு சமாளித்து விட முடியும். ஆனால், இது மகா பெரியவாளின் உரை. இதில் தவறு ஏதும் வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார். கட்டுரை எழுதி முடித்த பின் அதில் எங்கெங்கு தனக்கு சந்தேகங்கள் உள்ளன என்பதை அந்த பேப்பரின் ஒரு மூலையில் குறித்து வைத்துக் கொண்டார். இதில் திருத்தம் செய்துசந்தேகங்களைக் களைந்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தீர்மானித்தார்.

யாரிடம் கேட்பது? மகா பெரியவாளிடம் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

அவரிடமே இந்தக் கட்டுரையைக் காண்பித்து, தேவைப்படுகிற திருத்தங்களையும் வாங்கிக் கொண்டு விடலாம் என்று தீர்மானித்தார்.

கைவசம் இருக்கிற கட்டுரைப் பிரதியில் தனக்கு எந்தெந்த இடத்தில் சந்தேகம் இருக்கின்றதோ, அனைத்தையும் பக்கவாட்டில்மார்க் செய்து கொண்டார். இதை அப்படியே எடுத்துக் கொண்டு மகானிடம் செல்லத் தீர்மானித்தார்.

அப்போது மகா பெரியவா மாம்பலம் ராமேஸ்வரம் தெருவில் முகாமிட்டிருந்தார். மகானையே நேரில் தரிசித்துக் கட்டுரையைக் காண்பிப்பதற்காகப் புறப்பட்டுப் போனார் பரணீதரன்.

முகாமுக்குள் நுழைகிறபோதே கூட்டமான கூட்டம். பக்தர்கள் வெள்ளம் பெருமளவு திரண்டிருந்தது.

அன்றைய தினம் மகானுக்குக் கைங்கர்யம் செய்யும் பொறுப்பில் இருந்தவர் கண்ணன் என்கிற தொண்டர். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு, தான் கொண்டு வந்திருக்கும் கட்டுரைப் பிரதியை அவரிடம் காண்பித்தார். “இதை பெரியவாகிட்ட காண்பிச்சு, படிச்சுக் காட்டித் திருத்தங்கள் வாங்கிக்கணும் என்று சொன்னார்.

பரணீதரனை மேலும் கீழும் பார்த்தார் கண்ணன்.

பிறகு, “பெரியவா இன்னிக்கு வேற ஒரு முக்கியமான காரியத்தில் இருக்கா. இப்ப அவரை நீங்க நேர்ல பாக்க முடியாது. கட்டுரையை என்கிட்ட குடுத்துட்டுப் போங்கோ. பெரியவா ஓய்வா இருக்கற நேரத்துல அவர்கிட்ட காமிச்சுத் திருத்தங்கள் வாங்கி வைக்கறேன். நாளைக்கு நேர்ல வந்து வாங்கிண்டு போங்கோ என்றார் கண்ணன்.

தொண்டர் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் பரணீதரன் முகத்தில் ஏமாற்றம் பிரதிபலித்தது.

கட்டுரையைக் காட்டுகிற சாக்கில் மகானை நேரில் தரிசித்து அவரது ஆசிகளைப் பெறலாம் என்று ஆர்வத்துடன் வந்தால், இப்படி ஆகி விட்டதே என்று மனம் வருந்தினார்.

எல்லாவற்றையும் விட மகா பெரியவாளை அருகேமிக அருகே நேரில் சந்திக்கிற வாய்ப்பு இன்றைய தினம் நழுவிப் போகிறதே என்கிற ஏக்கமும் அவருக்கு.

ஒரு மகானின் திருச்சந்நிதிக்குப் பக்தனாகச் செல்வது வேறு; பத்திரிகையாளனாகச் செல்வது வேறு.

பக்தன் என்றால், சில கட்டுப்பாடுகள் இருக்கும். பத்திரிகையாளன் என்றால், நிறைய சலுகைகள் இருக்கும்.

இருந்தாலும், வேறு வழியில்லை என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டார். ‘இன்றைக்கு நமக்கு பிராப்தம் இல்லை போலிருக்கிறது என்று தெளிந்தார்.

கட்டுரையின் பிரதியை கண்ணனிடம் சேர்ப்பித்தார். “நாளைக்கு வந்து திரும்ப வாங்கிக்கறேன் என்று சொன்னார். வெளியே வந்தார்.

மறுநாள் உற்சாகமாகச் சென்றார் அதே மாம்பலம் முகாமுக்கு.

இவர் சென்ற ஒரு சில நிமிடங்களுக்குள் கண்ணனே எதிர்ப்பட்டார்.

நேற்று நம்மைப் பார்த்த இவர் இன்றைக்கு நினைவில் வைத்திருப்பாரா? மகா பெரியவாளை தரிசிப்பதற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனரேநம்மையெல்லாம் இவருக்கு எங்கே நினைவிருக்கும்? என்ற எண்ணத்தில் அவரிடம் தன்னை மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு, கட்டுரை குறித்துக் கேட்க வாய் திறக்க முற்படுவதற்குள், “வாங்கோநீங்க குடுத்த கட்டுரையைப் பெரியவா பாத்துட்டா. அதுல மார்க் பண்ணி இருக்கிற ஒரு சில கரெக்ஷன்களை மட்டும் பண்ணிட்டு, பிரசுரம் பண்ணச் சொல்லிட்டாதோ, ஒரு நிமிஷம்கட்டுரையை எடுத்துண்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டுப் பக்கத்து அறைக்குப் போனார்.

போன வேகத்தில் அந்தக் கட்டுரையைக் கொண்டு வந்து பரணீதரனிடம் தந்தார்.

உற்சாகத்துடன் வாங்கினார் பரணீதரன். கண்களில் ஆர்வத்துடன் அந்தக் கட்டுரையில் தன் பார்வையை ஓட்டினார். ஆங்காங்கே பச்சை இங்க்கில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.

திருத்தங்களில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைப் படித்துப் பார்த்தார். அவை தெளிவாகவும், அவசியமானதாகவும் பட்டன. எழுத்துக்களும் கிறுக்கல் கிறுக்கலாக இல்லாமல் அழகாகக் காணப்பட்டன.

பரணீதரனுக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை பெரியவாளே தன் கைப்பட இதைத் திருத்தி இருக்கிறாரோ என்று. தன் சந்தேகத்தை கண்ணனிடம் கேட்டே விட்டார்.

ஆமாம்பெரியவாளே படித்து விட்டுத் திருத்தியதுதான் இது.

பரணீதரனுக்குள் ஒரு பரவசம் எட்டிப் பார்த்தது. “அப்படியானால், இதில் இருக்கின்ற திருத்தங்களை பெரியவாளே தன் கைப்பட பச்சை இங்க்கில் எழுதினாரா?

ஒருவேளை மகா பெரியவாளே இந்தத் திருத்தங்களைத் தன் கைப்பட எழுதி இருந்தால், இது பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இந்த மகானது விரல்களால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஆயிற்றே! என்பது பரணீதரனது எண்ணம்.

கண்ணன் சொன்னார்: “பெரியவாளே படித்து விட்டுத் திருத்தியதுதான். ஆனால், நீங்க சொல்றபடி இல்லை. அப்படி அர்த்தம் பண்ணிக்கக் கூடாது. பேனா, பென்சிலைக் கையில பிடிச்சு எழுதற வழக்கம் மகா பெரியவாளுக்கு இல்லே. ஸ்ரீமடத்துல இருக்கிற ஆஞ்சநேய சுவாமிகள் இதைப் பெரியவாளுக்குப் படிச்சுக் காட்டினா. பெரியவா அதைக் காதுல வாங்கிண்டு, ‘இந்தந்த இடத்துல இப்படித் திருத்தம் பண்ணுனு உத்தரவிட்டிருக்கா. கையில பேனா புடிச்சு இதை அழகா எழுதினவர் ஆஞ்சநேய சுவாமிகள்.

ஒரு நீண்ட கும்பிடு போட்டு விட்டு, அவற்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார் பரணீதரன். அடுத்த இதழிலும் இது பிரசுரமாயிற்று.

இந்த நிகழ்வுக்குப் பின் மகா பெரியவாளை அடிக்கடி நேரில் தரிசிக்க வேண்டும்பேச வேண்டும் என்கிற விருப்பமெல்லாம் பரணீதரனுக்கு ஏற்பட்டு, இவை அனைத்தையும் நிறைவேற்றினார் பெரியவா.

இதன் பின் எத்தனையோ சம்பவங்கள்

1958-ஆம் ஆண்டு வெளியான தீபாவளி மலரில் பரணீதரன் ஒரு கட்டுரை எழுதினார். ‘மகா பெரியவாளுடன் ஒரு நாள் என்பது போல் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.

மகா பெரியவா அதிகாலையில் கண் விழித்து எழுவதில் துவங்கி, பல் துலக்குவது, கிணற்றில் இருந்து நீர் எடுப்பது, பக்தர்களுக்கு தரிசனம் தருவது, அனுஷ்டானங்கள் செய்வது என்று ஒன்று விடாமல் மகானின் அன்றாட நிகழ்வுகளை உடன் இருந்து படம் பிடித்து, அவற்றை அழகான ஒரு கட்டுரை ஆக்கி வெளியிட்டார். இதற்காக புகைப்படக்காரர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பரணீதரனுக்குப் பெரிதும் ஒத்துழைத்தார்.

பொதுவாக, மகா பெரியவாளின் அனுமதி இல்லாமல் அவரைப் புகைப்படம் எடுக்கக் கூடாது.

ஸ்ரீமடத்திலும் சரிஸ்ரீமடத்தின் முகாமிலும் சரிபடங்கள் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள், நியமங்கள் உண்டு. மகானின் அனுமதி இல்லாமல் எடுத்த புகைப்படங்கள் பல்வேறு கட்டங்களில் வெறும் வெள்ளையாகவும் கறுப்பாகவும் ஆகி இருக்கின்றன. அதாவது, ஃபிலிம் ரோலைக் கழுவிப் பார்த்தால் இமேஜ் எதுவும் இருக்காது. புகைப்படக்காரர் குழம்பிப் போய் விடுவார்.

கட்டுரையில் எழுதப்படுகின்ற காட்சிகளுக்குத் தோதான படங்களை எடுப்பதற்கு முன் மகானிடமும், ஸ்ரீமடத்து முக்கிய காரியஸ்தர்களிடமும் அனுமதி பெற்றிருந்தார் பரணீதரன்.

தன் அன்றாடப் பணிகளின் ஒரு பகுதியாக நித்தமும் அதிகாலை வேளையில் மகா பெரியவா நீராடுவது பற்றியும் கட்டுரையில் விரிவாகச் சொல்ல வேண்டி இருந்தது பரணீதரனுக்கு. அதற்காக மகான் நீராடுகின்ற காட்சிகளும் பிரசுரத்துக்குத் தேவைப்பட்டன.

ஒருவரைப் புகைப்படம் எடுப்பதென்றால், அதற்குச் சில வரைமுறைகள் இருக்கின்றன. சிலருக்கு சாப்பிடும்போது புகைப்படம் எடுத்தால் பிடிக்காது. நாற்காலியில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டிருக்கும்போது எடுத்தால் சிலருக்குப் பிடிக்காது. எப்போதும் வேஷ்டி அணிந்திருப்பவர் திடீரென்று பேண்ட் போட்டிருந்தால் அதை போட்டோ எடுப்பது பிடிக்காது. மனிதர்களான நமக்கே இத்தனைக் கட்டுப்பாடுகள் இருக்கிறதென்றால் மகானுக்கு எப்படி இருக்கும்? அதுவும், பெரியவா நீராடும்போது புகைப்படம் எடுப்பது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இவையெல்லாம் ஸ்ரீமடத்தின் நிபந்தனைக்கு உட்பட்டது. பெரும்பாலானோர் இதற்கு அனுமதி தர மாட்டார்கள்.

ஆனால், மகா பெரியவா நீராடுகின்றபோது அந்தக் காட்சிகளைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள மகானிடமே அனுமதி கேட்டார் பரணீதரன். ஒரு புன்னகையுடன் அனுமதியும் கொடுத்து விட்டார் பெரியவா.

மகா பெரியவா அப்போது சென்னை மயிலாப்பூரில் சம்ஸ்க்ருதக் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தார். நித்தமும் அங்கேதான் ஸ்நானம், பூஜை, பக்தர்களுக்கு ஆசி எல்லாமே!

குழாயடி, பாத்ரூம் இப்படி எங்கு வேண்டுமானாலும் மனிதர்கள் நீராடலாம். ஆனால், மகான்கள் நீராட வேண்டும் என்றால், கிணறோ குளமோ இருக்க வேண்டும். ஆறு, சமுத்திரம் இருந்தாலும் அவற்றில் நீராடுவார்கள்.

அந்த வகையில் அடிக்கடி மயிலாப்பூர் வரும் மகான் நீராடுவதற்கென்றே சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் ஒரு சிறிய குளம் எப்போதோ ஒரு முறை வெட்டி இருந்தார்கள். பெரியவா எப்போது இங்கு தங்கினாலும், இந்தக் குளத்தில் நீராடுவது வழக்கம்.

அடுத்த நாள் அதிகாலை வேளையில், தான் அந்தக் குளத்தில் நீராடும்போது புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார் மகா பெரியவா.

அதிகாலை வேளையில் தானும் புகைப்படக்காரரும் அவரவர்கள் வசிக்கிற இடத்தில் இருந்து புறப்பட்டு மயிலாப்பூர் சம்ஸ்க்ருதக் கல்லூரி வருவதற்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படலாம் என்கிற உணர்வு ஏற்பட்டது பரணீதரனுக்கு. எனவே, முதல் நாள் இரவே பரணீதரனும் புகைப்படக்காரர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும் மகான் தங்கி இருக்கிற முகாமுக்கே வந்து விட்டார்கள்.

பெரியவாளையும் தரிசித்து விட்டு விவரத்தைச் சொன்னார்கள். இருவரையும் ஆசிர்வதித்தார் மகான்.

இரவு வேளையில் ஸ்ரீமடத்தின் கேம்ப்பிலேயே ஆகாரத்தை முடித்து விட்டு, அங்கேயே ஒரு மரத்தடியில் துண்டை விரித்து இருவரும் படுத்தனர்.

அதிகாலையில் சீக்கிரம் எழுந்து தயாராக வேண்டும்திருக்குளத்தில் மகா பெரியவா நீராடுகிற புகைப்படங்களை எடுத்து விட வேண்டும். அந்தப் புகைப்படங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு ஏற்ற தரத்தில் நன்றாக வர வேண்டும் என்கிற ஆவல் புகைப்படக்காரரை விட பரணீதரனுக்கு அதிகம் இருந்தது.

பின்னேமகான் நீராடுகின்ற திருக்காட்சியைத் திரளான அவரது பக்தர்கள் பத்திரிகையில் பார்க்கப் போகிறார்கள் என்றால், சும்மாவா? சாட்சாத் அந்தக் கயிலைவாசனே திருக்குளத்தில் இறங்கி நீராடுவது போல் அல்லவா இந்தக் காட்சி! சர்வேஸ்வரன் நீராடுவதை நாமெல்லாம் பார்த்திருக்க முடியாது. ஆனால், இந்தக் கலியுக சர்வேஸ்வரன் நீராடுகின்ற காட்சிகளை நன்றாகப் படம் பிடித்து விட வேண்டும் என்கிற எண்ணம் பரணீதரனுக்கு. இதையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோபரணீதரனுக்கு உறக்கமே வரவில்லை. இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தார்.

பொழுது விடிந்தது.

முன்கூட்டியே எழுந்து விட்டார்கள். இதோ, மகா பெரியவா அந்தத் திருக்குளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்.

பரணீதரனும், கிருஷ்ணமூர்த்தியும் பெரியவாளைத் தொடர்ந்து ஓடினார்கள்.

குளத்தில் இறங்கினார் பெரியவா. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மாய்ந்து மாய்ந்து எடுத்தார்.

அதன் பின் மகா பெரியவாளின் அன்றாட நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக எடுத்தார்.

மாலைப் பொழுது வந்தது. மகானின் அருகே இருந்தார்கள் பரணீதரனும், கிருஷ்ணமூர்த்தியும்.

கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, “கார்த்தால குளத்துல நான் ஸ்நானம் பண்றப்ப படம் எடுத்தியேஅதை டெவலப் பண்ணிட்டியா? என்று கேட்டார் மகா பெரியவா.

இன்னும் இல்லே பெரியவா என்றார்.

மெலிதாகச் சிரித்தபடி, “இன்னும் இல்லியாடெவலப் பண்ணிப் பாரு. அந்த போட்டோ எல்லாம் திருப்தியா இருக்காது. ஏன் தெரியுமா? என்று பெரியவா கேட்டபோது புகைப்படக்காரரான கிருஷ்ணமூர்த்தி பிரமிப்பு அடைந்தார்.

தனக்கு உண்டான போட்டோகிராபி துறை பற்றி மகா பெரியவா பேசுகிறாரே என்கிற பிரமிப்பு. மகானுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பரணீதரனும் இந்தக் காட்சிகளை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

தெரியாது பெரியவா என்ற கிருஷ்ணமூர்த்தி மகானின் திருமுகம் பார்த்தபடி இருந்தார்.

ஏன் போட்டோ வராதுன்னா நீ ஃப்ளாஷ் போட்டு எடுத்தேஅதனால கார்த்தால ஸ்நானம் பண்ற மாதிரி இருக்காது. ராத்திரி நேரத்துல ஸ்நானம் பண்ற மாதிரி படம் இருக்கும். பாக்கறவாளுக்குக் குழப்பமா இருக்கும் என்றார் மகான்.

பரணீதரனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் வியப்பு. புகைப்படக் கலை பற்றி இந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று இருவரும் விநயத்துடன் பெரியவாளைப் பார்த்தார்கள். எழுந்து நமஸ்கரித்தார்கள்.

இந்த போட்டோ சரியா வரலையேனு கவலைப்படாதநான் நாளைக்குக் கார்த்தால சூரியன் வந்தப்புறம் ஸ்நானம் பண்ண வரேன். அப்ப போட்டோ எடு. சரியா வந்துடும் என்று பெரியவா புன்சிரிப்புடன் சொல்லஇருவரும் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.

இவர்கள் எடுக்கக் கூடிய புகைப்படம் சரியாக வர வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு மகான் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புறம்இன்னொரு புறம், இந்தப் புகைப்படக் கலையின் நுணுக்கங்களை எங்கே போய் இவர் படித்தார்? ஃப்ளாஷ் போட்டு எடுப்பதற்கும், ஃப்ளாஷ் போடாமல் எடுப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை எத்தனை எளிமையாக விளக்குகிறார்.

முற்றும்